Published:Updated:

விளம்பரங்கள் அன்றும் இன்றும்! | My Vikatan

Representational Image

அந்தக் காலத்திலிருந்தே எல்லா நிறுவனங்களுமே தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த ஒருசில விளம்பர முறைகளை கையாண்டு தான் வந்திருக்கின்றன. தொழில்நுட்ப புரட்சிக்கு முன்னால் விளம்பரங்கள் பெரும்பாலும் குறைந்த அளவில் செய்யப்பட்டு வந்திருக்கிறது .

விளம்பரங்கள் அன்றும் இன்றும்! | My Vikatan

அந்தக் காலத்திலிருந்தே எல்லா நிறுவனங்களுமே தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த ஒருசில விளம்பர முறைகளை கையாண்டு தான் வந்திருக்கின்றன. தொழில்நுட்ப புரட்சிக்கு முன்னால் விளம்பரங்கள் பெரும்பாலும் குறைந்த அளவில் செய்யப்பட்டு வந்திருக்கிறது .

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

விளம்பரங்கள் மனித வாழ்வோடு இரண்டறக் கலந்தது (அன்றும் இன்றும் என்றும்.)தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கையில் இடையூறாக திடீரென வந்து நமக்கு சலிப்பை ஏற்படுத்தும் சில விளம்பரங்கள்.. சில சமயம் தொலைக்காட்சி நிகழ்ச்சி பெரும் அலுப்பைக் கொடுக்கையில் எதிர்பாராத விதமாக நடுவில் வரும் சில விளம்பரங்கள் நமக்கு நல்ல பொழுதுபோக்காக அமையும். இப்படி நம்மை மகிழ்விக்கும், எரிச்சலிட செய்யும், சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும் தன்மை கொண்டவையே விளம்பரங்கள்.

Representational Image
Representational Image

நல்ல விஷயங்களை பிரபலப்படுத்தும் விளம்பரங்களை ஊக்குவிப்பதில் தவறில்லை. ஆனால் தவறான விளம்பரங்களை ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது. அந்தக் காலத்திலிருந்தே எல்லா நிறுவனங்களுமே தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த ஒருசில விளம்பர முறைகளை கையாண்டு தான் வந்திருக்கின்றன. தொழில்நுட்ப புரட்சிக்கு முன்னால் விளம்பரங்கள் பெரும்பாலும் குறைந்த அளவில் செய்யப்பட்டு வந்திருக்கிறது . 40 வருடங்களுக்கு முன்பெல்லாம் சில பொருட்கள் சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். உதாரணத்திற்கு ஒண்டிப்புலி சர்பத், மாணிக்க விநாயகர் கோலிசோடா இது போன்றவை எல்லாம் எங்கள் ஊரில் நான் பார்த்தவை. (அகலமான சிமெண்ட் தொட்டியில் நீரை நிரப்பி அதில் உள் வைத்திருப்பர்) 40 வருடங்களுக்கு முன்பெல்லாம் பெரும்பாலும் சிறிய சதுர அல்லது செவ்வகமான தகரத்தில் பெயிண்ட் அடித்து அதில் தங்கள் பொருட்களின் பெயர்களை அழகாக எழுதி ஆங்காங்கே தொங்க விட்டிருப்பார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குறிப்பாக பேருந்து நிறுத்தங்களின் அருகில் உள்ள புளிய மரத்திலோ அல்லது மற்ற மரங்களின் மீதோ அந்த தகர விளம்பரங்கள் நான்கு மூலைகளில் ஆணியால் அடித்து வைக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு டி எஸ் பட்டணம் பொடி ,ரவீஸ் ஊறுகாய், காஷ்மீர் பொஃக்கே நியூட்ரமுல், அமுல் , அமிர்தாஞ்சன்... இவையெல்லாம் நான் அப்படி பார்த்தது தான். எங்கள் ஊர் பேருந்து நிலையம் அருகில் இரண்டு மூன்று பெட்டி கடைகள் இருக்கும். ஒரு டீக்கடை இருக்கும். பட்டாணி கடை இருக்கும்.. இந்தப் பெட்டிக்கடைகளின் முன்பு உள்ள பெட்டியிலும் இந்த தகர விளம்பரங்கள் ஆணி அடிக்கப்பட்டு இருக்கும். பெட்டிக்கடைகளின் பெட்டியில் அழகாக பெயிண்ட் அடித்து மேலே பிள்ளையார் சுழி போட்டு அவரவர்களின் குலதெய்வப் பெயரை எழுதி பிறகு கடையின் பெயரையும் எழுதி கடை முதலாளியின் பெயரையும் எழுதி தங்கள் பொருளின் பெயரைஎழுதி 'இங்கு கிடைக்கும்' என அழகாக விளம்பரம் கொடுத்திருப்பார்கள். ( இதை எல்லாம் நான் நின்று நிதானமாக (பேருந்தை விட்டு இறங்கியதும்) பலமுறை வாசித்திருக்கிறேன்.) பிறகு கொஞ்சம் செலவு பண்ணி விளம்பரங்களை கருப்பு வெள்ளையில் பிரிண்ட் செய்து ஒரு அட்டையில் ஒட்டி வைத்து கடைகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும் பொதுவாக பேருந்து நிலையங்களிலும்தொங்க விட்டிருப்பார்கள்.

இதையெல்லாம் வரைந்து எழுதி கொடுக்கவென்றே சில ஓவியர்கள் ஆங்காங்கே இருப்பர் .அதிலும் படம் வரைய ஒருவர்.. எழுத ஒருவர் என இருவர் இருப்பார்கள். படம் வரைகிற ஓவியர்கள் விளம்பரத்துக்கு தேவையான வாடிக்கையாளர் சொல்லிய படங்களை அழகாக வரைந்து தருவார்கள்.( பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்களேஅதில் ஜொலிப்பர்) பிறகு எழுத்து ஓவியர்கள் எழுதுவார்கள் (எழுதும்போது எழுத்தின் அளவு சரியாக இருப்பதற்காக நீல கலர்/சிவப்புகலர் வண்ண பொடியில் ஒரு ட்வைன் நூலை முக்கி எடுத்து குறிப்பிட்ட பதாகையின் மேல் வைத்து, அந்த கனமான நூலை இழுத்து பிடித்துக் கொண்டு மெதுவாக சுண்டி விடுவார்கள் .

Representational Image
Representational Image

நூலில் உள்ள வண்ணப்பொடி ஒரு கோடாக மென்மையாக பதியும். அதே போல் இரண்டு கோடுகளை சரியான இடைவெளியில் சுண்டி மென்மையாக பதிய விடுவார்கள்.( வேறு ஒன்றும் இல்லை இரண்டு வரி நோட்டில் நாம் எழுதுவதைப் போலதான்) இதற்கு நடுவில் எழுத்து ஓவியர் அழகாக எழுதுவார் .(எங்கள் வீட்டிற்கு அருகில் முருகன் என்பவர் எழுத்து ஓவியர்... அவர் எழுதுவதை பார்த்து ரசித்திருக்கிறேன்) விளம்பரம் வரைந்து எழுதி முடித்த பிறகு கடைசியாக ஏதாவது ஒரு மூலையில் அவரின் பெயரை சின்னதா எழுதி வைப்பார். அதைப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அது ஒரு வித்தியாசமான டிசைனில் அமைந்திருக்கும்.(அது தனிக் கதை) .அதிலேயே அந்த ஓவியரின் திறமை நமக்குத் தெரியவரும் .அடுத்ததாக ரேடியோ விளம்பரங்கள் ரேடியோ விளம்பரங்கள் பெரும்பாலும் பாடல்களாகவும், உரையாடல்களாகவும் இருந்தன. கூர்ந்து கவனித்துக் கேட்டால் மட்டுமே மனதில் பதியும். அப்படி பதிந்தவை தான் வாஷிங் பவுடர்நிர்மா, நிஜாம் பாக்கு அன்றும் இன்றும் என்றும் நிஜாம்பாக்கு ,'உஜாலா' விளம்பரம் ,' கோகுல்சாண்டல் பவுடர்' இவையெல்லாம்..

இதில் சினிமா விளம்பரம் சற்று வித்தியாசமாக இருக்கும்.

எங்கள் ஊர் அண்ணா திரையரங்கில் ஒரு புதிய படம் வெளி வருகிறது என்றால் போஸ்டர்கள் பொது இடங்களில் ஒட்டப்படும்.(குறிப்பாக பேருந்து நிற்கும் இடத்தில்) பின்பு படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே நாள்தோறும் குதிரை /மாட்டு வண்டியில் (பக்கவாட்டில்)குறிப்பிட்ட படத்தின் போஸ்டர்களை ஒட்டிக்கொண்டு ஸ்பீக்கர் வைத்து சொல்லியபடியே வருவர்.. சிவாஜி/ எம்ஜிஆர் படங்கள் என்றால் தாரை தப்பட்டைகளுடன்வருவர்.(காது ஜவ்வு கிழிந்து விடும்) சின்னப் பிள்ளைகளாக இருக்கும்பொழுது அந்த சத்தம் கேட்டாலே வாசலில் ஓடி வந்து பார்த்ததெல்லாம் ஒரு அழகிய கனாக்காலம் .

