Published:Updated:

எம்.எஸ்.பாஸ்கர் எனும் மிரட்டல் நாயகன்! | My Vikatan

எம்.எஸ்.பாஸ்கர்

யார் நம்மை அதிகம் சிரிக்க வைக்கிறார்களோ அவர்கள் தான் நம்மை எளிதில் அழவும் வைத்துவிடுகிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் அத்தகைய நடிகர்.

எம்.எஸ்.பாஸ்கர் எனும் மிரட்டல் நாயகன்! | My Vikatan

யார் நம்மை அதிகம் சிரிக்க வைக்கிறார்களோ அவர்கள் தான் நம்மை எளிதில் அழவும் வைத்துவிடுகிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் அத்தகைய நடிகர்.

Published:Updated:
எம்.எஸ்.பாஸ்கர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

"சின்ன பாப்பா பெரிய பாப்பா" தொலைக்காட்சி தொடரில் பட்டாபி மாமாவாக நமக்கு பரிட்சயமானவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் மூலம் நம்மை சிரிக்க வைத்த எம்.எஸ்.பாஸ்கர் அற்புதமான பல குரல் கலைஞர் என்பதும் நாம் அறிந்ததே. அதுமட்டுமின்றி தமிழ் இலக்கியத்தின் மீதும் பெரும்பற்று கொண்டவர். அவர் நடித்ததில் மறக்க முடியாத சில கதாபாத்திரங்களை பற்றி பார்ப்போம்.

எம்.எஸ்.பாஸ்கர் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய முக்கியமான படம் என்றால் நிச்சயமாக "மொழி" படத்தை கூறலாம். விபத்தொன்றில் மகனை இழந்த எம்.எஸ்.பாஸ்கர், மகனின் இறப்பு செய்தி கேட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு மனதளவில் இருபது வருடங்களுக்கு பின் தங்கியவராக வாழ்வார். நாயகனை "பாபு" என்று அன்போடு அழைத்து அவனிடம் உரையாடியபடி நடக்கும் வேளையில் செருப்பு அறுந்துபோக "பாபு எனக்கு ஒரு செருப்பு வாங்கி தர்றியா?" என்று உரிமையோடு கேட்கும் காட்சியிலும், அவரை தன் தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்க்கும் நாயகன் தன் பிறந்தநாளன்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கும் காட்சியிலும் மிக அழகான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் எம்.எஸ்.பாஸ்கர். "உன் பையன் செத்து இருபது வருசம் ஆயிடுச்சு அழுய்யா அழு..." என்று நாயகன் அவரை பிடித்து உலுக்க, ஓவென கதறி அழுது நம்மையும் கலங்கடித்திருப்பார் எம்.எஸ்.பாஸ்கர். யார் நம்மை அதிகம் சிரிக்க வைக்கிறார்களோ அவர்கள் தான் நம்மை எளிதில் அழவும் வைத்துவிடுகிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் அத்தகைய நடிகர்.

எம்.எஸ்.பாஸ்கர்
எம்.எஸ்.பாஸ்கர்

இராதாமோகன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் கூட்டணி "பயணம்" படத்திலும் சிறப்பாக அமைந்தது. தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட விமானத்தில் பாதிரியாராக இருக்கும் பாஸ்கர், "இங்க இருக்குறவங்களா குடும்பஸ்தர்ங்க... நான் எதுவுமில்லாதவன்... உங்களுக்கு ஒரு உயிர எடுக்கனும்னு தோனுச்சுனா தாராளமா என் உயிர எடுத்துக்குங்க..." என்று உயிர்த்தியாகம் செய்ய துணிபவராக நெகிழ வைத்திருப்பார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எம்.எஸ்.பாஸ்கர் என்றதும் "மொழி" படத்திற்குப் பிறகு நமக்கு அடுத்ததாக நினைவுக்கு வருவது "சூதுகவ்வும்" படம் தான். எளிமையான நேர்மையான அரசியல்வாதியாக நம் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் வகையில் அழுத்தமான நடிப்பை கொடுத்திருப்பார் எம்.எஸ்.பாஸ்கர். நேர்மையாக இருப்பவர்களை இந்த உலகம் எவ்வாறெல்லாம் உதாசினப்படுத்தி புறக்கணிக்கும் அப்போது அந்த நேர்மை அரசியல்வாதிகளின் மனநிலை என்னவாக இருக்கும், நேர்மை அரசியல்வாதிகளுக்கு குடும்பத்தில் என்ன மாதிரியான மரியாதை கிடைக்கும் என்பதை நேர்மை மனிதர்களின் வாழ்வியலை தன் நடிப்பின் மூலம் ரொம்ப எளிமையாக நமக்குள் கடத்தியிருப்பார். இனி வரும் காலங்களில் நேர்மையான அரசியல்வாதி கதாபாத்திரத்திற்கு யார் பொருந்துவார் என்ற கேள்வியெழுந்தால் எல்லோரும் "நம்ம எம்.எஸ்.பாஸ்கர் தான்!" என்று பதிலளிக்கும் வகையில் சூதுகவ்வும் படத்தில் அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருப்பார்.

எம்.எஸ்.பாஸ்கர்
எம்.எஸ்.பாஸ்கர்

வேலை வெட்டிக்குச் செல்லாத மகனை செருப்பை கழட்டி அடித்துவிட்டு பிறகொரு நாளில் அதே மகனுக்கு தன் கையில் இருக்கும் வாட்ச்சை கழட்டி கட்டிவிட்டு, செருப்பை கழட்டி அடித்த அதே கையால் மகனின் ஷூவுக்கு பாலிஷ் போட்டபடி நாயகனுக்கு "போலீஸ்காரனுக்கு மனசு மரத்துப் போகனும்... அப்பதான் போலீஸ் வேளையில் நிலைக்க முடியும்" என்று அறிவுரை வழங்கும் அப்பாவாக "அஞ்சாதே" படத்தில் யதார்த்தமானவராக நடித்திருப்பார். "7ஜி ரெயின்போ காலனி" படத்தின் அப்பா கதாபாத்திரத்தை போலவே "அஞ்சாதே" அப்பா கதாபாத்திரத்தையும் இன்னும் அதிகம் கொண்டாடியிருக்கலாம்.

சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு உயிரிழந்த இளைஞரின் தகப்பனாக, சுதந்திர போராட்ட கால சலவைத்தொழிலாளியாக, ஒரு கண் பாதிக்கப்பட்டவராக "மதராசப்பட்டினம்" படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றபோதிலும் கவனிக்கம்படி நடித்திருப்பார். அந்தப் படத்தில் வரும் குஸ்தி சண்டைக்காட்சியின்போது "400 வருசத்துக்கு அப்புறம் திருப்பி அடிக்குறோம்" என்ற வசனமும், "வயித்துக்காகவே ஓட முடியாதவன் நான்... இதுல எங்க போயி சுதந்திரம் அதுஇதுனு ஓடுறது..." என்ற வசனமும் சுதந்திர போராட்ட காலத்து சாமான்ய மனிதர்களின் வேதனைகளை எம்.எஸ்.பாஸ்கரின் குரல் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி இருக்கும்.

"மதராசப்பட்டினம்" போலவே ஏ.எல்.விஜய், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் கூட்டணி "தெய்வதிருமகள்" படத்திலும் நன்றாக வொர்க்கவுட் ஆனது. விக்ரம் வேலை செய்யும் சாக்லேட் கம்பெனியின் ஊழியராக, விக்ரம் மீது சந்தேகம் கொள்பவராக காமெடியனாக நன்கு நடித்திருப்பார். அவர் நடித்ததில் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம் அது. 

எம்.எஸ்.பாஸ்கர்
எம்.எஸ்.பாஸ்கர்

எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் கமல் கூட்டணியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தசாவதாரம் படத்தில் டூரிஸ்ட் கைடாக சிறிது நேரம் கமலுடன் நடித்திருப்பார். அதை தொடர்ந்து உத்தமவில்லன், பாபநாசம் படங்களிலும் அவர்களது கூட்டணி வெற்றிகரமாக தொடர்ந்தது. குறிப்பாக உத்தமவில்லன் படத்தில் கமல் கொடுத்த கடிதத்தை ஒரு மினி தியேட்டரில் திரை வெளிச்சத்தில் அழுதுகொண்டே வாசிக்கும் காட்சியிலும் படித்து முடித்துவிட்டு கமல் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும் காட்சியிலும் ஊர்வசியிடம் உண்மையை உளறிவிட்டு பரிதவிக்கும் காட்சியிலும் அழுத்தமான நடிகராக அசத்தியிருப்பார் பாஸ்கர். "பாபநாசம்" படத்தில் டீக்கடை பாயாக கமலின் நெருங்கிய தோழனாக வாழ்ந்திருப்பார். அந்தக் கதாபாத்திரம் உள்ளூரில் இருக்கும் சில நம்பிக்கையான மனிதர்களை அப்படியே பிரதிபலித்திருக்கும். 

எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் விக்ரம் பிரபு கூட்டணியும் கவனிக்கத்தக்க ஒன்று. "அரிமா நம்பி" படத்தில் விக்ரம் பிரபுவுக்கு உதவிசெய்து உயிரை தியாகம் செய்யும் போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக, விக்ரம் பிரபுவுக்கு சண்டை போடும் திறமையிருக்கிறது என்பதை உணர்ந்து "ஊரைவிட்டு ஓடிடுனு தப்பா சொல்லிட்டேன்... உனக்கு சண்டை போட தெரியுது... நீ திருப்பி அடி" என்று ஊக்கமளிக்கும் வசனம் பேசிவிட்டு உயிர்துறப்பார். அடுத்ததாக "துப்பாக்கி முனை" படத்தில் விக்ரம்பிரபு மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் கூட்டணி அமைந்தது. தன் இளவயது மகளை சில மிருகங்கள் பாலியல் பலாத்காரம் செய்துவிட அவர்களை துரத்திப்பிடித்து கொன்றுவிட துணியும் சாமானிய அப்பா கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார் பாஸ்கர். குறிப்பாக கிளைமேக்ஸில் மகளை இழந்த வேதனையில் மகளது போட்டோவை சுமந்தபடி "இன்னிக்கு ஒரு உயிர கொல்றதுங்கறது ரொம்ப சாதாரணமாயிடுச்சு" என்கிற அவர் பேசிய வசனம் இச்சமூகத்திற்கான மிகச்சிறப்பான அறிவுரை. அதை உணர்வுபூர்வமாக நமக்குள் கடத்தியிருப்பார் பாஸ்கர். 

எம்.எஸ்.பாஸ்கர்
எம்.எஸ்.பாஸ்கர்

"டாணாக்காரன்" படம் பாஸ்கரின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல் என்று கூட சொல்லலாம். ஐந்து பெண் குழந்தைகளின் தகப்பன் 28 வருடங்களாக ஒரு பதவியில் இருக்கிறார் என்றால் அவரது உடல்மொழி, முகபாவனை எல்லாம் எப்படியிருக்கும் என்பதை ரொம்ப பிரமாதமாக நமக்குள் பதிய வைத்திருப்பார்.

