வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
என்ன இது! நான் எங்கு இருக்கிறேன்..????.
என்னைச் சூழ்ந்திருக்கும் ஓர் பூவைவிட மெல்லியதான சுவர், அது பந்துபோல் என்னைச் சுற்றி அணைத்திருக்கிறது..
ஆனால் எனக்கு பயமில்லை...
எனக்குப் பசிக்கிறதே! நான் எங்கு சென்று எனது உணவுத் தேவையை பூர்த்தி செய்வேன்..
என்ன ஆச்சரியம்..
எனது உதரத்தினூடே ஓடும் ஓர் கொடிவழியே இறங்கும் ஒரு திரவ உணவானது நான் நினைத்த மாத்திரத்தில் எனது பசியை ஆற்றுகிறது..
பசி பறந்தோடிய பின் களைப்பு நீங்கி, என்னுள்ளம் என்னைச் சூழ்ந்திருக்கும் பந்து போன்ற பாதுகாப்பு கவசத்தை தாண்டி விளையாட எண்ணுகிறது...
கைகளை சோம்பல் முறித்து அவ்வப்போது கால்களால் எனைச் சூழ்ந்து நிற்கும் மலர்மேனிசூழ் பந்தினை எட்டி, எட்டி உதைக்கிறேன்..
உதைக்கும் என் உள்ளங்கால்களை வெளியிலிருந்து ஒரு கரம் வருடிக் கொடுக்கிறது..
அதேசமயம் ..
அசரீரியாக ஒரு குரல் அது கொடுக்கும் ஓசை, ஆனந்த ராகமாய் என்னிதயத்தை தழுவுகிறது.

நான் உதைப்பதால் உண்டாகும் சிற்றதிர்வின் வலி வேதனையை பொறுக்க மாட்டாமல் என்னைத் திட்டி தீர்த்து, உதைக்கும் எனது உள்ளங்கால்களை கிள்ளும் என நினைத்தால், உலகின் பேரன்பை அள்ளி அன்பெனும் தேனில் குழைத்து என்னை கொஞ்சுகிறதே! அந்த குரல்...
அந்த தேமதுரக் குரலின் தித்திப்பிற்கு தத்தளித்த என்னிதயம் அப்பொழுதே! இதய ஓசையோடு இக்குரலையும் பிணைத்து குருதியில் கரைத்தது..
இமைகள் அக்குரல் வரும் ஆதி அன்பின் அப்பெரு வடிவத்தை காண ஆவலோடு விரிய நினைக்கிறது.
அந்தோ..முடியவில்லையே!!..
பாசத்தை குழைத்து, அன்பை அள்ளித் தெளித்து என்னைத்
தாலாட்டும் இந்த தென்றல் ராகங்கள் என்ன சொல்கிறது.?
ரோஜாவின் ஓரிதழளவு கொண்ட என் செவிகளை கூர்மையாக்கி அந்த குரல்களை செவிமடுக்கிறேன்..
செல்லமே!..
ஆஹா! எத்துனை இன்பமயமான அழைப்பு..!!!!
இனிய முலைப்பாலின் சுவையை இதுவரை அருந்தியதில்லை, அருஞ்சுவை முக்கனிகளின் சுவையை இதுவரை சுவைத்ததில்லை, எவர்கரமும் தீண்டிடா இனிய தேனின் இன்சுவையை உண்டதில்லை இவை அத்தனையும் ஒரு குரலின் ஓசைக்குள் அடங்கி என் சின்னஞ்சிறு நெஞ்சுக்குள் இறங்கி சிலிர்க்கிறதே!..
அக்குரல் மென்மேலும் என்னிதயத்தில் இறங்கி ஆற்றுப்படுத்துகிறது.
மெல்லிய சிறு குரலில் பாசுரங்கள் சுரக்க இனிய நாதமாய் அது சொல்லும் சொற்களை கேட்டுக் கொண்டே! இருப்பதென்றால் பத்தென்ன, பன்னிரு மாதங்கள் கூட பயமின்றி அந்த சொர்க்க கூட்டுக்குள் வசித்துக் கொண்டிருக்கலாம்.

பொறு செல்லமே!, இறைவன் உன் வரவுக்கு விதித்த கெடு இன்னும் விலகவில்லை, அதுவரையில் என்னுள்ளேயே விளையாடு இன்னும் நன்றாக உதைத்து விளையாடு!
உன் உதைகளால் என் சதை கிழிந்திடினும் சந்தோஷ இதழ் கொண்டு உன்னை தாலாட்டுவேன்! உன் பஞ்சு பாதங்களை தடவிக் கொடுப்பேன் எனை வதைக்குமே! என்றெண்ணி ஒருபோதும் உன் உதைகளை நிறுத்தி விடாதே அவை வெறும் உதைகளல்ல என்னுயிறொன்று எனக்குள் உயிர்த்திருக்கும் உணர்வை சுமக்கும் உயர்வலி அது..
உன்னுடலை என் கரங்களில் தாங்கும் அந்த முதல் ஸ்பரிசத்திற்காக, உன் கன்னங்களுக்கு ஒத்தடம் தரும் என் முதல் முத்தத்திற்காக, உலகில் எனக்கு துணையாய் நீ வந்துவிட்ட சந்தோஷத்தை மொழியறியா உன் இதழ்கள் மூலம் நீ சொல்லும் உனது அழுகை பேச்சிற்காக இந்த பல மாத தவத்தினை நான் மேற்கொண்டிருக்கிறேன்.
கொஞ்சம் பொறுத்திரு கண்ணே! ஆராரோ..ஆராரிரரோ...
ஆஹா!!! ஒரு தன்னிகரற்ற தேவதையின் இந்த தாலாட்டு எனது உலக மொழிகளுக்கெல்லாம் அந்தமும், ஆதியும் இதுதானோ!!!
இந்த கானம் என் செவிக்குள் இறங்கிய கனம் சொற்களின் சொர்க்கத்தில் செவிகள் லயித்திருக்க, விழிகளோ! அந்த தாய் தேவதையின் தங்க தரிசனத்தை காணும் ஆவலில் இப்போதே காத்திருக்க துவங்குகிறது..
எனக்கான தனியானதொரு பௌதீக மண்டலத்தில் ஓர் லௌகீக இருப்பாய் நானிருக்கும் கர்ப்ப மண்டலம் சிறக்கிறது..

ஒருநாள்..
எனை சுமந்து நிற்கும் என் தேவதை எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது..
ஏதோ ஓர் இனம்புரியா விசையொன்று நானிருந்த சொர்க்க மண்டலத்திலிருந்து என்னை விரட்டுகிறது..
நான் கெஞ்சுகிறேன்..அஞ்சுகிறேன் பதறுகிறேன்...கதறுகிறேன்
வேண்டாம் என்னை விட்டுவிடு..
அவ்விசையிடம் விசும்புகிறேன்...
நீ இப்போது வெளியேறவில்லை என்றால் நீ சுகமாய் லயித்திருக்கும், இந்த வயிற்றுக்கு சொந்தக் காரிகையை, உனை சுமந்து நிற்கும் தாயெனும் தன்னிகற்ற இந்த தேவதையை வானம் வரவேற்று வாங்கிச் செல்லும்..!!
என்றெனை எச்சரித்து சென்று வா..,
என இப்போது மேலும் பலமாக அவ்விசை எனை அழுந்தி தள்ள முயற்சிக்கிறது..
என் சொர்க்க கூட்டிலிருந்து வெளியேற்றும் விசைக்கு எதிரான என் போராட்டம் தோற்று இயற்கையின் முரண்டுக்கு இறங்கி அதுவரையில் என்னை சுமந்து நின்ற நீர்க்குடம் சிதறுகிறது, என்னிருப்பை உறுதியிட்டு மெய்ப்பித்த அந்த புனிதத்தை பிளந்து தர்ம தேவதையின் மடியில் தவழ்ந்து கதறியபடியே சொர்க்கமும், நரகமும் இரண்டற கலந்து நிற்கும் பிரபஞ்சத்தின் எங்கோ ஓர் மூலையில் என் பிறப்பெனும் நிகழ்வு நிகழ்ந்தேறுகிறது..
இதுவரை எனக்கான ஒற்றை உலகத்தில் எனக்குள் இறங்கியிருந்த என்னினிய ஒற்றைக் குரலுக்கு சொந்தமான எனது தேவதையை தவிர்த்து பல குரல்கள் என் சின்னஞ்சிறு செவிப்பறையை கிழித்து நுழைகின்றன.
அவற்றில் பல ஆனந்தத்தில் குதூகலிக்கின்றன, நான் அம்முகங்களை கண்டு அஞ்சி நடுங்குகிறேன்...
நீங்களெல்லாம் யார் என்ன இனம்?.
ஏதோ ஒரு புது உயிரினங்களின் கோள்களுக்குள் நுழைந்துவிட்ட ஏதோ ஒரு விண்ணுயிரியைப் போல் உள்ளம் பதைக்கிறது..
மீண்டும் வீறிட்டு அழுகிறேன்..
இப்போது இன்னும் ஆனந்தமாய் கூக்குரலும். கூப்பாடும் காதைப் பிளக்கிறது..
என்ன உயிரிகள் இவர்கள் நான் அழுகிறேன் இவர்கள் சிரிக்கிறார்கள் எனது அழுகையில் இவர்களுக்கென்ன இப்படி ஒரு ஆனந்தம், இந்த அரக்கர் உலகில் இரக்க ஜீவனான நான் எப்படி தப்பிப்பது.?
அடடே! எனக்கும் உங்களைப் போன்றல்லவா? ஒவ்வொரு உறுப்புகளும் இருக்கின்றன..
ஓ! நானும் உங்களில் ஒருவன்தானா? இத்துனை நாள் என்னை பார்க்காமல் எங்கே சென்றிருந்தீர்கள்?..
எனது சின்னஞ்சிறு மூளைக்குள்தான் எத்தனை கேள்விகள் அப்பப்பா!!
அந்த கேள்வியினூடே இதுவரை தன்னிதழ்களால் என்னை கொஞ்சி குலாவிய, அந்த கருணை இதழ்களில் முத்தம் பெறவும், என் பாதங்களை வருடிக் கொடுத்த அந்த காருண்ய கரங்களில் தவழவும் என்னுள்ளம் துடிக்கிறது..

எங்கே! எனது தங்க தேவதை, என்னைப் பார்க்க துடித்த அந்த விழிகளில் நான் விழ வேண்டுமே! அவளது எச்சில் முத்தங்களில் என் முகம் நனைய வேண்டுமே! அவளது மூச்சுக் காற்றை ஒருமுறையேனும் சுவாசிக்க வேண்டுமே! ஏந்தி நிற்கும் அவளது கரங்களில் எனதுடலை அடக்க வேண்டுமே! இருட்டறைக்குள் நான் கேட்ட ஆனந்த ராகங்களை இப்போது வெளிச்ச வேள்விக்குள் உணர வேண்டுமே!.
முற்றுமுன் உதிர்ந்த சிறு திராட்சைகளைப் போன்ற என் விழிகளை விரித்து தேடுகிறேன்..
எனக்குத் தெரிந்த ஒரே மொழியான அழுகையினூடே அனைவரிடமும் யாசிக்கிறேன்..
எனது கண்கள் ஏங்கித் தவித்திருக்கும் என் தேவதை தாயை என் சிறு விழிக்குள் பெரு உருவாய் பார்க்க தாருங்களேன், உங்கள் கர ஒலிகளும், கரகர குரல்களும் கேட்டு என் காது மடல்கள் மூடிக்கொண்டன..
இனி என்னினிய தேவதையின் இன்னிசை குரலை மட்டுமே என் செவி மடல்கள் திறந்து வாசிக்கும், அதுவரையில் என்னிதழ்களும் மௌனித்து நிற்கும், எனது விழிகளில் வந்து விழும் அந்த ஆதி அன்பின் பெரு ஊற்றினை, நற்குணங்களின் பெருவடிவை, என்னுதரம் நிறைக்கும் உணவை நெஞ்சுள் கொண்டவளை, என்னுதிரம் முழுக்க நிறைந்தென்னை ஆட்கொண்டவளை காணும் வரையில் இமைகளும் இனி விழிகளை மூடியே வீற்றிருக்கும்..
எண்ணமும் எழுத்தும்..
பாகை இறையடியான்..
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.