Published:Updated:

இப்படியும் ஒரு நடத்துனர்! - நெகிழ வைக்கும் குன்னூர் பேருந்து பயணம்

Mettupalayam
Mettupalayam

ஒருநாள் மேட்டுப்பாளையம் பேருந்தில் ஏறி பயணித்துக் கொண்டிருந்தேன். அதிகாலை நேரமென்பதால் பேருந்தில் அனைவரும் தூக்க கலக்கத்தில் இருந்தோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வழக்கமாக பலருக்கும் சுவாரஸ்யமிக்கதாக அமைவது தொடர் வண்டி பயணம்தான். இதுவே, பேருந்து பயணமென்றால், எப்போது பேருந்தை விட்டு இறங்குவோம் என இருக்கும். ஆனால், எனது வாழ்வில் நான் கடந்துவந்த சுவையான பேருந்து பயணம் பற்றிய அனுபவ பகிர்வே இந்தக் கட்டுரை.

அது... 2008-ல் நடந்த நடந்தது. நீலகிரியின் குன்னூரில் நான் பணி புரிந்துவந்த நேரம். மாதமொருமுறை தேனி சென்றுவிட்டு திருப்பூர் வந்து அவிநாசி, அன்னூர் வழியாக அதிகாலை நான்கு மணி அளவிற்கு மேட்டுப்பாளையம் வந்தடைந்து அங்கிருந்து குன்னூருக்கு பேருந்தில் பயணிப்பேன். ஒருநாள் மேட்டுப்பாளையம் பேருந்தில் ஏறி பயணித்துக் கொண்டிருந்தேன்.

ஊட்டி
ஊட்டி

ஊட்டி பிரதான சாலை வழியாக " ப்ளாக் தண்டர் " கடந்து பேருந்து நிறுத்தப்படுகிறது. அதிகாலை நேரமென்பதால் பேருந்தில் அனைவரும் தூக்க கலக்கத்தில் இருந்தோம். ஓட்டுநரின் பின்புற வரிசையில் பேருந்தின் நடுவில் நடத்துநர் அவர்கள் நின்று கொண்டிருந்தார். நல்ல உரத்த குரலில் நடத்துநர் ஆரம்பித்தார் "மலைகளின் அரசியாம் நீலகிரிக்கு வருகை தரும் உங்கள் ஒவ்வொருவரையும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அன்புடன் வரவேற்கிறது! நண்பர்களாக அறிமுகமாவோம், நண்பர்களாகவே பிரிவோம்.

இந்த பேருந்து பயணத்தின் போது புகைப்பிடிப்பதை முற்றிலும் தவிர்ப்போம். மது அருந்த மாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்வோம். உங்களுடைய ஒவ்வொருவரின் பயணமும் சிறக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் வாழ்த்துகள்! ” என்று பேசிய நடத்துநர் இன்றைய நாளுக்கான திருக்குறள் என

" நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று."

என்று குறளையும், அதற்கான விளக்கத்தையும் கூறிவிட்டு நன்றி கூறி இருக்கையில் அமர்ந்தார். நீண்ட காலமாக இதனைத் தொடர்ச்சியாக அவர் செய்து வர, ஒருநாள் பயணத்தில் அவரிடம் உரையாடிவிட்டு, அலைபேசி எண்ணும் பெற்றுக் கொண்டேன். அவரின் பெயரை ‘திருக்குறள் கனகசுப்பு’ எனவும் பதிவு செய்து கொண்டேன். காலம் உருண்டோடியது நீலகிரி- குன்னூரில் இருந்து கோவைக்கு பணியிட மாற்றம் ஆனது.

குன்னூர்
குன்னூர்

2015-ஆம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் பாரதிய வித்யாபவன் அரங்கில் எழுத்து எனும் அமைப்பின் சார்பில் கவிஞர். ஜெயதேவன் அவர்களுடைய " அம்மாவின் கோலங்கள்" என்ற கவிதை நூலும், தஞ்சாவூர் கவிராயர் அவர்களுடைய "அப்பாவின் கைராட்டைக் கோபம்" என்ற சிறுகதை தொகுப்பினையும், அன்றைய ஒன்றிய அமைச்சராக இருந்த திரு. ப.சிதம்பரம் வெளியிட, அன்றே எழுத்து அமைப்பின் மூலம் கணிசமான தொகை படைப்பாளிகளுக்கு விழாவின் மேடையிலேயே வாங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2016-ஆம் ஆண்டு கோவை திராவிட கழகத்தினுடைய நூற்றாண்டு விழா கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஒரு மில் அரங்கில் நடைபெற்றது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த விழாவில் "நூற்றாண்டுக்கான நூறு புத்தகங்கள் வெளியிடப்பட்டது. அதே நாளில், அந்த ஆண்டிற்கான "சாகித்ய அகடாமி” விருது வண்ணதாசன் அவர்களுடைய "ஒரு சிறு இசை " நூலுக்கு வழங்கப்பட்டது. அதற்காக, வண்ணதாசன் அவர்களுடைய எழுத்துபணிக்கு, முன்பு நான் கூறிய அதே பாரதிய வித்யா பவன் அரங்கில் பாராட்டுவிழாவும் நடந்தது.

