Published:Updated:

``என் நாடகம் பிடிக்காதவங்க பார்க்க வராதீங்க!’’ - நடிகவேள் நினைவலை | My Vikatan

M. R. Radha

குன்றக்குடி பெரிய அடிகளார் எம்.ஆர்.ராதாவுக்கு 'கலைத்தென்றல்' என்ற பட்டத்தைக் கொடுத்தபோது மலைக்கோட்டை மணி அடிக்க ராதாவின் மேல் மலர்மழை பொழிய ஒரே அமர்க்களம்.

``என் நாடகம் பிடிக்காதவங்க பார்க்க வராதீங்க!’’ - நடிகவேள் நினைவலை | My Vikatan

குன்றக்குடி பெரிய அடிகளார் எம்.ஆர்.ராதாவுக்கு 'கலைத்தென்றல்' என்ற பட்டத்தைக் கொடுத்தபோது மலைக்கோட்டை மணி அடிக்க ராதாவின் மேல் மலர்மழை பொழிய ஒரே அமர்க்களம்.

Published:Updated:
M. R. Radha

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

இன்றைய தேதியில் ஒரு சினிமாவை வெளியிடுவதற்கு முன்பாக நிறைய நிகழ்ச்சிகள் மூலமாக அந்த திரைப்படம் எதிர்பார்ப்பை தூண்டுகிறார்கள். முன்பு நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சினிமாக்களில் நடிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் வெள்ளித் திரையென்னும் சினிமாவில் நடித்தவர்கள் சின்னத்திரை எனும் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தனர். இதோ இன்று பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடிப்பவர்கள் வெள்ளித்திரையில் நடிப்பவர்களாக வந்து விடுகின்றனர்.

ஒவ்வொரு படத்திற்கும் முதல் போஸ்டர் படம் வெளியீடு, ஒரு பாடல் வெளியீடு, அடுத்த பாடல் வெளியீடு, இசை வெளியீட்டு விழா என கொண்டாட்டங்கள் மூலமாக விளம்பரம் செய்கின்றனர்.

M. R. Radha
M. R. Radha

இன்று ஒவ்வொரு திரைப்படம் ஆரம்பிக்கும் முன்பாக இந்த திரைப்படத்தில் பறவைகளோ, விலங்குகளோ துன்புறுத்தப்படவில்லை என்ற வாசகம் ஒளிரும். புகைப்பிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் வருகையில் புகைப் பிடிப்பது, மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கு என்ற எச்சரிக்கை வாசகம் ஒளிரும்.

ஆனால் சினிமாவுக்கு முன்னோடியாக விளங்கிய நாடகத்திற்கே விருப்பமில்லாதவர்கள் வர வேண்டாம் அவர்களுடைய பணமும் வேண்டாமென ஒருவர் கூறினார். அவர்தான் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள். நடிகவேள் என்றாலே சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்பு. சில சுவாரஸ்யமான தகவல்களை மட்டும் இந்த கட்டுரை மூலமாக அறிவோம் .

M. R. Radha
M. R. Radha

'போர்வாள்' நாடகம் திருச்சி ஹாலில் நடந்தபோது பெரியார் முன்னிலையில் பட்டுக்கோட்டை அழகிரிசாமி 'நடிகவேள்' என்ற பட்டத்தை எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கினார்.

அறிவிப்பு : "என் ராமாயண நாடகம் இந்துக்களின் மனத்தைப் புண்படுத்துகிறது என்று கருதுபவர்கள் , என் நாடகத்திற்கு கண்டிப்பாய் வரவேண்டாம் ; அவர்கள் காசும் எனக்கு வேண்டாம். மீறி வந்து பார்த்தால் ,அவர்கள் மனம் புண்பட்டால் , அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதைக் கண்டிப்பாய் அறியவும் ! "

- அன்பன் : எம்.ஆர்.ராதா .

இப்படியாக சுவரொட்டிகள் அடித்து ஒட்டியவர். நடிகவேள் அவர்கள்.

குன்றக்குடி பெரிய அடிகளார் எம்.ஆர்.ராதாவுக்கு 'கலைத்தென்றல்' என்ற பட்டத்தைக் கொடுத்தபோது மலைக்கோட்டை மணி அடிக்க ராதாவின் மேல் மலர்மழை பொழிய ஒரே அமர்க்களம். அப்போது அடிகளார், “ராதா மதத்தையும் சமயத்தையும் வெளுத்தெடுப்பதாகச் சொல்கிறார்கள், தூய்மையாக்கவே அவர் வெளுக்கிறார். அதனால்தான் அவரை நான் தென்றல் என்கிறேன்” என்றார்.

M. R. Radha
M. R. Radha

சேலத்திலும் பொன்மலையிலும் கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டபோது ராதாவால் தாங்கமுடியவில்லை. இதை ஏன் என்று கேட்க நாதியே இல்லையா என்று பெரியாரிடம் கொதித்தார்.

அந்தக்கால நாடக மரபை மீறி நாடக முன்திரையில் உழைப்பாளியின் படம் வரைந்து “உலகப் பாட்டாளிகளே ஒன்றுபடுங்கள்” என்று பதாகையைத் தொங்கவிட்டுப் புரட்சி செய்தவர் அவர்.

தோழர் ஜீவா தலைமறைவாக இருந்தபோது அவருக்கு மொட்டையடித்து சாமியார் வேடம்போட்டு அவரைத் தன் நாடகக் குழுவிலேயே வைத்துப் பாதுகாத்தார். கேட்பவரிடமெல்லாம் இவர்தான் நம்ம ரஷ்ய சாமியார், பேசமாட்டார் என்பாராம். ஜீவாவுக்கும் பத்மாவதிக்கும் காதல் இருந்த காலமது. ஏதோ புரட்சிக்கான வேலை என நினைத்து ஜீவா தந்த கடிதங்களைக் கொடுத்துவந்த ராதாவுக்கு அவை காதல்மடல் என்பதே பிறகுதான் தெரிந்ததாம். ஜீவாவின்மேல் அவருக்கு அவ்வளவு பிரியம். ஜீவா மறைந்த பிறகு பெரியார் தலைமையில் நடந்த சிலை திறப்பு விழாவில் ராதாவும் கலந்துகொண்டார். மக்கள் கலைஞன் என்றால் அது ராதா ஒருவர்தான் என்றார் பி.இராமமூர்த்தி.

M. R. Radha
M. R. Radha

இதோ இன்றைய தேதியில் அதி நவீன சொகுசு கார்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்கள், அதற்கான வரி விலக்கு. மிக விலை உயர்ந்த கடிகாரம் அதனுடைய விலை பில் என அன்றாட வாழ்வில் பரபரப்பாக பேசப்படும் செய்திகள். அப்படியாக ஒரு வாகனம் , அதனை வைத்திருந்த நடிகவேள், அந்த கார் பற்றி நடிகவேள் அடித்த கமென்ட் அன்றைய தேதியில் அத்தனை பிரபலமான செய்தியாக பேசப்பட்டதாம்.

அன்றைய தேதியில் "இம்பாலா" என்ற பெயரிலான ஒரு கார் இருந்ததாம். இம்பாலா காரை அந்தஸ்தின் அடையாளமாகப் பலர் பார்த்தனர்.

அப்படியாக சமூக அந்தஸ்தின் அடையாளமாக பார்க்கப்பட்ட இம்பாலா காரை நடிகவேள் வைத்திருந்தாராம்.

எம்.ஆர். ராதா அவர்கள் தனது இம்பாலா காரில் கேளம்பாக்கத்தில் இருந்த தனது மாட்டுப்பண்ணைக்கு வைக்கோல் ஏற்றி அனுப்பினார். "என்ன இது, வைக்கோல் ஏத்த இம்பாலாவா" என்று கேட்டவர்களிடம் ராதா சொன்னாராம் , "இதுவும் ஒரு சாயம் பூசிய தகரம்தான். நம் வேலையை சற்று வேகமாகச் செய்துகொள்ளப் பயன்படும் ஒரு சாதனம் அவ்வளவுதான். இதற்கு மேல் எந்த மதிப்பும் அதுக்கு இல்லை. பசிக்கும் என் மாட்டுக்கு உடனே அனுப்பத்தான் வைக்கோலை இம்பாலாவில் ஏத்தினேன்" என்றாரே பார்க்கலாம். கேட்டவர்கள் முகத்தில் வழிந்த அசடை தன் நடிப்பால் துடைத்துக்கொள்ள முடியவில்லை. இதுதான் பிம்பம் உடைத்தல்!

M. R. Radha
M. R. Radha

1975ஆம் ஆண்டு வந்த அவசரநிலை சட்டத்தால் (மிசா) ராதா கைது செய்யப்பட்டார். இந்தச் சட்டத்தால் கைதான இந்தியாவின் ஒரே நடிகர் அநேகமாக ராதா ஒருவர்தான். ஒரு நாள் ராதா விடுதலையானார். போலீஸ் அதிகாரி "சார் நீங்கள் உடனே கிளம்பலாம்" என்றார். ’பழகின இடம். டக்குனு போகமுடியுமா? இருங்க குளிச்சிட்டு வாரேன்’ என்று நிதானமாகவே கிளம்பினாராம் ராதா. இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி பாவிக்கும் துறவு மனநிலையை ராதா பெற்றிருந்தார்.

வீட்டில் தூங்கி கொண்டிருந்த எம்.ஆர்.ராதா அவர்களை இரவில் எழுப்பி மிசாவில் கைது செய்து சிறையில் அடைந்தார்கள்.

சிறையில் அவரை பார்க்க வந்த அவரது மனைவி "இனிமே இப்படி செய்யமாட்டேன்னு" எழுதிக் கொடுத்தா விட்டுருவாங்கலாமே... நீங்க எழுதிக் கொடுக்க வேண்டியதுதானே? என்று புலம்பினார்.

எம்.ஆர்.ராதா பதில் சொன்னார்;

"அட நீ வேற...தூங்கிகிட்டு இருந்தவனை தூக்கிட்டு வந்து ஜெயிலிலே போட்டுருக்காங்க. இனிமே தூங்கமாட்டேன்னா எழுதி கொடுக்கமுடியும்..? அவனா புடிச்சான்...அவனே வி்டட்டும்!"

நடிகவேள் MR ராதாவின் மரண கலாய்!

M. R. Radha
M. R. Radha

இன்று நாடளுமன்றத்தில் மட்டுமல்ல நாட்டில் உள்ள சிறுவர்களிடம் கேட்டால் கூட கூறிடுவர். பாகிஸ்தான் நமக்கான ஆபத்தான நாடு என்று. ஆனால் அன்று சீனா என்றுதான் கூறுவார்களாம். அந்த அளவிற்கு சீன எதிர்ப்பு மனநிலை நிலவிய காலமது. அப்போதுதான் எம்.ஆர்.ராதா அவர்கள் எம்ஜிஆர் அவர்களை சுட்டு விட நாளடைவில் நலமடைந்து விட... ஒருநாள்... இயக்குநர் நீலகண்டனை பார்த்து

' வாய்யா நீலகண்டா!....

ராமச்சந்திரனை சுட்டேன். அவனும் சாவலை.

என்னைச் சுட்டுக்கிட்டேன் ; நானும் சாவலை.

என்னய்யா துப்பாக்கி கண்டுபிடிக்கிறானுக ?

இந்த துப்பாக்கியை வச்சுகிட்டுதான் சைனாக்காரனை ஓட்டப்போறாங்களா...?"

என்று கேட்டாராம் நடிகவேள் எம்.ஆர்.ராதா.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.