ஊறுகாய் என்றதும் என் நினைவுக்கு வரும் ஒரே நபர்... விஜயவாடாவில் இருக்கும் எனது சின்ன மாமியார். அட ஆமாங்க ஒவ்வொரு வருடமும் மே மாதம் அவர்கள் எப்பொழுது வருவார்கள் என்று நாங்கள் அனைவரும் காத்துக் கொண்டிருப்போம் .
ஆம் .. அவர்கள் வரும்போது ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெரிய பெரிய கண்ணாடிப் பாட்டில்களில் கலாக்காய் ஊறுகாய் ,பாகற்காய் ஊறுகாய் ,அவர்களின் ஸ்பெஷல் எலுமிச்சை ஊறுகாய் ,பூண்டு ஊறுகாய், வெஜிடபிள் ஊறுகாய், எலுமிச்சம் பழ இனிப்பு ஊறுகாய், பெரிய நெல்லி ஊறுகாய் காலிஃப்ளவர் ஊறுகாய் என விதவிதமாய்,ரக ரகமாய் , கலர்கலராய்... பாட்டில்களில் எண்ணெய் மிதக்க மிதக்க எடுத்து வருவார்கள். (கணவர், மைத்துனர் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும்போதே இன்று சித்தி வந்து இருக்கிறார்கள். அவர்களின் ஊறுகாய் வாசம் தெரு முனையிலேயே தெரிகிறதே என்பர்... )

அந்த அளவுக்கு அருமையாக இருக்கும் அவர்கள் கைப் பட்ட ஊறுகாய். மூடியைத் திறந்ததுமே எண்ணெய் மிதக்க மிதக்க இருக்கும் ஊறுகாயில் அவர்களின் அன்பு, பாசம் எல்லாம் நிரம்பி வழியும். வருடாவருடம் எது தவறு கிறதோ இல்லையோ அவர்கள்போடும் ஊறுகாய்வரத் தவறுவதே/ தவறியதே இல்லை.
ஒரு வருடம் அவர்கள் வர சந்தர்ப்பம் அமையவில்லை என்றாலும் யாரிடமாவது எங்களுக்கு ஊறுகாயை கொடுத்துஅனுப்பிவிடுவார்கள். கைமணம், கைமணம் என்று சொல்வோமே அது அவர்களிடம் கொஞ்சம் அதிகம். அந்த ஊறுகாயில்சேர்க்கும் மசாலாப் பொருட்களைக் கூட அவர்கள் மிஷினில் கொடுக்காமல் அம்மியில் வைத்து அல்லது உரலில் இடித்து தான் செய்வார்களாம். (இதை அத்தை தெலுங்கில் சொல்ல நான் தமிழில் புரிந்து கொண்டது ) (ஆம் ..என் அத்தைக்கு ஒரு வார்த்தை கூட தமிழ் தெரியாது. எனக்கு ஒரு வார்த்தை கூட தெலுங்கு தெரியாது .ஆனால் இருவரும் நல்ல தோழிகள்)(எங்கள் இருவரின் பேச்சும் 'மொழி' ஜோதிகா போல் தான் இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமாமாதான் (சின்ன மாமனார் தான்) எங்களின் மொழிபெயர்ப்பாளர். உரலில் போடும் உலக்கை போல் இருவரிடமும் மாட்டிக்கொண்டு முழிப்பார்) ஊறுகாய் எடுத்து வருவதோடு மட்டுமல்லாமல் அந்த ஊறுகாய் பாட்டிலில் கர்வமாய் வீற்றிருக்கும் மர ஸ்பூன்கள் இருக்கிறதே! அது ஒவ்வொன்றும் விதவிதமாய் , அழகழகாய் இருக்கும். அதையெல்லாம் அத்தை பார்த்து பார்த்து விஜயவாடாவில் வாங்கியதாக சொல்லுவார்கள்.

எங்கள் வீட்டில் தங்கும் சமயங்களில் அவர்களுக்கு எங்களது சமையல் பிடிக்கவில்லை எனும் பட்சத்தில் சோற்றில் அவர்கள் எடுத்து வரும் ஊறுகாயைப் போட்டே பிசைந்து சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் போது, அதை பிசைந்து எனக்கும் ஒரு வாய் ஊட்டுவார்கள் அத்தையின் அன்பே... அன்பு.
ஒவ்வொரு முறை வந்து விட்டு திரும்பி செல்லும்போது உனக்கு என்ன ஊறுகாய் பிடிக்கும் என்று சொல் 'ஆதிரை' அடுத்தமுறை வரும்போது அதை இன்னும் அதிகம் எடுத்து வருகிறேன் என்பார். அவரின் அன்புக்கு நான் அடிமை. அதிலும் அவர் எடுத்து வரும் பெரிய நெல்லிக்காய் மற்றும் கலாக்காய் ஊறுகாய் இருக்கிறதே... அதை சாப்பிட வேண்டாம் ....?! அதை நினைத்தாலே வாயில் எச்சில் ஊறும். அந்த ஊறுகாய் வரும் சமயங்களில் எங்கள் வீட்டில் இட்லி ,தோசை ,பழைய சாதம் இப்படி எல்லாவற்றிற்கும் அந்த ஊறுகாய் தான். நான் கலாக்காய் ஊறுகாயை ஒருமுறை செய்து... பிரபல பண்பலை வானொலியில் பரிசு பெற்றது இன்னமும் நினைவில் உள்ளது (அவர்களிடம் கேட்டு)!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கலாக்காய் கழுவித் துடைத்து இரண்டாகக் கீறி விதைகளை நீக்கி விட வேண்டும்.
பிறகு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து கலாக்காய், உப்பு சிறிதளவு கடுகுத்தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் . சிறிது வெந்து மென்மையானதும் மிளகாய் அரைத்த விழுது, (அல்லது தனி மிளகாய்த்தூள்) (அவர்கள் காய்ந்த மிளகாயை வறுத்து இடித்து சலித்து பிறகு சேர்ப்பார்களாம்) வெந்தயப்பொடி,பெருங்காயப் பொடி ,சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். இதை உடனே சாப்பிடலாம். ஒரு மாதம் வரை நன்றாக இருக்கும்.

இப்படி அத்தை எடுத்து வரும் ஒவ்வொரு ஊறுகாயின் பின்னாடியும் ஒவ்வொரு அழகிய கதை உண்டு. அவர்கள் எடுத்துவரும் பாகற்காய் ஊறுகாயில் சிறிது கூட கசப்பு தெரியாது வாயில் போட்டால் வயிற்றுக்குள் இறங்கும் . அவர்களின் புளிச்சக்கீரை கோங்குரா ஊறுகாய்க்கு வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் அடிமை என்றே சொல்லலாம். அவ்வளவு அருமையாக இருக்கும். ஒரு கட்டு புளிச்சக்கீரையை இலைகளாக கிள்ளிகழுவித் துடைத்து ஒரு துணியில் பரப்பி ஒரு மணி நேரம் உலர விட வேண்டும்(. ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு, வெந்தயம் ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய்15 இதை எண்ணெயில் வறுத்து பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்) எண்ணெயைக் காயவைத்து கீரையை சேர்த்து வதக்கவேண்டும்.
கால் கப் கொதிக்கும் நீரில் ஒரு எலுமிச்சம்பழ அளவு புளியை ஊற விடவேண்டும் வதக்கிய கீரை+ஊறிய புளி+வறுத்தரைத்த பொடி தேவையான உப்பு வெல்லம் சிறு துண்டு சேர்த்து மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு 6 பூண்டு பல்லை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தொக்கில்சேர்த்து கலக்க சுவையான புளிச்சக்கீரை ஊறுகாய் ரெடி .

ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு பழைய சாதத்தை சாப்பிட்டதெல்லாம் பொற்காலம். அதேபோல் அரைக்கிலோ பூண்டைத் தோலுரித்துக் கொண்டு, எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து கடுகு பொரிந்ததும் பூண்டைச் சேர்த்து நடுத்தரத் தீயில் வைத்து 5 நிமிடம் வதக்கி பின்னர் அதனுடன் ஒரு கப் எலுமிச்சை பழச்சாறு , அரை கப் மிளகாய்த்தூள் தேவையான உப்பு, வறுத்துப் பொடித்த வெந்தயம் பெருங்காயப் பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சாறு வற்றி எண்ணெய் மேலே மிதக்கும் போது அடுப்பை அணைத்து விடலாம் ஆறியபின் தொட்டுக்கொள்ள சுவையான பூண்டு ஊறுகாய் ரெடி.அத்தையின் கைப்பட்ட ஊறுகாய்கள் ஒவ்வொன்றும் ஒருஅழகிய கவிதை. நீங்களும் இப்படி விதவிதமாய் ஊறுகாய்கள் செய்து கோடையை ஜில்லென்று கழிக்கவும் ..சின்ன மாமியார்... மனதிற்குப் பிடித்த நெருங்கிய தோழி!
அத்தை லவ்யூ அத்தை.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.