Published:Updated:

இங்க் பாட்டில் மண்ணெய் விளக்கில் படிச்சோம்! - 70ஸ் கிட் தொடக்கக் கல்வி பகிர்வு

திருக்குளத்தின் அந்தக் கரையில்தான் எங்கள் வீடு. அங்கிருந்து பார்த்தாலே பள்ளி திறந்திருக்கிறதா என்பது தெரிந்துவிடும். ஆனால் எனக்கு மட்டும் அப்படிப் பார்க்கும் அவசியமே வந்ததில்லை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

‘ ப’ வைத் தலைகீழாகப் போட்டது போல் இருக்கும் எங்கள் ஊர் தொடக்கப் பள்ளிக் கூடம். அந்தப் பள்ளிக் கூடத்தில் ஐந்தாவது வரை படித்த அந்த அடிப்படைக் கல்வியே பின்னாளில் ஒரு சிறப்பான துறையின் இயக்குனர் பொறுப்பை ஈட்டித் தரப் போகிறதென்று அப்போது தெரியாது! எங்களூர் சிவகுருநாதன் என்ற பெரியவர் ஆசிரியராகி, தன் வீட்டு நிலத்தில் தங்கள் செலவிலேயே அந்தப் பள்ளியைக் கட்டி ஊராருக்குப் பணியாற்றி உதவியதாகவும், பின்னர் யூனியனுக்குக் கொடுத்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். பல கிராமங்களிலும் அக்காலத்தில் இவரைப் போன்ற நல்ல மனம் படைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். அவரைப்போலவே கந்தசாமி என்பவர்,தன் வீட்டு நீண்ட திண்ணையையே நூலகமாக்கி, இளைஞர்கள் படிக்க வழி வகுத்தார்.

எல்லா பேப்பர், வார, மாத இதழ்களையும் வாங்கித் திண்ணையில் போட்டு விடுவார். யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் சென்று படிக்கலாம். நாங்களெல்லாம் சின்ன வயதிலேயே விகடன், கல்கி, குமுதம் போன்ற இதழுக்கும், தினசரிகளுக்கும் அறிமுகமானது அவர் கருணையினால்தான்!

Representational Image
Representational Image

முதல் இரண்டு வகுப்புகளில் படித்த காலத்தில் நடந்தவை இங்கொன்றும் அங்கொன்றுமாய் ஞாபகம் இருந்தாலும், மூன்றாவது முதல் ஐந்தாவது வரை படித்த அந்த நாட்கள் மிகப் பசுமையாகவே மனதில் ஊற, அதனை அசை போடுவதிலேயே அலாதி மகிழ்ச்சி!

’மை விகடன்’ மூலம் உங்களனைவருடனும் அதனைப் பகிர்ந்து கொள்வதில் இனிதான ஆனந்தம். மை விகடனுக்கு நன்றி சொல்லியபடி, உங்களை எங்கள் பால்ய காலப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறேன்.

பார்த்து வாருங்கள்..

எங்களூரின் முக்கியச் சாலையில் திருக்குளத்தின் மேற்குக் கரையில்தான் எங்கள் பள்ளி. ஐந்தாவது வகுப்பு வரை உண்டு. மூன்று வாத்தியார்கள். பெரியசாமி வாத்தியாரும், நாயுடு வாத்தியாரும் உள்ளூர்க்காரர்கள். ஹெட் மாஸ்டர் மட்டும் வெளியூர்க்காரர். சுமார் 60,70 மாணவ,மாணவியர் இருப்பர்.

ஊருக்குள் நுழைந்து, வலது புறச் சாலை சிவன் கோயிலுக்குப் போக, அதைத் தாண்டினால் பள்ளி வந்துவிடும். எதிரேயுள்ள திருக்குளத்தின் அந்தக் கரையில்தான் எங்கள் வீடு. அங்கிருந்து பார்த்தாலே பள்ளி திறந்திருக்கிறதா என்பது தெரிந்துவிடும். ஆனால் எனக்கு மட்டும் அப்படிப் பார்க்கும் அவசியமே வந்ததில்லை! மூன்றாம் வகுப்புக்குப் போன பிறகு, காலையில் பள்ளி திறக்கும் பணியே என்னுடையதாயிற்று.

அதற்குக் காரணம், அப்பொழுது ஹெட் மாஸ்டராக இருந்த வெங்கட் ராமன் சார் தான்!

Representational Image
Representational Image

சிலவற்றுக்குக் கொடுப்பினை வேண்டுமென்பார்கள்.எனக்கு அந்தக் கொடுப்பினையை இறைவன் வஞ்சகமில்லாமல் கொடுத்ததாகவே கருதுகிறேன். ஏனெனில் அந்த வயதில் ஆசிரியரிடம் நண்பனைப்போல் பழகும் பாக்கியம் எத்தனை பேருக்கு வாய்க்கும் என்று எனக்குத் தெரியவில்லை.ஆனால் எனக்கு வாய்த்தது.

அவர் மாயவரத்திலிருந்து எங்களூருக்கு ஹெட் மாஸ்டராக,தனியாக வந்தார். அப்போது எங்களூரை லெட்ரீனெல்லாம் எட்டிக் கூடப் பார்த்ததில்லை! 10 கி.மீ.,க்கு அப்பாலுள்ள திருத்துறைப் பூண்டியோட அது நின்று விட்டது. காலை, மாலை ஆற்றங்கரை தேடித்தான் செல்ல வேண்டும்.அவர் டவுனிலிருந்து வந்தவராகையால், காலை, மாலை ஊரை விட்டு 2 கி.மீ., தள்ளியுள்ள வடிவாய்க்கால் வரை இரண்டு பேரும் செல்வோம். காலையில் எழுந்ததும் பெரிய மந்திரி வீட்டில் ஒரு சேர் பால் வாங்கிக்கொண்டு நான் அவர் தங்கியிருந்த தருமகோயில் செல்வேன். இருவருக்கும் காபி தயாரித்து விடுவார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காபியைக் குடித்ததும் வெளியில் செல்வோம். காலையில் சுடுகாட்டுக் கலுங்கில் எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்திருக்கிறார். இருவரும் குளித்துவிட்டு வந்ததும்,அவர் பள்ளிச் சாவியை என்னிடம் கொடுத்து விடுவார். அவர், தானே சமைத்துச் சாப்பிடுவார்.

எங்களூரில் டீக்கடைகளைத் தவிர சாப்பாட்டுக் கடைகள் எதுவும் அப்பொழுது இல்லை. நான் சீக்கிரமாகச் சாப்பிட்டு விட்டுச் சென்று பள்ளியைத் திறந்து விடுவேன். மாலையில் பள்ளியிலேயே படிக்க அனுமதி தந்தார். இங்க் பாட்டில் மூடியில் ஓட்டை போட்டு அதில் பழைய துணியைத் திரித்துத் திரியாகப்போட்டு, பாட்டிலில் மண்ணெண்ணை ஊற்றி,அதனையே விளக்காகப் பயன்படுத்துவோம்.

Representational Image
Representational Image

பாடத்தில் வரும் சந்தேகங்களைஉடனுக்குடன் தீர்த்து வைத்து விடுவார். அந்தக் காலத்தில் ஆசிரியருக்குச் சிறு உதவி செய்யக்கூட நாங்கள், நீ… நான்… என்று போட்டி போடுவோம்.

உற்றுழி உதவியும்

உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது

கற்றல் நன்றே!

என்பதல்லவா பெரியோர் வாக்கு. பணிவும் பண்புமுள்ள மாணாக்கரிடம் ஆசிரியரின் அன்பு அதிகமாகும். ஏனெனில் அவர்களும் மனிதர்களே! கடமைக்காகக் கற்பித்தலை விடக் கனிவான மனத்துடன் கற்பிக்கும்போது கற்பவரும், கற்பிப்பவரும் உச்சகட்ட பலனை அடைவர்.

அதேசமயம், வக்கிர புத்தி கொண்ட ஆசிரியர்களை எண்ணும்போது கோபமே கொப்பளிக்கிறது. அப்பொழுதெல்லாம் பள்ளிகளுக்குப் பால் பவுடர் சப்ளை உண்டு. அதற்கென உரிய பதிவேட்டில் வரவு-செலவினை எழுத எனக்குக் கற்றுக் கொடுத்தார். அந்தப் பயிற்சி பின்னாளில் எனக்கு ரொம்பவும் உதவிகரமாக இருந்தது. பள்ளிக்கு முன்னதாக இருந்த சிறிய இடத்தில் சிறிதாகத் தோட்டம் போடுவோம். திருக்குளம் எதிரேயே இருந்ததால் தண்ணீருக்குப் பஞ்சமில்லை. நடராஜன், வீரையன், பால கிருஷ்ணன், பிச்சையன், ஜெயராமன் என்ற ஆண்களும், கஸ்தூரி, ராஜலட்சுமி, அமராவதி என்று பெண்களுமாய், வகுப்பு கலகலப்பாக இருக்கும்.

அப்பொழுதெல்லாம் சனிக்கிழமை அரை நேரப் பள்ளி உண்டு. காலையில் மட்டும் வகுப்புகள் நடைபெறும். அதிலும் ஒன்பதரை டூ பதினொன்றரை வரை மட்டுமே வகுப்பு. அதன் பின்னர் இரண்டு வகுப்பறை தட்டிகளை எடுத்து விட்டு ஒன்றாக்கி, அதனை ஆடிட்டோரியம் ஆக்கி விடுவோம். அதில்தான் ‘சங்கம்’ நடைபெறும். அந்நிகழ்ச்சிக் கென்று மாணவரில் ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம். அன்றைய சங்கம் அவர் தலைமையில்தான் நடைபெறும்.

Representational Image
Representational Image

முந்தைய வாரமே கொடுத்த தலைப்பில்,மூன்றாவது வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிப்பவர்கள், வகுப்புக்குக் குறைந்தது இருவராவது பேச வேண்டும். கொடுக்கப்பட்ட தலைப்பில் கருத்துக்களை எழுதி மனப்பாடம் செய்து, பேச வேண்டும். மேடை பயத்தைப் போக்கவும், பாடங்களுக்கு அப்பால் நாட்டு நடப்பை அறிந்து கொள்ளவும் சங்க நிகழ்ச்சி பயிற்சிக் களமாய் விளங்கியது.

உயர்நிலைப் பள்ளிகளில் அக்காலத்தில் ஸ்கூல் பீப்பிள் லீடர்(School Pupil Leader) என்றிருந்ததைப் போல், எங்கள் பள்ளியில் முதல் மந்திரி, சுகாதார மந்திரி, தோட்ட மந்திரி என்ற ‘செட்டப்’ இருந்தது. சங்கம் நடத்தி முடிந்ததும் ‘கேள்வி நேரம்’ ஆரம்பிக்கும். சட்ட சபை நிகழ்ச்சிக்கு ஒத்ததாக அது இருக்கும். கேள்வி நேரத்தில் முதல் மந்திரியும் மற்ற மந்திரிகளும் கட்டாயம் இருந்தாக வேண்டும். பள்ளி மாணவ, மாணவியர் அனைவருக்கும் கேள்வி கேட்கும் உரிமை உண்டு. ’குறிப்பிட்ட நாளில் ஐந்தாம் வகுப்பில் குப்பை கிடந்ததை ஏன் சுகாதார மந்திரி சுத்தப் படுத்தவில்லை?’ என்பது போன்ற கேள்விகள் வரும். அதற்குச் சுகாதார மந்திரி, தனக்குத் தெரியவில்லை என்றோ, தான் அன்றைக்குப் பள்ளிக்கே வரவில்லையென்றோ கூறிச் சமாளிப்பார்.

உண்மையில் அவர் பள்ளிக்கு வந்திருக்காவிட்டால், கேள்வி முதல் மந்திரிக்குப் போகும். ’சுகாதார மந்திரி வராத அன்று, அந்தக் குப்பையை அகற்ற முதல் மந்திரி ஏன் முன்வரவில்லை?’ என்று கேட்பார்கள். ’அவர் பள்ளிக்கு வராதது தனக்குத் தாமதமாகவே தெரியுமென்றும், இனி இது போலத் தவறுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதாகவும் முதல் மந்திரி கூறுவார்.

’தோட்டத்தில் செடிகள் காய்கின்றனவே! தோட்ட மந்திரி தூங்கிக் கொண்டிருக்கிறாரா?’ போன்ற வினாக்களும், சற்று அழுத்தமாகவே வரும். அவையெல்லாம் மாணவர்களுக்கு அரசியல் அறிவையும், நிர்வாகத் திறமையையும் தூண்டுவதாக அமைந்திருந்தன! தொடக்க நிலையிலேயே வாழ்க்கைப் பயிற்சி பெற வழி வகுத்தன.

Representational Image
Representational Image

பாடங்களில் தேர்வு முடிந்தபிறகு, பாட்டுக்கெனவும் தேர்வு உண்டு. ஒவ்வொருவரும் தனக்குப் பரிச்சயமான திரைப்படப் பாடலையோ, பாரதியார், பாரதிதாசன் பாடல்களையோ பாடலாம். ஆனால் பார்க்காமல் பாட வேண்டும்.

இந்த நாடகம் அந்த மேடையில்

எத்தனை நாளம்மா?இன்னும்

எத்தனை நாளம்மா?

கட்டிய தாலியைக்

கண்ணுக்கு மறைப்பது

எத்தனை நாளம்மா?அதில்

மற்றொரு தாலிக்கு

மாப்பிள்ளை பார்ப்பது

எத்தனை நாளம்மா?இன்னும்

எத்தனை நாளம்மா?

என்ற சினிமாப்பாடலை, நான் பார்த்தே பாட, அதனைப் பார்த்த பெரியசாமி வாத்தியார், ‘பார்த்துப் பாடினதால ஒனக்கு மார்க் கிடையாது!’ என்றது இப்பொழுதும் கண்ணுக்குள்ளே!

எல்லாப் பள்ளிகளிலுமே நான் மேற்சொன்ன பாடமுறை இருந்ததா அல்லது எங்கள் பள்ளியில் அம்முறை பின்பற்றப்பட்டதா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.

அப்பொழுதெல்லாம் வாழ்வின் பெரும்பகுதி பள்ளிகளையும், ஆசிரியர்களையும் சுற்றியே கழிந்தது!

நல்ல ஆசிரியர்களால் நிச்சயமாக நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்!’

‘சமுத்திரத்தை நீந்திக் கடக்கமுடியாது?’ என்று ஒருவர் ஒரு மாணவனிடம் கூற, அவனோ சற்றும் யோசிக்காமல் ‘எங்க வாத்தியாரால கூடவா முடியாது?’ என்று எதிர்க்கேள்வி கேட்டானாம்!

எங்கள் காலக் கல்வி முறை அப்படித்தான் இருந்தது. அதில் எங்களுக்கெல்லாம் முழுத் திருப்தியே!

-ரெ.ஆத்மநாதன்,

மெக்லீன்,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு