Published:Updated:

போய் உட்கார்ந்ததும் எல்லாரும் நம்மையே பார்ப்பாங்க! - கல்யாண பிளாஷ்பேக்

Representational Image
Representational Image

எல்லோருக்கும் காதல் திருமணம் அமைவதில்லை. பெற்றோரின் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து அரேஞ்சு மேரேஜ் செய்கின்றனர் பலர். இதில் மெயின் வில்லனாய் ஜாதகம் தான் இருக்கிறது...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

உள்ளதிலேயே சிறந்த புகைப்படத்தைத்தான் பெண் வீட்டுக்கு அனுப்பினேன் வந்ததிலேயே சிறந்த புகைப்படத்தைத் தேர்வு செய்திருப்பார்கள் போல பதில் இல்லை!
பா.ராஜாராம்

புராணக் காலத்திலிருந்து நவீன காலம் பெண் பார்த்தல் என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் நடைபெறும் முக்கிய நிகழ்வு ஆகும். ஜாதகம் பார்த்து, புகைப்படங்கள் பரிமாறி இரு வீட்டாருக்கும் பூரண திருப்தி ஏற்பட்டு மணமகன் வருங்கால மனைவியை காண வருவார். `எனக்கென ஏற்கெனவே பிறந்தவள் இவளோ’ எனப் பின்னணியில் பாடல் ஒலிக்கும். சில சமயம் இருவருக்கும் பிடிக்கவில்லையெனில், `ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ’ எனவும் ஒலிக்கும். இருவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் அந்த சந்திப்பு வாழ்வில் என்றும் இனியவை.

உயிர் துறக்கும் தருவாயில் ஒரு நிமிடம் இந்த உலகை காண எப்படி ஆவல் கொள்வோமோ அதுபோல் முதன்முதலாய் பெண் பார்க்கும் அந்த நொடி எதிர்பார்ப்புகளால் நிறைந்தது.

Representational Image
Representational Image

#ஜாதகமே துணை

தங்கைகள் இருந்தால் திருமணம் முடிந்த பின்னும், தங்கை இல்லையென்றால் 25 வயதிலும் பேச்சு ஆரம்பமாகும். சொந்தக்காரங்ககிட்ட போனில் அப்பா பேசும்போது அப்பிடியே மகனுக்கு இனி பொன்னு தேடனும்னு சொல்லும்போது..இன்ப தேன் வந்து பாயும் ஆண்களுக்கு.

"ஒருவார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்னு" ஒரு அசரீரி ஹோம் தியேட்டரில் ஒலிக்கும். அப்ப இருந்தே ரொமாண்டிக் மூட், லுக், இன்ன பிற இதர எண்ணங்களும் தொடங்கி கற்பனையிலயே மிதப்போம். கார் வாங்க முடிவெடுத்த போது சாலையில் செல்லும் அனைத்தும் நாம் நினைத்த கார் செல்வது போல.. பார்க்கும் ஒவ்வொரு பெண்ணும் நாம் நினைத்தது போலவே இருப்பார்கள்.

மார்க் ஷீட், ரெஸ்யூம்க்கு அப்புறம் அதிகம் ஜெராக்ஸ் போட்டது ஜாதகத்துக்கு தான்.பார்க்கிறவங்க கிட்ட எல்லாம் How are you னு கேட்கிற மாதிரி..மனசுக்குள்ள ஐ எம் கண்ணன் ராகு கேது இருக்குது, இரண்டுல செவ்வாய் இருக்கு, எட்டுல செவ்வாய் இருக்கு, நீட்சியில் செவ்வாய் இருக்கு, சுத்த ஜாதகம் என ஏதேனும் ஒன்றை சொல்லி பெண் இருந்தா சொல்லுங்கனு கேட்போம்.புதுசா யாராவது இளம்பெண் தெருவுக்கு வந்தாலோ, ஆபிசுல ஜூனியராய் பணியில் சேர்ந்தாலோ ராமன் தேடிய சீதை படத்தில் வரும் சேரன் மாதிரி ரியாக்சன் கொடுப்போம்.

யாரைப் பார்த்தாலும் ஐ வான் டூ மேரியூ னு வானத்தைப் போல விஜயகாந்த் மாதிரி சொல்லத் தோணும்.

Representational Image
Representational Image

#ஆடுவோம் பாடுவோம் தேடுவோம்

நியூஸ் பேப்பரில் ஸ்போர்ட்ஸ் நியூஸையே படித்துக் கொண்டிருந்தவன் முதல்முறை மணப்பந்தலை தேடுவாங்க.அதுல மணமகன் தேவை விளம்பரத்தை ஜூம் பன்னி ஜூம் மீட்டிங்கில் பேசுவது போல பார்ப்பாங்க. உனக்குனு ஒருத்தி பொறக்கவா போறா ஏற்கனவே பொறந்திருப்பா என்பது அம்மாக்களின் தேசிய கீதம் தினசரி கேட்டுக்கொண்டே இருக்கும்.இதை கேட்டு கேட்டுத் தான் பார்கே பார்க்கே னு மனசை உற்சாகப்படுத்தனும்.

ஆபிஸ் மெயில் பார்க்கும் நேரம் தவிர மேட்ரிமோனியில் வரும் மணப்பெண் படங்களைப் பார்ப்பது T20யில் சூப்பர் ஓவர் பார்ப்பதுபோல் சுவாரஸ்யமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#மணப்பெண் பார்த்தல்
வர்ற ஞாயித்துக்கிழமை பொண்ணுப் பார்க்க கோயிலுக்கு வரச்சொல்லிட்டாங்கனு சொன்னதும் அந்த விடியலுக்காய் காத்திருப்பது மழைக்காய் காத்திருக்கும் விவசாயியைப் போல குதூகலமானது. இருப்பதிலேயே நல்ல சட்டையைப் போட்டுக் கொண்டு ஓராயிரம் முறை கண்ணாடி பார்ப்போம். எல்லா ஆங்கிளிலும் பார்த்த பின்புதான் படையெடுத்து செல்வோம்.
தலைக்கு குளிச்சதும் தப்பித்தவறி கூட எண்ணெய் வச்சிட மாட்டாங்க.

சகுனமே பார்க்காதவன் கூட அன்னிக்கு சகுனம் பார்ப்பான். அப்பதான் கார் வச்சிருக்கிற நண்பனின் அருமை தெரியும். முல்லைக்கு தேர் கொடுத்த பாரியாய் இந்த அபலைக்கு லிப்ட் கொடுத்த நவீன பாரியாய் வருவான். ஒன்னுமே இருக்காது ஆனா பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிற மாதிரி சிரிச்சிக்கிட்டே இருப்பாங்க ஆண்கள். எல்லாரிடமும் அன்பை கொட்டுவாங்க. அப்பிடியே மனசு முழுக்க வீதி பைப்பில் நிறைந்து வழியும் குடம் போல அன்பும் புன்னகையும் வழிந்து கொண்டே இருக்கும்.

Representational Image
Representational Image

#கண்டேன் பெண்ணை

பெண் வீட்டின் முன்னால் போய் இறங்கியதும் தேவசேனையை கூட்டி வந்த பாகுபலியைப் போல் பெருமிதத்துடன் பார்ப்போம். கவுன்சிலருக்கு நிற்க கூடிய தகுதியுடன் அனைவருக்கும் வணக்கம் சொல்லிப்போகும் போது நமக்குள் இருக்கும் நாகராஜ சோழன் வெளிப்படுவார். போய் உட்கார்ந்ததும் எல்லாரும் நம்மையே பார்ப்பாங்க. கொஞ்சம் ஷையா தான் இருக்கும். அப்பதான் ஒரு பெருசு கடி ஜோக் சொல்லி சிரிக்க வைக்கும்.

கூட்டத்தினரும் பெருசின் கடைசி ஆசையை நிறைவேற்றுவது போல சிரிச்சு வைப்பாங்க.

கொஞ்ச நேரத்தில் பெண் வருவாங்க. பயம், பதட்டம், கூச்சம், ஆவல் என நவரசாவும் பெண்ணின் முகத்திலும், மாப்பிள்ளையின் முகத்திலும் இருக்கும். சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை.. மைண்ட்வாய்ஸ் முணுமுணுக்கும். காபி கொடுக்கும் போது காதலுக்கு மரியாதை ஷாலினி மாதிரி.. பயத்தில் அவங்க கையும் நம்ம கையும் சுகர் லெவல் நானூறை தாண்டியது மாதிரி நடு நடுங்கும்.

