Published:Updated:

மனதுக்கு இதமளித்த டென்ட் கொட்டாய் நாட்கள்! | My Vikatan

Representational Image

கிரசென்ட் எனும் டென்ட் கொட்டகையின் மேலே உள்ள ஒலிப் பெருக்கி குழாய்கள் வழியே உள்ளே ஓடும் திரைப்பட வசனங்களை பக்கத்தில் இருக்கும் ஊரிலெல்லாம் கேட்க முடியும்.

மனதுக்கு இதமளித்த டென்ட் கொட்டாய் நாட்கள்! | My Vikatan

கிரசென்ட் எனும் டென்ட் கொட்டகையின் மேலே உள்ள ஒலிப் பெருக்கி குழாய்கள் வழியே உள்ளே ஓடும் திரைப்பட வசனங்களை பக்கத்தில் இருக்கும் ஊரிலெல்லாம் கேட்க முடியும்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

தேனி நாகலாபுரத்தில் அப்போது 'கிரசன்ட்' என்ற திரையரங்கம் இருந்தது. நீள... நீளமான மரத்தாலான பெஞ்ச் வரிசைகள் பாதி அளவிற்கு. மீதமுள்ள முன் பகுதியில் நிறைய மணல், மேலே தகரத்தாலான கூரை. திரையரங்கின் நடுவே தடையில்லாத பனை மரங்கள் . டென்ட் கொட்டகையின் முன்பாக மட்டும் சுவர்கள், பக்கவாட்டு பக்கங்களில் தென்னங் கீற்றால் கட்டப்பட்ட தடுப்புகள்.

மரத்தாலான பெஞ்சில் உட்கார்ந்துகிட்டு படம் பார்க்க ஐந்து ரூபாய், மணல் தரையில் அமர்ந்து படம பார்க்க இரண்டு ரூபாய் ஐம்பது காசு கட்டணமாக வசூலிக்கப்பட்ட காலமது. ஊருக்குள்ள இருக்கும் பெட்டிக் கடையின் பக்கவாட்டு பக்கமாக சினிமா போஸ்டர் ஒட்டப்பட, ஒரு குதிரை வண்டியில் இரண்டு பக்கமாக ஒட்டப்பட்ட சினிமா போஸ்டருடன் , துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து செல்ல, சிறுவனாக இருந்த நாங்கள் அந்த வண்டியின் பின்னால் ஓடி துண்டுப் பிரசுரங்களை வாங்கி வருவதில் அலாதியான ஆனந்தம்.

திருவிளையாடல்
திருவிளையாடல்

திருவிளையாடல், குடியிருந்த கோவில், நல்லதங்காள், பாகப்பிரிவினை, பாதகாணிக்கை, நீதிக்கு தண்டனை, விதி ஆகிய படங்கள் திரையிடப்படும். அப்போது ஊரிலுள்ள கோவில் திருவிழாவாக இருக்கட்டும், வேறு எந்த விதமான விசேஷங்களாக இருந்தாலும் இரவு எட்டு மணிக்கு மேலாக விதி, என் தங்கை கல்யாணி போன்ற படங்களின் ஒலிச் சித்திரங்கள் ஒலி பரப்பப்படும்.

தேக்கம் பட்டி சுந்தர் ராஜனுடைய கிராமிய பாடல்களோடு, பட்டிமன்ற பேச்சுக்களும் போடுவார்கள். அப்படியான பட்டிமன்ற பேச்சின் போது, இதுவரை பேசியவர் மிக நன்றாக பேசினார், நீங்களும் ரசித்தீர்கள், அது எப்படியிருந்தது தெரியுமா? ஒரு ஊருல கரையில்லாத குளத்துல தண்ணி எடுக்க தூர் இல்லாத குடத்தை எடுத்துக்கிட்டு தண்ணிய எடுக்க ஒருவர் போறோப்போ, அங்க வேர் இல்லாத அருகம் புல்லை தலையில்லாத ஒரு மான் மேய்ஞ்சுகிட்டு இருந்ததாம். அதை ஒருத்தர் பார்த்து ஊருக்குள்ள சொல்ல, துப்பாக்கியோடு வந்த ஒரு ஆளு, துப்பாக்கிய கொண்டு மானைச் சுட , துப்பாக்கி குண்டு மான் மேல படாமல், மான் வயித்துல இருந்த குட்டி மேல பட்டு மான் குட்டி செத்துப் போக, குட்டிய தூக்கிட்டு போன ஆளு கறியாக்கிச் சாப்பிட்டுட்டு, மான் குட்டி தோலை கால் இல்லாத பந்தல்ல காயப் போட்டாராம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது ஒரு தலையில்லாத கழுகு வந்து அந்த தோலை தூக்கிட்டு போட அந்த தோலை கால் இல்லாத முடவன் வெரட்டிக்கிட்டு போக, அப்போது குத்துன ஒரு கண்டங்கத்தரி முள்ளு மண்டைக்கு மேலாக எட்டிப்பார்க்க ஆளும் பேருமாக அந்தாளை ஒரு வைத்தியர்கிட்ட தூக்கிட்டு போனாகளாம் . அந்த வைத்தியரும், ஆல வேர், அரச வேர், புங்க வேர், புரச வேர்னு நாலு வேரையுமே வெரலு படாமா புடுங்கி, உரலை கமுத்தி போட்டு உலக்கை படாம இடிச்சு, நாக்கு படாமல் நக்க வேண்டுமென வைத்தியம் சொன்னாராம். ஆகா... அருமையான வைத்தியம் சொன்ன வைத்தியருக்கு ஏதாவது கொடுக்கனும்னு முடிவு செஞ்ச ஆளுக , அடி இல்லாத படி எடுத்து... ஓட்டச் சாக்குல ஒம்பது மூட்ட உளுந்தழந்து ,சக்கரம் இல்லாத வண்டியில பாரமேத்தி, நொண்டி வண்டி பத்த, குருடன் பாதைய காட்ட வண்டி போய்க்கிட்டே இருக்காம். இந்த கதை கேக்குறதுக்கு எப்படி இருக்கு, நல்லா இருக்கா, இதுல ஏதாவது அர்த்தமிருக்கா அப்படித்தான் இருகஂகு அந்த அணியை சேர்ந்தவர் பேசிட்டு போனது. இப்படியான ஒலிச்சித்திரங்களை கேட்ட காலமது.

Representational Image
Representational Image

ஆடு மாடுகள் பகலில் வேகமாக திண்ற புற்களை அசை போட நள்ளிரவு வரை நீளும் ஒலிச் சித்திர ஓசைகளை கேட்டபடியே கதைகளை நினைவசை போடுவார்கள் மக்கள்.

காலை பள்ளிக்கூடம் கிளம்புகையில் புத்தக பையினுள் மதிய உணவுக்காக தட்டினை ஈரம் துடைத்து தட்டினை பையினுள் சொருகி வைத்து, இப்போது போன்று கேஸ் அடுப்பு வசதிகள் இல்லாத காலமது. பள்ளிக்கூடம் முடிந்தவுடன் நேராக வீட்டுக்கு புத்தகப் பையை வீட்டில் வைத்து விட்டு இரவு நேர சமையல் செய்ய தேவையான சீமை கருவேலம் முட்களை கத்தரித்து வைத்து விட்டு, ஆடு, மாடுகள் அடைக்க வேண்டிய இடத்தில் உள்ள சாணத்தை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து முடித்து விட்டுத்தான் மற்ற வேலைகள்.

கிரசென்ட் எனும் டென்ட் கொட்டகையின் மேலே உள்ள ஒலிப் பெருக்கி குழாய்கள் வழியே உள்ளே ஓடும் திரைப்பட வசனங்களை பக்கத்தில் இருக்கும் ஊரிலெல்லாம் கேட்க முடியும். ஒரு நாள் நாங்கள் அனைவரும் நன்கு உறங்கிப் போக இரவில் "பாதகாணிக்கை " படத்திற்கு சென்று வந்ததை பின்னாளில் அம்மா - அப்பா உரையாடலை வைத்து கண்டறிந்த காலமது.

நீதிக்கு தண்டனை, நல்லதங்காள் படங்களை பார்த்த மக்கள் கதை கதையாக கூறி படத்தினை விவரிக்க ஆவலோடு கூட்டமாக அமர்ந்து கேட்பார்கள் கதை கூறுவதை.

நடிகர் மோகன் மைக் மோகன் என கொண்டாடப்பட்ட பட்டு அவருடைய திரைப்பட பாடல்களே திசையெங்கும் ஒலித்த காலம். பக்கத்து வீட்டில் இருந்த ஒரு மாட்டு வண்டியில் எவ்வளவு பேர் உட்கார முடியுமோ அவ்வளவு பேர் அமர்ந்து கலைஞர் கதை வசனத்தில் வந்த நீதிக்கு தண்டனை படத்தை பார்த்து விட்டு வந்து கதை கதையாக கூறிய காலமது. அப்படியான காலத்தில் விதி திரைப்பட ஒலிச்சித்திரம் ஒலிக்க கேட்பேன் நானும். பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி என அனைத்து போட்டிகளிலும் முதல் பரிசு சுரேஷ் என ஆரம்பிக்கும். ஆவலோடு கேட்க துவங்கும் நான் தூங்கிப் போவேன் . அப்படியான சூழலில் ஒரு நாள் அந்த தியேட்டரில் விதி படம் பாடுவதாக போஸ்டர் ஒட்டினர்.

Representational Image
Representational Image

படத்தின் போஸ்டரை கண்டவுடன் அந்த படத்தை நான் பார்க்க வேண்டுமெனவும், அதில் ஆரம்பத்தில் சுரேஷ் என்ற பெயரிலான பையனுக்கு முதல் பரிசு நிறைய கொடுப்பதாக ஒலிச் சித்திரம் கேட்டதெல்லாம் கூறி, அவசியமாக என்னை அழைத்துச் செல்ல வேண்டுமென்று கேட்க ஒரு சில நாட்களில் சரியென அந்த கட்டை மாட்டு வண்டியில் பயணமானோம். டென்ட் கொட்டாயை நெருங்கிய நிலையில் அனைவருக்குமே உற்சாகம் பீறிடும். டிக்கட் கொடுக்கும் முன்பாக டென்ட் கொட்டகையின் மேலே உள்ள ரேடியோவில் "விநாயகனே... வினை தீர்ப்பவனே....!" என்ற பாடல் ஒலிக்க ஆரம்பிக்க மாட்டு வண்டியின் மாடுகளை வேகமாக விரட்டி ஓட்டுவர். டிக்கெட் வாங்க ஒற்றை வரிசையில் செல்ல வேண்டிய நிலை.

சிறுவர்களுக்கு டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை என்ற நிலைப்பாடு அப்போது. டிக்கெட் கவுன்டரை நெருங்கும் போது என்னை அம்மா அவர்களுடைய தோளில் கிடத்தி, ஒரு துண்டினால் போர்த்தி, "அப்படியே தூங்குவதாகவே கண்களை மூடிக் கொள்" என கூறிட அவ்வாறே கண்களை மூடிக் கொண்டு உளங்குவதாக இருக்க, டிக்கெட் கட்டணம் வசூலிப்பவரிடம் "சின்னப் பையன், தூங்கிட்டான் " என்று கூறிட அவர் அடுத்த நொடியே, "அப்படியானால் தூங்கி விட்ட பையனுக்கு டிக்கெட்டுக்கான கட்டணம் வேண்டாம் " என கூறி அனுப்ப டென்ட் கொட்டகைக்குள் வந்து கண் முழித்து விதி படம் பார்த்த பரவசமான காலமது.


- வீ.வைகை சுரேஷ்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.