Published:Updated:

சுருள் கேமராவில் 36 போட்டோக்கள் எடுத்தபோது இருந்த திருப்தி இப்போ இல்ல, ஏன்?

Representational Image
Representational Image

எடுத்த புகைப்படங்களை எந்த வித ஆவணங்களாகவும் பத்திரப்படுத்துவதில்லை. டிஜிட்டல் குப்பைகளாக சேர்த்து வைத்திருக்கிறோம் எந்த வித உபயோகமும் இல்லாமல் என்பது குறிப்பிடத்தக்கது...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு புகைப்படம் உயிர்கொள்வது

நம் நினைவுகளால் மட்டும்தான்!


ஒவ்வொரு வீடுகளிலும் புகைப்படம் என்பது ஒரு பொக்கிஷம் போல வைக்கப்பட்டிருக்கும். தாத்தா அமர்ந்திருக்க பயபக்தியுடன் பாட்டி நின்றிருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படம், 80களில் ஒடிசலான தேகத்தில் தொங்கிய மீசையுடன் பெல்பாட்டம் அணிந்த அப்பா நின்றிருப்பது, புலியை முறத்தால் அடித்த பார்வையுடன் அம்மா ஆப் சாரியில் வெறித்துப் பார்ப்பது, 90களில் சோழர் பரம்பரையிலேயே முதலாவது கோட் சூட் அணிந்த மாமாக்கள் என ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு காலகட்டத்தையும் புகைப்படத்தில் பார்த்தவுடன் அவர்களின் நினைவூற்று ஆர்டிசன் கிணறு போல பொங்கும்.

Representational Image
Representational Image

டிஜிட்டல் யுகத்தின் காலகட்டத்திற்கு முன்பு வரை கூட குழந்தைகளின் ஆல்பம், ஊட்டிக்கு போன பயணம் என வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கு காண்பிக்கக் கூட ஏதாவது இருக்கும். அதன் பிறகு டிஜிட்டலில் மறுமலர்ச்சி போல "கண்டதும் சுட்டான் போட்டோகிராபர் ஆனான்" எனும் அனுபவ மொழி வந்தது. உலகம் முழுவதுமே இந்த பழக்கம் வந்துவிட்டது.

எடுத்த புகைப்படங்களை எந்த வித ஆவணங்களாகவும் பத்திரப்படுத்துவதில்லை. டிஜிட்டல் குப்பைகளாக சேர்த்து வைத்திருக்கிறோம் எந்த வித உபயோகமும் இல்லாமல் என்பது குறிப்பிடத்தக்கது.

#அந்தக்காலம் அது அது

இன்றைய டிஜிட்டல் போன்களின் 'ரோல்'மாடல் அன்றைய கேமராக்களே. ஒன்றாவது படிக்கும் போது ஒரு வெள்ளிக்கிழமை நாளில் எல்லாரும் தலைக்குக் குளித்து.. ட்ரங்க் பெட்டியில் இருப்பதிலேயே எடுத்து அடிக்கும் கலர் சட்டை அணிந்து (அப்பதான் முகம் நன்றாய் தெரியும் என்பது ஐதீகம்) காலர் பட்டன் போட்டு.. டிக் டிக் பேனாவோ, ரெனால்ஸ் பேனாவோ பாக்கெட்டில் சொருகி, டிஸ்கோ சீப்பால் நொடிக்கொரு முறை தலைவாரி பூச்சூடி போட்டோ எடுக்க போ என்றாள் அன்னை போல் அத்தனை பவ்யமாய் போனோம்.

Representational Image
Representational Image

போட்டோகிராபர் வருவது என்பது அரசியலுக்கு ரஜினி வருவது போல் அத்தனை இன்ப அதிர்ச்சியானது. எதையாவது மென்று கொண்டே வந்து எல்லாரையும் நேராய் நிற்க வைப்பார். பெல்ட் இல்லாதவன் அரைஞாண் கயிறுக்குள் சட்டையை செருகி.. சிரித்தால் போட்டோ ப்ளாஷ் அடிக்கும். எல்லாரும் அந்த பென்ச்சிலிருந்து இறங்கும்போது அப்படியே ஆஸ்கர் விருது வாங்கிட்டு இறங்கி வருவது போல இருக்கும். ஒருவாரம் கழித்து பார்க்கும் போது.. அடேய் நீதானா நீதானா.. அட நான் தானா நான் தானா என ரசித்துப் பார்ப்போம்.

குடும்ப போட்டோ எடுப்பது தனிக்கதை. ஸ்டூடியோவில் உள்ள வட்ட வடிவ நாற்காலியில் அப்பா அமர்ந்திருக்க.. மை இட்டால் அழகா இருப்பேனு அம்மாகிட்ட சொல்ல அவங்களும் அருகில் நிற்க, கனகாம்பரமோ மல்லிகையோ சூடிக்கொண்டு சகோதரியும் நிற்பார்கள். சிரிச்சாப் போச்சு ரவுண்டுக்கு போன மாதிரி ஒருத்தரும் சிரிக்க மாட்டோம். இறந்தவருக்கு பதினாறு கும்பிட படையல் போட்டு, காக்கா எடுக்குமானு பார்ப்பது போல சிலை மாதிரி நிற்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

*தொண்ணூறுகளில் ஓவல்சைஸ் கூலிங் கிளாஸ் பிரபலம். கன்னம் வரைக்கும் மறைக்கும் வகையில் இருக்க அதில் ஒரு போட்டோ எடுப்பார்கள்.


*கழுத்தில் மைனர் செயின், புலி நகம் போன்றவை இருந்தால் இன்னும் சிறப்பு.


*தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்த்து எடுத்தால் முடி கருமையாய் தெரியும் என்பதால் போட்டோ எடுக்கப் போகும் போது அதிகம் தேய்த்துக் கொண்டு போவார்கள்.


*தலைமுடி வழித்து சீவியிருந்தால் அப்பாவி என நம்புவதைப் போலத்தான் மீசையை நுனி ஒரம் ஒழுகும் படி இறக்கி வைத்திருப்பார்கள்.


*பெண்கள் நீளமான தலைமுடியில் இரட்டை ஜடையிட்டு ஒரு ஜடையை மட்டும் முன்னால் போட்டு ஸ்டைல் காட்டுவார்கள்


*குடும்பப் பெண்கள் இருக்கிற நகைகள் அனைத்தையும் அணிந்தபடி புகைப்படம் எடுப்பதை கெளரமாய் கருதினர்.


இவ்வாறு அரிய தருணங்களை விளக்கும் அற்புத புதையலாய் நினைத்து பாதுகாத்து வருகின்றனர். இன்றைய காலத்தில் இது போல் புகைப்படங்களை காக்கிறோமா என்பது கேள்விக்குறியே.

Representational Image
Representational Image

#சகட்டுமேனிக்கு புகைப்படம்

டிஜிட்டல் யுகத்தில் ஒரு நல்ல புகைப்படத்தின் ஆயுள் மொபைலில் மெமரி புல் என்று காட்டும் வரைதான்.! பேனா வாங்கியவுடன் எழுதுகிறதா என சரிபார்ப்பது போலத்தான்.. மொபைல் வாங்கியவுடன் போட்டோ எடுத்துப் பார்ப்பதும்.ஆகாயத்தைப் பார்ப்பது,கடைவாயில் கைவைத்து யோசிப்பது, கப்பல் கவிழ்ந்தது போல் கன்னத்தில் கைவைத்து கவிஞர் போலபோஸ் கொடுப்பது,இருட்டில் அஞ்சு கொலை செய்தது போல் கொடூரமாய் பார்ப்பது என போட்டோ எடுத்துத் தள்ளியதும் வாட்ஸ் அப்,ட்விட்டர், முகநூல்,இன்ஸ்டாவில் பகிர்ந்து.. பத்து பேருக்கு tag செய்தால் தான் மனசு ஆறும்.bலைக் போடலைனா ரத்த வாந்தி வரும் ரேஞ்சுக்கு பகிர்தல் இருக்கும். லைக் போட்ட பாவத்துக்கு.. ஐம்பது பேர் கமெண்டுகளும் நமக்கும் வரும் போது தான் ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல எனும் ஜென் நிலை அடைவோம்.

இயற்கைக் காட்சி, சுற்றுலாத்தளம் என எங்கு சென்றாலும் ரசிக்கும் தன்மையின்றி.. எதிர்காலத்தில் ரசிக்க புகைப்படம் எடுக்கிறோம். நல்ல மனிதர்களை கண்டால் உரையாடும் வழக்கம் சுருங்கி.. உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு சமூக வளைதளங்கில் பதிவிடுகிறோம். முந்தைய ஆட்டோகிராப் வாங்குவதன் அப்டேட் வெர்சன் செல்ஃபி எடுப்பது என்றாகிவிட்டது.

சுருள் கேமராவில் 36 போட்டோக்கள் மட்டும் எடுக்கும் போது நிதானம், தெளிவு, கம்போஸிங் ஆகியவை இருக்கும். ஆனால் தற்போது எந்தவித தெளிவும் இன்றி எடுத்துத் தள்ளுகிறோம்.ஒரு கட்டத்தில் மொபைல் ஹேங்க் ஆகும் சூழ்நிலை வரும் போது ஆசையாக எடுத்த அத்தனையும் தயவுதாட்சன்யமின்றி அழித்துவிடுகிறோம்.

Representational Image
Representational Image

டிஜிட்டல் யுகத்தில் ஆல்பம் போட்டு வைப்பதெல்லாம் மலையேறிவிட்டது. ஒரு முறை எடுத்த புகைப்படத்தை நாமே கேலரிக்கு சென்று பார்ப்பதில்லை.அந்த நேரத்திற்கு மட்டும் கோணம் சரியாய் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு மறந்து விடுகிறோம்.புகைப்படம் என்பதே கடந்த காலத்தை நினைவுபடுத்தும் பொக்கிசம் என்பதை உணராமல் செய்துவிட்டது காலம்.

பல நூறு வார்த்தைகள் பேசுவதை ஒரே ஒரு புகைப்படம் பேசும் என்பார்கள். ஆனால் நவீன யுகத்தில் புகைப்படக் கலையை கற்றுக் கொள்ளக்கூட ஆர்வமின்றி கணக்கற்ற புகைப்படங்களை எடுக்கிறார்கள். சுற்றுலா அனுபவம் என்பது நினைவுகளை மூளையில் பதிய வைத்து.. தேவைப்படும் போது மீட்டெடுத்து அதை அனுபவமாக மாற்றும். ஆனால் தற்போது அந்தச் சிந்தனையையே மழுங்கடித்து போட்டோ எடுப்பதை மட்டும் நினைவில் வைத்து செல்கிறோம்.

எடுத்தவுடன் அந்த இடத்தை விட்டு அடுத்த இடத்திற்கு போட்டோ எடுக்கச் சென்றுவிடுகிறோம்.

இன்னொரு சாரார் தன்னை எத்தனைப் புகைப்படம் எடுத்துக் கொண்டாலும் திருப்தி கொள்வதில்லை.விதவிதமாய் எடுத்துக் கொண்டே இருந்தால் தான் திருப்தி. கொரொனா காலத்தில் கூட பலர் இயலாதோர்க்கு உதவி செய்தனர். சிலர் உதவி பெற்றவரின் மகிழ்ச்சியை மட்டும் புகைப்படம் எடுக்காமல் உதவி செய்வதையும் புகைப்படம் எடுத்து வலைதளங்கில் பகிர்கின்றனர். உதவி பெற்றவரின் நிலையிலிருந்து ஒரு முறை எண்ணிப் பாருங்கள். அது எத்தனை வலி நிறைந்தது என்று தெரியும்.

முக்கியமானவர்களின் பேச்சினை, பிரபலங்களின் வருகை, செயற்கையாய் குழந்தைகளை போஸ் கொடுக்கச் செய்வது என அந்தந்த நேர மகிழ்வினை அனுபவிக்காமல் போட்டோ எடுத்து மெமரி கார்டை நிரப்புகிறோம்.

சுருள் கேமராவில் 36 போட்டோக்கள் மட்டும் எடுக்கும் போது நிதானம், தெளிவு, கம்போஸிங் ஆகியவை இருக்கும். ஆனால் தற்போது எந்தவித தெளிவும் இன்றி எடுத்துத் தள்ளுகிறோம்.ஒரு கட்டத்தில் மொபைல் ஹேங்க் ஆகும் சூழ்நிலை வரும் போது ஆசையாக எடுத்த அத்தனையும் தயவுதாட்சன்யமின்றி அழித்துவிடுகிறோம்.
மணிகண்டபிரபு

புகைப்படத்திற்கான அடிப்படை விதிகள் சரியான கோணமும் தூரமும் தான். தேவையான வெளிச்சம், நிதானம், பிண்ணனி மற்றும் தேவையற்ற பொருட்களை ஃப்ரேமிலிருந்து தவிர்த்து எடுப்பதும் தான். பெரும்பாலும் புகைப்படம் எடுப்போரின் முக்கிய லாஜிக் பத்து போட்டோ எடுத்தால் ஒன்று சரியாய் வரும் என்பதுதான்.. அது தவறு. ஒன்று எடுத்தாலும் நன்றாய் ரசித்து, சரியான கோணம் வைத்து எடுத்தாலே போதும் அருமையாய் இருக்கும்.இணைய குப்பைகளை சுத்தப்படுத்த வேண்டியதில்லை.

வாழ்வின் அரிய அனுபவங்களை நிகழ்வுகளை புகைப்படங்களாக பதிவு செய்வோம். உங்களின் கேமரா தூரிகை போல. அதில் அழகான ஓவியங்களாக புகைப்படம் எடுக்க வேண்டும். பொழுது போக்கிற்கு எடுத்தாலும் இயற்கையின் ஒளியை நேர்த்தியாக கையாண்டு அந்த தருணத்தை மறக்கவியலா நினைவுகளாக பதிவு செய்வோம். புகைப்படம் எடுப்பதில் அடுத்த நிலைக்கு செல்வோம்.


-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு