Published:Updated:

``இரண்டு ரூபாய் பொரிச்ச பரோட்டாக்காக நான் பட்ட பாடு இருக்கே..!’’ - பரோட்டாவும் நானும்

பரோட்டா

என்னடா இவன் எதுக்கெடுத்தாலும் இதற்கு ஈடு இணை ஏதுமில்லை என்று ஒவ்வொரு ஹோட்டல் பரோட்டாவை பற்றி கூறுகிறானே என்று நீங்கள் புருவம் உயர்த்துவது எனக்கு தெரிகிறது. ஆனால்..

``இரண்டு ரூபாய் பொரிச்ச பரோட்டாக்காக நான் பட்ட பாடு இருக்கே..!’’ - பரோட்டாவும் நானும்

என்னடா இவன் எதுக்கெடுத்தாலும் இதற்கு ஈடு இணை ஏதுமில்லை என்று ஒவ்வொரு ஹோட்டல் பரோட்டாவை பற்றி கூறுகிறானே என்று நீங்கள் புருவம் உயர்த்துவது எனக்கு தெரிகிறது. ஆனால்..

Published:Updated:
பரோட்டா

பரோட்டா அல்லது புரோட்டா எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். தமிழ் நாட்டில் பரோட்டா பிடிக்காத மனிதர்கள் யாரேனும் உண்டா என்றால் இல்லை என்பதே என்னுடைய அனுமானம். பரோட்டாவிற்கு பூர்வீகம் எது என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை அல்லது எனக்கு தெரியவில்லை. தமிழ் நாடு அல்லது கேரளாவாக இருக்க கூடும்.

இந்த பரோட்டாவை முதன் முதலாக எப்போது சாப்பிட்டேன் என்று நினைவில்லை. ஆனால் என்னவோ பரோட்டா எனக்கு மிக பிடித்த உணவாக மாறிவிட்டது. பிடித்த உணவு என்றால் தினமும் எல்லாம் சாப்பிட வாய்ப்பு கிடைத்ததில்லை. மாதத்தில் ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ வாய்ப்பு கிடைக்கும். என்னுடைய பால்ய வயதில் வட்ட வடிவில் இருக்கும் காசு பரோட்டா (Coin Parotta or Kerala Parotta) மட்டுமே எனக்கு அறிமுகம். சில நாட்கள் கழித்து தான் விருதுநகர் பொரிச்ச பரோட்டா அறிமுகமானது. ஆனால் அதை முதன் முதலாக சாப்பிட்டது எங்கள் ஊரின் ஆல் இன் ஆல் பெருமாள் ஹோட்டல் ஆரம்பித்து சில நாள் கழித்து இதனை அறிமுகப்படுத்தினார். அப்பொழுதெல்லாம் என்னிடம் பரோட்டா வாங்குவதற்கான காசு இருக்காது. அப்பாவிடம் கேட்டால் சில சமயம் கிடைக்கும் பல சமயம் கிடைக்காது.

பரோட்டா
பரோட்டா

பெருமாள் மளிகை கடைக்கு ஒரு நாள் எதோ மளிகை சாமான் வாங்க சென்ற சமயம் "நம்ம ஹோட்டல்ல இன்னையிலேர்ந்து எண்ணையில் பொரிச்ச பரோட்டா போடறோம்... சாப்பிட்டு பாரு..." என்று சொன்னார். அதற்கு முன்பு வரை திருவானைக்காவல் சந்திரா ஹோட்டலில் விருது நகர் பொரிச்ச பரோட்டா போட்டு அடுக்கி வைத்திருப்பார்கள். அதை பஸ்சில் போகும்போது வேடிக்கை பார்த்ததோடு சரி. இப்பொழு நினைத்தாலும் நாவில் நீர் ஊறுகிறது.

இந்த பரோட்டா மட்டும் ஒரு முறை சாப்பிட்டால் ஆசை அடங்கவே அடங்காது. சாப்பிட்டு முடித்தவுடன் தினமும் சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று மனசு நினைக்கும். ஆனால் "வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல" என்று மனது எதிர்க்குரல் எழுப்பும். நாம நல்ல வேலைக்கு போனதுக்கு அப்புறம் தெனமும் எவ்வ்ளோ வேணுமோ அவ்வளவு சாப்பிடணும் என்று ஒரு வைராக்கியம் வரும். பரோட்டா என்றில்லை வீட்டில் கிடைக்கும் உணவகள் தவிர அனைத்திற்கும் இதே வைராக்கியம் தான்.
ஆனந்தகுமார்

சரி பெருமாள் கடை பொரிச்ச பரோட்டாவிற்கு வருவோம். கையில் காசு இல்லை மாத கணக்கு நோட்டில் வாங்க முடியாது ஏனென்றால் அது மளிகை வாங்க மட்டும் தான். ஒருவாறு யோசித்து வீட்டிலிருந்த யானை வங்கி அதாங்க பிகி பேங்க் (Piggy Bank) போல யானை வடிவத்தில் ஒரு உண்டியல் கரூர் வைஸ்ய வங்கியில் கொடுத்திருந்தார்கள். அதில் இருந்து காசு எடுக்கலாம் (நாங்கள் சேமிப்பு என்று போட்ட நாணயங்கள்) என்று முடிவு செய்து ஒரு ஈர் குச்சியை எடுத்து சிறியதாக ஒடித்து மேற்புறமாக காசு போடும் துளையில் விட்டு மிக கஷ்ட பட்டு ஒரு இரண்டு ருபாய் எடுத்து கொண்டு இன்று எப்படியாவது அந்த பொரிச்ச பரோட்டாவை சாப்பிட்டுவிட வேண்டும் என்று கடைக்கு சென்று பார்சல் வாங்கி வீட்டுக்கு வந்து சாப்பிட்டேன்.

இலை பரோட்டா
இலை பரோட்டா

இந்த பரோட்டா மட்டும் ஒரு முறை சாப்பிட்டால் ஆசை அடங்கவே அடங்காது. சாப்பிட்டு முடித்தவுடன் தினமும் சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று மனசு நினைக்கும். ஆனால் "வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல" என்று மனது எதிர்க்குரல் எழுப்பும். நாம நல்ல வேலைக்கு போனதுக்கு அப்புறம் தெனமும் எவ்வ்ளோ வேணுமோ அவ்வளவு சாப்பிடணும் என்று ஒரு வைராக்கியம் வரும். பரோட்டா என்றில்லை வீட்டில் கிடைக்கும் உணவகள் தவிர அனைத்திற்கும் இதே வைராக்கியம் தான். மாதமொருமுறை சம்பள நாளில் எங்கள் அப்பா நூறுகிராம் சுவீட்டும் (பால் பேடா எனப்படும் வட்ட வடிவ பால் கோவா இனிப்பு) 150 கிராம் மிக்சரும் கட்டாயம் வாங்கி கொண்டு வருவார். ஆளுக்கு ஒரு பால் பேடாவும் கொஞ்சம் மிக்சரும் கிடைக்கும். சாப்பிட்ட பின்பும் நாவில் ஒட்டி இருக்கும் சுவையை நினைத்தும் இதே வைராக்கியம் தான்.

இந்த பரோட்டாவின் தரமும் சுவையும் ஒவ்வொரு ஹோட்டலுக்கும் மாறுபடும். அதே போல அதற்க்கு கொடுக்கப்படும் சால்னாவோ அல்லது குருமாவோ ஒவ்வொன்றும் தனி சுவை. அதனால் எந்த ஹோட்டலுக்கு சென்றாலும் எதனை முறை பரோட்டா சாப்பிட்டாலும் அலுக்கவே அலுக்காது. எனக்கென்னவோ பரோட்டாவில் ஊற்றி ஊறவைத்து சாப்பிடும் அளவுக்கு தண்ணீர்போல இருக்கும் சால்னாவோ அல்லது குருமாவோ தான் ரொம்ப பிடிக்கும். இதில் பெரும்பாலும் பட்டாணியை ஊற வைத்து போடுவார்கள் (சைவ சால்னாவில்). இன்றைய காலகட்டத்தில் பல காய் கறிகள் போட்டு கூட்டு போல பரோட்டாவிற்கும் சப்பாத்திக்கும் ஒரே குருமா செய்கிறார்கள். அது எனோ எனக்கு பிடிப்பதில்லை.

மதுரை பன் பரோட்டா
மதுரை பன் பரோட்டா

அது போல சைவ குருமாவோ சால்னாவோ அசைவ குருமா சால்னா போல தயாரிப்பார்கள். அது மிக அருமையாக இருக்கும். அசைவ பிரியர்களுக்கு மட்டன் எலும்பு குருமாவோ அல்லது சிக்கன் குருமாவோ சிறப்பு என்று சொல்ல கேட்டிருக்கிறேன். நான் சாப்பிட்டதில்லை அல்லது அதை சைவ குருமா என்று நினைத்து சில முறை சாப்பிட்டிருப்பேன் என்று நினைக்கிறன்.

பெருமாள் கடை பரோட்டா குருமா ஒரு சுவை என்றால் எங்கள் ஊரில் முதன் முதலில் பரோட்டாவை அறிமுப்படுத்திய கோயிந்தன் கடை பரோட்டா வேறு சுவை. இந்த மூளை இருக்கிறதே இதுவரை சாப்பிட்ட அணைத்து பரோட்டா சால்னாவின் சுவையை இன்றும் நினைவில் சேமித்து வைத்திருக்கிறது. அதனால் சில சிறந்த சால்னாகளின் சுவைகளை இன்றும் தேடி கொண்டிருக்கிறேன். நான் பால்ய வயதில் அனுபவித்த அந்த சுவையான சால்னாகள் இன்று வரை திரும்ப கிடைக்கவில்லை.

என்னுடைய அம்மாவின் பிறந்த ஊரான மகேந்திர மங்கலத்தில் இருந்த கடைகளில் கிடைத்த பரோட்டா குருமா வேறு சுவை. செல்ல பெருமாள் தம்பி கடையில் குருமா தீர தீர சூடு நீர் ஊற்றி உப்பு போட்டு குர்மாவின் வாசனை மாறாமல் சமாளிக்கும் அந்த குருமா ஒரு சுவை. என்ன ஒன்று நேரம் ஆகா ஆகா தண்ணீராக மாறிக்கொண்டே இருக்கும். அதே ஊரில் மாலை நேரத்தில் கிடைக்கும் மன்றத்து கடை பரோட்டா குருமா வேறு சுவை. இது வரை அந்த மன்றத்து கடை பரோட்டாவை ஒருமுறைதான் சாப்பிட்டிருக்கிறேன். என்னுடைய மாமா ஒரு அரசியல் பொதுக் கூட்டத்திற்காக மன்றத்து கடையில் இருந்து ஆர்டர் செய்து வாங்கி வைத்திருந்த பொழுது அதை ஓசியில் சாப்பிட வாய்ப்பு கிடைத்தது.

பரோட்டா
பரோட்டா
DIXITH

என்னுடைய அப்பாவும் அம்மாவும் முசிறி சென்றால் அவர்களிடம் என்னையும் கூட்டி செல்ல சொல்வேன். இல்லாவிட்டால் எங்களுக்கு கிருஷ்ணா பவன் பரோட்டா வாங்கி கொண்டு வர சொல்வேன். அது முற்றிலும் ஒரு சைவ உணவகம். அந்த ஹோட்டல் பரோட்டா குருமாவிற்கு ஈடாக வேறு எங்கும் சாப்பிட்டதில்லை. மாலை நாலரை மணியிலிருந்து ஆறு மணிவரை மட்டுமே கிடைக்கும். அதற்காக காத்திருந்து வாங்க வேண்டும். ஆளுக்கு ஒரு பரோட்டாவும் (சற்று பெரியதாக இருக்கும்) ஒரு பரோட்டா இரண்டு ருபாய் என நினைக்கிறேன் (1985 வாக்கில்) பழைய ஹார்லிக்ஸ் பாட்டிலை நாலணாவோ எட்டணாவோ கொடுத்து வாங்கி அதில் குருமாவை வாங்கி கொண்டு வருவார்கள். இரவு எட்டரை மணிக்கு சிலசமயம் இன்னும் லேட்டாக வரும் திருப்பஞ்சலி செல்லும் 7 ஆம் நம்பர் டவுன் பஸ்சுக்காக மாலை ஆறுமணியிலிருந்து காத்திருப்போம். அந்த ஒரு பரோட்டாவை அரைமணிநேரம் சிறிது சிறிதாக பிய்த்து சாப்பிடுவோம்.

நான் ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை அருகிலுள்ள சிறுகாம்பூரில் படித்தேன். அங்கு பல ஹோட்டல்கள் இருக்கும் ஆனால் நான் இரண்டு ஹோட்டல்களில் மட்டும் பரோட்டா வாங்கி சாப்பிட்டிருக்கிறேன். சென்னைகரையார் கடையில் ஒரு பரோட்டா ஐம்பது பைசா. அங்கே மதியம் பட்டாணி சுண்டல் கிடைக்கும். நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஒரு சுண்டல் நாலணா!

மதிய சாப்பாட்டிற்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் சுண்டல் வாங்கி அம்மா கொடுத்தனுப்பிய மத்திய உணவுடன் சாப்பிடுவேன். அப்பொழுது என்னுடைய தினப்படி பை பணம் (Pocket Money) இருபத்தியைந்து பைசா. எங்கள் பள்ளியிலேயே ஆசிரியர்கள் நடத்திய நேர்மைக்கடையில் இடைவேளையில் முறுக்கு வாங்கி சாப்பிடாத நாட்களில் சுண்டல் வாங்கி சாப்பிடுவேன்.

என்னுடைய பள்ளி தோழர்கள் யாராவது சென்று (பெரும்பாலும் ரகுபதி) இடைவேளை நேரத்தி வாங்கி வருவார்கள். ஒரு சிறிய வாழை இலையில் இரண்டு கரண்டி சுண்டலை வைத்து அடியில் துண்டு செய்தி தாளை வைத்து அழகாக மடித்து தருவார்கள். 11 மணிக்கு சூடாக கிடைக்கும்.

இலை பரோட்டா
இலை பரோட்டா

மற்றொரு ஹோட்டல் கண்ணா டீ ஸ்டால். என்னுடைய ஜூனியராக படித்த அவருடைய மகன் கண்ணனின் பெயரில் ஹோட்டல் நடத்தினார். அங்கு ஒரு பரோட்டா ஒரு ரூபாய். கொஞ்சம் பெரியதாக இருக்கும் ஒன்று சாப்பிட்டால் ஓரளவு திருப்தி பட்டு கொள்ளலாம். தினப்படி காசை சேர்த்து வைத்து ஒரு ருபாய் கிடைத்தால் பள்ளி முடிந்தவுடன் கண்ணா டீ ஸ்டால் போய் ஒரு ருபாய் கொடுத்து டிபன் பாக்ஸில் ஒரு பரோட்டாவை பிய்த்துப்போட்டு குருமா ஊற்றி வாங்கி கொண்டு வீட்டிற்கு செல்வேன்.

பள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்ல சைக்கிளில் ஒரு அரை மணிநேரம் ஆகும். வீட்டிற்கு சென்று கைகால் கழுவி முடித்து அசுவாசப்படுத்த ஒரு அரை மணிநேரம் ஆகும். ஒரு மணி நேரத்திற்குள் அந்த பித்து போட்ட பரோட்டா குருமாவில் ஊறி குருமா முற்றிலும் இஞ்சிவிடும். பிறகு எடுத்து சாப்பிட்டால் "ஆஹா...ஆஹா ..... அந்த சுவைக்கு ஈடு இணை ஏதுமில்லை...."

லேயர் லேயராக இருக்கும் பரோட்டாவை பித்து போட்டு அதன் மேல் குருமாவை நிறைய ஊற்றி முற்றிலும் ஊறாத ஒருவித மொறுமொறுப்புடன் குருமாவை வழித்து சாப்பிடும் அந்த சுவைக்கு இணை ஏதுமில்லை.
ஆனந்தகுமார் முத்துசாமி

என்னடா இவன் எதுக்கெடுத்தாலும் இதற்கு ஈடு இணை ஏதுமில்லை என்று ஒவ்வொரு ஹோட்டல் பரோட்டாவை பற்றி கூறுகிறானே என்று நீங்கள் புருவம் உயர்த்துவது எனக்கு தெரிகிறது. ஆனால் வெவ்வேறு காலகட்டத்தில் நான் ருசித்த பரோட்டா பற்றிய சுவையான தருணங்கள் அவை. வேறு வழியில்லை அப்படிதான் கூறவேண்டும். அது உண்மையும் கூட.

பரோட்டா
பரோட்டா

அதேபோல கல்லூரி காலத்தில் திருச்சி கோட்டை ஸ்டேஷன் ரோட்டிலிருந்த வெண்ணிலா ரெஸ்டாரண்டில் முட்டை கொத்து பரோட்டா ரொம்ப ஸ்பெஷல். எண்ணையில் பொறித்த விருதுநகர் பொரிச்ச பரோட்டாவை முட்டை மற்றும் சால்னா ஊற்றி கல்லில் போட்டு கொத்தி சுட சுட வாயில் போட்டு வாய்க்குள்ளேயே அதனை உருட்டி சற்று சூடு ஆறியவுடன் சாப்பிடும் அனுபவம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரிந்த விஷயம். சத்திரம் பஸ்ஸ்டாண்ட் சுவாதி ஹோட்டலில் கைமா பரோட்டா சாயங்காலம் 5 மணி முதல் கிடைக்கும். அது ஒரு தனி சுவை.

இங்கு மேலே நான் குறிப்பிட அணைத்து உணவகங்களும் இன்று கால மாற்றத்தில் காணாமல் போய்விட்டது. ஆனாலும் பரோட்டா மற்றும் சுவையான சைவ சால்னாவின் எனது தேடல் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஓரளவு திருப்தி அளிக்கும் வகையில் சில உணவகங்களில் கிடைத்தாலும் நான் இன்னும் அந்த பழைய ஞாபகத்தில் ஒப்பீடு செய்து தேடி கொண்டேயிருக்கிறேன்.

பரோட்டா
பரோட்டா

பிற்பாடு பல வகையான பரோட்டாக்கள் முட்டை பரோட்டா, வீச்சு பரோட்டா, மட்டை லாப்பா, முட்டை கொத்துபரோட்டா (சைவ குருமா ஊற்றி), சில்லி பரோட்டா, கைமா பரோட்டா, சிலோன் பரோட்டா, பண் பரோட்டா என்று பல வித பரோட்டாக்களை ருசி பார்த்திருந்தாலும் அந்த லேயர் லேயராக இருக்கும் பரோட்டாவை பித்து போட்டு அதன் மேல் குருமாவை நிறைய ஊற்றி முற்றிலும் ஊறாத ஒருவித மொறுமொறுப்புடன் குருமாவை வழித்து சாப்பிடும் அந்த சுவைக்கு இணை ஏதுமில்லை.

பலரும் பரோட்டாவை பற்றி எழுதியிருந்தாலும் எனக்கும் என்னவோ அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. யாரேனும் வேற ஏதாவது சொல்லுப்பா என்று கருத்து சொல்ல கூடும், ஆனால் இந்த பரோட்டாவை ஒரே உணவகத்தில் சாப்பிட்ட இருவேறு நபர்களின் அனுபவம் வேறாகத்தான் இருக்கமுடியும் அது போலவே இதுவும்.


அன்புடன்,

ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.