அதேபோல் சைக்கிளின் பின்னால் ஒருவர் மஞ்சள், ஆரஞ்சு, கிளிப்பச்சை , பஞ்சுமிட்டாய் . நிறங்களில் சினிமா நோட்டீசை விநியோகித்து கொண்டே வருவார் (.சில நேரங்களில் அவர்களுக்கு முன்னால் இரு பெண்கள் கரகாட்டம் ஆடியும் நடந்து வருவார்கள்.) தெருமுனையில் கரகாட்டம் சத்தம்கேட்ட உடனேயே ஓடிச்சென்று நோட்டீசை கையில் வாங்கி என்ன படம் ரிலீஸ் ஆகிறது என்று பார்த்ததெல்லாம் பொற்காலம்.. அதேபோல் படம் 100 நாளை தாண்டி விட்டது என்றாலும் இதே போன்ற விளம்பரங்கள் தொடரும்.கூடுதலாக ரசிகர் மன்றங்களின் சார்பாக நூறாவது நாள் அன்று டிக்கெட் தரும் கவுண்டரில் ஆரஞ்சு மிட்டாய்,பெப்பர்மிண்ட் , அல்லது நெஸ்லே பார்லே சாக்லேட் கொடுப்பர்.

Representational Image
Representational Image

இன்றே' இப்படம் கடைசி' என்றாலும்.. இன்றே இப்படம் கடைசி என்றும் போஸ்டர் ஓட்டுவார்கள். அப்பொழுதும் குதிரை வண்டியில் 'இன்றே இப்படம் கடைசி' என்று சொல்லிக் கொண்டே ஸ்பீக்கர் அலறும் வண்ணம் வருவர்.(இதை எல்லாம் கேட்டு/பார்த்து வளர்ந்தவள் நான்) பின்பு தொலைக்காட்சி வந்த பிறகு ஆண்டெனாவை சரியான திசையில் வைத்து புள்ளிகளும் கோடுகளும் இல்லாமல் டிவி பார்ப்பதே ஒரு பெரும் சாதனையான செயலாக இருந்தது. .காற்றோ அல்லது மழையோ அடித்தால்போச்சு திரும்பவும் மாடியேறி வந்து ஆண்டெனாவை சரி செய்ய வேண்டும் .(இதை எல்லாம் பலமுறை எங்க வீட்டில் நான் செய்திருக்கிறேன்) (ஏணியில் அவசர அவசரமாய் ஏறி விழுந்து வாரி சில்லறை பொறுக்கியது எல்லாம் விழுப்புண்களாய்) தூர்தர்ஷன் வந்த பிறகு விளம்பரங்கள் விஷுவலாக நிறைய வர ஆரம்பித்தன. .குறிப்பாக ஹிந்தி விளம்பரங்கள் தமிழ் 'டப்' செய்யப்பட்டு வந்தன. அப்பொழுதெல்லாம் நேரடி தமிழ் விளம்பரங்கள் சற்று குறைவாகவே இருந்தன.

வளரும் பையன் இவன் உயர உயரவே வளருபவன். ஐயம் ஏ காம்ப்ளான் பாய்...

"சொட்டு நீலம் டோய் ரீகவ் சொட்டு நீலம் டோய்"...

போயிந்தி.. போயே போச்சு..இட்ஸ்கான் என்று அமிர்தாஞ்சனுக்கு கொடுத்த விளம்பரத்தை மறக்க முடியுமா? மறக்கத்தான் முடியுமா ?அதை போல் அஞ்சால் அலுப்பு மருந்து. சாலிடர் டிவி, டைனோரா டிவி ஒனிடா டிவி அதிலும் ஒனிடா டிவியில் அந்த கொம்பு முளைத்த மொட்ட மண்டையினை பார்த்தது.. . (சற்று பயமாகவே இருக்கும் ) பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி .. தூக்கத்தில் எழுந்து கேட்டால் கூட சொல்லும் அளவுக்கு மனப்பாடம் கண்ணை மூடினால் கபில்தேவ்தான் தெரிவார்.... கலக்குறே சந்துரு புது வீடு புது காரு புது பொண்டாட்டி (இந்த விளம்பரத்தை இப்ப நீங்க படிக்கிறப்பயே உங்களுக்கு மனசுல சந்தோஷம் வருதுதானே) .

Representational Image
Representational Image

மில்க் பிக்கீஸ் , நவரத்தின ஆயில், ஜோதிகா நடிச்ச இதயம் நல்லெண்ணெய் விளம்பரம் தினந்தோறும் வாங்குவேன் இதயம். (அவர் தோசைக்கு ஊற்றும் எண்ணெய்.. அழகிய சிரிப்பு..கவித..கவித..) பிர்லா சிமெண்ட், ப்ரீத்திக்கு (மிக்ஸிக்கு) நான் கியாரண்டி... டைகர் பிஸ்கட் லிரில் சோப் விளம்பரத்தில் அருவியில் குளிக்கும் பெண்ணின் அழகு.. அந்தபிண்ணனி இசை நம்மை கிறங்க வைக்கும். அரசன் சோப் ரொம்ப ரொம்ப நல்ல சோப்பு... என்னப்பா மூக்கடைப்பா ஆமாம் பா ஆமாம் அந்த விக்ஸ் ஆக்க்ஷன் 500 விளம்பரம்.. வீக்கோ டர்மரிக்க்ரீம். சந்தூர்சோப். என் குழந்தைக்கு உட்வார்ட்ஸ்க்ரைப் வாட்டர்தான் கொடுத்தேன். கிராமமோ இல்லை நகரமோ எங்கள் தோழன் ரால்கோ டயர் ... பேஷ் பேஷ் காபி ரொம்ப நன்னா இருக்கு (இதை சொல்லிப்பாருங்கள் மனசுக்குள் உசிலைமணி வருவது நிச்சயம்).

இப்படி விளம்பரத்தை கூட ஸ்கிப் பண்ணாமல் பார்த்தவர்களில் நானும் ஒருத்தி. இதைப் படிக்கும் அனைவருக்கும் சில விளம்பரங்களின் நினைவுகள் வந்து வந்து போகும் என்றால் மிகை யன்று! ஃபெவிக்காலின் விளம்பரம் ஒன்று வரும். கோழி பெவிகால் சாப்பிட்டு விட்டு முட்டை போடும் அந்த முட்டையை சுத்தியால வெச்சு உடைத்தாலும் உடையாது . முட்ட குதிச்சு பானையில் பட்டு பானை உடையும் செமையா இருக்கும்.

விவா தெம்பு தரும் விவா.. இவையெல்லாம் வெள்ளியன்று 'ஒலியும் ஒளியும்' புதன் என்று சித்திரஹார் பார்க்கும்போது பார்த்தவை. (நான் எதையாவது விட்டிருந்தால் நீங்கள் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் ஞாபகங்கள் என்றுமே அழகானவை நினைத்துப் பார்க்கும்போது...) இப்படியாக விளம்பரங்கள் பல வகைகளில் மாறுதல் அடைந்து தொழில்நுட்ப புரட்சி மற்றும் ஊடகங்களின் உதவியால் இப்பொழுது விளம்பரம் என்பதே ஒரு பெரும் தொழிலாக மாறி உள்ளது.

Representational Image
Representational Image

பொருட்களை மக்கள் வாங்கத் தூண்டும் வகையில் அழகாய் காட்சிப்படுத்துகிறார்கள். விஷுவலான விளம்பரங்கள் ஒரு சில வினாடிகளுக்குள் தாங்கள் சொல்ல வேண்டியதை தங்களின் பொருட்களைப் பற்றிய பயனை மக்களிடம் சேர்த்து விடுகின்றன. ஆங்காங்கே சில விளம்பரங்கள் முகம் சுளிக்க வைத்தாலும் பெரும்பாலான விளம்பரங்கள் ரசிக்க தகுந்த வகையிலே உள்ளன .உதாரணத்திற்கு காட்பரீஸ்சாக்லேட்...நெய்... ஆரோக்கியா மில்க்.. டிஎம்டி பார் இரும்பு கம்பிகள்... இப்படி நிறைய..

நம் இதயத்தை தொட்ட க்யூட்டான , ஸ்வீட்டான, ஹாட்டான விளம்பரங்கள் நிறைய...நிறைய...நிறைய்ய. ! ஒவ்வொன்றும் ஒரு அழகிய ஹைக்கூ கவிதை போன்றது!


என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணு கோபால்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.