வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
எங்களுக்கு சமீபத்தில் அறிமுகமான இளைஞர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். காப்பி வேண்டுமா டீ வேண்டுமா என்று கேட்டேன். காப்பி என்றார். நல்ல பில்டர் காப்பி போட்டு பளபளக்கும் பித்தளை டபாரா செட்டில் தந்தேன்.
இந்த பாத்திரங்கள் இன்னும் பயன்பாட்டில் இருக்கிறதா என்று அவருக்கு ஆச்சரியம். என் வீட்டில் செப்புக் குடத்தில் நீர் பிடித்து அருந்துவதையும் செப்பு சொம்புக்களையும் கண்டு வியந்து போனவராக அவருடைய சிறு வயதில் பாட்டி வீட்டில் இவைகளைப் பார்த்ததையும் பயன்படுத்தியத்தையும் மலரும் நினைவுகளாக சொல்லிக் கொண்டிருந்தார்..

அரை மணி நேரத்தில் கிளம்ப வேண்டியவர் மனம் நிறைந்து பேசி பேசி சில மணித்துளிகள் அமர்ந்து விட்டார்.
எங்களுடைய நோக்கமும் அது தான். வீட்டிற்கு வருபவர்களுக்கு நாம் உண்பதற்கோ அல்லது அருந்துவாதற்கோ கொடுப்பது பண்டங்களை மட்டும் அல்ல, அதை சார்ந்த அவர்களின் பழைய மலரும் நினைவுகளுடன் அவர்களின் அருமையான பந்தங்களையும் ஒரே ஒரு நிமிடமேனும் நினைவு படுத்துவது என்பது தான்.

சிறுவயதில் எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த காலங்களில் தான் எவர்சில்வர் பாத்திரங்கள் உபயோகத்திற்கு வந்தது. அதுவும் டம்ளர் மட்டும் தான். பாத்திரங்கள் என்பது வெகு வெகு அபூர்வமானது. அதுவும் வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டும் தான் காணக் கிடைக்கும்.
மத்தியத்தர குடும்பங்களில், சமையலுக்கு ஈயப் பாத்திரங்கள், மாக்கல் சட்டி, எவர்சில்வர் தட்டுக்கள் பித்தளை லோட்டாக்கள் தான்.
பித்தளை லோட்டா அதாவது டம்ளர் சின்னதாக இருக்காது. சுமார் ஒரு படி பிடிக்கும். காலையில் அது நிறைய காப்பி. மாலையில் ஒரு காப்பி. அன்று எங்களுக்கு அது தான் பூஸ்ட் ஹார்லிக்ஸ் எல்லாமே. நாங்களும் இன்றளவும் ஆரோக்கியமாகத் தான் இருக்கிறோம்.

ஒருமுறை எங்கள் ஊரில் நான் சிறுமியாக இருந்த போது, ஒரு மதிய பொழுதில் ஒரு வியாபாரி எவர்சில்வர் பாத்திரங்களை தலை சுமடாக விற்பதற்காக கொண்டு வந்தார். ஒரு பெரிய வீட்டின் திண்ணையில் வைத்து தான் எல்லா வீட்டு பெண்களூம் அவரை சுற்றி நின்று ஆளாளுக்கு கையில் அந்த பாத்திரங்களை எடுத்துப் பார்த்து அடடா எவ்வளவு கனமாயிருக்கு. எவ்வளவு பளப்பளன்னு இருக்கு. பரவாயில்லையே. கடையை விட விலை சல்லிசா இருக்கே என்று பூரித்து புளங்காகிதம் அடைந்து போனார்கள். வீட்டில் கணவன்மார்களுக்குத் தெரியாமல் சேர்த்து வைத்திருந்த சிறுவாடு துட்டைக் கொண்டு வந்து கொடுத்து பாத்திரங்களை வாங்கினார்கள்.
அவர்கள் வீட்டு சிறியவர்கள் அதை கையால் தொட்டால் கூட உதை தான்.
இதில் நானெங்கே அதை தொட்டுப் பார்ப்பது.? அந்த சிறுவர்களுக்கு தங்கள் அம்மாக்கள் எவர்சில்வர் பாத்திரம் வாங்கி விட்டதால் என்னமோ இமயமலையை வாங்கிக் கொண்டு வந்து விட்டத்தைப் போல ஒரு இறுமாப்பில் முகம் மின்ன வாங்காத என்னை பார்த்து ரொம்ப இளக்காரமாக ஒரு இளிப்பு வேறு.

என்னுடைய அக்காக்கள் அப்போதே மெட்ராஸ்வாசிகள் ஆதலால் எங்கள் வீட்டில் பட்டினத்து நாகரீகமாக எவர்சில்வர் டம்ளர் தட்டுக்கள் உண்டு. எனவே என் அம்மா இதை எல்லாம் வாங்கவில்லை.
லட்சுமி அக்கா நீ வாங்கியதை விட நாங்கள் வாங்கியது ரொம்பவே சல்லிசு என்று பெருமை வேற மற்ற பெண்களுக்கு. என் அம்மாவுக்கும் நாம் தான் அதிக விலை கொடுத்து வாங்கி விட்டோமே என்று ஆதங்கம்.
மறுநாள் காலையில் எல்லார் வீட்டுப் பெண்களும் அதே திண்ணையில் கையில் முதல்நாள் வாங்கிய எவர்சில்வர் பாத்திரங்களுடன் நின்றிருந்தார்கள். ஆமாம். கண்ணீரும் கம்பலையுமாகத் தான். பாத்திரம் முழுவதும் கருத்துப் போய் கன்றாவியாக இருந்தது. ஆஹா ஓஹோ என்று நேற்று பேசிய வாய்கள் எல்லாம் நம்மை ஒருத்தன் இப்படி ஏமாற்றி விட்டு போய்ட்டானே, இது எவர்சில்வர் இல்லை, தண்டவாள இரும்பு என்றெல்லாம் பேசியது இன்று நினைத்தாலும் எனக்கு சிரிப்புத் தான்.
அந்த திடீர் வியாபாரியை தேடிக் கொண்டு திசைக்கு ஒருவராக கிளம்பிய எங்கள் தெரு ஆண்கள் அவனை காணாது திரும்பி வந்தார்கள்.

குளத்தங்கரை, கோயில் சினிமா தியேட்டர் எல்லா இடங்களிலும் இந்த கதை தான் ஓடிக் கொண்டிருந்தது.
எங்க தெரு திண்ணையில் உக்காந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நடக்க மாட்டாத வயதானவர்கள் "ஏமாந்தது ஏமாந்தாச்சு. இனி பேசி என்ன பிரயோசனம்?" என்று அதட்டிய பின் தான் இந்த பேச்சு அடங்கியது.
என் அம்மா, என்ன தான் இருந்தாலும் பட்டணத்தில் அதாவது மெட்ராஸ் இன்றைய சென்னையில் வாங்குவது போல வருமா என்றும், என் மகள்கள் பார்த்து பார்த்து வாங்கிக் கொடுத்தது போல வருமா என்று பெருமை பேசியதும்,
ஆமாம் அக்கா நீ சொல்வது தான் சரி, அடுத்த முறை நீ பட்டணம் போய்ட்டு வரும் போது எனக்கு ஒரு எவர்சில்வர் பாத்திரம் வாங்கி வா என்றதும் மனதின் அடியில் புகை படிந்த சித்திரமாக நின்று போனது.
உங்களுக்கும் இதைப் போல ஒரு கதை இருந்து அதை இந்த கட்டுரை ஒரு நிமிடமேனும் உங்கள் நினைவிற்கு கொண்டு வருமேயயானால் அதுவே எனக்கு மகிழ்ச்சி. நன்றி.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.