Published:Updated:

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஒன்றும் ஜோக் கிடையாது! - தமிழ் ரசிகரின் ஆதங்கம்

மாஸ்டர் செஃப் தமிழ்

MasterChef நிகழ்ச்சியை கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாகத் தொடர்ந்து பார்த்து வருவதில் நிச்சயமாக ஒன்று சொல்லமுடியும் - MasterChef நிகழ்ச்சிக்கு ஹோஸ்ட் என்ற ஒருவர் தேவையில்லை.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஒன்றும் ஜோக் கிடையாது! - தமிழ் ரசிகரின் ஆதங்கம்

MasterChef நிகழ்ச்சியை கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாகத் தொடர்ந்து பார்த்து வருவதில் நிச்சயமாக ஒன்று சொல்லமுடியும் - MasterChef நிகழ்ச்சிக்கு ஹோஸ்ட் என்ற ஒருவர் தேவையில்லை.

Published:Updated:
மாஸ்டர் செஃப் தமிழ்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

‘MasterChef தமிழ்’ - S1 முடிந்துவிட்டது. ‘MasterChef தமிழ்’ – S2 க்கான ஆடிஷன் அழைப்புகளும் ஆரம்பித்துவிட்டன. இந்தத் தருணத்தில் Masterchef-ன் ஒரிஜினல் தயாரிப்பு நிறுவனமான Endemol Shine-ஐ வாங்கியிருக்கும் Banijay குழுமத்தின் ‘MasterChef தமிழ்’ தயாரிப்பாளர்களுக்கும் கிரியேட்டிவ் டைரக்டர்களுக்கும் “MasterChef தமிழ் is not a joke”, என்ற Chef ஹரிஷ்ஷின் மனம் வெதும்பிய வார்த்தைகளை யாராவது நினைவூட்டினால் நலம். 'சமையல் ஒரு சீரியஸ் பிசினஸ்’ என்ற அவர்களின் tag line-ஐ இந்த சீசனிலிருந்தாவது அவர்களே உணருவார்களா என்றுத் தெயவில்லை.

Masterchef
Masterchef

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

40 நாடுகள், 500 எபிசோடுகள் என எல்லைகள் தாண்டி, இன-மொழி பேதமின்றி, கலாசாரங்கள் கடந்து, உலகத்தின் உணவு வகைகள் அத்தனையையும் உள்ளடக்கி, கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகப் புடம் போட்டு உருவாக்கிய 'winning format' -ஐ தமிழுக்காக சில மாற்றங்கள் / சமரசங்கள் செய்யவேண்டும் என்று யார் MasterChef தமிழ் தயாரிப்புக் குழுவினரிடம் கூறினார்கள் என்று தெரியவில்லை.

முதல் சில வாரங்கள், பார்ப்பது MasterChef-ஆ அல்லது விஜய் சேதுபதியின் திரைப்படங்களுக்கான ப்ரமோஷனா என்ற சந்தேகமும், அடுத்த சில வாரங்கள் MasterChef-ஆ அல்லது ஸ்பான்சர்களின் தயாரிப்புகளுக்கான முழு நீள விளம்பரப் படமா என்ற சலிப்பும் தலைதூக்கியத்தைத் தடுக்க முடியவில்லை. விஜய் சேதுபதியின் படக் கதாநாயகிகளும் அவர்களுடன் திரைப்படத்தைப் பற்றி விஜய் சேதுபதி பேசுவதும் . . . சினிமாவையும் நடிக நடிகையரையும் பிரதானமாக்கினால் தான் தமிழில் MasterChef-ம் கூட போணியாகும் என்று தயாரிப்புக் குழுவிடம் யாரேனும் சொல்லியிருப்பார்களோ என்று நினைக்கவைத்துவிட்டன இந்த எபிசோடுகள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடுத்து வந்த வாரங்கள் தந்த சலிப்பு வேறு விதமானது. MasterChef செட்டின் ஒரு பக்க சுவரின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கும் இராட்சதத் திரையும் அதில் ஓடிக்கொண்டிருக்கும் IFA மற்றும் ஸ்பான்சர்களின் லோகோக்களும் இதன் முக்கியக் காரணம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று நான்கு மொழிகளில் படமாக்கப்படும் MasterChef தொடருக்கு ஒரே செட் போட்டது செலவைக் குறைக்கும் பிசினஸ் யுக்தி என்று புரிகிறது. ஆனாலும் ஸ்பான்சர்களுக்கு 'maximum exposure' கொடுக்க வேண்டும் என்பதற்காக MasterChef அரங்கத்தின் உள்ளேயே அவ்வளவு பெரியத் திரையில் தொடர்ச்சியாக லோகோக்களை ஓடவிடுவது நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்க்கும் போது பார்வையாளர்களுக்கு மிகப் பெரிய கவனச்சிதறலாக இருப்பது மட்டுமல்லாது, ஒரு கட்டத்திற்கு மேல் அளவு கடந்த எரிச்சலையும் தருகிறது. பார்வையாளர்கள் மனதில் 'எதிர்மறை பாதிப்பு' (negative affect) தான் விளம்பரதாரர்கள் நோக்கமெனில் அது நன்றாகவே நிறைவேறுகிறது.

Master Chef Tamil
Master Chef Tamil

MasterChef நிகழ்ச்சியை கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாகத் தொடர்ந்து பார்த்து வருவதில் நிச்சயமாக ஒன்று சொல்லமுடியும் - MasterChef நிகழ்ச்சிக்கு ஹோஸ்ட் என்ற ஒருவர் தேவையில்லை. ஹோஸ்ட் இல்லாமல் நடுவர்கள் மட்டுமே முன்நின்று வழிநடத்திக்கொண்டு செல்லும் MasterChef நிகழ்ச்சிகள் தான் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. முதல் மூன்று வாரங்கள் பார்த்தபின் என்ன எதிர்பார்ப்பு என்று தெரியாமலேயே எதோ ஒரு எதிர்பார்ப்பு இருந்தது MasterChef தமிழ் -ன் ஹோஸ்ட் விஜய் சேதுபதியின் ரோல் மீது. ஆனால் இப்போது, அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் brief என்ன, அவரின் வேலை MasterChef அரங்கத்தின் உள்ளே என்ன என்று இதுவரைப் புரியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிகழ்ச்சியின் அறிமுகமாக, நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த என்பது தான் ஹோஸ்ட்டின் வேலை என்று வைத்துக்கொண்டால் அதற்கான brief அவரிடம் கொடுத்துள்ளார்களா அல்லது அவரின் இஷ்டத்திற்கு விட்டுவிட்டார்களா என்றுத் தெரியவில்லை. நடுவர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாக இருப்பதற்கு பதில் பல வேளைகளில் தடுப்புச் சுவராகப் போய் விடுகிறது அவரின் உள்ளீடுகள். இது விஜய் சேதுபதியைப் பற்றிய விமர்சனம் அல்ல; அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ரோலைப் பற்றியது.

போட்டியாளர்கள் தங்கள் டிஷ்களை நடுவர்கள் முன் வைக்கும் போது அநேக நேரங்களில் முதலில் ஒரு நடுவரும் ஹோஸ்ட்டும் ருசி பார்க்கிறார்கள். அதன் பின் மற்ற இரு நடுவர்களும் ருசிக்கிறார்கள்.

Master Chef Tamil
Master Chef Tamil
Sun Tv

பல சமயங்களில் நடுவர்கள் ஹோஸ்ட்டிடம் மரியாதை நிமித்தம் அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்டுவிட்டு அதன் பின் தங்கள் கருத்துகளைச் சொல்கிறார்கள். நடுவர்கள் தங்கள் கருத்துக்களை முதலில் வெளிப்படுத்தும் தருணங்களில் கடைசியாக (போட்டியாளரின் மனம் புண்பட்டுவிடக் கூடாதென்று) ஹோஸ்ட் அவருக்குப் பிடித்திருக்கிறதென்று கூறுகிறார். நடுவர்கள் அந்த டிஷ்ஷைப் பற்றி வெளிப்படுத்தும் நுண்ணிய கருத்துக்களும் சுட்டிக் காட்டும் தவறுகளும் மேலும் மெருகேற்றச் செய்யும் வழிமுறைகளும் இந்தப் பொத்தாம்பொதுவானக் கருத்தில் அடிபட்டுப் போகின்றன. போட்டியாளர்கள் சமைக்கும் எந்த டிஷ்ஷானாலும் அதை உண்டு ருசித்து அபிப்பிராயம் சொல்லும் உரிமையும் கடமையும் வேலையும் நடுவர்களை மட்டுமேச் சார்ந்தது.

இதற்கு மாறுபட்ட அல்லது முரணான brief-ஐ MasterChef தமிழ் தயாரிப்பாளர்கள் நடுவர்களுக்கும் ஹோஸ்ட்டிற்கும் கொடுத்திருக்கும் பட்சத்தில் அது நடுவர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும், ஏன் ஹோஸ்ட்டிற்குமே கூட (அவருக்குத் தெரியாத வேலையைச் செய்யச் சொல்லி) இழைக்கப்படும் அநீதியாகத் தான் பார்க்கத் தோன்றுகிறது.

MasterChef தமிழ் பங்கேற்பாளர்களின் உடை மற்றும் ஒப்பனைக்கு யார் பொறுப்பு என்று தெரியவில்லை. யாராக இருந்தாலும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது இரண்டு விஷயங்கள்.

இந்தக் காட்சிப்படுத்துதலுக்கு உறுதுணையாக நிற்பது இசை. இசைக்கு அப்படி என்ன பெரிய பங்கு இருந்துவிடப்போகிறது என்று கேட்பீர்களேயானால் உங்களுக்கான பதில் 'Junior MasterChef Australia – S3 Finale'. Live orchestra ஒலிக்க, பதினொன்று, பன்னிரண்டு வயது இளம் போட்டியாளர்கள் அத்தனை டிஷ்களைச் செய்ததைப் பார்த்தால் புரியும் இசையின் பங்கு. இது இசைக்கான பதில் மட்டுமல்ல. Pandemic சமயத்தில் அரசு விதிகளுக்குட்பட்டு ஸ்டுடியோவிற்குள்ளேயே ஒரு சமையல் ஷோவை எப்படி விறுவிறுப்பாக நடத்திக் காட்டுவது என்பதற்கான பாடமும். அடுத்த சீசனிலாவது தமிழகத்தின் சிறு, பெரு, நகரங்களுக்கும் வீதிகளுக்கும் தோப்புகளுக்கும் வயல்வெளிகளுக்கும் கடற்கரைகளுக்கும் ஹோட்டல்களுக்கும் வாருங்கள் அவுட்டோர் க்ரூப் சேலஞ்சுகளுக்கு. MasterChef தமிழகம் வராதவரை தமிழகமும் MasterChef –இடம் வருமா என்பது சந்தேகமே.

master chef tamil
master chef tamil
Sun tv

பள்ளிப் படிப்பு முடிந்ததும் தன் சமையல் கலைஞராகும் ஆசையைத் தந்தையிடம் சொல்ல, தலைக்கேறியக் கோபத்தில் தந்தை வீட்டை விட்டுத் துரத்த, இரயில் நிலையத்தில், நண்பன் வீட்டில், பாட்டி வீட்டில் என்று தங்கியிருந்து, கல்லூரிக் கல்விக் கட்டணம் செலுத்த - மருந்து விற்பனையாளராக, சரக்குப் பெட்டிகள் தூக்குபவராக - என்று பல வேலைகள் செய்துத் தன் உணவுக் கனவை நனவாக்கி, 'The Mad Chef' என்று பெயர் வாங்கிய Chef கௌஷிக்; ITC Grand Chola, Sheraton Park போன்ற ரெஸ்டாரண்ட்டுகளில் Executive Chef-ஆகப் பணியாற்றிய 22-வருட அனுபவமுள்ள Chef ஹரிஷ்; அமெரிக்காவின் பிரபல சமையல் ஷோவான 'Chopped' -ஐ வென்ற ஒரே இந்தியப் பெண் Chef-ம், ஆண்கள் கோலோச்சும் ப்ரொபஷனல் உணவு உலகில் பெண்ணாய், அதுவும் ஒரு தமிழ்ப் பெண்ணாய் சாதித்து நிற்கும் Chef ஆர்த்தி; உணவு உலகின் சாதனையாளர்கள் இந்த நடுவர்கள் மூவரும். இவர்களிடம், போட்டியாளர்களிடமும் பார்வையாளர்களிடமும், ஏன் அவர்களிடையேயும் கூட, பகிர்ந்துகொள்ளக் காத்திருக்கும் அனுபவங்களும், கதைகளும், சுவாரஸ்யங்களும், அறிவும் ஏராளம்.

