Published:Updated:

கண் நோய்கள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

கண்புரை நோய் உள்ளவர்க்குத் தொடக்கக் காலத்தில் மூக்குக் கண்ணாடி வாயிலாகப் பார்வையை ஓரளவு சரிசெய்யலாம். ஆனால், அது 60 முதல் 70 விழுக்காட்டுக்குமேல் வளர்ந்தால் அறுவை சிகிச்சை வாயிலாக அதனை நீக்குவதைவிட வேறு வழியில்லை.

கண் நோய்கள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

கண்புரை நோய் உள்ளவர்க்குத் தொடக்கக் காலத்தில் மூக்குக் கண்ணாடி வாயிலாகப் பார்வையை ஓரளவு சரிசெய்யலாம். ஆனால், அது 60 முதல் 70 விழுக்காட்டுக்குமேல் வளர்ந்தால் அறுவை சிகிச்சை வாயிலாக அதனை நீக்குவதைவிட வேறு வழியில்லை.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கண் புரை நோய்

இந்தியா போன்ற வெப்ப தட்ப நிலைமிகுதியாக உள்ள நாடுகளில் 50 முதல் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கண்புரை நோய் வர வாய்ப்பு மிகுதி. ஒரு பொருளினைப் பார்க்கும் போது ஒளிக்கதிர்கள் கண்ணிலுள்ள பளிங்கு போன்ற கண்ணாடிவில்லை (Lens) வழியாகச் சென்று விழித் திரையில் (Retina) பதியும். கண்ணாடி வில்லை ஒரு துவரம் பருப்பு அளவே இருக்கும். இது கண்ணாடி போல் மிகவும் துாய்மையாக இருந்தால் தான் ஒளிக்கதிர் அதன் வழியாக ஊடுருவிச் செல்லும். வயது ஆகஆகக் கண்ணாடி போலிருக்கும் இவ்வில்லையில் வெள்ளை படர்ந்து, ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் செல்வதைத் தடுத்துவிடும். அதனால், கண் பார்வை மங்கும். துாரத்தில் இருக்கும் பொருள்கள் சரியாகத் தெரியாது. நீரிழிவு நோய் உள்ளவர்க்குக் கண்புரை நோய் 40, 50 வயதிலேயே வர வாய்ப்பு உண்டு.

பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

சிகிச்சை

கண்புரை நோய் உள்ளவர்க்குத் தொடக்கக் காலத்தில் மூக்குக் கண்ணாடி வாயிலாகப் பார்வையை ஓரளவு சரிசெய்யலாம். ஆனால், அது 60 முதல் 70 விழுக்காட்டுக்குமேல் வளர்ந்தால் அறுவை சிகிச்சை வாயிலாக அதனை நீக்குவதைவிட வேறு வழியில்லை. புரை நோயினை அறுவை சிகிச்சை செய்ய வயது ஒரு வரம்பு இல்லை. மருந்தினால் குணப்படுத்த முடியாது; அறுவைச் சிகிச்சையால் தான் முடியும். அறுவைச் சிகிச்சை முறை மிகவும் எளிதானது. கண்கள் மரத்துப் போக ஊசி போட்டு (Local anaesthesia) அறுவைச் சிகிச்சை செய்வதால் எத்துன்பமும் நேர்வதில்லை. அறுவைச் சிகிச்சையால் புரையினை நீக்கியபின் மூக்குக் கண்ணாடி அணிந்தாலும். கண்களில் பார்வைக் கண்ணாடியைப் (Contact lens) பொருத்திக் கொண்டாலும் நல்ல பார்வை கிடைக்கு. அண்மைக்காலமாக அறுவைச் சிகிச்சை செய்யும் பொழுதே கண்ணினுள் கண்ணாடி வில்லையை (Intraocular lens) பொறுத்தும் நிலை பரவலாக நடந்து வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குளோக்கோமா

கண்ணில் அழுத்தம் மிகுதியாவதால் இந்நோய் ஏற்படுகிறது. இது எல்லா வயதினரையும் பாதிக்கலாம். முதியோர்க்கு இந்நோய் வர வாய்ப்புகள் மிகுதி. கண்ணில் மிக்க வலி பார்வை மங்குதல் போன்றவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும். இந்நோய்க்கு உரிய நேரத்தில் தக்க சிகிச்சை செய்யாவிட்டால் கண்பார்வையை இழக்க நேரிடும். தொடர்ந்து கண்ணுக்குள் சொட்டு மருந்து விட்டாலே நல்ல குணம் கிடைக்கும். சிலருக்கு மட்டிலும் அறுவை சிகிச்சை தேவைப்படும். ஆகையால், முதுமையில் ஆண்டிற்கு ஒருமுறையாவது கண் பரிசோதனை செய்து கொள்ளுதல் நல்லது.

விழித்திரை பாதிப்பு

முதுமையில் விழித்திரை இரண்டு முக்கிய நோய்களால் பாதிக்கப்படுகின்றன. நீரிழிவு நோய், உயர்இரத்த அழுத்தம்.

Representational Image
Representational Image

நீரிழிவு நோய்

நாள்பட்ட நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும், நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லாதவர்களுக்கும் கண் விழித்திரை பாதிப்பு ஏற்படும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது விழித்திரைக்குச் செல்லும் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுகிறது. விழித்திரை பாதிப்பால் கண் பார்வை பாதிக்கப்படும்.

ஆரம்பத்தில் தொல்லைகள் ஏதுமின்றி மறைந்திருக்கும், கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்வை மங்கும், சிலருக்கு திடீரென்று பார்வை குறைபாடு ஏற்படலாம். கண் பரிசோதனை மூலம் இத்தொல்லையை எளிதில் கண்டறியலாம். விழித்திரை பாதிப்பினால் கண் பார்வை முழுமையாக குறையலாம், கண் விழித்திரை இடம் பெயரலாம் (Retinal detachment) மற்றும் குளோக்கோமா என்ற கண்களுக்குள் ஏற்படும் அழுத்தமும் அதிகரிக்கலாம்.

லேசர் சிகிச்சையினால் இரத்த நாளங்கள் மூலம் வரும் இரத்தச் கசிவை நிறுத்திவிட முடியும். இதற்காக மருத்துவமனைக்கு அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். இச்சிகிச்சை முறையினால் கண் பார்வை குறைவதை அதிகமாகமல் தடுக்கமுடியும். ஆனால் இழந்த கண் பார்வையை திரும்பப் பெற முடியாது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண் சார்ந்த எவ்வித தொல்லைகள் இல்லாமல் இருப்பினும் கண் டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். சர்க்கரையின் அளவு, உயர் இரத்தத்தின் அளவு மற்றும் கொழுப்பு சத்துகளின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருந்தால் கண் விழித்திரை பாதிப்பைத் தவிர்க்க முடியும்.

உயர்இரத்த அழுத்தம்

உயர்இரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லாமல் தொடர்ந்து அதிகமாக இருப்பின் இது விழித்திரையை பாதிக்கும். கண் பார்வை குறைய நேரிடும். இத்தொல்லையை கண் மருத்துவரால் எளிதில் கண்டு லேசர் சிகிச்சையினால் தக்க சிகிச்சையளிக்க முடியும். இத்தொல்லை வராமல் தவிர்க்க உயர்இரத்த அழுத்தத்தை சம நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கண் தானம்

நம் நாட்டில் கண் பார்வை இழந்தவர் பல இலட்சக்கணக்கினராக இருப்பினும், சிகிச்சை மூலம் (Curable blindness) குணப்படுத்தக் கூடியவர்களாக இருப்பவர்கள் சில இலட்சம் பேர்களே. கண்புரை நோயினால் பார்வை இழந்தவர், அறுவைச் சிகிச்சை மூலம் பார்வை பெறுகின்றனர். அதே போலக் கருவிழியில் பாதிப்பு உள்ளவரும் அறுவைச் சிகிச்சை மூலம் கண் பார்வை பெறுகின்றனர். இவ்வறுவைச் சிகிச்சைக்கு இறந்தவர் கண்கள் தேவைப்படுகின்றன. பழுதடைந்த, வெண்ணிறமாயுள்ள கருவிழியை அகற்றி பளிங்கு போலுள்ள மாற்றுக் கருவிழியைப் பொருத்த வேண்டும். ஒருவர் இறந்த பின் 6.00 மணி நேரத்திற்குள் கண்களை எடுத்தால் தான் அவற்றைப் பயன்படுத்த முடியும். கண் தானம் செய்ய விரும்புபவர் இறந்தபின் அவர்கள் கண்களின்மேல் நீரினைத் தேங்க வைக்க வேண்டும். இன்றேல் நீரில் நனைத்த பஞ்சை வைக்கவேண்டும்.

கண் மருத்துவர் வந்து கண்களை எடுக்கும் வரை விழித்திரை உலராமல் இருக்க இம்முறை உதவும். கண் மருத்துவர் கண்களை அகற்றிவிட்டு அதற்குப் பதில் கண்போன்ற பஞ்சு உருண்டையை உள்ளே வைத்து இமைகளைத் தைத்து விடுவார். அதனால் விழிகள் அகற்றப்பட்டிருப்பதை எவராலும் எளிதில் கண்டுகொள்ள முடியாது. கண்களை எடுக்க மருத்துவர்க்கு 10, 15 மணித்துளிகள் தான் தேவை. இறந்தவர் கண்களால் பார்வை பெற்றவர் விபரம், கண்தானம் அளித்த உறவினர்க்கு உடனே தெரிவிக்கப்படும். ஒருவர் கண்தானத்தால் இருவர் கண் பார்வை பெறுகின்றனர். ஒருவர் இறந்த பின்பும் அவரால் பிறர் கண்பெற்று வாழ்கிறார் என்றால் அது போற்றத்தக்க செயலல்லவா?

Representational Image
Representational Image

பார்வை பாதுகாப்பிற்கு

ஆண்டிற்கு ஒருமுறையாவது கண்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

தேவையானால் கண்ணாடி அணியத் தயங்க வேண்டாம்.

கண்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரை அணுக வேண்டும்; சுயமருத்துவம் செய்து கொள்தல் தவறு; அது பெருந்தொல்லையை விளைவிக்கும்.

குறைந்த வெளிச்சத்தில் வேலை செய்வதோ, படிப்பதோ, கண்களுக்குக் கெடுதியை உண்டாக்கும். வளமான பார்வைக்குப் போதிய வெளிச்சம் தேவை. -

வீட்டில் கண்மட்டத்தில் இருக்கும் கூரிய பொருட்களை அகற்றிவிட வேண்டும். -

திரவங்கள், திராவகங்கள் உள்ள புட்டிகளைத் திறக்கும் போது முகத்தை மறுபுறம் திருப்பிக் கொள்ள வேண்டும்.

கண் மருந்துகளை மருத்துவர் அறிவுரை பெற்றே பயன்படுத்த வேண்டும்.

இரவானாலும், பகலானாலும், வாகனங்கள் ஒட்டும் போது, கண்களில்

துாசு விழாதவாறு பாதுகாப்புக் கண்ணாடிகளை அணிய வேண்டும்.

அழுக்கான கைகளால் கண்களைக் கசக்குதல் கூடாது.

சூரிய வெளிச்சத்தை நேரிடையாகப் பார்த்தல் கூடாது.