Published:Updated:

இயற்கையைப் போற்றுவோம்!

flamingo

எறும்பும் கறையானும் சுறுசுறுப்பையும், சுய உழைப்பையும், வருமுன் காக்கும் புத்திசாலித் தனத்தையும் புடம் போட்டுக் காட்டுகின்றன.

இயற்கையைப் போற்றுவோம்!

எறும்பும் கறையானும் சுறுசுறுப்பையும், சுய உழைப்பையும், வருமுன் காக்கும் புத்திசாலித் தனத்தையும் புடம் போட்டுக் காட்டுகின்றன.

Published:Updated:
flamingo

இம் மண்ணுலகை மகிழ்ச்சிப்படுத்த, எவ்வளவோ உயிரினங்கள் உள்ளன. ஓரறிவு கொண்ட மரம், செடி, கொடியிலிருந்து, ஈரறிவு உள்ள நத்தை, சங்கிலிருந்து, மூன்றறிவு பெற்ற எறும்பு, கறையான், அட்டை போன்றவற்றிலிருந்து, நான்கறிவு கொண்ட நண்டு, தும்பி வண்டிலிருந்து, ஐந்தறிவு உள்ள பறவைகள், விலங்குகளிடமிருந்து ஆறறிவு கொண்ட மனிதன் வரை கற்றுக்கொள்ள வேண்டியவை, நிறையவே உள்ளன.

மரங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டைபோட்டுக் கொள்வதில்லை. மரங்களைச் சுற்றிச் செடிகளும் கொடிகளும் பரவி, கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மனிதனுக்குப் போதிக்கின்றன. நத்தையும் சங்கும் பொறுமையைப் பறை சாற்றுகின்றன.

எறும்பும் கறையானும் சுறுசுறுப்பையும், சுய உழைப்பையும், வருமுன் காக்கும் புத்திசாலித் தனத்தையும் புடம் போட்டுக் காட்டுகின்றன. நான்கறிவு கொண்ட நண்டும் தும்பியும் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்கின்றன. பறவையும் விலங்குகளும் நமக்கு எவ்வளவோ பாடங்களைப் புகட்டுகின்றன. புறாக்கள், பார்ப்பதற்கு ஒன்று போல இருந்தாலும், தங்கள் துணைகளைத் தவிர மற்றவற்றுடன் கூடுவதில்லை என்பதுதான் எவ்வளவு உயர்ந்த ஒழுக்கம்.

Birds
Birds
Dishan Jeremiah from Pixabay

ஃபீனிக்ஸ் பறவை தன் சாம்பலில் இருந்து உயிர் பெற்று வளர்ந்திடுமாம். அது மனிதனுக்கு உணர்த்துவது இதைத்தான். `அது போய்விட்டது, இது போய்விட்டது’ என்று புலம்பிப் பரிதவிக்காதே மனிதா! எல்லாம் போன பின்னாலும், ஏன்? உயிர் வாழும் உடலும் சாம்பலானாலும், நம்பிக்கை மட்டும் இருந்தால் மீண்டும் துளிர்க்கலாம்; தழைத்தும் வளரலாம் என்பதையல்லவா!ஐந்தறிவு கொண்ட அத்தனையும் இவ்வுலகில் மனிதனுக்காகவே படைக்கப்பட்டது என்ற கூற்றும் உண்டு. அவற்றை எந்த அளவுக்கு அன்புடன் நேசிக்க வேண்டுமென்று மனிதன் புரிந்துகொண்டு வாழ்ந்தால், இப்பூவுலகே சொர்க்கமாகும்.

சொர்க்கம் என்பது சுகங்கள் நிறைந்தது என்று சொல்லித்தானே நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். ஒன்றைக் கவனித்தீர்களா?ஆறறிவு படைத்த நம்மை இன்பப்படுத்துவது, மகிழச் செய்வது, நிம்மதி கொள்ளச் செய்வது எல்லாமே அந்த ஒன்றிலிருந்து ஐந்து வரை அறிவைக் கொண்ட அனைத்தும்தானே என்பதை, எப்போதாவது நாம் சிந்திப்பது உண்டா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர் பெரிய இண்டஸ்ட்ரியலிஸ்ட். தொழில், தொழில் என்று சதா, சர்வ காலமும் பறந்துகொண்டிருப்பவர். தூங்குவதுகூட குறைந்த நேரம்தான். திடீரென்று உடல் நலம் பாதிக்கப்படுகிறார். வெளி நாட்டிலிருந்து விமானம் பிடித்து, ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் பறந்து வந்து பரிசோதிக்கிறார் அவரை. `ஒண்ணும் பயப்பட வேண்டாம். கொஞ்ச நாளைக்கி, நல்லா ரெஸ்ட் எடுத்தா போதும். முடிஞ்சா ஸ்விட்சர்லாந்து போயிட்டு வாங்க. இல்லேன்னா, ஊட்டி, கொடைக்கானல் போயிட்டு வாங்க. ரிலாக்ஸ்டா இருங்க போதும்’ என்று பிரிஸ்கிரிப்ஷன் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறார் ஃபாரின்டாக்டர். ஸ்விட்சர்லாந்திலும், ஊட்டி, கொடைக் கானலிலும் என்ன இருக்கின்றன. ஸ்விசில் என்றால் பனியைப் போர்த்திக்கொண்டு கிடக்கும் மலைகளும், மரம், செடி, கொடிகளும்தானே.

Ooty
Ooty
Vinod Kesavan from Pixabay

நம் ஊட்டி கொடைக்கானலிலும் அதே மரம், செடி, கொடி, மைனஸ் அதிகக் குளிர். அந்த அடர்ந்து உயர்ந்த மரங்களையும், அழகாய்ப் பூத்துக் குலுங்கும் செடி,கொடிகளையும் பார்த்தாலே மனது பரவசமாகிவிடுகிறது. பாதிக்கப்பட்ட உள் உறுப்புகள் பரவசத்தில் உற்சாகம் பெற்று ஒழுங்காக இயங்க ஆரம்பித்து விடுகின்றன. சார்ஜ் ஏற்றப்பட்ட பாட்டரியாகப் புத்துயிர் பெறுகிறது உடல். சார்ஜ் எங்கிருந்து கிடைத்தது? ஓரறிவு கொண்ட மரம், செடி, கொடிகளில் இருந்துதானே!

விடுமுறை நாள்களில், வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு, மக்கள் செல்கின்றனர். அங்கு இருப்பது, ஐந்தறிவு கொண்ட பறவைகளும், விலங்குகளும்தானே! அவைதானே நம்மனதுக்கு ஆறுதல் அளிக்கின்றன. அதிலும் பறவைகளுக்கும் மரங்களுக்கும் இடையேயுள்ள உறவு அற்புதமானதல்லவா? தங்கள் எச்சங்கள் மூலம் விதைகளைப் பரப்பி மரங்களை வளர்க்கப் பறவைகள் உதவ, அதற்கு நன்றிக் கடனாகப் பறவைகள் தங்க, தங்கள் கிளைகளை விரிக்கும் மரங்களை என்னவென்று சொல்வது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆயிரமாயிரம் கிலோ மீட்டர்களைக் கடந்து பறவைகள் வருவதும், பருவ காலம் முடிந்ததும் திரும்பிச் செல்வதும் விநோதமான விஷயமல்லவா? அவை தங்கி, முட்டையிடும் இடங்களைப் பார்த்து மகிழ்வதில்தானே நமக்கும் சந்தோஷம். அதனால்தான் பறவைகளைப் போற்றுகிறோம்.

Monkey
Monkey
emememy from Pixabay

சிறிய பறவையான சிட்டுக் குருவிக்கும் `உலகச் சிட்டுக்குருவிகள் தினம்’ கொண்டாடுகிறோம். பழசோ, புதிசோ, பறவைகள் மேலுள்ள பாசத்துக்கு என்றைக்கும் குறைவில்லை. பறவையைப் பார்த்த மனிதன் ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்ததால்தான், இன்றைக்கு உலகத்தின் எந்தப் பகுதிக்கும் எவரும் சென்று வர முடிகிறது. பல நாடுகளுடன் வாணிபத் தொடர்புகொள்ள முடிகிறது. ஒரு நாட்டில் அபரிமிதமாக உற்பத்தியாவதை, அது இல்லாத நாடுகளுக்கு விரைந்து அனுப்ப முடிகிறது. `திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்றனர் நம் முன்னோர்!

- ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism