வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
வயது அதிகரிக்கும் போது சமூகத்தில் நமக்குக் கிடைக்கும் மரியாதை கூடுகிறது. அதேபோல நீரிழிவு நோய்க்கான ஆபத்தும் கூடுகிறது. ஆனால், முதியோர்கள் மத்தியில் இந்த நோய் குறித்த அக்கறையும் விழிப்பு உணர்வும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் சுமார் 25% முதியோர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது. இன்னும் 25% முதியோர்களுக்கு இந்நோய் கண்டுபிடிக்கப்படாமலேயே உள்ளது. மேலும் சுமார் 20% முதயோர்களுக்கு இந்நோயின் ஆரம்ப கட்ட நிலையான Pre-Diabetes உள்ளது. கவனமாக இதை உணர்ந்துகொண்டால், நீரிழிவை சமாளித்து நீண்ட நாள் வாழலாம்.
முதியவர்களிடம் தற்பொழுது தொற்று நோய்கள் குறைந்து தொற்று சாரா நோய்களே அதிகரித்து கொண்டு வருகிறது. இதில் நீரிழிவு நோயினால் முதியவர்கள் பாதிக்கப்படுவது தான் அதிகமாய் உள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை எடுத்துக் கொண்டால், உலக அளவில் இந்தியா முதல் இடம் விகிக்கிறது என்றால் அது மிகையல்ல. நகர்ப்புறங்களில் மட்டுமில்லாமல் கிராம புறங்களிலும் நீரிழிவு நோயினால் அதிக முதியவர்கள் பாதிப்படுகிறார்கள்.
முதுமையில் நீரிழிவு நோய் வரக் காரணங்கள்
பரம்பரையாக வருதல்
வாழ்க்கை முறையில் மாற்றம்
உணவு முறையில் மாற்றம்
உடற்பயிற்சி இல்லாமை
உடல் எடை அதிகரித்தல்
இன்சுலின் சுரப்பது குறைதல்
இன்சுலினின் செயல் திறன் குறைதல்
அறிகுறிகள்
நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறிகளே அதிகமான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சோர்வு, உடல் இளைத்தல், அதிக பசி போன்றவைகள். ஆனால் வயதான காலத்தில் இந்த அறிகுறிகள் ஏதுமின்றி நீரழிவு நோயினால் ஏற்படும் தொல்லைகளே இந்நோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.
கண் பார்வை மங்குதல், நடந்தால் மார்பில் ஒரு சங்கடம், கை, கால் மறுத்துப் போதல் அல்லது எரிச்சல் ஏற்படுதல், ஆறாத புண், உடல் அரிப்பு எடை குறைதல் இவைகளே முதுமையில் தோன்றும் நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.
பெண்களுக்கு நீர்தாரையில் அரிப்பு ஏற்பட்டால் அது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாக கூட இருக்கலாம். வயதான காலத்தில் நீரிழிவு நோய் எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பதால், வேறு ஏதோ காரணத்திற்காக இரத்த பரிசோதனை செய்யும் போது இந்நோயிருப்பது அனேகம் பேருக்கு தெரிய வரும்.

தொல்லைகள்
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ளாவிட்டால் பல தொல்லைகள் வரலாம். இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்து அதிகமாகும் பொழுது அது இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். இவ்வடைப்பு எந்த உறுப்புகளில் ஏற்படுகிறதோ அந்த உறுப்பு பாதிக்கப்படுகிறது.
மாரடைப்பு
இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு பெருமளவில் ஏற்படும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு மற்றவர்களைவிட மூன்று மடங்கு வாய்ப்பு அதிகமுண்டு, மாரடைப்பினால் வரும் தொல்லைகளும் அதிகமாகும். உதாரணம்: இதயம் வலிமை இழத்தல், இதயத் துடிப்பில் மாற்றங்கள், திடீரென்று இதயம் செயல் இழத்தல். அதிகம் போருக்கு நெஞ்சில் வலி ஏதும் இன்றி மாரடைப்பு வருவதால், இந்நோயை எளிதில் கண்டுகொள்ள முடிவதில்லை. இவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சையே சிறந்த சிகிச்சை முறையாக இருக்கும்.
பக்கவாதம்
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 2-4 மடங்கு அதிகமுண்டு. இவர்களுக்கு உயர் இரத்தமும் கூட இருந்தால் பக்கவாதம் வர வாய்ப்பு இன்னமும் அதிகரிக்கும். ஆகையால் நீரிழிவு நோயையும், உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் எப்பவும் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
சிறுநீரகம் பாதிப்பு
நாள்பட்டு இருக்கும் நீரிழிவு நோய் சிறுநீரகத்தை தாக்கும் பொழுது சிறுநீரகம் செயல் இழக்க நேரிடும். இந்நோய் ஆரம்பத்தில் எவ்வித தொல்லையும் இல்லாமல் இருக்கும். சிறுநீர் பரிசோதனையில் புரதம் (Albuminuria) வெளியாவது கண்டுபிடிக்கப்படும். சுமார் 5-15 ஆண்டுகள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் இரத்த அழுத்தமும் ஏற்பட வாய்ப்புண்டு. முகம் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படும். நடந்தால் மூச்சு இரைக்கும், சிறுநீரில் புரதச்சத்து அதிகம் வெளியாவது, நீர் பரிசோதனையில் தெரியும். சிறுநீரகம் பாதிப்படையும் பொழுது இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அதற்கும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவில் புரதச் சத்து கட்டுப்பாடு மிகவும் அவசியம். இறுதியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறையும் தேவைப்படலாம்.

விழித்திரை பாதிப்பு
கண்ணுக்குள் உள்ள விழித்திரை பாதிக்கப்படும் போது "நீரிழிவு ரேட்டினோபதி” என்ற தொல்லை ஏற்படும். கண் பார்வை இழத்தலுக்கு இந்நோய் 20% காரணமாக இருக்கும். இந்நோய் ஆரம்ப நிலையில் எத்தொல்லையும் இல்லாமல் மறைந்தே இருக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரேட்டினோபதியோடு, குலுக்கோமா, கண் புரை போன்றவைகளும் பார்வை இழத்தலுக்கு காரணங்களாகும். பல வருடங்களாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லாதவர்களுக்கும் ரேட்டினோபதி வர வாய்ப்பு அதிகமுண்டு. சுற்றுபுற சூழ்நிலையும், மரபு நோயும் ரேட்டினோபதி வருவதற்கு மேலும் சில காரணங்கள் ஆகும். கண் விழித்திரை பாதிக்கப்பட்டு விட்டால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து இருந்தாலும் விழித்திரை பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்க முடியாது.
நரம்பு பாதிப்பு
நீரிழிவு நோய் உள்ளவர்களில் அதிகமானவர்களுக்கு மிகத் தொல்லை தரும் நோய் நரம்பு பாதிப்பு ஆகும். இது நரம்புகளை பாதிப்பதினால் கை கால்களில் மரத்த உணர்ச்சி மற்றும் வலி தோன்றும். சில நேரங்களில் தொடு உணர்வு குறையும். ஆகையால் இவர்களின் பாதங்களில் அடிப்பட்டாலோ, காயம் ஏற்பட்டாலோ மற்றும் புண்கள் ஏற்பட்டாலோ வலி ஏதும் இருக்காது. சில நேரங்களில் கால்களில் பாதணிகள் அவர்களுக்கு தெரியாமலேயே நழுவி விடும். பாதங்களில் உணர்ச்சி குறைந்ததால் நடையும் தள்ளாடும். உடலில் வேர்வை அதிகரிக்கும். தோல் வறட்சி ஏற்படும். ஆண்களுக்கு விறைப்பு தன்மையும் குறையும். உணவு உட்கொள்ளும்போது உணவு அடைப்பது போல தொல்லை ஏற்படலாம். மலச்சிக்கல் அல்லது மலம் அடிக்கடி கழித்தல் போன்ற தொல்லைகள் உண்டாகும்.

கீழே விழுதல், எலும்பு முறிவு
அடிக்கடி கீழே விழுதல் மற்றும் எலும்பு முறிவு (முக்கியமாக இடுப்பு) ஏற்பட அதிகம் வாய்ப்புண்டு.
பாதங்கள் பாதிப்பு
கால்களுக்கு இரத்த ஓட்டம் குறைவதாலும், தொடு உணர்ச்சி குறைவதாலும் மற்றும் நோய் தொற்றுனாலும் கால்களில் புண் தோன்றலாம். சிலருக்கு கால் அழுகும் நிலை ஏற்பட்டு காலை எடுக்கும் நிலை கூட ஏற்படலாம். நீரிழிவு நோய் உள்ளவர்கள் அடிக்கடி மருத்துவமனை செல்லுவதற்கும் மற்றும் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெறுவதற்கும் இத்தொல்லைதான் முக்கிய காரணமாகும்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் சில பிரச்சனைகள்
மறதி நோய் : நீரிழிவு நோயாளிக்கும், மறதி நோயிக்கும் நேரிடையான தொடர்பு இல்லை. எனினும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட்டால் அதனால் மறதி நோய்யும் ஏற்படலாம் (Vascular dementia). • அன்றாட தேவைகளை செய்து கொள்வதில் சிரமம்: உதாரணம்: குளிப்பது, உடை உடுத்துவது, உண்பது, வெளியே நடப்பது. கால்களில் நரம்பு பாதிப்பு, இரத்த ஓட்டம் குறைவு, மாரடைப்பு, கண்பார்வை குறைதல் போன்றவைகளே இதற்கு (60%) முக்கிய காரணங்களாகும்.
பரிசோதனைகள்
இரவு உணவுக்குப் பின் எதுவும் உட்கொள்ளாமல் இருந்து, மறுநாள் காலையில் எடுக்கும் சர்க்கரையின் அளவு (fasting blood sugar) 126 mg மேல் இருந்தாலோ அல்லது உணவுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து சர்க்கரையின் அளவு 200 mg மேல் இருந்தாலோ ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது உறுதி. ஆனால், உணவு உட்கொள்ளாமல் இருக்கும்போது சர்க்கரையின் அளவு 100 125 mg அல்லது உணவுக்குப்பின் எடுக்கும் அளவு 140 - 199 mg அளவுக்குள் இருந்தால் அது நீரிழிவு நோய் வருவதற்கு முந்தைய கட்டம்(Prediabetes) என்று கூறுவர். இதை உறுதி செய்ய உணவு உட்கொள்ளாமல் இருக்கும் பொழுது ஒரு இரத்தப் பரிசோதனை, பின்பு 75 Gm குளுக்கோஸ் வாய்வழியாக கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்து மற்றொறு இரத்தப் பரிசோதனை செய்வதின் மூலம் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளதா? இல்லையா? என்பதை உறுதியாகக் கண்டறிய முடியும் (Source: American Diabetic Association).

முதுமையில் உணவு உண்டபின்பு (2 மணி நேரம் கழித்து) எடுக்கும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகவும் நம்பகத்தன்மையானது.
சிறுநீரகத்தில் ஏற்படும் ஒரு சில மாற்றங்களினால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிமாக இருந்தால் கூட, சிறுநீரில் சர்க்கரையின் அளவு சரியாக தெரியாது. ஆகவே நிரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பதை சிறுநீர் பரிசோதனை மூலம் உறுதியாக சொல்ல முடியாது.
ரத்தத்தில் உள்ள HbAlc பரிசோதனை மூலம் கடந்த மூன்று மாதங்களில் ஒருவரின் சர்க்கரையின் அளவு எந்த நிலையில் உள்ளது என்பதைக் கண்டறிய முடியும்.
இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்து (lipid profile) சிறுநீரகங்களின் செயல்பற்றி அறிய இரத்தத்தில் உள்ள உப்பின் அளவு (blood urea, creatinine) சிறுநீரிலுள்ள உப்பின் அளவையும் (urine albumine) பரிசோதனை செய்ய வேண்டும்.
இதய நோய், மாரடைப்பு பற்றி அறிய இதய மின் அலைச் சுருள்படம் (ECG) பயன்படும்.
காசநோய்பற்றி அறியவும், இதயம் வீங்கிருப்பதை அறியவும், மார்பு படம் (X-ray chest) தேவைப்படும்.
இரத்த அழுத்த (blood pressure) நிலையையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயால் உடல் உறுப்புகள் எல்லாமே பாதிக்கப்படும். பாதிக்கப்படாத உறுப்புகளே இல்லை என்று கூட சொல்லலாம். நீரிழிவு இந்நோய் ஏற்பட்டால் எல்லா உறுப்புகளையும் பாதுகாப்பது மிகவும் அவசியம். அதற்காக மேற் குறிப்பிட்ட பரிசோதனைகளைச் செய்ய வேண்டும்.
நீரிழிவு நோயும் முதுமையும்
நீரிழிவு நோயினால் உண்டாகும் தொல்லைகளோடு, முதுமையும் சேர்ந்து பல தொல்லைகளை ஏற்படுத்தும். திடீரென்று மனக்குழப்பம் அடைதல், மனச்சோர்வடைதல், சிறுநீர் கசிவு ஏற்படல், கீழே விழுதல் மற்றும் மயக்கமடைதல் போன்றவைகள். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு அடிக்கடி ஏற்படும். ஆகையால் முதியவர்களுக்கு நீரிழிவு நோய்க்கு மட்டிலும் சிகிச்சை அளித்தால் போதாது. அத்தோடு மேலே குறிப்பிட்டுள்ள தொல்லைகளுக்கும் சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.