Published:Updated:

இவர்களின் வரலாற்று மூலம் எங்கிருந்து தொடங்கியது ? | சொல்தாக்கள் – 3 | My Vikatan

Representational Imag

சொல்தாக்களிடம் குறைகள் கேட்கவும், அவர்களுடைய விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளவும் புதுச்சேரி பிரெஞ்சு கோன்சுலா (Consulate) பிரதிநிதிகள் சில மாதங்களுக்கு ஒரு முறை காரைக்காலின் அலியான்ஸ் பிரான்சே அலுவலகத்துக்கு வருவார்கள்.

இவர்களின் வரலாற்று மூலம் எங்கிருந்து தொடங்கியது ? | சொல்தாக்கள் – 3 | My Vikatan

சொல்தாக்களிடம் குறைகள் கேட்கவும், அவர்களுடைய விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளவும் புதுச்சேரி பிரெஞ்சு கோன்சுலா (Consulate) பிரதிநிதிகள் சில மாதங்களுக்கு ஒரு முறை காரைக்காலின் அலியான்ஸ் பிரான்சே அலுவலகத்துக்கு வருவார்கள்.

Published:Updated:
Representational Imag

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

பிறந்த மண்ணின் தமிழ் பண்பாட்டுடன், பிழைக்கச் சென்ற பிரெஞ்சு மண்ணின் பண்பாடும் கலந்த பிரெஞ்சு தமிழ் பண்பாட்டில் வாழ்ந்த சொல்தாக்களின் பிரதான பண்டிகைகளாகக் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புதுவருடப்பிறப்பு ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

டிசம்பர் மாதம் முதல் தேதியிலிருந்தே சொல்தாக்களின் வீடுகளில் களைகட்டிவிடும். கிறிஸ்துமஸ் அறிகுறியாக அனைத்து வீட்டு வாசல் பல்புகளும் கலர் காகித நட்சத்திர குல்லாக்களை மாட்டிகொள்ளும். அவற்றில் சில நட்சத்திரங்களும் பிரெஞ்சு கொடி கலர்களில் ஒளிரும் ! செபமாலை சொல்தா மாமா வீட்டு வராந்தாவில் அமைக்கப்படும் கிறிஸ்துமஸ் குடிலை பார்க்கவே ஒரு கூட்டம் கூடும்.

ரெப்பா து நோயல் (Repas de Noël) எனப்படும் கிறிஸ்துமஸ் விருந்தில் வாத்து அல்லது வான்கோழி பிரியாணி கட்டாயம் உண்டு.

கிறிஸ்துமஸ் முடிந்த அடுத்த நிமிடமே சொல்தா குடும்பத்தினர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தயாராகத் தொடங்கிவிடுவார்கள் !

இவற்றுடன்,

போஞ்சூர் முசியே, ஜீ பூம்பா, டாக்டர் என்றெல்லாம், அவரவரின் அன்றாட அசாதாரண நடவடிக்கைகளுக்கு ஏற்ப "பட்ட பெயர்கள் " பெற்று விளங்கிய சொல்தாக்கள் மற்ற சராசரி சொல்தாக்களுடன் சேர்ந்து நகைப்பிற்கு இடமின்றி, கண்ணியமாய் ஒன்றுகூடிய சில வருடாந்திர நிகழ்வுகள் உண்டு...

சொல்தாக்களிடம் குறைகள் கேட்கவும், அவர்களுடைய விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளவும் புதுச்சேரி பிரெஞ்சு கோன்சுலா (Consulate) பிரதிநிதிகள் சில மாதங்களுக்கு ஒரு முறை காரைக்காலின் அலியான்ஸ் பிரான்சே அலுவலகத்துக்கு வருவார்கள்.

அலியான்ஸ் பிரான்சேவின் பியூன் அங்கும் இங்கும் ஓடி பரபரத்தபடி, பிரெஞ்சு படிக்க வருபவர்களிடம் தாழ்ந்த குரலில் பேசுமாறு சைகை செய்தாலே "புய்ரோ" (Bureau, அலுவலக அறை) உள்ளே கோன்சுலா அதிகாரிகள் இருக்கிறார்கள் எனக் கணித்துவிடலாம்!

Representational Image
Representational Image

போஞ்சூர் முகமனுடன் ஆரம்பிக்கும் ஓய்வூதிய பிரச்சனை, பிள்ளைகளின் படிப்புக்கான உதவித்தொகை போன்ற சொல்தாக்களின் தெமாந்துகளுக்கு (Demande விண்ணப்பம்) பெரும்பாலும்,

"தக்கோர், ஓன் வெர்ரா" (D’accord சரி, On verra பார்க்கலாம்) போன்ற பதில்களை மெல்லிய குரலில், மென்சிரிப்புடன் உதிர்ப்பார் பிரெஞ்சு அதிகாரி !

அதிகாரி புதுச்சேரி திரும்புவதற்கு முன்னர் பொ (Pot) கட்டாயம் ! பானங்கள் மற்றும் நொறுக்கு தீனிகளுடனான சிறிய பார்ட்டிக்கு பொ எனப் பெயர். பொவில் ஒயினும் ஷாம்பெய்னும் கட்டாயம் இடம்பெறும் !

ஐஸ் கட்டிகள் நிரப்பிய பிரத்தியேக எவர்சில்வர் வாளியில் ஷாம்பெய்ன் பாட்டிலைப் புதைத்து பியூன் ஏந்தி செல்லும் காட்சியை, பிரான்ஸ் கனவுகளுடன் பிரெஞ்சு படிக்க வந்தவர்களில் "டக்கு போடும்" வழக்கம் உள்ளவர்கள் ஏக்கத்துடன் பார்ப்பார்கள்.

அவர்களில்,

பார்ட்டியின் முடிவில் மிச்சமிருக்கும் பாட்டில்களைப் பெற பியூனிடம் விலை பேசியவர்களும் உண்டு… காலி பாட்டில்களை முகர்ந்து பார்த்தே போதை ஏற்றிக்கொள்ள முயற்சித்தவர்களும் உண்டு !

பிரெஞ்சு காலனியாதிக்க இந்திய வரலாற்றில் இன்றியமையாத இடத்தைப் பெற்றிருக்கும் சொல்தாக்களின் வரலாற்று மூலம் எங்கிருந்து தொடங்கியது ?...

இத்தொடரில் குறிப்பிடப்படும் சொல்தாக்கள் இரண்டாம் உலகப்போர் நடந்த 1940களில் அன்றைய பிரெஞ்சு ஜனாதிபதி சார்ல் து கோலின் (Charles de Gaulle) அழைப்பை ஏற்று பிரெஞ்சு ராணுவத்தில் இணைந்தவர்கள் என்றாலும், பிரெஞ்சு ராணுவத்துக்கும் இந்தியர்களுக்குமான உறவு முதலாம் உலகப்போரிலேயே தொடங்கிவிட்டது.
காரை அக்பர்

1914ல் தொடங்கிய முதலாம் உலகப்போரின் போது பிரிட்டன் தனது ஆட்சிக்கு உட்பட்டிருந்த இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து ஒன்றரை மில்லியன் இந்திய சிப்பாய்களைப் போரில் ஈடுபடுத்தியது. ஐரோப்பியக் கண்டத்தில் மட்டுமல்லாமல் ஈராக் தொடங்கி ஆப்ரிக்கா கண்டம், சீனா வரை அனைத்து போர் முனைகளிலும் ஆங்கிலக் காலனி அரசுக்காக நின்ற இந்தியர்களைக் கண்டு பிரான்சும் தன் ஆதிக்கத்துக்குக் கீழிருந்த இந்தியப் பகுதிகளில் சிப்பாய் வேட்டையில் இறங்கியது !

முதலாம் உலகப் போர்
முதலாம் உலகப் போர்

இதன் தொடர்ச்சியாக 1915ம் ஆண்டில், பிரெஞ்சு கட்டுப்பாட்டிலிருந்த இந்தியத் துணைக்கண்டத்தின் பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹே, யானம் மற்றும் சந்திரநாகூர் ஆகிய பகுதிகளில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்கான அழைப்பு அறிவிக்கப்பட்டது...

"இந்தியா பிரான்சுக்குப் பல வகைகளில் கடன்பட்டிருக்கிறது... எதிரிகளின் அபாயம் சூழ்ந்த இந்தக் காலகட்டத்தில் பிரான்சுக்குத் தோள் கொடுக்க வேண்டியது இந்தியர்களின் கடமை... பிரெஞ்சு ராணுவத்தில் சேருங்கள் ! ஆபத்தில் உதவியவர்களைப் பிரான்ஸ் என்றும் மறக்காது... அவர்கள் பிரெஞ்சு மண்ணின் மைந்தர்களாகவே பாவிக்கப்படுவார்கள் !" என்பதான மூளைச்சலவை அறிவிப்பு அது !

அதே போன்ற அறிவிப்புகளால், லட்சக்கணக்கில் பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து அந்த ராணுவத்தின் பல வெற்றிகளுக்கும் காரணமாக இருந்த, பிரெஞ்சு காலனிகளில் முக்கியமான ஒன்றாகத் திகழ்ந்த அல்ஜீரியா நாட்டு மக்கள் சுதந்திர போராட்டத்தின் போது காலனியாதிக்கப் பிரெஞ்சு அரசால் எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதெல்லாம் இருண்ட காலனியாதிக்க வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்.

அன்றைய பிரெஞ்சு ஆளுநரான அல்ப்ரெட் மர்த்தினோவின் (Alfred Martineau) அந்த அழைப்பை ஏற்று, பிரெஞ்சு இந்தியப் பிராந்தியங்களிலிருந்து ஒரு ஐம்பதுக்கும் குறைவான இந்தியர்கள் ராணுவத்தில் இணைந்திருக்கிறார்கள்.

இந்த முதல் தலைமுறை சொல்தாக்களில் புதுச்சேரிவாசிகளை பற்றிய தகவல்கள் தெரியவில்லை என்றாலும் , சந்திரநாகூரிலிருந்து சென்ற இருபத்தாறு பேர்களைப் பற்றிய சில விபரங்கள் வங்கதேச ராணுவ அதிகாரியான முஹம்மது லுத்புல் ஹக் முதலாம் உலகப்போர் ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதிய கட்டுரை ஒன்றில் காணக்கிடைக்கிறது.

இன்றைய கல்கத்தாவுக்கு முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் ஹூக்ளி நதிக்கரையில் அமைந்திருக்கும் சந்திரநாகூரிலிருந்து கோலாகலமான வழியனுப்பு விழாவுடன் கிளம்பிய இருபத்தாறு பேரும் ராணுவ பயிற்சிக்காகப் புதுச்சேரியை வந்தடைந்திருக்கிறார்கள். பயிற்சி காலம் முழுவதும் உயரதிகாரிகளிடம் நற்பெயர் பெற்ற இவர்கள் 1916ம் ஆண்டுப் பிரான்சுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

வெர்தன் (Verdun) போன்ற முக்கியப் போர்முனைகளில் போர் புரிந்த இவர்கள் அனைவருக்கும் சிறந்த சேவைக்கான இரண்டாம் உலகப்போர் நினைவு பதக்கம் வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் இவர்களில் ஒருவருக்கு "La croix de guerre" எனப்படும் உயரிய பிரெஞ்சு ராணுவ விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மூன்று வருடங்களைப் போர் முனைகளில் கழித்த பின்னர், சந்திரநாகூர் திரும்பிய இந்தக் குழுவின் மனோரஞ்சன் தாஸ் என்பவர் மட்டும் நோயுற்று பிரான்சிலேயே மரணமடைந்திருக்கிறார்.

Alliance française de
Alliance française de
Alliance française de Pondichéry Facebook page

ஜீலை 14ம் தேதி பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ஜனாதிபதி கொடியேற்றி ராணுவ மரியாதையை ஏற்றுக்கொள்வது, ராணுவ அணிவகுப்பு என நீளும் அன்றைய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக முதலாம் உலகப்போரில் மாண்ட வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதும் நிகழும்.

ஜூலை 14க்கு சில நாட்களுக்கு முன்னரே எங்கள் ஊர் சொல்தாக்களைப் பரபரப்புத் தொற்றிக்கொள்ளும் ! கவர்னர் மஹால் திடலில் அமைந்திருக்கும் ராணுவ வீரர்கள் நினைவிடம் சுத்தம் செய்யப்பட்டு, வெள்ளை அடிக்கப்படும்.

அலியான்ஸ் பிரான்சே முகப்பில் பிரெஞ்சு கொடி பறக்கும் ஜூலை 14ம் தேதி காலையில் உள்ளூர் காவலர்களின் அணிவகுப்புடன் சொல்தாக்களின் அணிவகுப்பு மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்...

கருநீல கோட் சூட்டில், மார்புக்கு குறுக்காகப் பிரெஞ்சு கொடி ரிப்பனுடன் கைகளில் பிரெஞ்சு கொடி ஏந்தி சொல்தா படைக்குத் தலைமை தாங்கி வருவார் போஞ்சூர் முசியே. அவரது மார்பை அலங்கரிக்கும் பிரெஞ்சு ராணுவ மெதாய்களை (Medaille, பதக்கம்) போலவே சொல்தாக்கள் அனைவரின் மார்புகளிலும் பல்வேறு மெதாய்கள் மின்னிக்கொண்டிருக்கும்!

ஒவ்வொரு ஜீலை 14 அன்றும் எங்கள் அனைவரின் கண்களுக்கும் அவர்கள் போஞ்சூர் முசியே, ஜீ பூம்பா என்பது போன்ற விளையாட்டு பெயர் அடையாளங்களைக் கடந்த முன்னாள் ராணுவ வீரர்கள். பிறந்த மண்ணின் சமூகப் பொருளாதாரச் சூழல்களால் காலனிய அரசின் அழைப்புக்குத் தலைசாய்த்து, அந்நாட்டின் பாதுகாப்புக்காகக் கடுங்குளிரிலும் கொட்டும் பணியிலும் காவல் நின்றவர்கள். ஜீ பூம்பா என்றும் டாக்டர் என்றும் பரிகசிக்கப்பட்ட சொல்தாக்கள் எல்லோரும் தங்களின் கடின உழைப்பால் பிரெஞ்சு ராணுவத்தின் பல்வேறு கிராதுகளுக்கு (Grade) உயர்ந்த சொல்தாக்கள்!

இப்படியாக, இளமையை பிரெஞ்சு ராணுவத்தில் கழித்து, ஊர் திரும்பித் தனித்த பிரெஞ்சு தமிழ்ப் பண்பாட்டுடன் வாழ்ந்த சொல்தாக்களில் பெரும்பாலானவர்களை எண்பதுகளில் பிரான்சில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மீண்டும் பிரான்ஸ் நாட்டுக்கே செல்ல விதித்துவிட்டது!

அந்தப் பொருளாதார வீழ்ச்சியினால் அன்றைய பிரெஞ்சு நாணயமான பிரானின் (Franc) மதிப்பு சரியத் தொடங்கியது. இந்திய ரூபாய்க்கும் கீழே பிரான் வீழ நேர்ந்தால் பிரானை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் ஓய்வூதிய தொகையின் அளவு மிகவும் குறையும் என்ற சூழலில், சொல்தாக்களில் பெரும் பகுதியினர் எண்பதுகளில் பிரான்சுக்குச் சென்றுவிட்டார்கள்.

பிரெஞ்சு இலக்கியச் சிந்தனைகளைத் தமிழுக்குக் கொண்டுவரவில்லை என்பதான ஒரு வருத்தம் இலக்கிய வட்டாரத்தில், சொல்தாக்களின் மீது உண்டு...

Pondicherry
Pondicherry
Photo by Sukanya Basu on Unsplash

காலனிய அரசின் ராணுவ அழைப்பை ஏற்றுக் கப்பல் ஏறிய அவர்கள் சமூகத்தின் மெத்தப் படித்த வசதியான பக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஜாதீய மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காகக் கப்பல் ஏறியவர்கள். ராணுவ முகாம்களிலும் போர் முனைகளிலுமே பெரும்பாலான காலத்தைக் கழித்தவர்களுக்குப் பிரான்சின் இலக்கிய முகத்தைத் தரிசிப்பதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்குக் கிட்டியிருக்கும் ?

பிரெஞ்சு ராணுவப்பணி சொல்தாக்களைப் பொருளாதார ரீதியாக உயர்த்தியது என்னவோ உண்மை தான் ! அவர்களின் ஓய்வூதியத் தொகை புதுவையின் பொருளாதாரத்தையே ஒரு படி உயர்த்தியது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவு உண்மை சொல்தாக்களின் ஜாதீய அடையாளங்களைச் சமூகம் முற்றிலும் மறக்க விரும்பவில்லை என்பதிலும் உண்டு...

சொல்தாக்களைச் சரிக்குச் சமமாய் நடத்தி சிரித்துப் பேசினாலும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் அவர்களின் முதுகுக்குப் பின்னால் ஜாதியைக் குறிப்பிட்டவர்களும் நிறையவே இருந்தார்கள்…

அவர்களில் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என மும்மதத்தவரும் அடக்கம் !

ரஷ்ய ராணுவம் ஐரோப்பியக் கண்டத்தின் கொல்லைப்புறமான உக்ரைனில் நுழைந்து தாக்கிக்கொண்டிருக்கும் இன்று, திருப்பித் தாக்குவதை விடப் பொருளாதாரத் தடைகளே பலன் தரும் என ஐரோப்பிய யூனியன் வாதாடிக்கொண்டிருக்கிறது...

இந்தியத் துணைக்கண்டத்திலும், ஆப்ரிக்காவிலும் தங்கள் ராணுவத்துக்கு ஆள் திரட்டும் வாய்ப்புகள் இன்றும் இருந்திருந்தால் பொருளாதாரத் தடைகளே போதும் என ஐரோப்பியர்கள் கருதி இருப்பார்களா என்பது சிந்திக்க வேண்டிய கேள்வி !

முற்றும்

காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.