சக வயதுடையவர் அதிகாரியாக மாறிவிட அதே நபரிடம் அடிமையாக வாழ்வதை மாணவர்களிடம் வெளிப்படுத்தும் காட்சியிலும், அந்த அதிகாரி காவல்நிலைய கோப்புகளை பாஸ்கரின் முகத்தில் வீசியடிக்கும் காட்சியிலும், விக்ரம் பிரபு ஈடி எனப்படும் தண்டனை நேரத்தை தாக்குப் பிடிக்கும்போது "ஓ நீ அப்படிபட்ட ஆளா..." என்று அவரை பார்த்து சொல்லிவிட்டு கடைசி ஐந்து நிமிடம் இருக்கும்போது விக்ரம்பிரபு சோர்வடைய "விட்றாதடா தம்பி... நீ எப்படியாவது ஜெயிச்சிடு" என்று அவர் தன் மனதுக்குள் பரிதவிக்கும் காட்சியிலும் அவர் கொடுக்கும் ரியாக்சன்களை பார்க்கனுமே! லவ் யூ எம்.எஸ்.பாஸ்கர் (செல்லக்கண்ணு)! பாரைட் போட்டி தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன் தன் கடந்த கால கசப்பனுபவங்களை எல்லாம் சில நொடிகள் கண்கள் மூடி நினைவு கூர்ந்துவிட்டு "பாரைட்..." என கம்பீர குரலில் உச்சரித்து "லெப்ட் ரைட் லெப்ட் ரைட்" என்று தன் படையை வழிநடத்தும் காட்சியில் மிரட்டலாக நடித்து நம் உடலை சிலிர்க்க வைத்திருப்பார். படம் பார்த்து முடித்தபிறகும் அவரது அந்தக் கம்பீர குரல் செவிகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. 

"தர்மதுரை" படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் அப்பாவாக அட்டகாசம் செய்திருப்பார். வீடு முழுக்க புத்தகங்களாக நிரம்பியிருக்கும் அந்த வீட்டிற்கு செல்வ செழிப்பான குடும்பத்தினர் பெண் கேட்டு வர, "என் சத்து மட்டும் தூக்கி விட்றேன்... பறந்து போ மகளே..." என்று பாஸ்கர் பேசும் வசனம் இலக்கிய வாசகர்கள் அடிக்கடி நினைவுகூர்ந்து சிலாகிக்கும் வகையிலான அழகான வசனம். அம்மா இல்லாத கிராமத்து இளம்பெண்களின் அப்பாக்களை அப்படியே திரையில் காட்டியிருப்பார். "கருத்தம்மா" பெரியார் தாசன் கதாபாத்திரம் போலவே "தர்மதுரை" அப்பா கதாபாத்திரமும் ரொம்பவே மனதுக்கு நெருக்கமானது. 

எம்.எஸ்.பாஸ்கர்
எம்.எஸ்.பாஸ்கர்

"ஓ மை கடவுளே" என்கிற படத்தில் ரித்திகா சிங்-கின் தந்தையாக நடித்திருப்பார். பாத்ரூம் சிங் (கழிவறை இருக்கைகள்) தயாரிக்கும் கம்பெனி நடத்தி வரும் பாஸ்கர், நாயகனுக்கு தன் மகளையும் கட்டிக்கொடுத்து கம்பெனியில் வேலையும் போட்டுக்கொடுக்கிறார். ஆரம்பத்தில் அந்தக் கக்கூஸ் கம்பெனியை வெறுக்கும் நாயகன், பிறகொரு நாளில், கிராமத்தில் வசித்த காலத்தில் தன் அம்மா காட்டுப்பக்கம் சென்றபோது பாம்புகடித்து இறந்துபோக, தன் அம்மாவிற்கு நேர்ந்தது இனி எந்தப் பெண்ணுக்கும் நடக்க கூடாது என்றுணர்ந்து கக்கூஸ் கம்பெனி ஆரம்பித்து அதன் வழியாக 420 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இலவச கழிவறைகளை கட்டிக்கொடுத்த அனுபவத்தை எம்.எஸ்.பாஸ்கர் பகிர அதைக் கேட்ட நாயகன் மனம் நெகிழ்ந்து போகிறான். பெண் குழந்தைகளின் தந்தைகள் மீது (மாமனார்கள் மீது) இன்றைய இளைஞர்களுக்கு பெரும் மரியாதையை உண்டாக்கும் கதாபாத்திரம் அது. 

இந்தக் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருப்பார் எம்.எஸ்.பாஸ்கர். 

"நிமிர்" படத்தில் மென்மையான நிதானமான போட்டோகிராஃபராக வரும் இயக்குனர் மகேந்திரனின் நெருங்கிய உறவினராக உதய்நிதி ஸ்டாலினின் மாமாவாக நன்றாக நடித்திருப்பார் பாஸ்கர். குறிப்பாக உதய்நிதிக்கு உதவும் வகையில் துக்க வீட்டில் மாரடைப்பு வந்தது போல் எம்.எஸ்.பாஸ்கர் சுருண்டு விழுந்து நடிக்க, CPR செய்கிறேன் என்று எல்லோரும் அவர் வாயில் வாய் வைத்து காற்றை ஊத, அவரது நெஞ்சில் மாங்மாங்கென அடிக்க, பதறிப்போகும் எம்.எஸ்.பாஸ்கர் "ஆள விடுங்கடா சாமிகளா" என்று பதறியெழுந்து தப்பிக்கும் காட்சி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். மிகச்சிறப்பான நகைச்சுவை காட்சி அது. 

"அம்புலி" கோகுல்நாத் நாயகனாக நடித்த "ஆ!" என்கிற திகில் படத்தில் வட்டிக்குப் பணம் வாங்கிவிட்டு அதை திருப்பி தர இயலாமல் மன உளைச்சலில் சிக்கித் தவிக்கும் ஏடிஎம் வாட்ச்மேனாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருப்பார். ஏடிஎம்மில் பணம் எடுத்துவிட்டு வெளியே வரும் இளைஞர் வாகனத்தில் அடிபட்டு இறந்துபோக அந்த இளைஞனிடமிருந்து பணத்தை திருடி தன் கடனை அடைக்கிறார் பாஸ்கர். ஆனால் பணத்தை பறிகொடுத்த அந்த இளைஞனின் ஆன்மா பாஸ்கரை துரத்த பாஸ்கர் ஏடிஎம்மிற்குள் ஒளிந்துகொள்வார். அப்போது ஏடிஎம் மெஷின்களில் இருந்து ரூபாய் தாள்களாக வெளியேறி அந்த அறை முழுக்க பறக்க, பயந்துபோய் அங்கிருந்து தப்பித்து வெளியேறும் பாஸ்கர் சாலையில் வரும் வாகனத்தில் அடிபட்டு இறந்துபோவார். எம்.எஸ்.பாஸ்கர் நடித்ததில் மிக சுவாரஸ்யமான அழுத்தமான காட்சி என்று இந்தக் காட்சியையும் குறிப்பிடலாம்.

எம்.எஸ். பாஸ்கர்
எம்.எஸ். பாஸ்கர்

 "எட்டு தோட்டாக்கள்" என்கிற படம் எம்.எஸ்.பாஸ்கருக்காகவே எழுதப்பட்டது போல் அட்டகாசமாக இருக்கும். வாழ்க்கை முழுவதும் தோல்வியை சந்தித்த ஒருத்தர் விரக்தியடைந்து தவறான பாதையில் காலடி எடுத்து வைக்க அந்தப் பாதை அவரை இன்னும் தவறானவராக மாற்றுகிறது. வங்கி கொள்ளையின் போது கைதவறி சிறுமியை சுட்டுவிட்டு பதறும் காட்சியிலும், "சும்மா சொல்லுவாங்க சார்... நல்லவனா இருந்தா நல்லதே நடக்கும்னு... அப்படி சொன்னவன் மட்டும் என் கைல கிடைச்சான்..." என்று நாயகனுடன் காபி ஷாப்பில் உரையாடும்போது வெதும்பும் காட்சியிலும், கிளைமேக்ஸில் நாயகன் முன்பு மண்டிபோட்டு தனது நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து சில நொடிகள் கண்களை மூடிவிட்டு பிறகு கண் விழித்து துப்பாக்கியை அழுத்தி தன்னை தானே சுட்டுக்கொல்லும் காட்சியிலும், வங்கியிலிருந்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு வெளியே வரும்போது பணத்தை பறக்கவிட்டபடி நடந்துவரும் காட்சியிலும் மிரட்டியிருப்பார். 


தனது 66ஆம் அகவையில் (செப்டம்பர் 13) அடியெடுத்து வைத்துள்ள நம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அற்புத பரிசான ஆகப்பெருங்கலைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.