வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
2015 ஆம் ஆண்டு வரை , சென்னையில் நான் வசித்த இடம் மொத்தம் எட்டு வீடுகள் கொண்ட ஒரு சிறிய ஃப்ளாட்.. அங்கு வசித்த போது, எட்டு வீடுகளிலுமே குழந்தைகள் இருந்தனர். மார்கழி மாதம் வந்தால் போதும் , அதிகாலையில் எழுந்து கோலம் போடுவது கடினம் என்பதால், முந்தின நாள் இரவே , குடியிருப்பில் இருக்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்கள் இரவு உணவு முடித்தபின் வாசலுக்கு வந்துவிடுவோம்.
யாராவது ஒருவர் வாசலையும் , சேர்ந்தே இருக்கும் தெருவையும் நன்றாக தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து விடுவோம். பெரியவர்களில் ஒருவர் பழைய கோலநோட்டை கையில் வைத்துக்கொண்டு ஏதாவது ஒரு கோலத்தை செலக்ட் செய்ய, இன்னொருவர் அதற்கான புள்ளிகளை அழகாக வைத்து விடுவார்..

இதற்காகவே காத்திருக்கும் சிறுமிகள் ஆளுக்கொரு கிண்ணத்தில் கோலப்பொடியை வைத்துக் கொண்டு ஒவ்வொரு மூலையிலும் நின்றுகொண்டு கடகடவென அந்தக் கோலத்தைப் போட்டு முடித்துவிடுவர்.
பிறகுதான் ஆரம்பிக்கும் கலாட்டா. ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள் என வித்தியாசம் இல்லாமல் எல்லா வாண்டுகளும் தலையில் குரங்கு குல்லாவை மாட்டிக் கொண்டு , நான் நீ எனப் போட்டி போட்டுக் கொண்டு அந்தக் கோலத்திற்கு வண்ணங்களை சேர்க்க முந்தியடிக்கும். இவர்களை கன்ட்ரோல் செய்வது பெரும்பாடுதான்..அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு எல்லா வாண்டுகளும் தங்கள் முறையை முடித்து கோலத்தை நிறைவு செய்யும்.. பிறகு கோலத்திற்கு பார்டர் போடவேண்டும்.

அதற்கென்று இருக்கும் அச்சில் கோலமாவைப் போடுவதற்குள், அதற்கும் நான் நீ என்ற சண்டைதான். ஒரு வழியாக வண்ணங்களுடன் கூடிய பெரிய கோலம் ஒன்று பாதித் தெருவை தாண்டியபடி இருக்க, இன்னொரு சின்ன கோலம் மெயின் கேட் டின் முன் போடலாம் என நினைக்க, அதற்கும் வாண்டுகள் கூட்டம் வரிசைக் கட்டி சண்டையிடும். நேத்திக்கு அவ தான கலர் போட்டா...
இன்னிக்கு நான் போடறேன் என ஒரே குழாயடி சண்டை நடக்கும். இதில் குறிப்பாக எந்தக் குழந்தை அதிகமாக சண்டையிடுகிறதோ, அக்குழந்தையின் பெற்றோர் நிம்மதியாக வீட்டில் உட்கார்ந்து கொண்டு, நம்ம குழந்த எங்கிருந்தாலும் எப்படியாச்சும் பொழச்சிக்கும் என்ற எண்ணத்தில் சண்டை நடக்கும் ஸ்பாட்டிற்கு ஆஜர் ஆகவே மாட்டார்கள். பெற்றோர்கள் பக்கத்தில் இல்லாததால் அக்குழந்தைகளும் ஜம்மென்று சண்டை போடும். அக்குழந்தைகளை கையாள்கிற மற்றவர்களுக்குத் தான் இரவு எக்ஸ்ட்ரா பிரஷர் மாத்திரை தேவைப்படும். இவையெல்லாம் நடந்துமுடிந்து ஒரு வழியாக வாசற்கதவை பூட்டுவதற்கு பத்தரை மணி மேல் ஆகிவிடும்.

மறக்காமல் ஒருவர் அன்றைய கோலத்தை புகைப்படம் எடுத்து விடுவோம்..எல்லா குழந்தைகளையும் வீட்டிற்கு அனுப்பி பெண்கள் நாங்கள் மீண்டும் சிறிதுநேரம் பேசிவிட்டுத் தான் தூங்குவதற்கு செல்வோம்.. மார்கழி மாதம் முழுவதும் இந்த நிகழ்ச்சி தொடரும். தினம்தினம் ஒருமெகாசைஸ் வண்ணக் கோலம்,, நடுவில் வரும் ஆங்கில புத்தாண்டன்று ஒரு ஸ்பெஷல் கோலம், அதற்கு கீழே wish you a happy New year என வாண்டுகள் எழுதுவது என மார்கழி முழுவதும் இரவு நேர பனியில் நேரம் போவதே தெரியாமல் நாட்கள் ஓடிவிடும். தைத்திருநாள் அன்று வாசலில், கரும்புடன் கூடிய பொங்கல்பானைக் கோலத்துடன் மார்கழி முடிய அடுத்த மார்கழிக்காக வாசல் காத்திருக்கும்..
வாண்டுகள் கூடி
கோலங்கள் போட்டதே
அதுவொரு பொற்காலம்...
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.