வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
தினமும் நான் காலையில் அண்ணா நகர் டாக்டர் விஸ்வேஸ்வரய்யா கோபுர பூங்காவில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். ஒரு நாள் நடுத்தர வயதுடைய மூன்று பெண்கள் என்னை வழிமறித்து "மன்னிக்கவும், நாங்கள் மூவரும் 40 வயதடைந்தவர்கள். இக்காலகட்டத்தில் நாங்கள் எதிர்கொள்ளும் உடல் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் என்ன என்பதை உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளோம். உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறோம். எங்களுக்காக சற்று நேரம் ஒதுக்க முடியுமா?” என்று பணிவுடன் கேட்க, நான் உடனே அதற்கு சம்மதம் அளித்தேன். அதன்படி அடுத்த நாள் எனது கிளினிக்கில் காலை சுமார் 10 மணி அளவில் தொடங்கிய எங்களின் கலந்துரையாடல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. அதை அப்படியே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நடுத்தர வயதடைந்த பெண்களைப் பற்றிய ஒரு சிறிய முன்னோட்டம்.
சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் உள்ள முதியோர் நல வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொள்பவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகம். ஆனால் உள் நோயாளிகளின் பிரிவு இதற்கு நேர்மாறாக, பெண்களைத் தான் உள்நோயாளிகள் பிரிவில் அதிகம் காணலாம். இதற்கு என்ன காரணம்? சுமார் 50 வயதைக் கடந்த பெண்களுக்கு உடலில் ஏதாவது ஒரு தொல்லை ஏற்பட்டால், இது வயதானால் வருவதுதான். இதற்கு எல்லாம் மருத்துவரிடம் செல்ல வேண்டுமா என்று அலட்சிய மனப்பான்மையினாலேயும் மற்றும் வேலைப் பளுவினாலும் மருந்துவ உதவி பெறுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நோய் முற்றிய நிலையில்தான் மருத்துவரிடம் செல்கிறார்கள். இதனால் பல பெண்கள் உள்நோயாளிகள் பிரிவில் ர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.
ஆண்களையும் பெண்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அதிக அளவில் உடல் நலத்தில் அக்கறையும் நேரமும் செலுத்துபவர்கள் ஆண்கள் தான். ஏனென்றால் ஆணுக்கு பணம் ஈட்டுவது தான் தலையாய கடமை. ஆனால் பெண்ணுக்கோ, வீட்டைக் கவனித்தல், சமைத்தல், குழந்தை வளர்த்தல், மாமனார், மாமியார், கணவர் என அனைவரையும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுதல் என பல வேறுபட்ட கடமைகளும், கவலைகளும் உள்ளன. பல்வேறு கவலைகளால் மனம் சோர்வடைவதோடு, நேரமின்மையினால் பெண்கள் தங்கள் உடலைப் பேணிக் காக்க முடிவதில்லை.

கேள்வி:
எனக்கு மாதவிடாய் நிற்கும் காலம் வருவதை உணர்கிறேன். இச்சமயத்தில் எந்தவிதமான மனம் மற்றும் உடல் சார்ந்த தொல்லைகள் வரலாம். நான் அதை எப்படி எதிர்கொள்வது. உங்களின் பதில் என் வயதை ஒத்த மற்ற பெண்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
பதில் :
"மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா” என்று பாரதியார் பாடியுள்ளார். பெண்களுக்கு அவர்கள் வாழ்வில் எத்துனை எத்துனை நிகழ்வுகள் கடல் அலைகள் போல் வந்து வந்து போய் கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு தான் இறுதி மாதவிடாய்.
மாதவிடாய் நிற்பது என்பது ஒரு நோயல்ல. அது இயற்கையின் நியதி. அதை சரியாகப் புரிந்து கொண்டால் அக்காலம் மிகவும் தொல்லையில்லாத காலம் என்றே கூறலாம்.
ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பருவத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் கட்டம் பூப்பெய்தும் வரை. அடுத்தது குழந்தைப்பேறு அடையும் பருவம். இறுதி மாதவிடாய்க் காலம் கடைசிப் பருவம் ஆகும். மாதவிடாய் நிற்கும் பருவத்தை மூன்று காலங்களாகப் பிரிக்கலாம்.
இறுதி மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய காலம்.
இறுதி மாதவிடாய் காலம்.
இறுதி மாதவிடாய்க்குப் பிறகு வரும் காலம்.
இறுதி மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய காலம்
மாதவிடாய் நிற்பதற்கு சுமார் 3-4 வருடங்களுக்கு முன்னரே இப்பருவம் ஆரம்பித்து விடுகிறது. இக்காலத்தில் பெண்ணின் சினைப்பையிலிருந்து வெளிவரும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைகிறது, அதனால் சரிவர மாதவிடாய் ஏற்படுவதில்லை. அதாவது முகம் மற்றும் உடம்பிலுள்ள பல்வேறு பாகங்கல் திடீர் திடீரென்று சிவந்து, சூடு அடைந்து விடும். இதைத் தவிர துாக்கமின்மை, தலைவலி, களைப்பு, படபடப்பு மற்றும் மயக்கம் போன்ற பல தொல்லைகள் தோன்றுவது உண்டு.

இறுதி மாதவிடாய் காலம்
மாதவிடாய் தொடர்ந்து 12 மாதங்களுக்கு ஏற்படாமல் இருந்தால் அவர்கள் இப்பருவத்தை அடைந்து விட்டார்கள் என்று எண்ணலாம். சராசரியாக இப்பருவம் 45 வயது முதல் 50 வரையில் ஏற்படலாம். ஆனால் சமீப காலத்தில் பலருக்கு தங்கள் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களினால் 40 வயதிலேயே மாதவிடாய் நின்று விடுகிறது.
அறிகுறிகள்
முதலில் மாதவிடாய் விட்டு, விட்டு வருதல். சில நேரங்களில் மிக அதிகமாகவும் வரலாம். உடல் சிவந்தல், வியர்த்துக் கொட்டுதல் இவைகளும் சேர்ந்து வரும். சுமார் 70 சதவிகித பெண்களுக்கு இத்தொல்லைகள் வரலாம். சிலருக்கு இத்தொல்லைகள் பல ஆண்டுகள் கூட நீடிக்கலாம். துாக்கமும் வெகுவாகப் பாதிக்கப்படும். இதனால் பகலில் மிகுதியான களைப்பு ஏற்படும். பிறப்புறுப்புக்கள் மற்றும் நீர்த்தாரையில் அரிப்பு, வறட்சி, நீர்கசிவு, சிறுநீர் கசிவு, இரத்தக்கட்டி போன்ற தொல்லைகள் ஏற்படலாம். மேற்கண்ட உறுப்புகளில் கிருமிகள் மூலம் நோய் தொற்றும் ஏற்படலாம்.
பாலுணர்வு பிரச்சனைகள்
மார்பகங்கள் சற்று தளர்ந்து, சரிந்து விடுகிறது. பிறப்புறுப்புகள் சுருங்குவதாலும், ஈரத்தன்மை குறைவதாலும், பாலுணர்வு குறைவதோடு உடலுறவில் நாட்டமின்மை ஏற்படுகிறது. இதைத் தவிர வேறு சில மருத்துவப்பிரச்சனைகள், குடும்பப் பிரச்சனைகள் மற்றும் தனித்து இருக்க முடியாத ஒரு சூழ்நிலை ஆகிய காரணங்களால் பாலுணர்வு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இவர்களுக்கு உடல் மற்றும் மூட்டுகளில் வலி தோன்றும். சிலருக்கு முழங்கால் மூட்டுத் தேய்மானம் இப்பருவத்திலேயே தொடங்கி விடுவதும் உண்டு. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவால் எலும்பு வலிமையிழந்து எளிதில் முறிவு ஏற்படும் வாய்ப்பும் உண்டாகும். தோலின் நிறம் சற்று மாறும், வறட்சி மற்றும் சுருக்கங்கள் தோன்றும். இதனால் தோல் எளிதில் காயமடைய வாய்ப்புண்டு.

இறுதி மாதவிடாய்க்குப் பிறகு வரும் காலம்
மாதவிடாய் நின்று சுமார் 5-10 வருடங்கள் கழித்து இப்பருவம் ஆரம்பித்துவிடும். இக்காலத்தில் எலும்பு பலவீனம் அடைதல், பிறப்புறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்படுதல், கர்ப்பப்பை கீழே இறங்குதல் மற்றும் மார்பகம், கர்ப்பப்பையில் புற்றுநோய் போன்ற தொல்லைகள் வரலாம். இவைகள் எல்லாம் மாதவிடாய் நின்ற அனைத்துப் பெண்களுக்கும் வருவதில்லை. ஒரு சிலருக்கே ஏற்படுகிறது. மாதவிடாய் முழுமையாக நின்று சுமார் ஒரு வருடம் கழித்து பிறப்புறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்படலாம். இதற்கு பிறப்புறுப்பு சுருங்குவது, பிறப்புறுப்புகளில் கட்டி, கர்ப்பப்பை கீழே இறங்குதல் மற்றும் கர்ப்பப்பையில் புற்றுநோய் போன்றவைகளே காரணங்களாக இருக்கலாம்.
சிகிச்சை முறைகள்
மாதவிடாய் நிற்கும் பருவத்தில் உண்டாகும் தொல்லைகளுக்கு பொதுவாக சிகிச்சை ஏதும் அதிகம் பேருக்கு தேவைப்படுவதில்லை.
யோகா, தியானம், மசாஜ் மற்றும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி மூலமே பல தொல்லைகள் குறைந்து விடும்.
எலும்பு பலவீனம் அடைவதைத் தடுக்க சுண்ணாம்பு சத்து அதிகமுள்ள உணவை உட்கொள்ள வேண்டும். வைட்டமின் டி அதிகம் கிடைக்க குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது வெயிலில் நிற்க வேண்டும். வைட்டமின் டி அதிகமுள்ள பால், பாலாடை கட்டி, மீன், மீன் எண்ணெய் மற்றும் கல்லீரல் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடற்பருமனாக உள்ளவர்கள் உணவுப் பத்தியம் மற்றும் உடற்பயிற்சியை கடைப்பிடித்து வரவேண்டும்.
ஒரு சில பெண்களுக்கு மனநல மருத்துவரின் உதவியும் தேவைப்படலாம்.

மருத்துவ சிகிச்சை
சுண்ணாம்புச் சத்து மற்றும் வைட்டமின் டி மாத்திரையை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
பிறப்புறுப்புகளில் வறட்சி உள்ள பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் களிம்பை தடவலாம்.
மன அமைதியைக் கொடுக்கும் மாத்திரை நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
மனம் சார்ந்த தொல்லைகளுக்கு மனச்சோர்வுக்கான மாத்திரையை கொடுக்கலாம்.
புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை கீழே இறங்குதலுக்கு தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்யலாம்.
ஹார்மோன் சிகிச்சை
குறைந்த அளவில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கொடுப்பதின் மூலம் உடல் மற்றும் மனம் சார்ந்த தொல்லைகள் குறையும், எலும்பு உறுதி பெறும். இருதய நோய்கள் வருவதும், குறைய வாய்ப்புண்டு. ஆனால் இச்சிகிச்சை முறையினால் பல தீய விளைவுகளும் ஏற்படலாம். அவை: எடை கூடுதல், தோலின் நிறம் மாறுதல், கால்களில் ரத்தம் கட்டிப் போதல், கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் தோன்றுதல். ஆகையால் இச்சிகிச்சை முறையை மிக்க கவனத்துடன் ஒரு சிலருக்குத் தான் அளிக்க முடியும்.
மாதவிடாய் நிற்கும் பருவத்தில் தோன்றும் ஒரு சில தொல்லைகளுக்கு நடுவே சில இனிப்பான செய்திகளும் உண்டு. அவைகள்:
மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாயிலிருந்து நிரந்தர விடுதலை
கர்ப்பம் ஏற்படுமோ என்ற பயத்திலிருந்தும் விடுதலை.
மாதவிடாய் நிற்கும் பருவ காலங்களில் ஏற்படும் தொல்லைகளுக்கு மருந்துகளினால் மட்டும் பூரண குணமடைய முடியாது. தாயாகவும், மனைவியாகவும், சகோதரியாகவும், மகளாகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு வரும் அப்பெண்ணிற்கு தேவையானது குடும்பத்தார்களிடமிருந்து கிடைக்கும் உண்மையான அன்பும் அரவணைப்புமே. இவைகளை அக்குடும்பத்தினர் தாராளமாக கொடுக்க முன் வந்தால் இறுதி மாதவிடாய் பருவமும் ஒரு இனிய பருவமே! அதை அனைத்துப் பெண்களும் இன்முகத்துடன் வரவேற்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.