வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நியூ யார்க் என்றாலே நம் கண் முன் தோன்றுவது வானளாவிய, விண்ணைத் தொடும் உயரமான கட்டிடங்கள் தான். நியூயார்க்கில் என் மனதை கவர்ந்த சிலவற்றை குறித்து முன்பு எழுதியிருந்தேன். இன்னும் சில முக்கியமான இடங்களை பற்றி இங்கு எழுதுகிறேன். நியூ யார்க்கில் உள்ள சுற்றுலா தளங்கள் அனைத்தையும் டபுள் டெக்கர் பஸ்ஸில் சென்று பார்த்த பின், நிதானமாக அவரவர் விரும்பிய இடங்களுக்கு அதே பஸ்ஸில் சென்று கண்டு களிக்கலாம்.
நியூ யார்க்கின் உயரமான கட்டிடங்கள்:
நியூ யார்க் நகரம் அமைந்துள்ள நியூ யார்க் மாநிலத்தை "எம்பயர் ஸ்டேட்" என கூறுவார்கள். இதனால் எம்பயர் ஸ்டேட் பில்டிங் நியூ யார்க்கின் அடையாளமாக கருதப்படுகிறது.

இது கிட்டத்தட்ட 100 வருடங்கள் பழமையான, மிக உயரமான கட்டிடம் ஆகும். ஏழு வருடங்களுக்கு முன்னர் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கில் நாங்கள் சென்ற Skyride சவாரி ஹெலிகாப்டரில் சென்று நியூ யார்க் நகரத்தை கழுகு பார்வையில் கண்டு களித்த உணர்வை அளிக்க தவறவில்லை எனலாம். அதன் பின்னர் நாங்கள் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கின் மாடியிலுள்ள Observation deck சென்று அங்கிருந்து பார்க்கையில் நியூ யார்க் நகரம் வண்ண விளக்குகளால் ஜொலித்ததை காண முடிந்தது. நாங்கள் இரவில் சென்ற படியால் சுதந்திர தேவி சிலையையும் ஒளி வெள்ளத்தில் கண்டு களிக்க முடிந்தது. Statue of liberty எனப்படும் சுதந்திர தேவி சிலை குறித்து விரிவாக எனது முந்தைய பயணக் கட்டுரை கூறி இருக்குமல்லவா!
நியூ யார்க்கில் பிரசித்தி பெற்ற Trump டவர் என்னை கவர்ந்த இடங்களில் ஒன்றாகும். இது எம்பயர் ஸ்டேட் பில்டிங் போல பழமை வாய்ந்தது அல்ல என்றாலும் தற்கால கட்டிடங்களில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

உயரமான கட்டிடங்கள் பல நியூ யார்க்கில் இருந்தாலும், அவை அனைத்திற்கும் நடுவே பளபளவென மின்னி தகதகவென ஜொலிக்கும் கட்டிடம் தான் Trump டவர். வாஷிங்டன் சென்ற போது அங்குள்ள வெள்ளை மாளிகையை கண்டு களித்த எனக்கு நியூ யார்க்கில் உள்ள Trump டவர் வெள்ளை மாளிகையை விட கவர்ச்சியாகவும், கம்பீரமாகவும் தோன்றியது. நான் சென்ற சமயம் Trump அவர்கள் அதிபராக இருந்ததால் பாதுகாப்பு சற்று பலமாக இருந்தது. Trump டவர் முன்பு அவரது ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் பேனர் ஏந்தியவாறு கோஷமிட்டு கொண்டிருந்தார்கள்.
அமெரிக்காவிலேயே (ஏன் உலகிலேயே!) அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடமான Times square பற்றி தான் அடுத்து கூற போகிறேன். இங்கு எப்போதும் ஜேஜே என கூட்டம் நிறைந்திருப்பதை காண முடியும். புத்தாண்டு என்றால் அமெரிக்காவில் அனைவருக்கும் நினைவுக்கு வருவது Times square தான். லட்சக்கணக்கான மக்கள் புத்தாண்டன்று இங்கு வருவதாக கூறப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பல கம்பெனி brand களின் விளம்பரம் இங்குள்ள மிக பெரிய திரையில் வந்த வண்ணம் இருப்பது கண்ணுக்கு இனிமை அளிக்கும்.

நிறைய மக்கள் கூடும் இடம் என்பதால் அதிகப்படியான பாதுகாப்பு படையினர் உலா வருவதையும் காணலாம். இங்குள்ள வண்ணமயமான ஒளி விளக்குகள் இரவையும் பகலாக்கி விடுகின்றன. இங்கு நடைபாதை கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளையும், வீர சாகச விளையாட்டு புரிபவர்களையும் காணலாம். மாறு வேடமிட்டு கலைஞர்கள் நம்மிடம் கை குலுக்கி கொள்வார்கள். நாங்கள் சென்ற போது சுதந்திர தேவி வேடமிட்ட கலைஞர் என்னுடன் கை குலுக்கியது இன்றும் எனக்கு நினைவில் உள்ளது.
அமெரிக்காவை வெள்ளித் திரையில் கண்டாலே அதில் Brooklyn bridge இடம் பெறாமல் இருக்காது. நமது ராமேஸ்வரம் பாலம் நூறு வருடம் பழமையானது என்றால், புரூக்ளின் பாலம் அதை விட பழமையானது. ராமநாதபுரத்தில் வாழ்ந்த நான் இந்த இரு பாலங்களையும் ஒப்பிட்டு பார்த்து கொண்டேன். நமது ராமேஸ்வரம் பாலம் பழுதாகி சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த புரூக்ளின் பாலம் எந்த பழுதும் இல்லாமல் கம்பீரமாக தோற்றமளிக்கிறது.

Manhattan மற்றும் Brooklyn என்ற இரு இடங்களையும் இணைக்கவே இந்த பாலம் கட்டப்பட்டது. சைக்கிள் மூலம் செல்பவர்களுக்கு தனி பாதையும், நடைபயணிகளுக்கு அழகழகான கோடு போட்டு பாதையும் அமைத்து ஒழுங்குபடுத்தி இருக்கிறார்கள். இது தவிர இதே பாலத்தில் கீழே கார்கள் செல்வதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த பாலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கம்பிகள் சிலந்தி வலை போன்றும், கயிறு போன்றும் காட்சியளிக்கும். மாலையில் சூரியன் மறையும் போது அங்கிருந்து பார்ப்பதற்கு கண்ணுக்கு ரம்மியமாக இருக்கும். அதே போல வண்ணமயமான விளக்குகளால் பிரகாசிக்கும் நியூ யார்க்கின் உயரமான கட்டிடங்களை இங்கிருந்து பார்க்க கண் கோடி வேண்டும். இந்த பாலம் போட்டோ எடுப்பதற்கு உகந்த இடம்.
நியூ யார்க் நகரம் எங்கும் கூட்டம் அலைமோதும். இதில் இந்தியர்கள் கூட நிறைய தென்படுகிறார்கள். அதிலும் தமிழ் ஆங்காங்கே நம் செவிகளுக்குள் நுழைகிறது. அஞ்சப்பர், சரவண பவன் மற்றும் அடையார் ஆனந்த பவன் போன்ற உணவகங்களும் நியூ யார்க் நகரத்தின் உயர்ந்த கட்டிடங்களுக்கு நடுவில் உண்டு.

நாங்கள் சரவண பவன் மற்றும் அடையார் ஆனந்த பவன் சென்றிருந்தோம். திருச்சியில் வாழ்ந்த எனக்கு அடையார் ஆனந்த பவனில் சென்று உணவருந்தும் போது, தில்லை நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள அடையார் ஆனந்த பவன் நினைவுக்கு வந்தது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.