Published:Updated:

நீட் தீர்மானம் சாத்தியமாகுமா? - தமிழ்நாடு சட்டமன்ற வரலாறு சொல்வதென்ன?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வுக்கான நிரந்தர விலக்கு பற்றிய இந்த தீர்மானம் சாத்தியமாகுமா? மொழிவாரி பிரிக்கப்பட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத்தின் வலிமை என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்ட தொடரில் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக அரசு , ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்ட திருத்த சட்டம் மற்றும் நீட் தேர்வு போன்ற மூன்று சட்டங்களுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றியது. இதில் மிக முக்கியமான தீர்மானம் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம். இது சட்டமன்றம் மட்டுமல்லாது, சட்டமன்றத்திற்கு வெளியேயும் மக்கள் மத்தியில் விவாத பொருளாக உள்ளது. மேலும், நீட் பாதிப்புகள் குறித்து ஆராய தமிழ்நாடு அரசால் நியமிக்கப் பட்ட ஏ. கே . ராஜன் குழுவின் அறிக்கை வெளிவந்த பிறகு இந்த விவாதம் தமிழ்நாடு மட்டுமல்லாது மற்ற மாநிலங்கள் வரை விரிவடைந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது மகாராஷ்டிரா அரசும் நீட் தேர்வின் நன்மை, தீமைகள் குறித்து ஆராயப்போவதாக அறிவித்துள்ளது.

சட்டமன்றம்
சட்டமன்றம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வுக்கான நிரந்தர விலக்கு பற்றிய இந்த தீர்மானம் சாத்தியமாகுமா? மொழிவாரி பிரிக்கப்பட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத்தின் வலிமை என்ன? கடந்த கால அரசியல் வரலாற்றில் தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானங்கள் சாதித்ததும், சாத்தியப்படுத்தியதும் என்ன?

நாடு விடுதலை அடைந்து, 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு தற்போதைய தமிழ்நாடு மெட்ராஸ் ஸ்டேட் என்றே அழைக்கப்பட்டு கொண்டிருந்தது. அதை தமிழ்நாடு என்று பெயர் மாற்ற கோரி 1957 இல் திமுகவும், 1961 இல் சோசியலிஸ்ட் கட்சியும், 1963 இல் மீண்டும் திமுகவும் தீர்மானத்தை மெட்ராஸ் ஸ்டேட் சட்டமன்றத்தில் கொண்டுவந்தன. ஆனால், அந்த தீர்மானங்கள் பல காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு, 1962-இல் முதல் முறையாக நாடாளுமன்ற மேலவைக்கு சென்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான விவாதத்தில் பல வரலாற்று மற்றும் இலக்கிய சான்றுகளை மேற்கோள் காட்டி தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான அவசியத்தை எடுத்துரைத்தார்.

ஏறக்குறைய, மூன்று முறை தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேறாமல் முறியடிக்கப் பட்டாலும், நான்காவது முறையாக அதை சட்டமன்றத்தில் நிறைவேற்றி சட்டமன்ற தீர்மானங்களும் சாத்தியப்படும் என்பதை "தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம்" தெளிவு படுத்தியது.
க. சேதுராமன்

இதன் பிறகு, 1967 இல் முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்த அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு, 18 ஜூலை 1967இல் மெட்ராஸ் ஸ்டேட் சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார். 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் , அந்த தீர்மானம் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு அதன் ஒப்புதல் பெறப்பட்டு அதுவரை மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழ் பேசும் இந்த நிலப்பரப்பு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்று வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தது. ஏறக்குறைய, மூன்று முறை தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேறாமல் முறியடிக்கப் பட்டாலும், நான்காவது முறையாக அதை சட்டமன்றத்தில் நிறைவேற்றி சட்டமன்ற தீர்மானங்களும் சாத்தியப்படும் என்பதை "தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானம்" தெளிவு படுத்தியது.

கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதி

1929 இல் தந்தை பெரியார் தலைமையில் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் பெண்களுக்கும் சொத்துரிமை கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்ற பட்டது. அதன் பிறகு சரியாக அறுபது ஆண்டுகளுக்கு பிறகு 1989 இல் தந்தை பெரியாரின் வழிவந்த அப்போதைய முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்து வாரிசுரிமை சட்டம் (தமிழ்நாடு சட்ட திருத்தம்) 1989 என்ற சட்டத்தை நிறைவேற்றி பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கினார்.

1989 இல் திமுக அரசு கொண்டுவந்த இந்த சட்டமானது , 2005 இல் ஒன்றிய அரசால் இந்து வாரிசுரிமை சட்டம் 1956 இல் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தற்கு முன்மாதிரியாக இருந்து பெண்களுக்கு சொத்துரிமையை உறுதி செய்தது. இப்படியாக, தமிழ்நாடு சட்டமன்றம் கொண்டு வந்த பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் என்பது மற்ற மாநிலங்களுக்கும் மற்றும் ஒன்றிய அரசுக்கும் "முன்மாதிரியாக" இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1992 , இந்திரா சவ்கனே வழக்கின் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி இடவொதிக்கீடு என்பது 50% மிகாமல் இருக்க வேண்டும் என்றிருந்தது, ஆனால், அப்போது 69% இடஒதுக்கீட்டை பின்பற்றி வந்த தமிழ்நாட்டிற்கு அது ஒரு பெரும் பிரச்னையாக இருந்தது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தையும் அணுகினார். ஆனால், இந்த இரண்டு நீதிமன்றகளில் தீர்ப்பு என்பது இடஒதுக்கீடு 50% மிகாமல் இருக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. மேலும், சட்ட ரீதியாக நீதிமன்றங்கள் மூலம் தீர்வு காணப்படாத நிலையில், சட்டமன்றத்தின் மூலம் தீர்வு காண ஜெயலலிதா அவர்கள் நவம்பர் 1993 இல் 69% இடஒதுக்கீட்டுக்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

அதன் பின், அந்த தீர்மானம் பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப் பட்டு உடனடியாக அப்போதைய குடியரசு தலைவர் சங்கர்தயாள் சர்மாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக உருவானது. அதோடு மட்டுமல்லாது ஜெயலலிதா அவர்களின் தொடர் முயற்சியால், இந்த சட்டமானது அரசியலமைப்பு சட்டம் ஒன்பதாவது அட்டவணையில் வைக்கப்பட்டு சட்ட பாதுகாப்பு வழங்க பட்டுள்ளது. "சமூக நீதிக்கான" இந்த சட்டமன்ற தீர்மானம் என்பது உச்சநீதி மன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும், இறையாண்மை மிக்க, மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட சட்டமன்ற தீர்மானமும் சாத்தியமாகும் என்பதை தெளிவு படுத்துகிறது.

மெட்ராஸ் ஸ்டேட் தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற சட்டமன்ற தீர்மானம் மூலம் பேரறிஞர் அண்ணா அவர்கள் மாநில உரிமையை நிலைநாட்டியும், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டமன்ற தீர்மானம் மூலம் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒன்றிய அரசுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தும் , 69% இடஒதுக்கீடு தொடர்பான சட்டமன்ற தீர்மானம் மூலம் ஜெ. ஜெயலலிதா அவர்கள் சமூக நீதியை நிலைநிறுத்தியும் , கடந்த ஐம்பது வருடங்களாக தமிழ்நாடு தன் உரிமைகள் சார்ந்த பல விசயங்களை வரலாற்று சிறப்புமிக்க சட்டமன்ற தீர்மானங்கள் மூலம் சாத்தியமாக்கியிருக்கிறது.

அதுபோலவே ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக அரசு நீட் தேர்வுக்கான விலக்கு தொடர்பான சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றியதன் வழியாகவும், அது தொடர்பான சட்ட போராட்டங்களை முன்னெடுப்பதன் வாயிலாகவும் அதை சாத்தியப் படுத்தும் என்ற எதிர்பார்ப்பு வந்துள்ளது.

நீட் தேர்வு
நீட் தேர்வு


நீட் தேர்வு விசயத்தில் அதை செயல்படுத்துவதில் தீவிர முனைப்பாக இருக்கும் ஒன்றிய பாஜக அரசு ஒருபுறம், அதிலிருந்து விலக்கு என்பதில் சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றி தீவிர முனைப்பாக இருக்கும் திமுக அரசு மறுபுறம், இப்படி எதிர் இரு துருவங்களாக நீட் விவகாரம் நகர்ந்து கொண்டிருக்க, இதையெல்லாம் கடந்து, அரசியல் வரலாற்றில் பல சட்டமன்ற தீர்மானங்களை சாத்தியமாக்கிய தமிழ்நாடு, நீட் விவகாரம் தொடர்பான தீர்மானத்தையும் சாத்தியமாக்குமா?ஆம் சாத்தியமாக்குவதற்கான சாத்திய கூறுகள் நிறைய உள்ளன என்பதையே கடந்த கால சட்டமன்ற வரலாறுகள் காட்டுகின்றன.

-க.சேதுராமன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு