Published:Updated:

சிறகடிக்கும் ’சிறு’ பிறவி! | My Vikatan

Representational Image

எங்கிருந்தோ பறந்து வந்து ஓர் மரக்கிளை மீது தமது கூரிய நகங்களை கொத்தி பிடித்து நின்று கொண்ட குருவி ஒன்று , சிறிது நேரத்தில் தமது கூறிய அலகுகளால் செவியினிக்க பாடியது.

சிறகடிக்கும் ’சிறு’ பிறவி! | My Vikatan

எங்கிருந்தோ பறந்து வந்து ஓர் மரக்கிளை மீது தமது கூரிய நகங்களை கொத்தி பிடித்து நின்று கொண்ட குருவி ஒன்று , சிறிது நேரத்தில் தமது கூறிய அலகுகளால் செவியினிக்க பாடியது.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

மனித வாழ்வில் மனித உள்ளம் மறக்க விரும்பாத ஓர் விஷயம் என்றால் அது ஒவ்வொரு மனிதனின் சிறு பிள்ளைப் பருவமாகத் தானிருக்கும்.

அப்படிப்பட்ட பருவத்தை சொல்லி சிலாகிக்கவும் எண்ணித் துள்ளவும் ஏராளம் இருந்தாலும் நம் எண்ணச் சிதறல்களில் சித்தரிக்க கிடைக்கும் சிலவற்றை யாருடனாவது சொல்லி சிலாகிக்க உள்ளம் துடிக்கும்.

அப்படித்தான் என் சிறு பிள்ளை பருவத்தை சிலாகிக்க கிடைத்த சிலவற்றை என் ஞாபகப் பெட்டகத்தை திறந்து வாசிக்கிறேன்.

அது எனது எட்டாம் வகுப்பு பருவமாக இருக்கலாம் என தோன்றுகிறது.

சிறிய காய்ச்சல் உடல் முழுக்க வெப்பத்தை கடத்தி உடற்சோர்வை ஏற்படுத்தியது, தலைக்கு முழுக்கு போட முடியாத சூழலில் பள்ளிக்கு முழுக்கு போட்டாயிற்று..

வீட்டு உள்துறை மந்திரியான அம்மா என்னை படுக்கையை விட்டு எழுந்திருக்க விடவில்லை, ஆகவே ஏது வெளி விளையாட்டு

எனவே எத்தனை நேரம் வீட்டின் சுவற்றையே வெறித்து பார்த்துக் கொண்டிருப்பது கொஞ்சம் வீட்டுத் தோட்டத்தின் பக்கம் நின்று விளையாடுகிறேனே! என்றேன்.

உத்தரவு கிடைத்தது. கூட்டுக்கிளியாய் வீட்டில் இருக்க பிடிக்காமல் கொல்லைப் புறத்து குருவிகள் கூவி அழைக்கும் அழகை வியக்க புறப்பட்டேன்.

வேப்பம், பூவரசு, மா, தென்னை மரங்கள் காற்றில் அசைந்து என்னை வரவேற்றது தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் வீரர்களையும், பார்வையாளர்களையும் உற்சாகிக்கும் உற்சாக மங்கைகள் தங்கள் கரங்களில் இருக்கும் ஜிகினா நாடாக்களை அசைத்து ஆடுவதுபோல் மரங்கள் தனது இலைகளை அசைத்து வரவேற்பது போன்றிருந்தது.

Representational Image
Representational Image

அம்மரங்களின் கிளைகளிலிருந்து எச்சிலிலையுண்ட கருங் காகத்தின் கரையும் குரல் கேட்டு கூடும் காக்கை கூட்டத்தின் விருந்தோம்பலை கண்டு விழிகளை விரித்திருந்தேன்.

அம்மா தன் கைப்பட அவித்து அதனை பாதியொடித்து தந்த பனங்கிழங்கின் சதை தின்று பசியாற்றிக் கொண்டேன்.

என்றோ! விரல் குத்தித் தின்றொழித்திருந்த காய்ந்த பனங்காயின் நடுவில் மூங்கில் கவ்வை மாட்டி வைத்து கரம் பிடித்து ஓட்டிய பனங்காய் கைவண்டி கதவோரம் சாத்தப் பட்டிருந்தது.

அதில்தான் நான் பல நண்பர்களோடு போட்டியிட்டு மாலை வேளைகளில் தெருதோறும் அதனை ஒரு மூங்கில் கவ்வையின் துணைகொண்டு தட்டி திருப்பி ஓட்டிச் சென்ற ரத உற்சவ ஊர்வலம் இன்றும் நினைவுகளின் விளிம்பில் நின்று கண்களுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒருநாள், தோட்டத்து வேலியில் வேயப்பட்டிருந்த வேலிமுள் விளிம்புகளில் வீற்றிருந்த ஓர் தட்டான் பூச்சியின் வால் பிடிக்க விரல் நீட்டிச் சென்ற லாவகங்கள் தோற்றுப் போனபோது அந்த தட்டான் பூச்சி பறந்து சென்று பல்லிளித்து என்னை பரிகாசம் செய்தது.

எங்கிருந்தோ பறந்து வந்து ஓர் மரக்கிளை மீது தமது கூரிய நகங்களை கொத்தி பிடித்து நின்று கொண்ட குருவி ஒன்று , சிறிது நேரத்தில் தமது கூறிய அலகுகளால் செவியினிக்க பாடியது.

காற்றினில் மிதந்து வந்த அந்த ராகங்கள் செவிக்குள் இனித்தது, மரங்கள் தலையசைத்து ரசித்து அந்த குழலிசையில் லயித்து காற்றோடு சேர்ந்து தாமும் பரவசத்தில் ஆடித் திளைத்தன.

அவற்றின் பரவச நாட்டியத்தில் அதன் இலைகளில் தஞ்சம் கொண்டிருந்த பச்சைப் புழுக்கள் தனது பூவினும் மெல்லிய மேனியை சிணுங்கி கொண்டு தனது சிரத்தை சிறிது தூக்கி குரலிசை வரும் திசை நோக்கி எட்டிப்பார்த்தன.

அதுவரை இலை என எண்ணிக் கொண்டிருந்த குருவியின் கண்களுக்கு அந்த இலைக்குள்ளிருந்த உருவம் தாம் ருசித்து உண்ணும் கொழுத்த புழு என்றறிந்ததும் தாம் பாடுவதை நிறுத்திக் கொண்டு பறந்தோடிச் சென்று தம் கூரிய நகங்களால் பூக்களை மேனியாய் போர்த்திக் கொண்ட புழுவின் மீது கொத்தி நின்றது.

மலரினும் மெல்லிய புழுவது, முட்களைப் போன்ற குருவியின் நகங்களால் மரம் எனும் சிலுவையில் அறையப்பட்டு பின்னர் சிறிது சிறிதாக கொத்தும் குருவியின் குறுவாள் வாய்க்குள் சிறிது சிறிதாக சென்று மறைந்தது.

அதைக் கண்டபோது குருவியின் பசிக்கு ருசிக்க கிடைத்த புழுவை எண்ணி மகிழ்வதா! அல்லது பூவினும் மெல்லிய தசை கொண்ட வாயில்லா புழுவானது கூரிய கோடாரி அலகுகளால் குத்துப் பட்டு குருதியின்றி கொடும் சத்தமின்றி கொல்லப்பட்டு குருவியின் வாய்க்குள் மெல்லப்பட்டு அதன் வயிற்றுக்குள் செரிமானமானதை எண்ணி வருந்துவதா?.என விளங்காமல் நின்ற அந்த கணம் அதே மரத்தின் நிழலில் நின்ற போது நெஞ்சுக்குள் வந்து போனது.

மாலைப் பொழுதுகளில் தந்தையின் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு அதன் பெடல்களில் ஒரு காலும் மறு காலை தரையில் ஊன்றியும் தத்தி ஏறிக் கொண்டு அதன் குறுக்கால் காலை விட்டு குரங்கு பெடல் இட்டு குறுக்கேயும், மறுக்கேயும் குதூகலமாய் போன முதல் மிதிவண்டி பயணங்கள் இப்போதும் இதமாய் என்னுள் பயணித்துக் கொண்டே இருக்கிறது.

பள்ளியில் மூன்றாம் (அல்லது நான்காம்) வகுப்பு படிக்கிறபோது கையடக்க கரும்பலகையில் (சிலேட்டு) கரங்கிருக்க பழகிய கோடுகள் அனைத்தும் உயிரெழுத்தாக உயிர்பெற விரல்கள் வியர்க்க வரை பழகிய தருணங்களும்,

அதில் முதன் முதலாய் முழுமைப் பெற்ற என் முதலெழுத்தானது ஆசிரியரின் மதிப்பெண் பெற்றதை கண்டு முகமலர்ந்து ஆசிரியரின் முதல் பாராட்டை முழு மனதாய் பெற்றுக்கொண்ட நிகழ்வானது நினைவென்னும் குடைக்குள் இப்போதும் நிழலாடுகிறது...

குளக்கரையில் குளிக்க செல்கையில் அந்த குளத்தங்கரையின் படியருகே வீற்றிருக்கும் குட்டி சுவரேறி குதூகலமாய் நீருக்குள் குதித்து மூழ்கி குளித்து களித்திட்ட காலங்கள் குளிருகிறது இப்போதும் என் நெஞ்சறைகளுக்குள்

நீண்ட கயிற்றின் இரு முனைகளிலும் ஒற்றை முடிச்சிட்டு அதனை பேருந்தாய் பாவித்து அப்பேருந்தின் வயிற்றுக்குள் நண்பர்களை நிரப்பி நான் ஓட்டுனராக நின்று ஓட்டிய ஓட்டப் பயணங்களை இப்போதும் ஓய்ந்த கால்கள் மறந்திட மறுக்கிறதே.!...

இன்னுமொருமுறை சிறுவனாய் நான் மாற மாட்டேனா!

சிறுவானில் கூடுகட்டி சிட்டுக் குருவியாய் சிறகடிக்க என

ஏங்கியே! என்னிதயம் இளைத்துப் போகிறது!..

எண்ணமும், ஏக்கமும், எழுத்தும்..

பாகை இறையடியான்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.