பெண்ணுக்கு நம்மை பிடிக்குமானு ஒரு கேள்வி வரும் பாருங்க. சரி எப்பிடியாச்சும் போன் நெம்பர் வாங்கி பேசியே நம்மை பிடிக்க வச்சிடனும் ஒரு வைராக்கியம் பிறக்கும். துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம்னு மனசு உடுக்கை அடிக்கும். தனியா போய் பேசிட்டு வா என யாராவது சொல்லுவாங்களானு அகவிலைப்படி உயர்வை எதிர்பார்க்கும் அரசு ஊழியர் போல காத்திட்டு இருப்பாங்க மாப்பிள்ளைகள்.

Representational Image
Representational Image

பீக் அவர்ல க்ரீன் சிக்னல் விழுந்தது மாதிரி.. சொன்னதும் டீசண்ட்டா அதே நேரத்தில் வேகமா வெட்கப்பட்டது மாதிரி எழுந்து போனேன். போனதும் நலம் விசாரிப்பு, படிப்பெல்லாம் ஃபார்மாலிட்டிக்கு கேட்டேன். சம்பிரதாயத்துக்கு சமைக்கத் தெரியுமானு கேட்டேன். சுடு தண்ணி வைக்க எத்தனை விசில் விடனும்னு கேட்டாங்க.. நான் அப்பிடியே ஆடிப்போய்ட்டேன். அப்ப போன் நெம்பர் வாங்குவது கொரோனா தடுப்பூசிக்கு டோக்கன் வாங்குவது மாதிரி கஷ்டமானது.

அதனால் என்னோட போன் நெம்பர் மட்டும் கொடுத்திட்டு.. பிடிச்சிருந்தா போன் பன்னுங்கனு சொல்லிட்டு வந்திட்டேன். வெளியே வந்ததும் ரத்த தானம் குடுத்து வந்தவனைப் போல பெருமிதமா பார்த்தாங்க. மீண்டும் கும்பிட்டு வந்திட்டேன். அப்புடி ஒரு பூரிப்பு இருந்துக்கிட்டே இருக்கும். வந்து அடுத்த நாளே பெண்ணிடமிருந்து மெசேஜ்.. அப்புறமென்ன பூவரசம்பூ பூத்தாச்சு ஆணுக்கு சேதியும் வந்தாச்சுனு மாப்பிள்ளை ஹேப்பி அண்ணாச்சி.

ஜாதகம் போட்டோ எல்லாம் பிடித்திருந்தால் மட்டும் செல்லவும். அதுவும் கோயிலுக்கு. அங்கும் பார்த்து இருவருக்கும் ஓகேனு தோன்றினால் மட்டும் வீட்டுக்கு செல்லவும். கும்பலாய் செல்லாமல் ஓரிருவர் மட்டும் செல்லவும். ஆள்பாதி ஆடை பாதி என்பது அங்கேதான் வேலை செய்யும். ஆகவே நல்ல ஆடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும்.


*நூறு நாளில் பணத்தை செலவு செய்யும் அருணாசலம் போல, ஆறு மாசம் தான் உனக்கு குருபலன் வருது.. அதை விட்டால் உனக்கு கல்யாணமே நடக்காது-னு சொன்னதும் பல ஆண்கள் மும்முரமாய் களத்தில் இறங்குவாங்க.

Representational Image
Representational Image

*பெண் பார்க்க ஒத்தப்படையில் ஆளுக போனால் நல்லதென்று ஆம்னி வேனில் ஒன்பது பேர் போன கதைகள் உண்டு

*நாம பார்த்த பொன்னுக எல்லாருக்கும் ஈசியா கல்யாணம் நடந்திடும். நமக்கு மட்டும் ஆகவே ஆகாது. அதனாலேயே கல்யாணம் ஆகாத பெண்ணை பார்க்க guest lecturer மாதிரி கூப்பிடுவாங்க. அப்ப அந்த வேதனை இருக்கே வேதனை

*பல வீடுகளில் தையல் மெஷின், கணிப்பொறி இருக்கும். அதை வச்சு எந்த கால்குலேசனும் செய்ய வேண்டாம்.

*CCTV மாதிரி பெண்ணின் தம்பியோ அத்தையோ, சித்தியோ நம்மை கடைசி வரை கவனிச்சிக்கிட்டே இருப்பாங்க

*நண்பர் பெண் பார்க்கப்போன இடத்தில் பெண்ணின் போன் நெம்பர் வாங்கல. குடும்பத்தினரும் வாங்கல. உங்களையெல்லாம் வச்சிட்டு ஒரு கொல கூட செய்ய முடியாதுனு சொல்ல நினைக்கும் போது அவங்க பாட்டி வாங்கி வந்ததை சிலாகித்துச் சொன்னார்

*போன் நெம்பர் வாங்கியதும் முதல் ஒரு வாரம் மெசேஜ் அனுப்ப நல்ல quote-களை ட்ராப்டில் வைத்துக் கொள்ளவும்.

*என் நண்பர் காந்தி போன் நெம்பரை எழுதி சின்னக்கவுண்டர் விஜயகாந்த் மாதிரி இலைக்கு அடியில் வச்சிட்டு வந்துட்டார். அப்புறம் அந்த பெண் கண்டுபிடித்து எடுத்து போன் செய்து பேசியிருக்கார்.

*மாமியாரை அம்மா போல் பார்த்துக்குவாங்க, நகை புடவை மீதெல்லாம் சின்னவயசிலிருந்து ஆசை இல்ல-னு சொல்வதையெல்லாம் இந்த காதில வாங்கி அந்த காதில அங்கியே விட்டிடுங்க.

*உங்க EMI, மாத வருமானம், கடன் பத்தியெல்லாம் முன்பே உண்மையா சொல்லிடுங்க.

Representational Image
Representational Image

பெண் பார்க்க வருவதே ஒரு தவறான அணுகுமுறை தான். அதனை பெண்ணின் இடத்தில் இருந்து பார்க்கும் போது அந்த உளவியல் காரணம் புரியும். ஜவுளிக்கடை பொம்மை போல ஒரு பெண்ணை பார்ப்பது எவ்வளவு சங்கடமானது என்பது தெரியும்.

இருப்பினும் இவை நடந்து கொண்டுதான் இருக்கிறது. முன்பு போல் இல்லாமல் தற்போது நிறைய மாற்றம் கண்டிருக்கிறது. இன்னும் மாற வேண்டும். பெண் பார்ப்பதையே பொழுது போக்காய் எண்ணிக் கொண்டிருப்போர் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல் அவர்களை ஒரு கட்டத்துக்குப் பின் பெண்கள் ஒதுக்க ஆரம்பிக்கின்றனர்.

25 வயதில் சலித்து தேடி பின் 35 வயதில் தேடி சலித்துவிடுகின்றனர். எல்லோருக்கும் காதல் திருமணம் அமைவதில்லை. பெற்றோரின் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து அரேஞ்சு மேரேஜ் செய்கின்றனர் பலர். இதில் மெயின் வில்லனாய் ஜாதகம் தான் இருக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பிட்ட நட்சத்திரம், குறிப்பிட்ட ராசியில் தான் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையை தருகிறது.

மாறாக குடும்பம், குணநலனுக்கு முக்கியத்துவம் தந்தால் இன்னும் நம்பகத்தன்மை ஏற்படும். அளவாய் ஓரிருவர் மட்டும் சென்று பொது இடத்தில் பார்த்துவிட்டு வந்து பிடித்தால் மட்டும் வீட்டிற்கு செல்லலாம். பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் உறவினர் மற்றும் சுற்றத்தாரின் முன் ஏற்படும் அவமானம் ஒரு பெண்ணுக்கு பெரிது. ஆகவே நன்கு யோசித்து இருவரும் பிடித்திருந்தால் மட்டும் உறுதி செய்ய பெண் பார்க்கச் செல்லலாம்.

Marriage is a Necessary Risk. திருமணம் என்பது தேவையான ஆபத்து என்பார்கள். உங்கள் வாழ்க்கைத் துணையை சரியாக தேர்ந்தெடுப்பதில்தான் உங்கள் நூறு சதவீத வெற்றி அமைந்துள்ளது.


-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு