Published:Updated:

மொக்கய்யனின் விசுவாசம்! - சிறுகதை

பெறவு அய்யரும் மொக்கயனும் திரும்ப ஊருக்கு சேர்ந்தே வருவாங்க. கேஸூ குடித்த அய்யரும் பிரதி வாதியான மொக்கையனும் சேந்தே தொணைக்கு தொணையா கச்சேரிக்கு போய்ட்டு வரதுதான் பெரிய அதிசயம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சுமார் 120 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடிமைகள் போல நடத்தினாலும் நீதி பரிபாலனங்கள் சிறப்பாக இருந்த கால கட்டம்.


இன்று ...


இன்னும் கொஞ்ச நேரத்தில் பொழுது சாய்ந்து இருட்டி விடும். கொத்தம்பட்டி தாண்டி நொளம்பூர் செல்லும் வழியில் உள்ள ஒற்றையடி பாதையில் இருவர் நடந்துக் கொண்டிருந்தனர். ஒருவர் ஐந்தடிக்கும் சற்று கூடுதலான உயரம். முன்புறம் சற்றே பெரிய தொப்பை அவருடைய செல்வ செழிப்பை பறை சாற்றியது. வேட்டியை பஞ்ச கச்சமாக கட்டி மேலே ஒரு சந்தன கலர் சில்க் ஜிப்பாவும் அதற்கு மேலே ஒரு கருப்பு கலர் கோட்டும் அணிந்திருந்தார். கழுத்துல பட்டு அங்கவஸ்திரத்தை மாலை போல போட்டுருந்தார்.அவர்தான் மொதலாளி அய்யர். இன்னொருவர் ஆறடி உயரத்துடன் ஆஜானு பாகுவான உடல் கட்டு. பார்த்தாலே கடுமையான உழைப்பாளி என்பது அவருடைய உள்ளடங்கிய வயிறும் இறுகிய அகலமான நெஞ்சு பகுதியை பார்த்தாலே தெரிந்தது. ஒரு காடாதுணியாலான மங்கிய வெள்ளை வேட்டியை இடுப்பில் காட்டியிருந்தார். அவருடைய உயரம் காரணமாக அவருடைய வேட்டி கணுக்காலுக்கும் முழங்காலுக்கும் இடைப்பட்ட ஒரு உயரத்தில் இருந்தது. இறுக்கி கட்டப்பட்டாலும் அதில் ஒரு ஒழுங்கில்லாமல் கட்ட பட்டிருந்தது. கக்கத்தில் ஒரு துண்டை மிக பவ்யமாக இடுக்கிக் கொண்டு மொதலாளிக்கி பின்னாடியே விட்டேத்தியாக நடந்து கொண்டிருந்தார் மொக்கையன்.

Representational Image
Representational Image

சாதாரணமாக அவர் நடந்தாலே அவருடைய நடை வேகமாக இருக்கும். ஆனால் அன்று தன்னுடைய முதலாளியின் வேகத்திற்கேற்ப தன்னுடைய வேகத்தை வெகுவாக குறைத்து அவருக்கு பின் நடந்துக் கொண்டிருந்தார். மொக்கையன் மனதிற்குள் ஒரு வித குழப்பமான மனநிலையில் நடந்துக் கொண்டிருந்தார். என்ன செய்வது என்று புரிபடவில்லை. நடந்து கொண்டிருக்கும்போதே இருபுறமும் கள்ளிச்செடிகள் இரண்டு ஆள் உயரத்திற்கு வளர்ந்திருக்க இரட்டை வேலி பாதைக்குள் நுழைந்தனர் இருவரும். சூரியன் இன்னும் மறையாத மஞ்சள் வெயில் இருக்கும் போதே அந்த இரட்டை வேலிக்குள் சற்று வெளிச்சம் குறைவா கருங்கும்மினு இருந்தது. இந்த இரட்டை வேலி பாதை முடிவதற்குள் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும். அதற்கு பிறகு சமவெளி பாதை ஆரம்பித்துவிடும். குடியிருப்புகள் அங்கங்கே இருக்கும்.

மொக்கையன் கடைசி முயற்சியாக முதலாளியியிடம் பேசி பார்க்கலாம் என்று நினைத்தார்.

சாமி....சாமி என்று கூப்பிட்டார்.


சற்று அதிகார தோரணையில் திரும்பிய அய்யர் என்னடா.... சொல்லு என்றார்.


இன்னோம் கொஞ்ச நாளைக்கு பொறுத்துக்குங்க சாமி....எப்படியாவது ஒங்க கடனை அடைச்சு பிடறேன் ......


ஏலே ஒனக்கு கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு ... அடுத்த ஈரங்கிக்குள்ள நீ பணத்தை திருப்பி குடுக்கலேனா செயிலுக்கு தாம்ல போவோனும்..பாத்துகிடு...சொல்லிப்புட்டேன்...னு சொன்னாரு அய்யரு.


அதை கேட்டதும் மொக்கயனின் முகம் கருத்தது. ஒரு தீர்க்கமான முடிவோட.


சாமி....சாமினு மறுபடியும் கூப்பிட்டார்.


என்னடா சாமி நோமினு மறுக்கா மறுக்கா எதுக்குலே கூப்பிடுற னு திரும்பினார் அய்யர்.


மொக்கையன் கக்கத்துல இருந்த துண்டு இப்போ அவருடைய கையில இருந்துச்சு.

Representational Image
Representational Image

இரு நாட்களுக்கு முன்பு ....


காலேல பொழுது பொறப்படறதுக்கு முன்ன கவலை ஏத்துல மாட்டை கட்டி வயலுக்கு தண்ணி பாச்ச ஆரம்பிச்ச மொக்கையன் ரெண்டு வயலுக்கும் தண்ணி பாச்சி முடிக்கும் போது சூரியன் நெத்தில அடிச்சுது. மாடு ரெண்டையும் அவுத்து தென்னை மரத்தடில கட்டிப்புட்டு வைக்க புல்லு கொஞ்சம் எடுத்து போட்டுட்டு வயலை ஒரு சுத்து சுத்திபிட்டு வரலாம்னு வரப்புல நடக்க ஆரம்பிச்சாரு. நல்ல ஒரு அடி அகலமான வரப்புல வளந்திருந்த அருகம் புல்லு மேல கால வச்சி நடக்கும் போது பாதத்துல சிலீர்னு ஒரு குளிர்ச்சி பரவும் பாருங்க அந்த சோகமே தனிதான். மெத்து மெத்துன்னு இருந்த புல் வரப்புல ஆனந்தமா கால பதிச்சு நடந்துக்கிட்டே பயிரெல்லாம் எப்படி இருக்குனு பாத்துகிட்டே வந்தாரு. சம்பா பயிறு சும்மா அஞ்சடி ஒசரத்துக்கு வளந்து ஒரே அளவுல நின்னுக்கிருந்துச்சு. தூரெல்லாம் மொக்கையானோட ஒரு கை பிடிக்குள்ள அடங்காத அளவுக்கு பெருசா இருந்துச்சு. கதிரெல்லாம் பால் பிடிச்சு பாலெல்லாம் இறுகி அரிசியா நெல் மணிக்குள்ள விளைய ஆரம்பிச்ச பருவம். ஒரு தூறுல இருந்த நெல்லை மட்டும் உருவுனா எப்படியும் ரெண்டு படி நெல்லாச்சும் கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவ்வளவு செழிப்பா இருந்த நெல்லம்பயிரை பெருமையும் வாஞ்சையுமா தடவிகிட்டே நடந்தார் மொக்கையன். இன்னோம் ரெண்டு மூணு வாரத்துல அறுவடைக்கு வந்துரும்னு நெனச்சு கிட்டே நடக்கையில் திடீருனு மஞ்ச கிழங்கு வாசம் அடிச்சிச்சு. அவருக்கு முன்னால ஆறடிக்கு மேல நீளமான மஞ்ச சாரா ஒன்னு சர சரனு ஓடுச்சு. என்னடா இது காலையிலேயே இப்படி ஒரு சகுணமுன்னு நெனச்சிக்கிட்டே மறுபடியும் வரப்புல நடக்க ஆரம்பிச்சரு.


மொக்கையா .... ஏலேய் மொக்கையா ... அப்டினு சத்தம் வந்த தெசலே திரும்பி பாத்தாரு. அங்கே மொதலாளி அய்யரு கையில இருந்த வெள்ளை துண்டை ஆட்டி மொக்கையனை வர சொல்லி கூப்டுகிட்டு இருந்தாரு. மொதலாளியை பாத்தொன்னையும் வெரஸா திரும்பி கிணத்து மேட்டுக்கு நடக்க ஆரம்பிச்சாரு மொக்கையன்.

Representational Image
Representational Image

கிணத்து மேட்டுக்கு பக்கத்துல இருந்த குடிசைக்குள்ள எப்பவும் ஒரு புளிச்ச நார் கயித்துல பின்னுன கட்டில் இருக்கும். ராக்காவலுக்கு வரும்போது படுத்து தூங்கறதுக்காக வும் சிலசமயம் காலேல சீக்கிரமா தண்ணி பாச்சனுமின்னாலும் ராவுலயே மொக்கையன் வந்து படுத்துக்கிடுவாரு. இன்னைக்கு வெளிய கடந்த அந்த கட்டில்ல துண்டை விரிச்சு போட்டு அய்யரு ஒக்காந்துக்கிட்டுருந்தாரு. அவரு பக்கத்துல வர வர மொக்கையன் தலைலேருந்த முண்டாசை அவுத்து உதறி கக்கத்துல வச்சுக்கிட்டு அய்யரை பாத்து ஒரு கும்பிடு போட்டாரு.


அய்யரும் மொக்கையானோட கும்பிட ஏத்துக்கிட்டாபோல தலையை மேலயும் கீழயும் லேசா அசைச்சாரு. தொண்டய லேசா செருமிகிட்டே அய்யரு பேச ஆரம்பிச்சாரு.


ஏலேய் மொக்கையா கடுதாசு வந்துருக்கு, நாளை கழிச்சு ஈரங்கி போட்ருக்காண்டா கச்சேரிக்கு போவணும்....கருக்கல்லயே கெளம்புனாத்தான் மாசிஸ்ரேட்டு வாரதுக்கு முன்ன போவ முடியும் .... ஒனக்கு தகவல் சொல்லலாமின்னு தான் வந்தேன்னாரு.....

மொக்கையனுக்கு திக்குனு இருந்துச்சு அதுக்குள்ள அடுத்த ஈரங்கி வந்துருச்சா இப்பதான் சம்பா நடவுக்கு முன்ன கடைசி ஈரங்கிக்கி அய்யரோட கச்சேரிக்கு போயிட்டு வந்தாப்புல இருக்குனு நெனச்சு கிட்டே சரிங்க சாமி போலாமின்னு நிலத்தை பாத்துகிட்டே சொன்னாரு மொக்கையன்.

மூன்று வருடங்களுக்கு முன்பு ......

மொக்கையனுக்கு அஞ்சு புள்ளைங்க அதுல நாலு மவனுங்க , ஒரு பொட்ட புள்ள அதுதான் கடைசி. எல்லாரும் குடும்பமா அய்யரு பண்ணையில தான் ஊழியம். உழவு, நடவு, களையெடுப்பு, மாடு கண்ணு, தோட்டம் தொரவு, பின்ன நெதமும் வீட்டு வேல, காட்டுத்தோரை சுத்தம் பண்ணுறது அய்யரு வீடு வாச தெளிச்சு சுத்தம் பண்ணி கோலம் போடுறது, கருக்கல்லயே பால் கறந்து கொடுக்கறதுன்னு அத்தனையும் பாத்துக்கறது மொக்கையானோட குடும்பந்தேன்.

Representational Image
Representational Image

மொக்கையன் சம்சாரம் பொன்னுத்தாயும் மகள் அருக்காணி ரெண்டு பெரும் காலேலயே அய்யரு வூட்டுக்கு போயி வாச தெளிச்சு கோலம் போட்டு பத்து பத்திரமெல்லாம் விளக்கி கழுவி வூட்டுகொள்ளையில இருக்க கெணத்துலேர்ந்து தண்ணி இரச்சு தொட்டியெல்லாம் ரொப்பி உட்டுட்டு வயலுக்கு வேலைக்கு போவாங்க. இந்த கோலம் போடுறது மட்டும் அருக்காணி தான்.


அருக்காணி படிக்கெல்லாம் போவல. ஆனா அவ போடுற கோலமெல்லம் பாத்தா அய்யரு வூட்டுக்காரம்மாவே பல நாலு மெய் மறந்து பாத்துகிட்டு இருப்பாக. புள்ளி கோலமா இருந்தாலும் பூக்கோலமா ஒருந்தாலும் அருக்காணி கையில இருந்து கோலமாவு ரொம்ப லாவகமா அழகான கோலமா மாறுறத பாக்கறதே ஒருவிதமான அழகுதான். அப்பேற்பட்ட கை வேலைக்காரி அருக்காணி. வெளி வேல மட்டுமில்ல சமையலும் அவளுக்கு ரொம்ப நல்லாவே வரும். மொக்கையன் கூட சிலசமயம் அருக்காணி ஆக்குன சோர சாப்புட்டுட்டு எங்க ஆத்தாவோட கை பக்குவமும் ருசியும் அப்பிடியே இருக்குதுன்னு கண்ணுல அரும்புன துளி கண்ணீரை தொடச்சு கிட்டே சொல்லுவாரு. ஆளும் பாக்க ஒரு அடக்கமான கிராமத்து அழகோட இருப்பா.

தை மாசம் வடக்கிப்பட்டிலேர்ந்து மச்சான் அயினா வந்து அருக்காணிய அவன் மகன் சின்ராசுக்கு பேசி முடிச்சு புட்டு பங்குனியில பரிசம் போட்டு கண்ணாலம் வச்சுக்கிடலாம்னு சொல்லிட்டு போனாரு. இந்தா மாசி கடைசி ஆயி போச்சு. மொக்கையனுக்கு அடுத்த மாசம் கண்ணால செலவுக்கு என்ன பண்றதுனு தெரில. அய்யரு பண்ணையில வேல பாக்கிறதுக்கு வருசத்துக்கு அய்யரு சோத்துக்கு வேணுங்கிற நெல்லை அறுவடை முடிஞ்சதும் கொடுப்பாரு. அதுக்கு மேல எப்படி அவருகிட்ட கேக்குறதுனு ஒரே யோசனையா இருந்துச்சு.

மச்சான் அயினா ரொம்ப நல்ல மாதிரிதேன், பொண்ண மட்டும் குடுமய்யா வேற ஏதும் வேணாமுன்னு பெருந்தன்மையா சொன்னாலும், மொக்கையன் மனசு ஒப்பள. சொந்த மச்சானோட மவனுக்கு கட்டி குடுத்தாலும் மவளுக்கு காது மூக்கு கழுத்துக்கு மட்டுமாவது எதாவது செஞ்சு அனுப்பலாம்னு ஒரு யோசனை. சம்சாரத்திகிட்டேருந்த கொஞ்ச நக நட்டெல்லாம் மாணிக்கம் ஆசாரி கிட்ட கொடுத்து காதுக்கு ஒரு பூச்சி கூடும், மூக்குக்கு ஒரு புல்லாக்கும் கழுத்துக்கு ஒரு செயினு பதக்கம் னு எல்லாம் செய்ய சொல்லிட்டாரு.

இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம்

இருந்தாலும் கொஞ்சம் சாமான் செட்டெல்லாம் எடுத்து கொடுக்கணும். புது பொட்டி துணி மணி கொஞ்சம் அப்பறம் கல்யாண செலவுனு ஒரு முப்பது நாப்பது ரூவா இருந்தா நல்லருக்குமின்னு தோணுச்சு. வேற வழியில்லாம அன்னைக்கி அந்தியில அய்யரை பாக்க பண்ண வூட்டுக்கு போனாரு மொக்கையன். அய்யரு வீட்டு திண்ணையில ஒரு சாய்வு நாற்காலியை போட்டு படுத்தாப்புல ஒக்காந்துருந்தாரு. சாமி .... சாமி ....அப்டினு கூப்டாரு மொக்கையன். யாருனு கேட்டுகிட்டே பக்கத்துல தொங்கிகிட்டு இருந்த ராந்தல கொஞ்சமா தூக்கி வுட்டுட்டு கண்ண சுருக்கி பாத்தாரு அய்யரு. மொக்கயன பாத்ததும் வாடா ...மொக்க என்ன இந்தா நேரத்துல வந்துருக்க அப்டினு கேட்டாரு. அப்டி ஒக்காருடானு சொன்னாரு. துண்டை கீழ போட்டு திண்ணையில தூண்ல சாஞ்சு ஒக்காந்தாரு மொக்கையன்.

சாமி ஒண்ணுமில்ல ஒரு சேதி சொல்லிப்புட்டு அப்பிடியே உங்ககிட்ட கொஞ்சம் உதவி கேக்கலாமுன்னு வந்தேன்னாரு மொக்கையன். என்னடா சொல்லுனாரு அய்யரு. அது வந்துனு ... கொஞ்சம் இளுத்தாப்புல தலையை சொறிஞ்சுகிட்டே எம் மவளுக்கு கண்ணாலம் பேசியிருக்கேன். மாப்ள எம் மச்சான் அயினா வோட மவன்தான். அடுத்த மாசம் பரிசம் போட்டு கண்ணாலம் வச்சுக்கிடலாமுன்னு மச்சான் சொல்லிட்டாப்புல. எங்களுக்கும் சம்மதந்தேன். சொந்த மச்சான் எதுவும் வேணாமின்னு சொன்னாலும் நாம எதாவது செஞ்சு அனுப்புனதானே மருவாதியா இருக்கும். அப்பிடி இப்பிடின்னு எஞ் சம்சாரத்தோட நக நட்ட அழிச்சு மவளுக்கு நவ செஞ்சுப்பிட்டோம் சாமி. இந்த சாமான் செட்டு கொஞ்சம் வாங்கணும் அப்புறம் கண்ணால செலவு இருக்குது அதுக்கெல்லாம் கொஞ்சம் காசு தேவைப்படுது. அதான் ஒங்க காதுல விசயத்தை போட்டுட்டு அப்டியே கடனா கொஞ்சம் காசு கேக்கலாமுன்னு வந்தேஞ்சாமி. இல்லேனு சொல்லாம குடுத்தீருன்னா ஒங்களுக்கு புண்ணியமா போவும்னு ஒரு வழியா சொல்லி முடிச்சாரு.

சரிடா சொல்லு எம்புட்டு வேணும்னாரு அய்யரு.

ஒரு நாப்பது அம்பது ரூவா இருந்தா போதுஞ்சாமி னாரு மொக்கையன்.

விவசாயி
விவசாயி

ஏலேய் கிறுக்கு பயலே ஒரு அஞ்சு பத்துநா பரவாளடேய், நீ என்ன நாப்பது ஐம்பதுங்கறவன். அவ்வ்ளோ காசெல்லாம் தர முடியாது.... அப்டினாரு...


சாமி நீங்க அப்டி சொல்ல கூடாது... இந்த ஒரு தாட்டி எப்படியாவது நீங்க ஒதவுங்க எப்படியாச்சும் ஒங்க பண்ணையில வேலைபாத்து இந்த கடனை அடைசிப்பிடுறோம்னு அய்யரு காலை பிடிசிக்கிட்டாரு மொக்கையன்.


லேய் லேய் யார்ரா இவன் கால புடிச்சுகிட்டு...உடுறா கால ... மொதல்ல எந்திரினாரு அய்யரு.

கொஞ்ச நேரம் யோசனை பண்ணிட்டு சரிடா ஒரு முப்பது ரூவா தரேன் அதுவும் இப்ப எங்கிட்ட இல்ல. அடுத்த வரம் எம் மவன் துரைகிட்ட சொல்லி பேங்குல இருந்து எடுத்தாரா சொல்றேன். அப்பறம் இது உதவி இல்லலே கடந்தேன். நீ புரோ நோட்டுல எழுதி கைநாட்டு வச்சு கொடுத்தா தென் காச குடுப்பேன். ரூவாய்க்கி பத்து காசு வட்டி. ஒரு வருஷம் கழிச்சு வட்டியும் மோதலுமா திருப்பி கொடுக்க வேண்டியது. புரிஞ்சுதாலே னு சொன்னாரு.


மொக்கையனும் ஏதோ இந்த மட்டுக்கும் அய்யரு குடுக்கறேன்னு சொன்னதே பெருசுனு நெனச்சுக்கிட்டு தலையை ஆட்டுனாரு.


அடுத்த மாசமே அறுக்காணிக்கும் சின்ராசுவுக்கும் சாதி சனத்தை அழைச்சு கண்ணாலத்தை ஓரளவுக்கு சிறப்பா செஞ்சாரு மொக்கையன்.

இரு வருடங்களுக்கு முன்பு ....

அருக்காணி கண்ணாலம் செஞ்சு புருஷன் வூட்டுக்கு போன நேரமோ என்னனு தெரில இங்க அந்த வருஷம் மழை மாரி இல்லாம ஒரே பஞ்சமா போச்சு. கேணி கேட்டையெல்லாம் வறண்டு வயலெல்லாம் காஞ்சு விவசாயம் ஏதுமில்லாததால வேல வேட்டி எதுவும் இல்ல. அதனால ஐயருகிட்ட வாங்குன கடனை மொக்கையனாள நேரத்துக்கு திருப்பி அடைக்க முடியல. ஐயருகிட்ட கொஞ்சம் தவா கேக்கலாமின்னு போனாரு மொக்கையன். அய்யரை பாத்து ஒரு கும்பிடு போட்டுபிட்டு தலையை சொறிஞ்சுகிட்டே நின்னாரு.


என்னடா மொக்க காசு கொண்டாந்துருக்கியா அப்டினு கேட்டாரு அய்யரு.


சாமி உங்களுக்கே நல்ல தெரியும் போன வருஷம் பூராவும் சரியான மாரி மழை இல்லாம எந்த வேலையும் இல்ல.... அதனால இன்னம் ஒருவருசம் நீங்க கொஞ்சம் பொருத்துக்கணுமின்னு சொன்னாரு. அய்யருக்கு இதெல்லாம் தெரியாமாயா கெடக்கு. வேல வெட்டி இல்லேன்னாலும் காணி கரைய வித்து திருப்பி குடுக்கலாமுல்லேனு நெனச்சுக்கிட்டு இவனுவள இப்படியே உட்டா நம்ம கிட்ட வாய்தா கேட்டுகிட்டே இருப்பானுவன்னு மொக்கையன் கிட்ட நீ போயிட்டு அப்புறம் வானு சொல்லி அனுப்பிச்சிட்டாரு.

விவசாயம்
விவசாயம்

டவுனு கோர்ட்ல வக்கீலா இருந்த மவன் கிட்ட கலந்து கிட்டு எதுக்கும் மொக்கயம் மேல ஒரு கேச போட்டு வச்சுருவமினு மவன்கிட்ட சொல்லி ஒரு கேச பதிஞ்சாறு.


அதுக்கு பொறவு ரெண்டு மாசம் கழிச்சு மொக்கையனுக்கு ஒரு கடுதாசு வந்துச்சு. அத எடுத்துக்கிட்டு அய்யரை பாக்க ஓடுனாரு மொக்கையன். சாமி சாமி கெவர்மெண்டுல இருந்து ஏதோ கடுதாசி வந்திருக்கு சாமி. கடுதாசு காரரு சொன்னாருன்னு கை காலெல்லாம் வெட வெடக்க நின்னரு.


அத வாங்கி பாத அய்யரு ஒரு பதட்டமும் இல்லாம ஏலேய் மொக்கை நீ என்கிட்டேருந்து வாங்குன கடனை கட்டாததால் எம் மவன் கேசு குடுத்துருக்காம்ல. இது மொத ஈரங்கிக்கி நீ கச்சேரிக்கு வந்து ஆஜாரவுணும்னு போட்டுருக்கு. எனக்கும் ஒரு கடுதாசி வந்துருக்கு. அடுத்த வாரம் செவ்வா கிழமை நாம ரெண்டு பெரும் கச்சேரிக்கு போவணும் தெரிஞ்சுதா. நீ ஒன்னும் கவலை படாத... எல்லாத்தையும் எம் மவன் பாத்துக்கிடுவானு சொன்னாரு.

இன்று ....

இன்னும் ரெண்டு ஈரங்கிக்குள்ள கேசு தீர்ப்பாயிடும்னு அய்யரு ரெண்டு நாளைக்கு முன்ன சொன்னது மொக்கையன் மனசுல ஒரு பக்கம் ஓடிக்கிட்டே இருந்துச்சு. ஒவ்வொரு ஈரங்கிக்கும் போவையில கூண்டுல நிறுத்தி நீ ஐயருகிட்ட பணம் வாங்குனியனு வக்கீல் கேப்பாரு... ஆமாஞ்சாமி வாங்குனேனு மொக்கையன் சொல்லுவாரு... எப்போ திருப்பி குடுப்ப அப்டினு திரும்ப வக்கீல் கேப்பாரு சீக்கிரமே குடுத்துறேஞ்சாமி அப்படீம்பாரு. அவ்வளவு தென். பெறவு அய்யரும் மொக்கயனும் திரும்ப ஊருக்கு சேர்ந்தே வருவாங்க. கேஸூ குடித்த அய்யரும் பிரதி வாதியான மொக்கையனும் சேந்தே தொணைக்கு தொணையா கச்சேரிக்கு போய்ட்டு வரதுதான் பெரிய அதிசயம்.

காட்டு விவசாயம்
காட்டு விவசாயம்

ஆனா இன்னைக்கி கச்சேரிக்கு போ சொல்லவே அய்யரு பேச்சை ஆரம்பிச்சாரு. ஏலேய் ஒனக்கு தான் காடு கர கொஞ்சம் இருக்குல்ல. அத வித்து என் கடனை அடைச்சா என்னடா ன்னாரு. எனக்கு திக்குனு ஆகி போச்சு. இருக்கிறதே கொஞ்சூண்டு நிலம்தான். அதுதான் நம்ம நாலு பயலுவளுக்கும் இருக்கிற ஒரே சொத்து, அத போயி விக்க சொல்லுறாரே மொதலாளின்னு ஒரு பதைப்பு வந்துச்சு.

ஒருவழியா ஈரங்கி முடுச்சு வெளிய வந்தவொன்னே அய்யரு

லேய் நீ அடுத்த ஈரங்கிக்குள்ள கடனை குடுக்கணும், இல்லேன்னா நீ செயிலுக்குத்தான் போவணும்னு மாசிரேட்டு அய்யா சொல்லிப்புட்டாரு. கடனை அடைக்க ஏதாச்சும் வழிய பாரு இல்லேன்னா நாஞ் சொல்றத கேளு அப்டீனாரு.

இருந்தாலும் ஊருக்கு திரும்பி போவயில ஒருக்கா மொதலாளிகிட்ட பேசி பாப்பாமின்னு மொக்கையன் நெனச்சிக்கிட்டாரு.

தற்சமயம் .....


வார வழியில அய்யரு மயக்கம் போட்டு விழுந்தவரு எந்திரிக்கவே இல்லனு சொல்லி அய்யரோட உசுரில்லாத ஒடம்ப தூக்கி தோள்ல போட்டுக்கிட்டு ஊருக்குள்ள நொழஞ்சாறு மொக்கையன். அய்யரு எப்படி செத்தாரு ரெட்ட வேலிக்குள்ள என்ன நடந்துச்சு அப்படீங்கிற ரகசியம் மொக்கையனுக்கும் அய்யருக்கும் மட்டும் தான் தெரியும். இப்ப அந்த ரகசியம் தெரிஞ்ச ஒரே ஆளு மொக்கையான மட்டும்தான்.

ஈரங்கி - Hearing

கச்சேரி - Court

மாசிரேட்டு - மாஜிஸ்திரேட்(Magistrate or Judge)

- ஆனந்தகுமார் முத்துசாமி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு