வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
இன்னும் ஒரு சில நாட்களில் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. புத்தாண்டுத் தீர்மானங்கள் பலரும் எடுக்கும் வேளை இது. எனது நண்பர் ஒருவரிடம் இந்த ஆண்டு என்னென்ன தீர்மானங்கள் எடுக்கப்போகிறாய் என்று கேட்டேன். அதற்கு அவர் “நான் எப்பொழுதும் ஒரே மாதிரி. இந்த ஆண்டு தீர்மானத்திலும் எந்த மாற்றமும் இல்லை” என்றார். இது போன்று தான் பலரும் தீர்மானம் எடுப்பதோடு சரி. அதை கடைப்பிடிக்க முடியாமல் விட்டு விட்டு அடுத்த ஆண்டும் அதே தீர்மானங்களை மறுபடியும் எடுக்கிறோம்.

என் மற்றொரு நண்பர் வெளி நாட்டில் வேலை பார்க்கிறார். ”இந்த ஆண்டு கட்டாயம் இந்தியாவிற்கு வந்து சொந்த ஊரில் குடியேற வேண்டும்” என்று கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் அதே தீர்மானத்தை எடுத்து வருகிறார்.
நானும் அதே கோஷ்டி தான். “சொந்தத் தொழில் செய்ய வேண்டும்” என்ற தீர்மானத்தை நானும் என் நண்பனும் பல ஆண்டுகள் முன்பு எடுத்தோம். நாங்கள் அப்பொழுது விவாதித்த பல புது யோசனைகளை பிற்காலத்தில் வெவ்வேறு நிறுவனங்கள் செயல்படுத்தும் போது வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தோம். இதற்குக் காரணம் தீர்மானம் எடுத்தோமே ஒழிய அதற்குண்டான முயற்சி எதையும் செய்யாமல் எங்கள் வேலையை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். ஆகவே தீர்மானம் என்பது நாம் ஓரளவு முயற்சியில் நடைமுறைப்படுத்தத் தகுந்ததாக இருக்க வேண்டும்.

எனக்கு தெரிந்த ஒருவர் இனிப்புப்பிரியர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே “அடுத்த ஆண்டு முதல் உணவில் இனிப்புப்பண்டங்களை தவிர்க்க வேண்டும்” என்ற தீர்மானம் எடுத்தார். இதற்காக அவர் கடந்த ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் அளவிற்கு அதிகமாக இனிப்பை சாப்பிட்டதின் விளைவு ஆஸ்பத்திரியில் போய் முடிந்தது. ஆகவே முன் யோசனை செய்து தீர்மானங்களை எடுத்தால் இது போன்ற விளைவுகளைத் தவிர்க்கலாம்.
நான் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஒரு சில தீர்மானங்களை எடுத்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகிறேன். அதன் விளைவு இந்தக்கட்டுரை. நான் தீர்மானங்களை நான்கு வகையாகப்பிரித்து ஒவ்வொரு வகையிலும் ஒரு சிறிய தீர்மானம் எடுத்து அதை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறேன்.

உடல் சார்ந்த தீர்மானங்கள் முதல் வகை. இதில் உடல் எடை, தோற்றம், ஆரோக்கியம், உணவு மற்றும் உடற்பயிற்சி போன்ற தீர்மானங்கள் அடங்கும்.
மனம் சார்ந்த தீர்மானங்கள் இரண்டாவது வகை. இதில் நமது எண்ணம், நன்னடத்தை, உணர்வை அறிதல், நமக்குப் பிடித்த வகையில் நேரத்தை செலவிடுவது, அடுத்தவர்களிடம் நாம் பேசும் விதம், நடந்து கொள்ளும் விதம், அன்பு செலுத்துதல் மற்றும் ஆன்மிக முன்னேற்றம் போன்ற தீர்மானங்கள் அடங்கும்.

பொருளாதாரம் சார்ந்த தீர்மானங்கள் மூன்றாவது வகை. இதில் தொழிலில் முன்னேற்றம், நாம் செய்யும் வேலையில் பதவி உயர்வுக்குண்டான முயற்சி, பண முதலீடு மற்றும் சொத்து வாங்குதல் போன்ற தீர்மானங்கள் அடங்கும்.
அறிவு சார்ந்த தீர்மானங்கள் நான்காவது வகை. இதில் நாம் எந்த வயதில் இருந்தாலும் புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ளுதல் மற்றும் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளுதல் போன்ற முயற்சிகள் அடங்கும்.
மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு வகையிலும் சிறு சிறு தீர்மானங்களை எடுத்து முயற்சி செய்து நிறைவேற்றினால் நமக்கே ஒரு உற்சாகமும் உத்வேகமும் பிறக்கும். பிறகு பெரிய பெரிய தீர்மானங்களை எடுத்து நம்மால் நிறைவேற்ற முடியும்.

தீர்மானங்களை செயல்படுத்துவது மிகவும் கடினம். ஆனால் “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்பதற்கேற்ப முயற்சி செய்தால் நிச்சயம் அதற்குண்டான பலன் கிடைக்கும்.
நான் வரும் ஆண்டிற்கான தீர்மானங்களை எடுக்கத்தயாராகி வருகிறேன். அப்போ நீங்க?
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.