வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
“அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பிரசவங்கள் 2021-22இல் 43% ஆக இருந்தது. அது கடந்தாண்டு 38% ஆக குறைந்துள்ளது. 5% குறைந்துள்ளது ஒரு மகத்தான சாதனை. 38% கூட ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்றால் இல்லை. அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் அறுவை சிகிச்சையே இல்லாமல், சுகப்பிரசவங்கள் தான் 100% நிகழ்ந்தது என்கிற ஒரு நிலை வரும்போது, உண்மையிலேயே நமக்கு மிகப்பெரிய பாராட்டுதல்கள் கிடைக்கும்”தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
இவ்வாறு மாண்புமிகு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள், சமீபத்தில் சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நடந்த விழாவில் பேசியிருப்பது, சுகப்பிரசவங்கள் அதிகம் நிகழ வேண்டும் என்னும் பொதுமக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதாக இருந்தாலும், சிசேரியன் அறுவை சிகிச்சைகளை 0% ஆக்க முடியுமா, அதற்கான தேவை உள்ளதா என்ற விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிசேரியன் அறுவை சிகிச்சை என்றால் என்ன, சுகப்பிரசவத்தை விடுத்து எப்போது சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், சிசேரியன் அறுவை சிகிச்சை எவ்வாறு மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் மரணங்களை வெகுவாக குறைத்துள்ளது, 0% சிசேரியன் நோக்கி செல்வது தேவையா என்பதை குறித்து இங்கே விரிவாக அலசுவோம்.
சிசேரியன் அறுவை சிகிச்சை என்றால் என்ன?
சுகப்பிரசவத்திற்கான முயற்சியை தொடரும்போது, தாய் அல்லது சேயின் உயிருக்கோ, உடல்நலனிற்கோ பாதிப்பு ஏற்படக்கூடிய நிலையிருந்தால், மகப்பேறு மருத்துவர், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நிகழ்த்துவர். இதில் தாயின் வயிறு மற்றும் கர்ப்பப்பையில் கீறல்கள் (incisions) கொடுக்கப்பட்டு, மகப்பேறு மருத்துவர் தன் கைகளை கர்ப்பப்பையில் விட்டு குழந்தையை வெளியே எடுப்பார். பின்பு, தையல்கள் மூலம், கர்ப்பப்பை மற்றும் வயிற்றில் இடப்பட்ட கீறல்கள் மூடப்படும். கர்ப்பப்பையின் மேல் எங்கே கீறல் கொடுக்கப்படுகிறது என்பதைக் கொண்டு, Lower Segment Caesarean Section (LSCS) மற்றும் Classical Caesarean Section என்று இருவகைகள் உள்ளன. LSCS செய்வதற்கு மருத்துவ முரண்பாட்டு காரணங்கள் இருந்தால் மட்டுமே, Classical Caesarean Section செய்யப்படும்.

மருத்துவ காரணங்களால், பிரசவம் தொடங்குவதற்கு முன்பே செய்யப்படுவது ‘Elective’ சிசேரியன் அறுவை சிகிச்சை என்றும், பிரசவ வலி தொடங்கியப் பிறகு சுகப்பிரசவத்திற்கான முயற்சியை தொடரும்போது, தாய் அல்லது சேயின் உயிருக்கோ, உடல்நலனிற்கோ பாதிப்பு ஏற்படக்கூடிய நிலையிருந்தால், அவசர நிலையில் செய்யப்படுவது ‘Emergency’ சிசேரியன் அறுவை சிகிச்சை எனவும் அழைக்கப்படுகின்றன.
வரலாற்றில் சிசேரியன் அறுவை சிகிச்சை
சிசேரியன் அறுவை சிகிச்சை தொன்மை காலந்தொட்டே தொடர்வதற்கான ஆதாரங்கள் இந்திய, எகிப்திய, கிரேக்க மற்றும் ரோமானிய வரலாற்று நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது. பிரசவ நேரத்திலோ அதற்கு முன்போ தாய் இறக்க நேரிட்டால், குழந்தையையாவது காப்பாற்றுவதற்கு தாயின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுப்பர். ரோமானிய பேரரசர் ஜுலியஸ் சீசர் இம்முறையில் பிறந்ததாலே, சிசேரியின் அறுவை சிகிச்சையென்று பெயர்பெற்றிருக்கலாம் என்ற கருத்து பரவலாக காணப்பட்டாலும், அது உண்மையன்று.

ஏனென்றால், ஜூலியஸ் சீசரின் அன்னை அவ்ரேலியா காட்டா (Aurelia Cotta), சீசரின் 40 வயதுவரை உயிர்வாழ்ந்துள்ளார். முதலாம் நூற்றாண்டு ரோமன் வரலாற்று ஆசிரியர் ப்ளைனி த எல்டரின் ‘ஹிஸ்டாரியா நேட்சுராலிஸ்’ நூலின் வாயிலாக, ஜூலியஸ் சீசரின் முன்னோர்களில் சீசர் பெயருடைய ஒருவர், இவ்வாறு பிரசவித்ததால், சிசேரியன் முறை என்ற பெயரைப் பெற்றுள்ளதை அறிய முடிகிறது.
இந்திய வரலாற்று நூல்களை ஆராயும்போது, இரண்டாம் மௌரிய பேரரசர் பிந்துசாராவின் அன்னை, தனது பேறுகாலத்தில் தவறுதலாக விஷம் அருந்தி இறந்தபோது, பேரரசர் சந்திரகுப்த மௌரியாவின் அரச ஆலோசகர் சாணக்கியர், தனது ராணியின் வயிற்றைக் கிழித்து சிசுவின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
பிற்காலங்களில், தாய் உயிருடன் இருக்கும்போதே சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அதீத இரத்த இழப்பு மற்றும் நோய்த்தொற்றினால் மகப்பேறு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மருத்துவ வளர்ச்சிகளால், மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் மரணங்களை வெகுவாகத் தடுக்கும் பாதுகாப்பான அறுவை சிகிச்சை முறை என்னும் நிலையை சிசேரியன் அடைந்துள்ளது.

சிசேரியன் அறுவை சிகிச்சை எப்போது அறிவுறுத்தப்படுகிறது?
நஞ்சுக்கொடி முந்து பிரசவம் (Placenta previa), சுருங்கிய இடுப்பெலும்பு (Contracted Pelvis/ cephalopelvic disproportion), முற்றிய நிலை கர்ப்பப்பைவாய் புற்றுநோய், பிரசவத்திற்கு முந்தைய அதீத இரத்தப்போக்கு, பிரசவத்தில் முன்னேற்றமின்மை, பிரசவத்தின்போது சிசுவின் அசாதாராணமான நிலை, முந்தைய பிரசவம் சிசேரியன் மூலம் நடைப்பெற்று தற்போது சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்யமுடியா காரணமிருப்பின், மகப்பேறு மருத்துவர் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யுமாறு அறிவுறுத்துவர்.
தாயிற்கு கட்டுப்படுத்தா சர்க்கரை நோய், தீவிர இருதய பாதிப்பு, தீவிர உயர் இரத்த அழுத்தம் போன்ற மருத்துவ காரணங்கள் இருப்பினும் சிசேரியன் அறுவை சிகிச்சை அறிவுறுத்தப்படும்.
பிரசவ வலியின் போது ‘பார்ட்டோகிராஃப் (Partograph)-இல், பிரசவத்தின் முன்னேற்றம் மற்றும் சிசுவின் இதயத்துடிப்பை மருத்துவர் மற்றும் செவிலியர்கள் தொடர்ந்து கண்காணிப்பர். மருத்துவ முயற்சிற்குப் பிறகும் பிரசவத்தில் முன்னேற்றமின்மையிருந்தாலோ, சிசுவின் இதயத்துடிப்பு குறைந்தாலோ (fetal bradycardia), கர்ப்பப்பையிலேயே சிசு மலம் கழித்திருந்தாலோ (meconium stained liquor), சிசுவைக் காப்பாற்ற உடனடியாக ‘எமெர்ஜென்சி சிசேரியன் அறுவை சிகிச்சை’ மேற்கொள்ளப்படும்.

‘சிசுவிற்கு மூச்சுதிணறலுள்ளது; எமெர்ஜென்சி சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்’ என்று மகப்பேறு மருத்துவர் அறிவுறுத்தியும், தாயோ அவரின் கணவரோ, சிசேரியன் அறுவை சிகிச்சை மீதுள்ள சந்தேகத்தின் காரணமாய் மறுப்பின், அது சிசுவின் உயிருக்கே கேடாய் முடியும். சுகப்பிரசவத்தின் மூலம் அந்த பச்சிளம் குழந்தை பிறந்து, குழந்தைநல மருத்துவர் செயற்கை சுவாசம் கொடுத்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றினால் கூட, மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தால், மூளை பாதிப்பு (Hypoxic Ischemic Encephalopathy) ஏற்பட்டு, வாழ்கை முழுதும் மூளை வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தையாக (cerebral palsy) மாறிட நேரிடுமென்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மகப்பேறு மற்றும் சிசுவின் மருத்துவ காரணங்களால், அவசரநிலை சிசேரியன் செய்ய அறிவுறுத்தும்போது, அதனைப் பெற்றோர் தாமதப்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகமிக முக்கியம்.
குறையும் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் மரண விகிதம்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் 2019-21இல் நடத்தப்பட்ட ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (National Family Health Survey - 5) முடிவில், பச்சிளம் குழந்தைகள் மரண விகிதம் - பிறக்கும் 1000 குழந்தைகளில் 24.9 ஆக இந்திய அளவிலும், 12.7-உடன் தமிழகம் முன்னணி மாநிலமாகவும்,. 34.5-உடன் பீகார் இறுதி இடத்திலும் உள்ளன. மருத்துவமனைகளில் நிகழும் பிரசவங்கள் இந்திய அளவில் 89% ஆகவும், 100%- உடன் தமிழகம் முதன்மை மாநிலமாகவும், பீகார் 76% உடன், பெரிய மாநிலங்களில் இறுதி இடத்திலும் உள்ளன. ‘சிசேரியன் அறுவை சிகிச்சை பிரசவங்கள் இந்திய அளவில் 21.5% ஆகவும், தமிழகம் 44,9% உடன் முன்னணி மாநிலமாகவும், பீகார் 9.7% உடன் இறுதி இடத்திலும் உள்ளன.

சுகாதார குறியீட்டீல் முன்னணியில் இருக்கும் தமிழகம்
1992-93இல் நடத்தப்பட்ட முதலாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் (National Family Health Survey - 1) 49 ஆக இருந்த இந்தியாவின் பச்சிளம் குழந்தைகள் மரண விகிதம், 30 வருடங்களில் பாதியாக குறைந்துள்ளது. 2015-இல் ஐக்கிய நாடுகள் பொதுக்குழுவால், ஏற்றுக்கொள்ளப்பட்ட வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களில் ஒன்றான (Sustainable Development Goals) 2030-க்குள் பச்சிளம் குழந்தைகள் மரண விகிதம் - பிறக்கும் 1000 குழந்தைகளில் 12க்கு கீழாக குறைக்க வேண்டுமென்ற இலக்கை, தமிழகம் தற்போதே அடையும் நிலையை எட்டியுள்ளது. 2020-22ஆம் ஆண்டு, தமிழகத்தின் மகப்பேறு மரண விகிதம் - பிறக்கும் ஒவ்வொரு 1,00,000 குழந்தைகளுக்கும் 54 மகப்பேறு மரணங்களாக உள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்பு, 90-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களில் ஒன்றான 2030-க்குள் மகப்பேறு மரண விகிதம் 70க்கும் கீழாக குறைக்க வேண்டுமென்ற இலக்கை நாம் முன்னரே அடைந்துவிட்டோம். தமிழகத்தின் தற்போதைய சுகாதார குறியீடுகள் அனைத்தும், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளன. மேலும் 2021-இல் நிதி ஆயோக் வெளியிட்ட ‘சுகாதார குறியீடில்’ கேரளாவைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
0% சிசேரியன் இலக்கு தேவையில்லை
நமது தமிழக அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனைகளில், சிசுவின் இதயத்துடிப்பைக் கண்காணிக்கும் ‘கார்டியோடோக்கோக்ராஃபி (Cardiotocography)’ கருவி மூலம் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, ‘எமெர்ஜென்சி சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம்’ சிசுவின் உயிரை காப்பாற்ற முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தமிழக அரசு மருத்துவமனைகளில், சிசேரியன் அறுவை சிகிச்சை, இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிக அதிகமாக, 38 சதவிகிதமாக இருப்பது வருத்தம் கொள்ளும் செய்தியைப் போன்று தெரிந்தாலும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவக் காரணங்கள் இருந்ததால் மட்டுமே சிசேரியன் அறுவை சிகிச்சை செய்திருப்பர் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
நம் அரசு மருத்துவமனைகளிலுள்ள போதுமான மகப்பேறு மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர்கள், செவிலியர்கள், முதுகலை மற்றும் பயிற்சி மருத்துவர்களின் மிகச்சீரிய பிரசவ கண்காணிப்பின் பலனாகவும், அதுவே மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் மரண விகிதம் குறைவாக இருக்கும் முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்ற முக்கியக் காரணம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

பீகார், பச்சிளம் குழந்தைகளின் மரணங்கள் அதிகம் நிகழும் மாநிலமாகவும், மருத்துவமனைகளில் பிரசவம் குறைவாக நிகழும் மாநிலமாகவும் இருக்கும்போது, தமிழகம் முன்னணி மாநிலமாக இருப்பதன் முக்கிய காரணம் – ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட பொது மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள் வரை கிடைக்கும் தரமான மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவமே!
தமிழக அரசு மருத்துவமனைகளில் 38% சிசேரியன் நிகழ்வதை நினைத்து அச்சப்படத் தேவையில்லை. 2020-இல் அமெரிக்காவில் 31.8% பிரசவங்கள், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமே நிகழ்ந்துள்ளன. மாறாக ஆப்பிரிக்காவில் அது 7.3%-ஆக உள்ளது. அமெரிக்காவில், பச்சிளம் குழந்தைகள் மரண விகிதம் 3.4-ஆகவும், ஆப்பிரிக்காவில் 27-ஆகவும் உள்ளன; உலகின் 43% பச்சிளம் குழந்தை மரணங்கள், ஆப்பிரிக்காவில் நிகழ்கிறதென்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் அரசு மருத்துவமனைகளில், சிசேரியன் 3.6% தான். தமிழக அரசு மருத்துவமனைகளில் நிகழும் சிசேரியன் சதவிகிதம் குறைந்து, அதிகளவு சுகப்பிரசவங்கள் நடைப்பெற வேண்டும் என்ற கருத்து சரியானதென்றாலும், பீகார் காட்டிலும் குறைந்து 0% இலக்கை நோக்கிச் செல்ல முயற்சி செய்தால், அதுவே பாதகமாக மாறி, மகப்பேறு மரணங்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் மரணங்கள் அதிகரிக்க காரணமாகிவிடலாம்.

தனியார் மருத்துவமனைகளில் அதிகரிக்கும் சிசேரியன்
ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு, இந்திய அளவில் தனியார் மருத்துவமனைகளில் 47.4% பிரசவங்கள் சிசேரியன் வாயிலாக நடப்பதாகவும், அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் 14.3% ஆக இருப்பதாகவும் கூறுகிறது. தனியார் மருத்துவமனைகளில் சுமார் 2-இல் ஒரு குழந்தை சிசேரியன் வாயிலாகவே பிறப்பது வருத்தம் கொள்ளும் செய்தியாகவே பார்க்க வேண்டும். உலக சுகாதார மையம் தெரிவித்ததுபோல், மகப்பேறு அல்லது சிசுவிற்கு மருத்துவ காரணங்கள் இருந்தால் மட்டுமே சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
நேரெதிராக, பிரசவ வலியை தவிர்ப்பதற்காக சிசேரியன் செய்ய மகப்பேறு மருத்துவரைக் கட்டாயப்படுத்தினால், அதற்காக சிசேரியன் மேற்கொள்ளக் கூடாது. வலியில்லாமல் சுகப்பிரசவம் செய்து கொள்ள ‘Epidural Analgesia’ போன்ற முறைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. எவ்வித மருத்துவ காரணமும் இல்லாமல், குறிப்பிட்ட நாள், நட்சத்திரத்தில் தனது குழந்தை பிறக்க வேண்டும் என்று ‘சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு’ கட்டாயப்படுத்தும் பெற்றோருக்கு, மகப்பேறு மருத்துவர்கள் குறிப்பாக தனியார் மருத்துவமனைகள் உறுதியாக ‘முடியாது’ என்று கூற வேண்டும்.

இறுதியாக கூற வேண்டுமென்றால், சிசேரியன் அறுவை சிகிச்சைகள் மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் மரண விகிதத்தை குறைக்க முக்கியக் காரணம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.
எனினும், சுகப்பிரசவம் அதிகம் நிகழ வேண்டுமென்பதுதான் மக்களைப் போன்று மருத்துவர்களின் விருப்பமாகும். அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் இந்தளவு தான் நிகழ வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து, அதனை நோக்கி செல்லத்தேவையில்லை, ஏனென்றால் அங்கு நடக்கும் 100% சிசேரியன் அறுவை சிகிச்சைகள் அனைத்தும், மருத்துவக் காரணங்கள் இருந்ததாலே நடைப்பெற்றுள்ளன. தனியார் மருத்துவமனைகள் தங்களின் சிசேரியன் எண்ணிக்கையை குறைக்க முயற்சிக்க வேண்டும். மருத்துவ காரணங்கள் இல்லாமல், பெற்றோர் மற்றும் சுற்றத்தார் அழுத்தத்துக்குட்பட்டு, சிசேரியன் அறுவை சிகிச்சைகள் நடத்தப்படக்கூடாது.
- மருத்துவர் மு. ஜெயராஜ் MD (PGI),
புதுச்சேரி.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.