ஆனால் ஒரு எபிசோடின் முக்கால் பகுதியின் பேச்சு ஹோஸ்ட்டினுடையதாக இருக்கிறது. நடுவர்களும் போட்டியாளர்களும் பேசுவதை போன தலைமுறைத் தபால் கார்டில் அடக்கிவிடலாம். பேசவும், பகிரவும், தடையின்றி அரங்கம் எங்கும் உலாவவும், போட்டியாளர்கள் சமைக்கும் போது அவர்களிடம் சென்று அடிக்கடி உரையாடவும் விடுங்கள் நடுவர்களை. அவர்களிடையே நடக்கும் உரையாடல்களையும், பரிமாற்றங்களையும், விவாதங்களையும் எடிட்டிங்கில் வெட்டி எறியாமல் பார்வையாளர்களுக்குப் படையுங்கள். அது தான் ஒரு ஸ்க்ரிப்டட் ஷோவிலிருந்து ரியாலிட்டி ஷோவை வித்தியாசப்படுத்துவது. ஷோவுடன் ஆத்மார்த்தமாக ஒன்றுவதற்கான (emotional connect) தாரக மந்திரமும் கூட. இது இல்லாமல் எந்த ரியாலிட்டி ஷோவும் வெற்றி பெற முடியாது.

இந்த emotional connect போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே முதலில் இருந்தே ஏற்பட விடாமல் ஷோவின் format-ஐ குறுக்கியிருப்பது ஏன் என்று புரியவில்லை. 50 பேர் ஆடிஷன் சுற்றுக்கு வரவழைக்கப்பட்டு MasterChef கூடத்திலேயே அவர்களின் signature dish-ஐ சமைக்க வைத்து அந்த டிஷ்ஷின் அடிப்படையில் MasterChef white apron கொடுத்து, மூன்று நடுவர்களிடம் 'யெஸ்' வாங்காதவர்களை இரண்டாம் சுற்றில் தேர்வாகும் வாய்ப்புக் கொடுத்து, ஷோவுக்கான போட்டியாளர்களைத் தேர்வு செய்வது தான் MasterChef format.

MasterChef India -வின் தற்போதைய சீசன் வரை கூட இது தான் format. இப்படி வரும் 50 பேரினுடைய அறிமுகமும் நடுவர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் கிடைத்துவிடும். யார் யார் எங்கிருந்து வருகிறார்கள், அவர்கள் பின்புலம் என்ன, அவர்கள் கனவு என்ன, அதை அடைய அவர்கள் கொடுத்திருக்கும் விலை என்ன என்று நடுவர்கள் மட்டுமல்ல, தொலைக்காட்சிப் பார்வையாளர்களும் தெரிந்து கொள்வார்கள்.

இந்த அறிமுகம் இருந்தால் தான் MasterChef apron பெற்று அவர்கள் போட்டியினுள் நுழையும் முதல் கணத்திலிருந்து, 'ஐயோ! இவர் ஜெயிக்கவேண்டுமே!', 'ஐயோ! இவர் எலிமினேட் ஆகிவிட்டாரே!' என்ற ஈடுபாடு பார்வையாளர்களுக்கு இருக்கும். தன்னுடைய ஊர், தன்னைப் போல் ஒருவர், தன் பின்புலம் போல் அவருக்கும் என்று, பார்க்கும் பார்வையாளர்களிடையே, 'இவர்கள் இந்த உயரத்திற்குப் போகும் போது தானும் முயற்சிக்கலாம்', என்ற நம்பிக்கை கொண்டு அடுத்தடுத்த சீசனுக்கு விண்ணப்பிப்பது தான் ஒரு ரியாலிட்டி ஷோவின் வெற்றிக்கு வித்து. இந்த ஈடுபாட்டையும், reach-யும் ஒரேடியாக நீக்கியதற்கு யார் பொறுப்பு என்று தயாரிப்பாளர்களைத்தான் கேட்க வேண்டும். அழைத்ததே 24 பேர். அதில் தேர்ந்தெடுத்தது 14 பேர் என்று ஏன் குறைக்கப்பட்டது என்று தெரியவில்லை.

மாஸ்டர் செஃப் - விஜய் சேதுபதி
மாஸ்டர் செஃப் - விஜய் சேதுபதி

இத்தனையும் வாசித்துவிட்டு, 'ஏனய்யா, ஒரு சாதாரண சமையல் ஷோவுக்கு இந்த ஆர்ப்பாட்டமா?' என்று கேட்பவர்களுக்கு ஒரு கதை.

சிறு வயது முதலே Chef ஆகும் கனவில் இந்தியாவில் படித்து முடித்துவிட்டு (போராடி இடம் வாங்கி) 1990-களில் அமெரிக்காவின் நியூயார்க் செல்கிறான் பஞ்சாபின் அமிர்தசரஸிலிருந்து ஒரு இளைஞன். சமையல் கலை தெரிந்த, படித்த அந்த இளைஞனுக்குக் கிடைப்பது ஹோட்டல்களில் பாத்திரம் கழுவும் வேலை, இந்தியன் என்பதால். ஹோட்டலில் சமையல் வேலை செய்யும் மற்ற Chef-கள் அந்த இளைஞனை மனிதனாகக் கூட மதித்துப் பேசாத சூழலில் ஒரு நாள் அவர்கள் வேலை இடைவேளையின் போது காபி அருந்திக் கொண்டிருக்கிறார்கள். அதிசயமாய் அந்த இளைஞனை அழைத்து அருகிலிருக்கும் காபி கோப்பையைக் காட்டி, 'இது உனக்கு. எடுத்துக்கொள்', என்கிறார்கள்.

ஒரு வழியாய்த் தன்னையும் மதித்துத் தனக்குக் காபி கொடுக்கிறார்களே என்று மகிழ்ந்து கோப்பையை எடுத்துக் காபியை உறிஞ்சும் இளைஞனைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறார்கள் அந்த Chef-கள். ஒன்றும் புரியாமல் பார்க்கும் அந்த இளைஞனிடம் சொல்கிறார்கள், 'நீ குடித்தது காபி அல்ல, எங்களின் எச்சில்', என்று, அவனுக்குக் கொடுத்த காபியில் அவர்களின் எச்சிலை உமிழ்ந்து கொடுத்துவிட்டு.

ஊரறியா, முகமறியா, உறவில்லா, போக்கிடம் இல்லா அந்த அந்நிய தேசத்தில் மனம் வெதும்பி அங்கிருந்து வெளியேறிய அந்த இளைஞன் அடுத்த பாத்திரம் கழுவும் வேலைக்குச் சேர்ந்த அடுத்த ஹோட்டலின் Chef அவனிடம், 'ப்ரவுன் நிறத் தோல் கொண்ட இந்தியன் நீ ... நீயெல்லாம் சமைப்பதா? நீ சமைத்தாயென்றால் உன் விரல்களை நான் வெட்டுவேன்', என்று கறி வெட்டும் கத்தியைத் தூக்கிக் கொண்டு வர, தப்பி ஓடும் இளைஞனை ஒரு கட்டத்தில் இறைச்சிகளை பதப்படுத்தும் freezer அறைக்குள் போட்டு அடைத்து வைக்கிறார் அந்த Chef. கத்தி, கதறி, அழுது, புலம்பி, கெஞ்சி, கூத்தாடி, சோர்ந்து போன அந்த இளைஞனைத் தேடி வருகிறான் அவனுடைய நண்பன். நல்லவேளையாக அவன் வந்து அந்த freezer-ன் கதவைத் திறந்து விட்டதனால் இன்று நம்மிடையே இருக்கிறார், 2011-லிருந்துத் தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் Michelin Star பெற்ற MasterChef India -வின் நடுவர்களில் ஒருவரான விகாஸ் கன்னா (Vikas Khanna).

Vikas Khanna
Vikas Khanna

ஆனாலும் இவர் இல்லை இந்தியாவின் முதல் Michelin Star Chef. அந்தப் பெருமை வினீத் பாட்டியாவையேச் (Vineet Bhatia) சேரும். MasterChef India S6 -ன் நான்காவது எபிசோடைப் பார்த்தால் புரியும், இரண்டு Michelin Star கள் பெற்று உலகின் தலை சிறந்த Chefகளில் ஒருவராக அறியப்படும் அவரை, அவர் கடந்து வந்த பாதையில் கிடந்த கற்களும் முட்களும் அவமானங்களும் சோகங்களும் போராட்டங்களும் கண்ணீரும் வியர்வையும் இரத்தமும் இன்றும் மனமுடைந்து அழவைக்கும் வல்லமை பெற்றவை என்று. (https://twitter.com/thevineetbhatia/status/1206215866796380167?lang=en)

இத்தனைத் தடைகளையும், இனவெறியையும், நிறவெறியையும் தாண்டி சாதித்தவர்கள் போட்டு வைத்திருக்கும் பாதை இந்திய Chef என்பது. இந்த அவமானங்கள் துவேஷங்கள் கஷ்டங்கள் இன்னல்கள் என்று எதுவும் இல்லாமல் ‘ஒற்றை ஷோவில் உலகறியும் உங்கள் திறமை’ என்று நம்மிடம் வந்து நிற்கிறது MasterChef தமிழ்.

எத்தனை ஆயிர வருடத்து உணவு பாரம்பரியம் தமிழரின் உணவு! அப்பேர்ப்பட்ட பாரம்பரியமும் இப்படிப்பட்ட ஒரு ஷோவும் இணைந்தால் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் அதன் கலவை! சினிமாவையும் விளம்பரத்தையும் புகுத்தி வெறும் பொழுதுபோக்கு ஷோவாக இதை மாற்றிவிட்டது தான் பெரும் சோகம்.

இறைவனே வந்து பாண்டிய நாட்டு மூதாட்டியிடம் ஆசையாய் வாங்கி உண்டதாகப் பாடப்பெற்ற பிட்டை நாம் காலைச் சிற்றுண்டியாக இன்றும் உண்டுகொண்டிருக்கிறோம். எத்தனை ஆயிர வருடத்து உணவு பாரம்பரியம் தமிழரின் உணவு! அப்பேர்ப்பட்ட பாரம்பரியமும் இப்படிப்பட்ட ஒரு ஷோவும் இணைந்தால் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் அதன் கலவை! சினிமாவையும் விளம்பரத்தையும் புகுத்தி வெறும் பொழுதுபோக்கு ஷோவாக இதை மாற்றிவிட்டது தான் பெரும் சோகம்.

சுடச்சுடத் தலை வாழை இலை சாப்பாட்டை எதிர்பார்த்துப் பசியோடு போனவனுக்கு முள் கரண்டி போட்டு ஆறிப்போன சூப்பை மட்டும் குடிக்கக் கொடுத்த வலியும் ஏமாற்றமும் தான் மிஞ்சுகிறது MasterChef தமிழ்-1 முடிந்த பிறகு. அடுத்த சீசனிலிருந்தாவது வயிறு நிறைந்து மனம் குளிர, கல்யாண விருந்து படையுங்கள்!

-கா.தாஸ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism