Published:Updated:

எளிதாக நினைவில் நிற்கும் பாஸ்வேர்டுகளை உருவாக்குவது எப்படி? - சில டிப்ஸ்

Representational Image
Representational Image

வலுவான கடவுச்சொல் வைப்பதில் சிக்கல் என்னவென்றால் அச்சொற்களை ஞாபகம் வைத்துக்கொள்வது பலருக்கும் எளிதல்ல.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

2007 ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், இணையத்தை பயன்படுத்தும் ஒருவருக்கு, சராசரியாக 25 கடவுச்சொற்கள் தேவைப்படும் அளவுக்கு கணக்குகள் இருந்தன என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் உலகம் இணையமையத்தை நோக்கி நகர்ந்ததால் இந்த எண் மேலும் அதிகரித்திருக்குமே தவிர குறைந்திருக்காது. உதாரணத்திற்கு, நம்மில் பலர் முகநூல், கூகுள், வங்கி கணக்கு, கூகுள் பே என பலவற்றை வைத்திருப்போம்.

கடவுச்சொல் / பாஸ்வேர்ட் நம் வீட்டின் சாவி போன்றது. ஒரு சாவி எப்படி வீட்டின் உரியவருக்கு மட்டும்அனுமதி தருகிறதோ, ஒரு கணக்கின் கடவுச்சொல் அந்த கணக்கின் உரியவருக்கு மட்டுமே அனுமதி கொடுத்து பாதுகாக்கிறது.

Representational Image
Representational Image

எனவே கடவுச்சொல் வலுவாக இருக்க வேண்டும். பொதுவாக கடவுச்சொல்லில் நான்கு வகையான எழுத்துக்கள் இருந்தால் வலுவாக இருப்பதாக கூறுவார்கள்.( - a-z, A-Z, 0-9, !.@ ). நாவகை எழுத்துக்கள் கொண்ட கடவுச்சொல் பிறரால் யூகிக்க கடினமாக இருந்தால் மட்டுமே அது பாதுகாப்பு தரும். உதாரணத்துக்கு, Passw0r!d எனும் கடவுச்சொல்லில் நாவகை எழுத்துக்கள் இருந்தாலும் அது பிறரால் யூகிக்க முடியும் என்பதால் அது வலுவான கடவுச்சொல் ஆகாது.

வலுவான கடவுச்சொல் வைப்பதில் சிக்கல் என்னவென்றால் அச்சொற்களை ஞாபகம் வைத்துக்கொள்வது பலருக்கும் எளிதல்ல. உதாரணத்திற்கு a5Qw^Qg9*F போன்ற சொல் பிறரால் யூகிப்பதற்கு கடினமாக இருக்கும் ஆனால் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ளவும் கடினமாக இருக்கும். ஆகையால் பலர் எளிதான Welcome@123 போன்ற கடவுச்சொற்களை தேர்ந்தெடுக்கின்றனர். இந்த மாதிரியான வலுவில்லா கடவுச்சொற்களால், இணைய கணக்குகள் எளிதாக திருடுப்போகின்றன. ஆகையால் நம் கடவுச்சொற்கள் வலுவானதாகவும் இருக்க வேண்டும், எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ளும் படியாகவும் இருக்க வேண்டும். இங்கு, அவ்வகையான கடவுச்சொற்களை உருவாக்குவதற்கான ஒரு சில வழிகளை பகிர்கிறேன்.

Representational Image
Representational Image

நாம் ஒரு சொல்லை மட்டுமே கடவுச்சொல்லாக வைத்தால், அந்த சொல்லை பிறரால் எளிதாக யூகிக்க முடியும். அதுவே, இரண்டு சொற்களை செர்த்து வைத்தால் யூகிப்பது சிறிது சிரமமாகும். உதாரணத்துக்கு, ‘சென்னை’ என்று வைக்காமல் ‘சிங்கார சென்னை’ என்று வைத்தல். ஆனால் இந்த கடவுச்சொல்லையும் யூகிக்க முடியும். யூகிப்பதற்கு கடினமான கடவுச்சொல் என்றால் அது பிறருக்கு அர்த்தமில்லாததாகவும், அதன் அர்த்தம் நமக்கு மட்டும் விளங்கும்படியாக இருக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்களுக்கு எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ளும் படியான 5-8 சொற்களை கொண்ட வாக்கியம் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்கு பிடித்த திருக்குறள், பழமொழி அல்லது கவிதையைக் கூட எடுத்து கொள்ளலாம். முத்துக்களை கோர்த்து மாலையாக்குவது போல் அந்த வாக்கியத்தில் உள்ள சொற்களின் முதல் எழுத்துக்களை கோர்த்து ஒரு புதிய சொல் செய்தால், அந்த சொல் பிறருக்கு அர்த்தமில்லாததாகவும், நமக்கு மட்டும் அதன் அர்த்தம் விளங்கும்படியாகவும் இருக்கும். இந்த சொல் யூகிப்பதற்கு கடினமாக இருக்கும், அதே சமயத்தில் நமக்கு ஞாபகம் வைத்துக்கொள்வதற்கும் எளிதாக இருக்கும். இந்த சொற்களுடன், எண்களையும் குறிகளையும் சேர்த்தால், அது வலுவான கடவுச்சொல்லாக இருக்கும். சில உதாரணங்கள்:

  • வாக்கியமாக இந்த திருக்குறளை எடுத்துக்கொள்ளலாம்:

ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்

செல்லும்வாய் நோக்கிச் செயல்.

இதை ஆங்கிலத்தில், Ollumvaai ellam vinnainanre ollalkkal chellumvaai nokki cheyal என்று எழுதல்லாம்.

Representational Image
Representational Image

இதன் முதல் எழுத்துக்களை கொர்த்தால், Oecocnc எனும் கடவுச்சொல் கிடைக்கும். இதை வலுவாக்குவதற்க்கு, எண்ணும் குறியும் சேர்க்க வேண்டும். '673' (இந்த குறளின் எண்) என்ற எண்ணும், '#' என்ற குறியையும், சேர்த்தால் Oecocnc673# என்ற வலுவான கடவுச்சொல் கிடைக்கும். 673 மற்றும் # பதிலாக வேறேதும் எண்ணையும் குறியையும் எடுத்து, வேறொரு இடத்தில் கூட சேர்த்துக்கொள்ளலாம். உதாரணத்திற்க்கு, 6க்கு பதிலாக 6க்கு மேல் விசைப்பலகையில் இருக்கும் குறி சேர்த்தால், Oecocnc^73 என்ற வலுவான கடவுச்சொல் கிடைக்கும். 673 என்பதால், 673 இருக்கும் எழுத்துக்களை பெரிய எழுத்துக்கள் ஆக்கினால் oeCocNC என்று கிடைக்கும். இத்துடன் எண்ணும் குறியும் சேர்த்து வலுவான கடவுச்சொல் உண்டாக்கலாம் (oeCocNC3#, oeCocNC5!).

  • வாக்கியம்: கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?

ஆங்கிலத்தில்: Kottinaal thel, kotthavittal pillai poochiya?

கடவுச்சொல்: Ktkpp?

எண்கள் சேர்த்தல்: K3t4k5p6p7?

  • வாக்கியம்: India has 28 states and 8 union territories!

கடவுச்சொல்: Ih28sa8ut!

அடுத்த பதிவில், இணையக்கணக்கு திருட்டுப்போவதால் வரும் சிக்கல்கள் (spear-phishing attacks, data breaches) குறித்து பகிர்கிறேன்.


-அருண் பழனியப்பன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு