வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
சமீபமாக பாரிஜாதப் பூக்களைத் தவிர வேறு எந்தப் பூக்கள் மீதும் என் கவனம் செல்வதில்லை. பூக்கள் ஒவ்வொன்றும் தனி அழகுதான். ஒன்றை ஒன்று ஒப்பிட்டு இதுதான் அழகு, இதில்தான் நறுமணம் என்றெல்லாம் பேதம் பார்க்க முடியாது. ஆனால் இந்தப் பாரிஜாதங்களை எந்த நாளில் எந்த நிமிடத்தில் எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது என நினைவில்லை.
பாரிஜாதத்திற்கு நிறைய கதைகள் இருக்கின்றன. இது இந்திரனின் மனைவிக்குப் பிடித்த மலர் என்றும், அதை ஒருநாள் நாரதர் கிருஷ்ணருக்கு கொடுக்க, அதை அவர் ருக்மணிக்கு மாலையாக அணிவிக்க, விஷயம் தெரிந்த சத்யபாமா கோபம் அடைய,. என்ன செய்வார் பாவம் கிருஷ்ணர்? மலர் என்ன?? உனக்கு மரமே தந்து விடுகிறேன் என்று இந்திரலோகம் சென்று இந்திரனுடன் பெரும்போர் செய்து பாரிஜாத மரத்தை வேரோடு எடுத்துவந்து சத்யபாமாவின் வீட்டில் நட்டு வைத்தாராம்.. அதில் மலர்ந்த பூக்கள் ருக்மணி வீட்டில் உதிர்ந்து விழுந்ததாம்..( மரம் பாமாவிற்கு..மலர்கள் ருக்மிணிக்கு). கிருஷ்ணர் புத்திசாலி...

மனித உருவெடுத்த கிருஷ்ணருக்குப் பிறந்ததிலிருந்து வாழ்க்கைப் போராட்டம் தான். பெற்றவளிடம் வளரமுடியவில்லை. எப்போதும் அவரைக் கொல்லும் நோக்கத்துடன் இருந்த கம்ச மாமா .. வெண்ணெய்த் திருடன் என்ற கெட்டப் பெயர்.
கம்சனை அழித்துப் பின் விரும்பிய ராதாவை விட்டு விலகி, பாண்டவர்களுக்காக களத்தில் சாரதியாக நிற்கவேண்டிய கட்டாயம். எங்கு சென்றாலும், என் மகளைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்ற வற்புறுத்தல்கள். இவருக்கு அந்தப் பெண்களைப் பிடித்திருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்தனவா எனத் தெரியவில்லை..ஆனாலும் மாலை மாற்றிக் கொண்டார்.. வாழ்வின் கடைசி நிமிடம் வரை , அவர் அவரை சந்தோஷமாகக் காட்டிக் கொண்டாரேத் தவிர, அவருடன் அவருக்குத் தோள் கொடுக்க எவருமில்லை.அண்ணன் பலராமனும் இவரைக் கைவிட்டு விட்டார்..இப்படி பல கஷ்டங்கள் இருந்தபோதும் சிரித்தபடி வாழ்ந்து மனித ஜென்மத்தை முடித்துக் கொண்டவர்.

புராணக் கதைகளின் வழியாகப் பார்க்கும் போது , இது கிருஷ்ணரால் பூமிக்கு வரவழைக்கப்பட்ட மரம். இதற்கு மேன்மைகள் அதிகம்.. மும்மூர்த்திகளும் வாசம் செய்யும் மரம் என்ற பெருமையும் இதற்குண்டு...
இம்மரத்தின் பெருமைகளையும், அருமைகளையும் அறிந்து கொள்ளும் முன்னரே , எனக்கு இந்த பாரிஜாத மலர்கள் பல வருடங்களுக்கு முன் சென்னையில் நான் வசித்த வீட்டின் எதிர் வீட்டில் பூத்து காலையில் தரையில் விழுந்து கிடந்து காட்சியளித்தன... ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த மலர்களைக் காணும்போது இனம் புரியா மகிழ்ச்சி ஏற்படவே, ஒரு நல்ல நாளாய் பார்த்து அன்றிலிருந்து தினமும் அவற்றை எடுத்து வந்து, பூஜையறையில் வைக்கத் தொடங்கினேன்.
அந்த வழக்கம் எந்நாளும் தடையின்றித் தொடர்ந்தது.. பின் கோவைக்கு மாற்றலாகி சென்றபோதும் அங்கும் இம்மரங்கள் இருக்கவே , பாரிஜாதப் பூக்களின் உடனான என் பந்தமும் தொடர்ந்தது. பிறகு மீண்டும் சென்னைக்கே மாற்றலாகி ஆனால் வேறொரு இடத்தில் குடிபுகவே... இங்கும் நிறைய பாரிஜாத மரங்கள் இருக்கும் இடம் அமைந்து பந்தம் தொடர்கிறது..
தினமும் இம்மரங்கள் இருக்கும் இடம் சென்று பூக்களை எடுக்காவிடில் என் நாள் முழுமை அடையாது. அதை நான் கீழ் இருந்து அல்லது இலையில் மேல் உதிர்ந்த பூக்களை எடுக்கும் சில மணித்துளிகள், என்னைப் பொறுத்தவரையில் என் மனம் அமைதியாக தியானம் செய்யும் நேரங்கள்.. இம்மரங்கள் இருக்கும் இடமும், இம்மலர்கள் தரும் பிரத்யேக நறுமணமும் என் மனதை அமைதி நிலைக்குக் கொண்டு செல்லத் தவறுவதேயில்லை..

அன்றைய தினத்தின் எந்த விதமான மனச்சோர்வையும் , உடற்சோர்வையும் இந்த மலர்கள் போக்கிவிடும்.. இந்த உலகின் பந்தங்களை எப்படி நீக்கி வாழவேண்டும் என்பதை இம்மலர்கள் தானாகவே யாரும் பறிக்காமல் கீழே உதிர்ந்து மரத்தின்மீது அவைகளுக்கு இருக்கும் பற்றற்ற நிலையை காண்பிப்பதின் மூலம் நமக்கு உணர்த்தும். இதை நாம் நம் வயது ஏற ஏற புரிந்து கொள்ள வேண்டும்.
என் வாழ்வில் நான் ஆசைப்படும் ஒரேயொரு விஷயம் ... நான் வருங்காலங்களில் எந்த இடத்திற்குச் சென்றாலும் , அங்கெல்லாம் இந்த மரங்கள் இருக்கவேண்டும்.. அதன் உதிர்ந்த மலர்களை நான் எடுக்கும் பாக்கியமும் எனக்குக் கிடைக்கவேண்டும்...
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.