மேட்டுப்பாளையம் குன்னூர் சாலை
மேட்டுப்பாளையம் குன்னூர் சாலை

திராவிட இயக்க நூற்றாண்டு விழாவினை முடித்துக் கொண்ட நான், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் கோவை, துடியலூரில் இருக்கும் என்னுடைய வீடு நோக்கி பயணித்தேன். எனது இருசக்கர வாகனம் கோவை ஆர்.எஸ். புரத்தினை கடக்கும் போது, சாலையோரமாக நின்றிருந்த ஒருவர் "லிஃப்ட்" கேட்டு கை காட்டினார். மெதுவாக வாகனத்தை நிறுத்தி அவரை ஏற்றிக்கொண்டேன். பின்னர், மெல்லப் பேச்சுக் கொடுத்தேன், "தங்களுக்கு எங்கே பணி, எதன் பொருட்டு இந்த நேரம்?" என கேட்க, சாகித்ய அகாடமி விருதுபெற்ற வண்ணதாசன் அவர்களுடைய பாராட்டு விழாவில் கலந்து கொண்டு திரும்புவதாகவும் , தான் பொள்ளாச்சியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பணி மனையில் பணி புரிவதாகவும் கூறினார்.

உற்சாகமாக நானும் "அடடே.... நான்கூட வண்ணதாசனுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டியவன்தான், திராவிட இயக்க நூற்றாண்டுக்கான விழாவுக்குச் சென்றதால், தவிர்க்க வேண்டிய சூழல். போக்குவரத்துத் துறையில் பணி புரிவதால், உங்களிடம் இதைக் கூறியே ஆக வேண்டும்” என்று கூறிவிட்டு, மேட்டுப்பாளையம் - நீலகிரி பயணத்தில் சந்தித்த

"திருக்குறள் சுப்பு"வின் சீறிய பணியினைப் பற்றிய அனுவவங்களை உவகையுடனும், உற்சாகத்துடனும் பகிர்ந்தேன்.

உற்சாகமான உரையாடிக் கொண்டே, வந்து சேர வேண்டிய துடியலூர் வந்தடைந்தோம். இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கிய அவர் உற்சாகமாக எனது கரங்களை பற்றிய படி "தாங்கள் இவ்வளவு நேரமாக கூறிய நடத்துநர் "திருக்குறள் கனகசுப்பு" நானேதான் என்று கூறினார்.

“என்வாழ்வில் திருக்குறளையும், அதற்கான விளக்கவுரையையும் கூறி வந்தமைக்கான வாழ்வின் பயனை உங்களுடனான உரையாடல் மூலமாக அடைந்து விட்டேன். இப்போதும் பொள்ளாச்சி பணிமனையில் ஓட்டுனர்கள், நடத்துநர்கள் ஆகியோரின் உற்சாகமான கல்வி கற்பிற்கும் பணியினை தொடர்கிறேன்” என்றார்.

அளவற்ற ஆனந்தமடைந்த நான், இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கி, அவரைக் கட்டியணைத்துக் கொண்டேன்.

அதன்பிறகு, ஆறேழு ஆண்டுகள் ஓடிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் பல அலைபேசிகளை மாற்றிவிட்டேன். தங்களுடைய எண் கூற இயலுமா என நான் கூற, அவரும் அவரது அலைபேசி எண்னை கூறுவார். நானும் அலைபேசியில் தட்டச்சு செய்கையில் "திருக்குறள் கனகசுப்பு" என ஒளிர்ந்தது. வாழ்வின் அடுத்தடுத்த நிமிடங்கள் மறைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்களை உணர்ந்த நிமிடங்கள் அவை.

ரயில் பயணம் மட்டுமா..? இல்லவே இல்லை..! பேருந்து பயணங்களும் சுவையானது, சுகமானது, சுவாரஸ்யமனது.

-வீ. வைகை சுரேஷ், தேனி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு