Published:Updated:

மார்கழியின் மகிழ்ச்சியை சுவாசித்த தருணங்கள்! | My Vikatan

Representational Image ( Photo by Nishant Aneja : pexels )

இன்னொரு சகோதரி சிலந்தி வலை பின்னுவது போல் அழகாய் போடுவார் ரங்கோலி. கோலம் போடுவது என்பதே ஒருகலை. அதிலும் ரங்கோலி போடுவது என்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல.

மார்கழியின் மகிழ்ச்சியை சுவாசித்த தருணங்கள்! | My Vikatan

இன்னொரு சகோதரி சிலந்தி வலை பின்னுவது போல் அழகாய் போடுவார் ரங்கோலி. கோலம் போடுவது என்பதே ஒருகலை. அதிலும் ரங்கோலி போடுவது என்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல.

Published:Updated:
Representational Image ( Photo by Nishant Aneja : pexels )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

தமிழ் மாதங்கள் 12ல் மாதங்களில் எனக்கு மிகவும் பிடித்த மாதம்மார்கழிதான். காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம் மாதங்களில் அவள் மார்கழி'' கவியரசரின்அழகான வரிகளில் மறக்க முடியாத பாடல் . பி பி எஸ் அவர்களின் திரை இசை வாழ்க்கையில் மணிமகுடம் பதித்த பாடல்களில் ஒன்று, இது ஒரு பொக்கிஷம். ஒரு பெண்ணை மனதில் நினைத்து மிக அருமையாக வர்ணித்து பாடிய பாடல், படம் பாவமன்னிப்பு!

Representational Image
Representational Image
Vikatan Photo Library

அது மட்டுமா மார்கழி என்றாலே.. கடுங்குளிர்... மனம் நிறைக்கும் கோலங்கள் ... வாசலில் (கோலத்தின் நடுவில் சாணி உருண்டையில்), அந்தப் பசுஞ்சாணியை தினம் தினம் விடியற்காலையில் பாப்பாத்தி அம்மா திண்ணையின் ஓரத்தில் வைத்துச் சென்றது. பூசணிப்பூ...நைவேத்தியங்கள்... பஜனைகள் திருப்பாவை திருவெம்பாவை... இப்படி அழகழகான நினைவுகள் சின்ன வயசில் அனுபவித்தது எல்லாம் நினைவுக்கு வரும்...

தெய்வீகமும் கலை நயமும் கைகோர்த்து உள்ளத்தை உற்சாக ஊஞ்சலில் ஆடவைக்கும் மாதம் என்றால் அது மார்கழி தான். மார்கழியில் வரும் பண்டிகைகளில் நைவேத்தியங்களை தயாரித்து கடவுளுக்கு படைத்து குடும்பம் ,உறவு ,நட்பு வட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பகிர்ந்து அளித்து அவர்களின் பாராட்டுகளை பெற்ற மாதம். மறக்க முடியுமா? மறுக்கத்தான் முடியுமா??

மார்கழி வந்தாலே என் நான்கு சகோதரிகளும் அவரவர் கற்பனை செய்த காட்சிகளை பூமியின்மேல் அழகாய் தூவுவர் அசத்தலான கோலங்களாக.

Representational Image
Representational Image
Vikatan Photo Library

ஒழுக்கம் என்பது எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறதோ, அதேபோல்தான்  புள்ளிகள் வைத்து கோலம் போடுவது என்று புள்ளிகள் அதிகம் வைத்து, வளைவுகளை அதிகமாக்கி கோலம் போடும் சகோதரி...  அழகாய் அர்த்தம் சொன்னது சிக்கிய புள்ளிகளில் வரைந்தகோலம் சொக்கிட வைக்கும்.

ஓவிய ஆசிரியர் திரு.வர்ணம் அவர்களிடம் ஓவியம் கற்றுக்கொண்ட சகோதரியோ. பெரும்பாலும் அச்சு அசலாய்.. உருவங்களைப் பிரதிபலிக்கும் கோலங்களை வாசலில் போடுவார்.. உதாரணத்திற்கு அவர் மயில் கோலமிட்டால் மயில் நம்மை பார்த்து தோகை விரித்து ஆடும். சிங்கத்தை வரைந்தால் கம்பீரமா நம்மைப் பார்த்து கர்ஜிக்கும். 

பாரதி கண்ட புதுமைப் பெண்ணை வரைந்தால் போதும்...(அக்கா.. நீயே சிறிது நேரம் வாசலில் உட்காரு போதும் என்று நான் சொல்வதுண்டு) . அவ்வளவு தத்ரூபமாக இருப்பாள் பாரதி கண்ட புதுமைப் பெண் அக்காவைப் போலவே!

'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ' என்ற பாரதியின் உருவத்தை வரையும் பொழுது அதைத் தாண்டி அவசர வேலையாக செல்பவர்கள் கூட நின்று நிதானமாய் ரசித்து விட்டே செல்வர்.

மார்கழி - தை நைவேத்தியம்
மார்கழி - தை நைவேத்தியம்

இன்னொரு சகோதரி சிலந்தி வலை பின்னுவது போல் அழகாய் போடுவார் ரங்கோலி. கோலம் போடுவது என்பதே ஒருகலை. அதிலும் ரங்கோலி போடுவது என்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல. மனதை ஒருமுகப்படுத்தும் சிறந்த பயிற்சி. கோலத்தின் கோடுகளைத் தாறுமாறாக வளரவிடாது, நெறிப்படுத்தி ஒரு முழுமையான வடிவமாக்கி உருவம் தரும்  ரங்கோலி அக்காவின் கைவிரல்களால் மின்னும். ரங்கோலி கோலம் ஒரு வரைகலை வெளிப்பாடு.

பவானி ஜமுக்காளத்தை ரங்கோலியாக வரையும் பாருங்கள். அப்படியே படுத்துக் கொள்ளலாம் போல் இருக்கும்.

என் இன்னொரு சகோதரி செம்பருத்தி, பவழமல்லி, மனோரஞ்சிதம் ,ஊதாப்பூ தாழம்பூ இப்படி மனம் மகிழ,  மணம் பரப்பும் பூக்களை கோலங்களில் பூக்க வைப்பார்.

இறைவன் ,அவருக்கு தேவையான பூக்களை வாசலில் வந்து எடுத்து கொள்ளலாம் போல இருக்கும் அவரது கோலங்கள்.

மனமகிழ் மார்கழி!
மனமகிழ் மார்கழி!

அவரது பூக்கோலம், பொறுமையின் அருமையையும், முழுமையின் பெருமையும், திறமையின் புதுமையையும், எடுத்துச் சொல்வதாக இருக்கும். இவர்கள் எல்லாம் இவ்வளவு அழகாய் போடுவதற்கு என் அம்மா தான் காரணம்.

அம்மாவின் 'கோலங்கள் மாயாஜாலங்கள்' செய்யும்.

கருட சேவையின் பொழுது அம்மா வாசலில் போடும் கோலத்தை பார்ப்பதற்காகவே ரங்கமன்னார்... எங்கள் வீட்டு வாசலில் கூடுதல் நேரம் நிற்பார். வாசல் முழுவதும் மறைக்கப்பட்டு மிதிக்காமல் நடக்க, பழகிகொள்வதன் அவசியத்தை அம்மாவின் கோலம் புரியவைக்கும்..

இப்படி விடியற்காலையில் எழுந்து அழகாய் அரை வட்டத்தில் சாணம் தெளித்து நான் வைக்க, சகோதரிகள் தினம் ஒருவராக கோலமிட அந்தக் கோலம் முடிந்(த்)ததும்  தெருவில் இருக்கும் மற்றவர்களின் வீட்டுவாசலுக்குச் சென்று  ஒவ்வொருவரின் கோலத்திற்கும்  மதிப்பெண் போட்டு வந்ததெல்லாம்... என்னுடைய சிறுவயது ஞாபகத்தில் பசுமையாக நிற்கிறது.

மகாலட்சுமி
மகாலட்சுமி
ஈ.ஜெ.நந்தகுமார்

அப்படியே கோலம் முடித்த கையோடு குளித்துவிட்டு பக்தி பழமாக கோயிலுக்குச் சென்று ( பெருமாள் கோயிலில் இருந்து இரண்டாவது வீடு எங்கள் வீடு ) திருப்பாவை திருவெம்பாவையை மனப்பாடமாக சத்தம் போட்டு ராகமாக பாடிவிட்டு சுவாமியை வணங்கி கோயில்களில் விநியோகிக்கப்படும் சாமியை வணங்கி விட்டு, சுட சுட வெண்பொங்கல்கையில் வாங்கிக் கொண்டு ( தொண்ணை சில சமயம்) உள்ளங்கை அப்படியே சிவந்து விடும். நெய் ஒழுக ஒழுக முந்திரியும் மினுமினுக்க மிளகு சீரகம் கண்சிமிட்ட.. சாப்பிட்டதெல்லாம் அழகான கனாக்காலம் அதெல்லாம் ஒரு அழகான கனாக்காலம் (சுட சுட கோயில்களில் விடியற்காலையில்  விநியோகிக்கப்படும் வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல்லுக்கு உள்ள ருசியே தனி.

அது மட்டுமா டிசம்பர் பூக்களை பறித்து நெருக்கமாக தொடுத்து(நான்கு நான்கு பூக்களாக கட்டி) இரட்டை ஜடை பின்னி மடித்து கட்டி இரு ஜடைக்கும் பாலமாக தினம் ஒரு நிறத்தில் தொங்கவிட்டு சென்றதெல்லாம் அழகான கனாக்காலம்.

மார்கழியின் மகிழ்ச்சியை சுவாசித்த தருணங்கள்! | My Vikatan

அந்தப் பூவை மாலை வந்ததும் (தனித்தனியே) வாயில் வைத்து ஊதி மடித்து நெற்றியில் தட்டினால் ச சத்தம்  கேட்டதை நினைத்தால் இப்பொழுது  சிரிப்பு வருகிறது. என்ன இருந்தாலும் மார்கழி மாதம் சம்திங் ஸ்பெஷல் தான்!

மார்க்கழியின் மகிழ்ச்சியை சுவாசித்த தருணங்கள் அழகானவை.

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.