Published:Updated:

`நீ வளர்ந்ததும் என்ன ஆக விரும்புகிறாய்' என்ற கேள்வி தேவையா? | My Vikatan

Representational Image

மாணவர்களின் மன அழுத்தத்துக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கல்வி மற்றும் அதன் சார்ந்த காரணங்களால் ஏற்படும் பிரச்னைக்கு மூன்று முக்கிய தீர்வுகளை நாம் விவாதிக்கலாம்.

`நீ வளர்ந்ததும் என்ன ஆக விரும்புகிறாய்' என்ற கேள்வி தேவையா? | My Vikatan

மாணவர்களின் மன அழுத்தத்துக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கல்வி மற்றும் அதன் சார்ந்த காரணங்களால் ஏற்படும் பிரச்னைக்கு மூன்று முக்கிய தீர்வுகளை நாம் விவாதிக்கலாம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்

கடந்த ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் நம் நாட்டில் நடந்த தற்கொலைகள் தொடர்பான ஓர் அறிக்கையை வெளியிட்டது. இதில் நம் நாட்டில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவதாக வந்த செய்தி மிகவும் வேதனை தருவதாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் நம் நாட்டில் மட்டும் 1,70,000 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

மாணவர்கள் தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் போட்டி நிறைந்த கல்வி மற்றும் தேர்வில் தோல்வி போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன் தொடர்பாக மேலும் ஓர் அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தியைக் கடந்த ஞாயிறன்று `தி இந்து' நாளிதழில் படிக்க நேர்ந்தது. நம் நாட்டில் 10 முதல் 12 வயதுள்ள குழந்தைகளில் 35 சதவிகிதத்தினருக்கு ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் இருப்பதாக ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. அப்படியானால் மூன்றில் ஒரு குழந்தைக்கு ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த ஆபத்தான பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.

Representational Image
Representational Image

மாணவர்களின் மன அழுத்தத்துக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கல்வி மற்றும் அதன் சார்ந்த காரணங்களால் ஏற்படும் பிரச்னைக்கு மூன்று முக்கிய தீர்வுகளை நாம் விவாதிக்கலாம்.

பிடித்த பாடத்தை / துறையைத் தேர்வு செய்து படிக்க விடுங்கள்

பெற்றோர்கள் பலரும் தான் படித்த அல்லது படிக்கத்தவறிய துறையைச் சேர்ந்த பாடங்களைத் தன் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒரு சிலர் வற்புறுத்தவும் செய்கிறார்கள். இது குழந்தைகளை மன அழுத்தத்துக்கு ஆளாக்குகிறது. அவர்களுக்கென்று ஒரு தனி விருப்பம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட துறையில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கலாம். அந்த ஆர்வத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் ஆர்வத்தைத் தொடர நாம் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். ஒரு சில குழந்தைகளுக்கு எந்த ஒரு துறையிலும் ஆர்வம் பிறக்க சில ஆண்டுகள் ஆகலாம். அது வரை பொறுமை அவசியம். அவசரப்பட்டு அவர்களைக் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சிறு குழந்தைகளிடம் `நீ வளர்ந்ததும் என்ன ஆக விரும்புகிறாய்?' என்று கேட்காதீர்கள்   

இது ஓர் அபத்தமான கேள்வி. சிறு குழந்தைகளிடம் கண்டிப்பாக இது போன்ற கேள்விகளைக் கேட்பதை நாம் தவிர்க்க வேண்டும். அவர்களின் ஆர்வங்களை அடையாளம் காண அவர்களுக்கு நிறைய கல்வி அறிவும், சமூகம் சார்ந்த அறிவும், விழிப்புணர்வும் மற்றும் நேரமும் தேவைப்படுகிறது. ஒரு சில துறைகளில் உள்ள வாய்ப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு பெரும்பாலான மாணவர்களுக்கு குறைந்தது 16 அல்லது 17 வயதாவது ஆக வேண்டும். மிகவும் அபூர்வமாக ஒரு சில குழந்தைகளுக்கு வேண்டுமானால் சிறு வயதிலேயே இதைத் தீர்மானிக்கும் திறன் இருக்கலாம். ஆனால், எல்லாக் குழந்தைகளும் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையின் மிகப்பெரிய முடிவை மிகச்சிறு வயதிலேயே எடுக்க வேண்டும் என்று நினைப்பது மற்றும் அவர்களைத் தூண்டுவது அறிவற்ற செயல். இந்த அழுத்தத்தை குழந்தைகளின் மேல் திணிக்கும் பெற்றோர்களும் சமூகமும் நிச்சயம் இதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

Representational Image
Representational Image

தேர்வுகள் முக்கியம். ஆனால், அதையும் தாண்டி வாழ்க்கை இருக்கிறது.

 நம் நாட்டில் இன்றைய உயர் கல்வி முறையில் போட்டித்தேர்வு என்பது காலத்தின் கட்டாயம். மக்கள் தொகை பெருகிக் கொண்டே வரும் அதே வேளையில் மாணவர் இருக்கை வாய்ப்புகள் தேவையான அளவுக்கு அதிகரிக்கவில்லை. எனவே, தேர்வின் அவசியத்தையும் முக்கியத்தையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அதே சமயம் போட்டித்தேர்வு இல்லாமல் படிப்பதற்கும் முன்னேறுவதற்கும் இன்று பல துறைகளும் வாய்ப்புகளும் உள்ளன.

தேர்வின் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவர்களிடம் அடிக்கடி பேசும் நாம் அதையும் தாண்டி வாழ்க்கையில் உள்ள வாய்ப்புகளைப் பற்றிப் பேசத் தவறிவிடுகிறோம். இதனால் தேர்வில் குறைந்த மதிப்பெண் அல்லது தோல்வி கண்டவுடன் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விபரீத முடிவெடுக்கிறார்கள். இதைப் பற்றிப் பள்ளிக்கல்வித் துறையும், ஆசிரியர்களும் பெற்றோர்களும் யோசிக்க வேண்டும். மாணவர்களின் முடிவுகளுக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பல்ல என்பதை நாம் உணர வேண்டும்.

Representational Image
Representational Image

நான் மேலே குறிப்பிட்ட மூன்றுமே மிகவும் எளிதாகத் தோன்றினாலும், அறிவுபூர்வமாகத் தெரிந்தாலும் அதை நடைமுறையில் செயல்படுத்த பலரும் தயாராக இல்லை. இதை நடைமுறைப்படுத்தினால் நிச்சயம் நம் குழந்தைகள் அவர்கள் விருப்பப்பட்ட துறையில் படித்து பணி புரிந்து, மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக வாழ்வார்கள். 

 மாணவர்களின் மன அழுத்தம் பல சமயம் பெற்றோர்களையும் பாதிக்கிறது. ஸ்வாமி சின்மயானந்தா பெற்றோர்களை வில்லுக்கும் பிள்ளைகளை அம்புக்கும் ஒப்பிடுவார். வில்லிலிருந்து அம்பு புறப்பட்டாலும் அது செல்லும் திசையை ஓரளவுக்கு நாம் தீர்மானித்தாலும் கடைசியில் அம்பு செல்லும் இடம் பல்வேறு காரணங்களால் வேறுபடுகிறது. ஆகவே, பெற்றோர்கள் தானும் பதற்றத்துக்கு உள்ளாகி குழந்தைகளையும் மன அழுத்தத்துக்கு உள்ளாக்காமல் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நிச்சயம் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு காண முடியும்.


(இந்தக் கட்டுரையின் ஆசிரியர் ஸ்ரீராம் குமார் 30 ஆண்டு களுக்கும் மேலாகப் பல்வேறு தொழில் மற்றும் சமூகத் துறை நிறுவனங்களில் பணி புரிந்தவர். இவர் தற்போது பெங்களூரில் சமூகத் துறை நிறுவனங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றுகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதி வருகிறார்.)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.