"எழுந்துரிடி நேரம் ஆச்சு"
"மா.. அஞ்சு நிமிஷம்"
"தண்ணி சுட்டுடிச்சி டி.. எழுந்துரு வேகமா"
"ரெண்டு நிமிஷம் மா"
இன்னும் கூட ஐந்தாறு முறை அவள் எழுப்பினால் தான் பொழுது விடியும் அப்பொழுது.
'அரிசி கொட்டணும், எழுந்திரிக்கணும்.. தக்காளி இருக்கான்னு தெரியல.. இல்லனா கடைக்குப் போணும் எழுந்திரிக்கணும்... பாத்திரம் கழுவி வெக்கணும்.. அலுவலகத்திற்கு தயாராக நேரம் போதாதே' பதட்டத்தில் தான் இப்பொழுது விழிப்பெல்லாம்.
அம்மா வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்குமான முதல் மாற்றம் பெரும்பாலும் இதுவாகத் தான் இருக்கும்.
சமைத்து விட்டு வேக வேகமாக குளித்து முடித்து வெளியே வருவதற்குள் ஒன்பது மணி ஆகிவிடும். இரண்டு நிமிடத்திற்குள் தலை சீவி பொட்டு வைத்து சாப்பிட உட்கார வேண்டும்.
மணிக்கணக்கில் கண்ணாடி முன் நின்று ஒப்பனை செய்த காலமெல்லாம் உண்டு.
முடி கொட்டுகிறதே முகப்பரு வருகிறதே என்பதையெல்லாம் இப்பொழுது நினைக்க நேரமில்லை. இன்று வைத்த சாம்பாரில் உப்பு சற்று அதிகமாகிவிட்டது அதுதான் இப்போதைய கவலை.

வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றதும் மனம் அம்மா எங்கே என்று தேடும். அம்மா வீட்டின் கதகதப்பை புகுந்த வீட்டில் அனுபவிக்க இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்.
எப்பொழுதும் ஓடிக் கொண்டிருக்கும் ரேடியோ. வெள்ளி கிழமை பூஜை. சனிக்கிழமை கொள்ளு சமையல். ஞாயிற்று கிழமையானால் பாட்டி வீடு. இரவு ஒன்பது மணிக்குள் உணவு. கொஞ்ச நேரம் சேர்ந்து பார்க்கும் தொலைக்காட்சி. அம்மா தங்கையோடு கீரை உருவிக் கொண்டே பேசும் பல கதைகள்.. அவ்வப்போது தோழிகளின் வருகை.. என் அறையும் ஆயிரம் காகிதங்களும்.
இப்பொழுது இங்கே அப்படியே வேறொரு வாழ்க்கை முறை. பிறந்த வீட்டை அவ்வப்போது நினைத்து உருகும் மனது.
என் அப்பா என்னை எப்படியெல்லாம் பார்த்துக் கொண்டார் தெரியுமா(எப்படி பார்த்துக் கொண்டிருந்தாலும் நிச்சயம் ஒரு முறையாவது இப்படி நினைக்க வைத்துவிடும் புது வாழ்க்கை) என் அம்மா என் மேல் எவ்வளவு பாசம் வைத்திருந்தார் தெரியுமா.. நேரம் தாழ்த்தாமல் என்னை சாப்பிட வைத்து விடுவாள்.(வேலை செய்து பழக திட்டியதெல்லாம் இப்பொழுது உரைக்கிறது) என் தங்கை எனக்கு எவ்வளவு பக்க துணையாக இருந்தாள் தெரியுமா.. (சண்டைப் போட்டுக் கொண்டதெல்லாம் இப்பொழுது நினைப்பதற்கில்லை)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅம்மா எப்படித் தான் புகுந்த வீட்டிற்குப் பழகிக் கொண்டார்களோ..
ஒரு வேலை சின்ன வயதிலேயே திருமணம் முடிந்ததால் இணங்கி விட்டாரா.. இல்லை நாட்கள் போகப் போகப் நானும் பழகிக் கொள்வேனா..?
இப்பொழுது அம்மா வீட்டிற்குச் செல்வதற்கே அனுமதி கேட்க வேண்டியதாய் இருக்கிறதே!
என்னடா இது வாழ்க்கை என நினைத்த நொடி ஒன்றில்...
"அத்தை.. அத்தை" அவர் அக்கா மகனின் குரல்.
"பந்து அந்த வேலி தாண்டி விழுந்துருச்சு.. கொஞ்சம் எடுத்து தாங்களேன்.. ஆனா அங்க பாம்பு வரும்.. பாத்து"
பந்தை எடுத்துக் கொடு என்பதை மட்டும் சொல்லாமல் பாம்பு வர வாய்ப்பு இருக்கிறது ஜாக்கிரதை என்கிறானே.. இந்த மூன்று வயது சிறுவனுக்கு என்ன அறிவு.
அண்ணி.. அத்தை.. சித்தி.. வாண்டுகள் காலை சுற்றி சுற்றி வருகின்றன. அவர்கள் சேட்டைகளில் சிரிப்பு சத்தங்கள் வெடிகின்றன. அவர்களோடு சேர்ந்து என்னை விளையாட வைத்து சிறு பிள்ளையாய் மாற்றுகிறார்கள்.
வார இறுதியில் உறவினர்கள் வீட்டு விருந்திற்குச் சென்று மாளவில்லை. அவரின் பெங்களூரு பெரியம்மா திருமணம் நடந்து ஐந்து மாதம் ஆகி இன்னும் வரவில்லை என்று கோபிக்கிறார். அடுத்த மாதமாவது அங்கே செல்ல வேண்டும்.

என் மாமியார் மிகவும் கலகலப்பானவர் விருந்தோம்பலில் அவருக்கு நிகர் அவரே. பால் கொதித்துக் கொண்டே இருக்கும். வீட்டிற்கு வருபவர்கெல்லாம் காபி என்ன! பலகாரம் என்ன!
அவர் சுறுசுறுப்பும் பொறுப்பும் இப்போதைக்கு எனக்கில்லை. நேற்றுக் கூட எண்ணெய் பாக்கட்டை வெட்டி பாத்திரத்தில் ஊற்றச் சொன்னார். கொஞ்சம் பெரிதாகக் கத்தரித்து எண்ணெய்யை சிந்தி சொதப்பி விட்டேன்.
சிந்திக் கிடந்ததைப் பார்த்தார். பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை. "நுனில வெட்டி பொறுமையா ஊத்தணும்.. சரி பரவால்ல விடு.. தொடச்சிக்கலாம்"
அவ்வளவு தான். அடுத்த வேலையைப் பார்க்க கிளம்பிவிட்டார்.
இதுக் கூட பழகிக் கொள்ளாமல் புகுந்த வீட்டிற்கு வந்து விட்டேனே.. இவர்களுக்கும் புது மருமகளை நினைத்து பல எண்ணங்கள் இருந்திருக்கும் அல்லவா!
காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து முடித்து வாசல் தெளித்து கோலமிட்டு காபி போட்டுக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்து இருப்பார்கள் அல்லவா!
ஒரு நாள் போடுவேன் ஒரு வாரம் போட மாட்டேன். சில நாட்கள் நேரம் கழித்துக் கூட எழுவேன். பெரிதாக எதையும் கண்டுகொள்ள மாட்டார்.
இந்த காலத்து மருமகள் என்று அவரும் சிலவற்றை விட்டுக் கொடுத்துப் போகிறார்.
இதை செய்.. அதை செய்யாதே.. இங்கு செல்லுங்கள்.. அங்கே செல்லாதீர்கள் என்று தன் கண்டிப்பை அவ்வப்போது கூறினாலும் எங்கள் சுதந்திரத்தை எங்கள் கையில் இருந்து எடுக்க மாட்டார்.
என் மாமனாருக்கு நான் நன்றாக சாப்பிட வேண்டும். போன வீட்டில் பெண் இழைத்து விட்டால் என்று சொல்லிவிட கூடாது. அவர் மனைவி என்ன வேலை செய்தாலும் சரி நான் அதிகம் வீட்டு வேலை செய்யக் கூடாது என்று நினைப்பார்.
என்னையும் அவர்கள் குடும்பத்தில் ஒருவராய் மனதார ஏற்றுக்கொண்டு யோசிக்க தொடங்கிவிட்ட மாமியார், மாமனார் மற்றும் நாத்தனார் தான். என்னுள்ளும் மெல்ல அவர்கள் ஊற தொடங்கின.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இவையாவற்றிற்கும் காரணமாய் நான் அரிவையில் இருந்து தெரிவையாய் மாறும் வயதில் என்னை திருமதியாக்கியவரை பற்றி இன்னும் சொல்லத் தொடங்கவில்லையே!
திருமணத்திற்கு முன் கண்ணாடிப் பார்த்து நின்று கொண்டிருந்த பொழுதொன்றில் நடு வாக்கில் உச்சந்தலையில் குங்குமமிட்டு அவசரமாய் அழகு பார்த்த பொழுதை இப்பொழுது தினமும் வகிட்டில் குங்குமம் வைக்கும் பொழுது கர்வமாக நினைத்துக் கொள்கிறேன். மஞ்சள் கயிரும் கண்ணாடி வளையள்களும் என் முழுமை. மெட்டியின் அழுத்தம் கொலுசின் சத்தமும் என் வாழ்வின் பின்னணி இசை.
கதை பேச.. சேர்ந்து சிரிக்க.. கூடவே அமர்ந்து சாப்பிட எனக்கொரு இனிய துணை.
கோவில்கள்.. தியேட்டர்கள்.. பூங்காக்கள்.. சுற்றுலாத் தளங்கள் யாவும் எங்கள் பாதங்கள் அழுந்த அழுந்த தேய்ந்தன..
நான் எப்படி சமைத்தாலும் ருசியாக உள்ளதாய் ரசித்து உண்பார். அவள் சமைப்பதே சாதனை இதில் எதற்கு ருசியை ஆராய வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ!
பரவாயில்லை நன்றாகத் தான் போகிறது என்றாலும் சிறு சிறு சண்டைகள் எழும். காதல் திருமணத்தில் இன்னும் கூட சீக்கிரமே உரிமையோடு சண்டைகள் தொடங்குகின்றன.

சூரியன் சந்திரன் மாறுவதுற்குள் சண்டை மறையும்.
வழக்கம் போல் உப்பு சப்பு இல்லாத காரணம். சண்டை போட்ட காரணம் நீர்த்துப் போய் யார் முதலில் பேசப்போகிறோம் என்கிற மௌன சண்டை தோன்றும். அவரே வந்து பேசட்டும் என்று என் மனம் அடம் பிடிக்கும் அதற்கு முந்தைய முறை அவர் பேசியதால் அவர் மனமும் அவரைத் தடுக்கும். முகத்தை வெவ்வேறு புறம் திருப்பிக் கொள்ள சண்டை நீளும். இறுதியில் அலைபேசியில் மெல்ல கமழ்ந்த
எங்கள் இருவரின் விருப்ப பாடல்
கேட்ட நொடியில் முகம் மறைத்து நான் வெட்கப்பட இதழ் தாண்டி அவரும் சிரிக்க உடைந்தது அன்றைய மௌனமும்.
பாட்டெல்லாம் சண்டையை தீர்த்து வைக்குமா என்றால்..
வைக்குமே.. ஏன் கூடாது. சேர்த்து வைக்கும். சொந்தகாரர்கள் வந்தால் பேச வேண்டுமே அப்பொழுது அவர்கள் சேர்த்து வைப்பார்கள். சாப்பாடு சேர்த்து வைக்கும். அம்மா அப்பா சேர்த்து வைப்பார்கள். பயணம் சேர்த்து வைக்கும். பாட்டும் சேர்த்து வைக்கும்.
ஐந்து மாதத்தில் அவருக்குள்ளும் தான் எத்தனை மாற்றங்கள்.. நண்பர்கள் கூட்டம்.. நினைத்த நொடியில் வெளியே சென்று வருவது.. தனி சுதந்திர உலகத்தில் இருந்திருப்பார் இருக்கட்டும் பரவாயில்லை சண்டை வேண்டாமென தோன்றும்.
எல்லாம் தெரிந்தும் சில சண்டைகளை தவிர்க்க முடியாது. ஊடலாக ஆரம்பித்து கோபமாக மாறி தன்னை நிரூபிக்க கத்தி கூச்சலிட்டு எடுபடாத நேரம் கண்ணீர் கசியும். இரண்டு மூன்று நாள் கூட நீளும் சண்டை பொழுதோன்றில் சூழ்நிலை தானாக ஓர் ஆழமான உண்மையை உணர்த்தும்..
அவர் தான் இனி யாவும்!!
என்னதான் பிறந்த வீடு.. சொந்தங்கள்.. தோழிகள் என்று இருந்தாலும் எல்லாம் ஒரு எல்லைக்குள் தான். அவர்களுக்கென தனி விருப்பு வெறுப்புகளை சூழ்நிலை உருவாக்கியிருக்கும்.
அக்காவோடு சண்டை வரும்.. அண்ணனோடு சண்டை வரும்.. அதையும் சரி செய்து வைக்க அவர் தான்.
இனி அவரின்றி அணுவும் இல்லை.
வாழ்வின் சுக தூக்கங்களை சரிப் பாதியாக பகிர்ந்து கொண்டிருப்பவர். நிதானமாக வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்து உடன் பயணிப்பவர்.
அவர் வியர்வை வாசம் சூழ்ந்து இருப்பதே காவல். அவர் முகம் பார்த்துக் கிடப்பதே நிம்மதி. அவர் காதலே முழுமை.
ஆரம்பத்தில் பயமும் குழப்பமும் இருந்தாலும் அவர் என் கைப் பிடித்திருப்பதாலும் அவர் குடும்பம் என்னை தாங்கிக் கொண்டிருப்பதாலும் இப்பொழுது திருமதி எனும் பட்டம் அழகும் பெண்மையும் நிறைந்த அழகிய கிரீடமாகவே தெரிகிறது!
-ரேவதி பாலாஜி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.