Published:Updated:

முதுமையில் அறுவை சிகிச்சை! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

அறுவைச் சிகிச்சையில் அவர்களுக்கு இருக்கும் அச்சமே அதற்கு காரணமாகும். "மிகுந்த தொல்லை இல்லையே. மிகந்த தொல்லை நேர்ந்தால் அப்போது செய்துகொண்டால் போகிறது" என்று கூறித் தள்ளிப் போடுவோரும் உண்டு.

முதுமையில் அறுவை சிகிச்சை! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

அறுவைச் சிகிச்சையில் அவர்களுக்கு இருக்கும் அச்சமே அதற்கு காரணமாகும். "மிகுந்த தொல்லை இல்லையே. மிகந்த தொல்லை நேர்ந்தால் அப்போது செய்துகொண்டால் போகிறது" என்று கூறித் தள்ளிப் போடுவோரும் உண்டு.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

முதுமைக்கால நோய்களை எல்லாம் மருந்தினால் மட்டுமே போக்கிவிடமுடியாது. சில நோய்களுக்கு அறுவைச் சிகிச்சையும் தேவைப்படும். ஆனால், முதியவருள் சிலர் எளிதில் அதற்கு ஒப்புதல் தருவதில்லை. அறுவைச் சிகிச்சையில் அவர்களுக்கு இருக்கும் அச்சமே அதற்கு காரணமாகும். "மிகுந்த தொல்லை இல்லையே. மிகந்த தொல்லை நேர்ந்தால் அப்போது செய்துகொண்டால் போகிறது" என்று கூறித் தள்ளிப் போடுவோரும் உண்டு.

மருத்துவ வல்லுநர் "முதியவர் ஒருவருக்கு அறுவைச் சிகிச்சை தேவை” எனப் பரிந்துரைத்தால் அவ்வாறு நடந்து கொள்வதே நல்லது. அறுவைச் சிகிச்சையினால் பல நோய்களை முழுமையாகப் போக்க முடியும்.

Representational Image
Representational Image

உதாரணம்: குடல் இறக்கம் (Hernia), மூலம் (Piles), விரைவாதம் (Hydrocele). அறுவைச் சிகிச்சையினால் போக்கக்கூடிய நோய்களைத் தள்ளிப் போடுவதானல் எவ்விதப் பயனும் விளையாது. காலம் கடத்துவதால் வேறு சில நோய்கள் தோன்றி உடல் நிலையை அறுவைச் சிகிச்சை செய்யக்கூடாததாக ஆக்கிவிடுதலும் உண்டு அல்லது அறுவைச் சிகிச்சையை உடனே செய்ய வேண்டிய தொல்லை திடீரென்று வர, அதனால் உடனே அறுவைச் சிகிச்சையை (Emergency) மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்படலாம். இவ்வாறு விரைந்து அறுவை சிகிச்சை செய்ய முற்படின் பல சிக்கல்கள் (Complications) விளைய வாய்ப்புண்டு. உயிருக்கும் ஊறு நேரலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நோயைக் கண்டறிவதில் ஏற்படும் தொல்லைகள்

முதுமையில் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நோய்களைக் கண்டறிவதில் பல தொல்லைகள் உள்ளன. வயது முதிர்ந்த நோயாளரிடமிருந்து அவர்களின் மறதியினாலும், காது மந்தத்தினாலும், நோய் அறிகுறிகளைத் தெளிவாகப் பெறமுடியாது. நோய்களின் தன்மைகளும் மாறுபட்டுக் காணப்படும்.

உதாரணம்: இளமையில் ஒருவருக்குப் பித்தநீர்ப்வையில் கல்லினால் (Gall stones) அடைப்பு ஏற்பட்டாலே, குடல் வாலில் சீழ்பிடித்தாலோ (Appendicitis), வயிற்றில் வலி மிகுதியாக இருக்கும்; வாந்தியும் இருக்கும்; இந்நோய்களே முதுமையில் ஏற்பட்டால் வயிற்று வலியோ, வாந்தியோ மிகுதியாக இலாது. வயிற்றில் ஒருவிதச் செரியாநிலை இருப்பது போலத் தோன்றும். இளைஞர்க்கு சிறுநீரகப்பையில் திடீரென்று அடைப்பு ஏற்பட்டால், அடிவயிற்றில் வலி மிகுதியாகத் தோன்றும். இத்தொல்லையே முதுமையில் ஏற்பட்டால் வயிற்றில் மிகுந்த வலி இராது. மாறாக மனக்குழப்பமும், பதட்டமுமே மிகுதியாக இருக்கும். உடலைப் பரிசோதனை செய்யும போது நோயின் தன்மை சற்று மாறுபட்டே தோன்றும். இதனால் நோய்களையும் எளிதில் கண்டறிய முடிவதில்லை.

Representational Image
Representational Image

அறுவை சிகிச்சைக்கு ஆயத்தப்படுத்தல்

அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளர் ஒப்புதலை முழுமையாகப் பெறுதல் மிகவும் முக்கியமாகும். நோயின் தன்மை, அறுவை சிகிச்சையின் பயன், சிகிச்சையின் போது எதிர்பாராதநிலையில் ஏற்படக்கூடிய தீயவிளைவுகள், அறுவைச் சிகிச்சை செய்யாவிடில் ஏற்படும் சிக்கல்கள் முதலியவற்றை முதியவரிடம் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும். இது மருத்துவரின் முக்கியக் கடமையாகும். எந்நிலையிலும் அறுவைச் சிகிச்சைக்காக முதியவரைக் கட்டாயப்படுதத்துதல் கூடாது. மிகவும் நோய்வாய்ப்பட்ட நிலையில் தம்மால் சுயமாக முடிவெடுக்க முடியாத நிலையில் முதியவர் இருந்தால், மருத்துவர் முதியவரின் உறவினரோடு நன்கு கலந்து ஆலோசித்த பிறகே உரிய முடிவினை எடுக்க வேண்டும்.

முதுமையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நோயுடன், வேறு சில நோய்களும் ஒருவருக்கு இருக்கக்கூடும்.

உதாரணம்: இதயநோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பக்கவாதம், ஆஸ்த்துமா, சிறுநீரகக் கோளாறு, மன நோய், இந்நோய்களினால் அறுவைச் சிகிச்சை செய்யும் போதும், அதன் பின்னரும் (Post operative period) பலவிதச் சிக்கல்கள் ஏற்படலாம். அதனால், இத்தகு நோய்களை நன்கு பரிசோதனை செய்து தக்க சிகிச்சை அளித்த பின்னரே அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். முதுமையில் அறுவை சிகிச்சையைத் திட்டமிட்டுச் (Elective) செய்து கொள்வது மிகவும் நல்லது. அறுவைச் சிகிச்சையை விரைந்து (Emergency)செய்யவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டால் வேறுவழியின்றி அதனைச் செய்து தான் ஆகவேண்டும். இதனால் சுமார் 30 விழுக்காட்டினர் மரணமடைய வாய்ப்புண்டு.

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

அறுவை சிகிச்சையின் வகைகள்

மிகவும் விரைந்து செய்ய வேண்டியவை (Urgent): சில நோய்களுக்கு உடனே விரைந்து அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம். உதாரணம்: குடற்புண் தொளை (துவாரம்), குடல் வாலில் சீழ்பிடித்தல், திரிகிக் கொண்ட குடல் இரக்கம் (Strangulated hernia), எலும்பு முறிவு.

உடனே செய்ய வேண்டியவை (Immediate) : அறுவை சிகிச்சையைச் சில மணி நேரம் அல்லது சில நாள்களுக்குள் செய்ய வேண்டும். உதாரணம்: மூளையில் ஏற்படும் இரத்தக் கசிவு, பாதத்தில் இரத்த ஓட்டம் தடைபட்ட நிலை (Gangrene).

பொருத்திருந்து செய்ய வேண்டுவன (Elective): முதுமையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் பெரும்பாலும் இவ்வகையைச் சேர்ந்தனவே. அதாவது பலநாள்கள், மாதங்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். உதாரணம்: குடல் இறக்கம், மூலம், விரைவாதம், பித்தநீர்ப்பையில் கல், பெருங்குடல் கீழிறங்கிவிடல் (Rectal prolapsed), கருப்பை கீழே இறங்கி விடல், தொல்லை தரும் பிராஸ்டேட் சுரப்பி.

இந்நோய்களால் மிகுந்த தொல்லைகள் இல்லாவிடினும் அவற்றைக் கண்டறிந்ததுமே அறுவை சிகிச்சை செய்து கொள்வது தான் நல்லது. செய்யாவிடின் காலம் செல்லச் செல்ல இந்நோய்களால் பல சிக்கல்கள் உண்டாகலாம்.

உதாரணம்: குடல் இறக்கம் தொடக்ககாலத்தில் எவ்விதத் தொல்லையும் இன்றி இருக்கலாம், காலம் செல்லச்செல்ல அவ்விறக்கம் பெரிதாகிக் கொண்டே வந்து, திடீரென்று ஒரு நாளில் அது திருகிக் கொள்ளலாம். அதனால், மிகச் சிக்கலான, ஆபத்தான நிலையில் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோய்கள்

  • பித்த நீர்ப்பையில் கற்கள் (Gall stones): முதுமையில் தொல்லைகள் ஏதுமின்றி சுமார் எட்டு முதல் இருபத்தைந்து விழுக்காட்டினருக்குப் பித்த நீர்ப் பையில் கற்கள் இருக்கும். இந்நோய் வயது முதிர்ந்த பெண்களுக்கே மிகுதியாக இருக்கும் (27 விழுக்காடு). பல்லாண்டுகள் தொல்லை ஏதுமின்றி இருப்பின் அதற்கு அறுவைச் சிகிச்சை தேவையில்லை. இக்கற்களினால் அடிக்கடி வயிற்றின் வலப்புறத்தில் வலி ஏற்பட்டாலும், காமாலை ஏற்பட்டாலும் அறுவை சிகிச்சையினைத் தவறாமல் செய்து கொள்ள வேண்டும். திட்டமிட்டு அறுவை சிகிச்சை செய்தால் 99 விழுக்காட்டினர் நலமடைவர். இச்சிகிச்சையை போதிய பொறுமையின்றி விரைவாக மேற்கொண்டால் அதிக விழுக்காட்டினர் மரணமடைவர்.

  • புராஸ்டேட் சுரப்பி: இச்சுரப்பி ஆண்களுக்கு மட்டுமே சிறுநீரகப்பையில் இருக்கும்; சுமார் 50 வயதடைந்தவர்க்கு இச்சுரப்பி நாளுக்குநாள் சிறிது சிறிதாக பெரிதாகிக் கொண்டே போகும். அதனால் சிறுநீரகப்பபையில் நீர் தங்கும் அளவு குறையும்; முதியவர் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். சில சமயங்களில் சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். சில சமயங்கில் சிறுநீர் செல்ல வழியின்றித் திடீரென அடைப்பும் ஏற்படுவதுண்டு. இதற்கு போதிய மருந்து இருந்த போதிலும் சிலருக்கு; அறுவைச் சிகிச்சை மூலமே குணமளிக்க முடியும். சிகிச்சை முறையும் மிக எளியதாகும். அதாவது ஆண்குறி வழியாக உரிய கருவியைச் செலுத்தி அச்சுரப்பியை அகற்றிவிடுதலாகும் (TURP). இதனை செய்துக் கொள்ள வயது வரம்பில்லை. 90 வயது முதியவர் கூட இவ்வறுவை சிகிச்சையைப் பெற்று முழுப்பயனை அடையலாம்.

Representational Image
Representational Image
  • குடல் அடைப்பு: சிறுகுடல் அல்லது பெருங்குடலில் திடீரென அடைப்பு ஏற்படலாம். இதனால், வயிற்றில் திடீரென வலி ஏற்படும்; வாந்தியும் உண்டாகும். காற்று, மலம், வெளியேறாது நின்று விடும். அடைப்பு ஏற்படக் காரணம்; குடல் இறக்கம், முன்பே வயிற்றில் செய்துகொண்ட அறுவைச் சிகிச்சையின் விளைவு, பெருங்குடலில் தோன்றியுள்ள புற்றுநோய், உடனே அறுவை சிகிச்சை செய்து கொள்வதனால் இவற்றை தடுக்கலாம்.

  • எலும்பு முறிவு: எலும்புகள் வலிமை இழப்பதாலும், அடிக்கடி கீழே விழுவதினாலும் முதியவர்க்கு எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு மிகுதியாகிறது. இடுப்பு, மணிக்கட்டு முதுகெலும்பு முறிவுகள் மிகுதியாக ஏற்படும். சில நேரங்களில் சற்றுக் கீழே தடுக்கி விழுந்தாலும் பல எலும்புகள் முறிதலுண்டு. நவீன அறுவைச் சிகிச்சையினால் எலும்பு முறிவினை எளிதில் குணப்படுத்த முடியும். இடுப்பு எலும்பு முறிந்தாலும் செயற்கை எலும்பினைப் பொருத்தி வியக்கும் வகையில், மிக விரைவில் நலமாகத் தனியே எழுந்து நடமாடச் செய்யலாம். இச்சிகிச்சை முறைக்கும் வயது வரம்பில்லை.

மயக்கம் கொடுத்தல் (Anaesthesia)

அறுவைச்சிகிச்சை செய்ய மயக்கமருந்து கொடுத்தல் மிக இன்றியமையாததாகும். இத்துறையில் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவ வல்லுநரே இதனைச் செய்வர். இவர்கள் முதியவரை நன்கு பரிசோதனை செய்து அவர் மயக்க மருந்தினை ஏற்றுக்கொள்ளத் தகுதி உடையவரா என்று முடிவு செய்வர். அதன் பின்னரே அறுவை சிகிச்சைக்கு ஆயத்தப்படுத்துவர். ஓர் அறுவைச் சிகிச்சையின் வெற்றி, மயக்கமருந்து தரும் திறமையான நிபுணரைப் பொருத்தே அமையிம் என்றால் அது மிகையாகாது. அறுவைச் சிகிச்சை சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கலாம்; ஆனால், மயக்க மருந்து எல்லாவற்றுக்கும் ஒன்றுதான்.

Representational Image
Representational Image

அறுவை சிகிச்சைக்குப் பின் தோன்றும் பிரச்சனைகள்

அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதியவர்களுக்கு அதிக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உதாரணம்: குழப்பம், நோய்த்தொற்று, திரவத்தின் சமச்சீரின்மை, அதிக நேரம் படுக்கையில் கழிப்பதால் ஏற்படும் உடல் புண்கள், மலச்சிக்கல், மன அழுத்தம் மற்றும் கால்களில் ரத்தம் கட்டிக்கொள்ளும் வாய்ப்பு.

முதுமையில் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நோய்கள் பல உள்ளன. மருத்துவ நிபுணர் அறுவைச் சிகிச்சை செய்து கொள்வது அவசியம் என்றால், காலம் தாழ்த்தாது உடனே செய்து கொள்வது தான் நல்லது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.