வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
இரவின் நடுவில் உறக்கம் களைந்து திடீரென விழித்துக் கொள்கிறான் அலாவுதீன், தனது படுக்கையின் அருகில் ஏதோ ஒரு ‘வழுக்கு’பொருள் ஒன்று கிடக்கிறது. தமது விழிகளை கசக்கிக் கொண்டே அதன் வழுக்கும் திரைகளில் தனது விரல்களை வைத்து தேய்க்கின்றான்..
அங்கே!!!!..
திடீரென ஒரு சிறிய 'கிளிங் என்ற சிற்றொலியை எழுப்பியவாறே ஓர் ஒளியொன்று அந்த பொருளின் கண்ணாடி உள்ளிருந்து அவன் இமைகளில் ஊடுருவி விழிகளை அகல திறக்கச் செய்கிறது...
விழிகள் விரிய அதனைப் பார்க்கிறான் அலாவுதீன் ..
“ ‘ஆலம்பனா!’ நான் உங்களின் அடிமை வந்துள்ளேன் உங்களுக்கு என்ன வேண்டும் ‘ஓஷு’ கட்டளை இடுங்கள்”
என அவன் செவிகளில் மெலிதாய் அது உரைப்பது போல் ஒரு பிரமை...
அத்துடன் அவன் தூக்கம் கலைந்து அதனுடன் உலவ ஒரு குதூகலம் அவன் உள்ளத்தில் பிறப்பெடுக்கிறது ..
அதனிடம் உலகின் ஒரு பகுதியை சொல்லி அது எப்படி இருக்கும் என்னை கூட்டிச் செல் என்கிறான். சில நொடிகளில் அந்த இடத்தை துல்லியமாக திரையில் காட்டுகிறது...
உலகின் சிறந்த சுவைமிக்க உணவுகள் எதுவென்று எனக்கு காட்டு என்கிறான் அவன் இதுவரையிலும் கண்டிராத ஒரு பத்து பதார்த்தங்களை அவனுக்கு காட்டி அது கிடைக்கும் இடங்களையும் சொல்கிறது..
பலநாள் தொடர்பில் இல்லாத தன் தோழன் எங்கிருக்கிறான் எனக் கேட்கிறான் அவன் இருக்கும் இடத்தையும் அவனது தொலைதொடர்பையும் அவனுக்கு காட்டுகிறது..

ஆர்வமும் எதிர்பார்ப்பும் மேலோங்க என்னவெல்லாம் அவன் இச்சை சொல்கிறதோ! அவை அனைத்தையும் அந்தப் பொருளை உரசி ஒளி பூதத்திடம் கேட்கும் எண்ணம் அதிகரிக்க கடிகாரத்தைப் பார்க்கிறான்..
அவனிடம் இருந்த சுமார் இரண்டு மணி நேரத்தை அந்த ஒளி பூதம் தின்று விட்டது என்பதை அறிந்தும் அதனோடு உலவும் ஆர்வம் அவனுக்கு அதிகரிக்கவே செய்கிறது.
மேலும் அவன் விரல்களை தேய்த்து அதனை அழைக்கிறான் மறுக்காமல் அதுவும் அவனுக்கு காட்டிச் செல்கிறது..
நேரங்கள் யாவும் நொடி முள்ளாய் பறந்து கொண்டிருப்பதை அறியாமல் அவனது சல்லாபம் தொடர்கிறது..
அந்த நேரம் பொழுதைப் பார்த்த சேவலின் குதூகலக் குரலும், தனது அலகுகளால் ராகம் பாடி புழுக்களை கவர்ந்து கொத்த காத்திருக்கும் குருவிகளின் பாடலும் அவனது செவியை அடையவில்லை. “
ஆனால் அவன் தூங்கவுமில்லை, காலைப் பொழுதின் அத்தனை ஒலிகளையும்,ஒய்யார விடியலையும் அவன் உணரா வண்ணம் திரையின் மறைவில் திரியும் பூதத்தின் சிற்றொளி மறக்கச் செய்கிறது..
அவனிடமிருந்து சுமார் ஐந்து மணி நேரங்களுக்கும் மேலாக தின்றொழித்துவிட்ட பூதத்தின் ஒளி மங்குகிறது என்பதை அவன் விழிகள் உணர்த்தியது..
திடீரென மணித்துளிகளில் அந்த பூதம் மறைந்து விட்டது..
அப்போதுதான் தனது காதில் மாட்டியிருந்த 'ஏர்போனை' கழட்டினான்..
அப்போது தாழிட்டிருக்கும் கதவை தடதடவென தட்டும் ஓசை கேட்கிறது..
பதறியடித்துக் கொண்டு ஓடி கதவைத் திறக்கிறான்..
அங்கே!
"ஏ எரும! மணி ஒம்போது ஆகுது, காலேஜிக்கு போக வேணாமா??
இப்படியா எரும மாடு மாதிரி தூங்குவ.."
அம்மாவின் கத்தலை காதில் வாங்கிக் கொண்டே குளியலறை நோக்கி ஓடினான்..
குழாயை திறந்து விட்டு சிந்தித்தான்..
"அடச்சே!! இந்த பாழா போனது நமக்கு அடிமை னு நெனச்சோம். ஆனா இத்தன நேரமா நம்மளயில்ல அடிமையாக்கி வெச்சு இருந்திருக்கு.."
உச்சந்தலையில் விழுந்த தண்ணீர் அவனது அடிமை சிந்தனையை கலைத்தது.
எண்ணமும் எழுத்தும்
பாகை இறையடியான்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.