Published:Updated:

நிழல் தேடி வந்தேன்! - சிறுகதை

Representational Image
Representational Image

'உன்னுடன் வர வேண்டும் என்றால் இவளைக் கூட்டிக் கொண்டு தான் வருவேன் இல்லை யென்றால் சொல்லி விடு .இப்படியே கிராமத்துக்கு திரும்பி விடு வேன்.'

மீனாட்சியின் மனதில் மகிழ்ச்சி பொங்கி வழிந்து கொண்டிருந்தது. இருக்காதா பின்னே! ஒரே பெண் செல்லப் பெண் தன்னுடன் வந்து இருக்கும் படி கூப்பிட்டு க்கொண்டே இருந்தவள் திடீரென வ ந்து நின்று கிளம்பு என்றால் எப்படி இருக்கும்!

எத்தனை தான் கிராமத்தில் அக்கம் பக்கத்தவருடன் பழகி தன்னால் முடிந்த உதவிகளை செய்து காலத்தை ஓட்டிக் கொண்டு இருந்தாலும் சொந்த ரத்தம் அதன் பாசம் அது அலாதிதானே!


கிராமத்து வீடு என்றாலும் சுற்றி மா, தென்னை ,வாழை மரங்கள் நின்றிருந்தன. காய்கறிகளும் பூக்களும் வீட்டுத் தோட்டத்திலிருந்து கிடைத்ததால் சௌகரியமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள் அவள்.

மீரா வந்து அவளை கூட்டிக்கொண்டு போவாள் என்று எதிர்பார்க்கவேயில்லை

கிராமத்து தெருக்களைக் கடந்து பிரதான வீதியில் சேரும் வரை மீரா பேசிக் கொண்டே வந்தாள்.அம்மாவுக்காக அவள் யோசித்து வீட்டில் செய்திருந் த ஏற்பாடு களை எல்லாம் சொல்லி கொண்டே வந்தாள் .'கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள் மீரா 'என்று கேலி செய்தாள் மீனாட்சி.

 கிராமம்
கிராமம்

'உன்னை சந்தோஷமாக வைத்து பார்க்க ஆசையாக இருந்ததும்மா',

சொன்னவள் சலுகையுடன் அவள் தோளில் சாய்ந்து கொண்டாள்.

'நான் தான் நம் வக்கீல் ஊரிலிருந்து வந்ததும் எல்லா ஏற்பாடுகளையும் பண்ணி விட்டு வருகிறேன் என்று தானே சொன்னேன். அதற்குள் ஏன் இப்படி பறக்கிறாய்?!'

'இல்லை நீ தனியாக கஷ்டப்படுகிறாய் என்று தான் யோசித்தேன்.:

சிரித்துக்கொண்டே மறுத்தாள் மீனாட்சி தனியாக இருக்கிறேன் என்பது சரிதான். கஷ்டப்படுகிறேன் என்று சொல்வது தப்பு. இன்னும் கிராமங்களில் அக்கா தங்கையாக அம்மா பிள்ளையாகத்தான் பழகுகிறார்கள்.'

'இருந்தாலும் மனசுக்கு ஒரு மாதிரி இருந்தது'

கார் ஒரே சீராக சென்றுக் கொண்டிருந்தது.

வேறு என்ன பேசுவது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் ஒதுக்குப்புறமாக காரை நிறுத்தி விட்டு டீ குடித்து விட்டுவருகிறேன் என்று இறங்கினார் டிரைவர்.

வெளியே எட்டிப் பார்த்த மீனாட்சி 'இங்கே ஒரு கோவில் இருக்கு பார் நானும் போய் விட்டு வருகிறேன்' என்று இறங்கினாள்.'

சீக்கிரம் வாம்மா 'என்று சொல்லி விட்டு செல்லை எடுத்து பேசத் தொடங்கினாள் மீரா.

பத்து நிமிடங்கள் ஆன பிறகும் அம்மா வராமல் போகவே கதவை திறந்து கொண்டு இறங்கினாள் மீரா. சுற்றிலும் பார்த்தபோது
கசங்கிய கந்தல் புடவையிலிருந்த அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த மீனாட்சி இவளைப் பார்த்து விட்டு ' ஹேய் மீரா இது யார் தெரியுதா ? என்னுடைய ஸ்கூல் மேட்'. மானாமதுரையில் என்னுடன் படித்தவள்.' என்று அறிமுகம் செய்தாள். அம்மாவின் அந்த பரவசத்தை அவளால் உணர முடியவில்லை.

மீனாட்சி தன்னை மீறிய பரபரப்பில் இருந்தாள். வெகு நாட்கள் கழித்து எதிர்பாராமல் பார்க்க நேர்ந்த சந்தோஷம் அவள் கஷ்டப்படுவதை பார்த்து மனது சங்கடம் என்று அல்லாடியவள் மீராவின் முகத்தில் தெரிந்த உணர்வை புரிந்து கொள்ளவில்லை.

Representational Image
Representational Image

அவளுடைய பால்ய சிநேகிதியின் தோற்றமோ , வறுமையோ தெரியவில்லை. பழைய ஞாபகங்களில் தத்தளித்தவள்
சட்டென்று , 'பூமா என்னுடன் வந்து விடுகிறாயா ? ',என்று அழைப்பு விடுத்தாள்.

இருவரையும் மாறி மாறி பார்த்த பூமா கலங்கினாள்.

'அம்மா', சட்டென்று அவள் கையை பிடித்து அழுத்தினாள். 'உனக்கு பரிதாபமாக இருந்தால் ஐம்பதோ நூறோ கொடுத்து விட்டு வா அதை விட்டு விட்டு',

மீனாட்சியின் பார்வை உயர்ந்தது

'அவள் யாரோ இல்லையடி.என்னுடன் ஐந்து வருடங்கள் ஒன்றாக படித்தவள். எவ்வளவு பெரிய பணக்கார வீட்டுப் பெண் தெரியுமா?. அவள் காரிலேயே என்னை பள்ளிக்கு கூட்டி போயிருக்கிறாள்.'

'அதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிறாய்.?'

மீரா சீறினாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சற்றும் சளைக்காமல் சொன்னாள் மீனாட்சி.


'உன்னுடன் வர வேண்டும் என்றால் இவளைக் கூட்டிக் கொண்டு தான் வருவேன் இல்லை யென்றால் சொல்லி விடு .இப்படியே கிராமத்துக்கு திரும்பி விடு வேன்.'

'மீனாட்சி, '

தயங்கியபடியே அவள் பெயரை உச்சரித்தாள் பூமா.

'நான் எதற்கு உன்னுடன்? என் விதியை அனுபவித்து கொண்டு நான் இருக்கிறேன் நீ எதற்காக சிரமப்படுகிறாய் ? நீ நன்றாக இருப்பதை பார்த்ததே எனக்கு சந்தோஷம் தான்.'

'கேட்டியாம்மா வா ' என்று இழுத்தாள் மீரா.

தன் முழு உயரத்துக்குமாக நிமிர்ந்தாள் மீனாட்சி.

'இதோ பார் என் இஷ்டப்படி நடக்க விடு.

வரணுமா வேண்டாமா?'

அவள் மௌனம் சாதித்தாள்.. மீனாட்சி பர பர வென்று செயல்பட்டாள்

'டிரைவர் இந்த பூக்கூடையை அந்த கடையில் கொடுத்து விடுங்கள். பூமா உன் வீடு எங்கே என்று சொல்லு . உன்னை கூட்டி கொண்டு தான் போவேன் ',என்றவள் அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வந்து அந்த பிரமாண்டமான காரில் ஏற்றினாள்.

Representational Image
Representational Image

கிளம்பியதிலிருந்து பேசிக் கொண்டே வந்த மீரா விரதம் மாதிரி மௌனம் காத்தாள். மீனாட்சிக்கு ஒன்றும் புரியவில்லை கூடப்படித்தவள் எவ்வளவோ வருடங்கள் கழித்து பார்க்கிறோம்.அதுவும் நல்ல நிலையில் இருந்தால் ஒரு ஹலோவுடன் போய் விடலாம். கஷ்டப்படுபவளை கை தூக்கி விடக் கூடாதா? கூட்டி வந்ததில் என்ன தப்பு.?

கூட்டி வந்ததில் தப்பில்லை . அவளுடைய அந்தஸ்து தான் தப்பு என்றது மீராவின் மனது. இவ்வளவு நேரமும் அம்மா அம்மா என்று தூக்கி கொண்டாடிய மனது இப்போது சலிப்படைந்திருந்தது. ஃப்ரெண்டாம் ஹும்!. கட்டியிருந்த புடவையில் தான் எத்தனை கிழிசல்.! இவள் ஃப்ரெண்டாக இல்லை என்று யார் அழுதார்கள்!


அருகிலேயே மிகவும் தயக்கத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்த பூமாவின் மனதிலோ ஆயிரம் எண்ணங்கள் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தன. எப்பேர்ப்பட்டவள் இந்த மீனாட்சி! என்றைக்கோ படித்த ஞாபகத்தை வைத்துக்கொண்டு தயங்காமல் தன்னுடன் அழைத்துக் கொண்டாளே!. சின்ன வயது ஞாபகங்கள் அவளுக்குள் குடையாய் விரிந்தன.

ஆற்றின் அக்கரையில் அவள் வீடு.பாலத்தைக் கடந்து மெயின் தெருவுக்குள் நுழையும் போதே ஹாரனை அலற விட செய்வாள். தயாராக காத்திருக்கும் மீனாட்சி ஓடி வந்து காரில் ஏறி கொள்வாள். உயிருக்கு உயிராக பழகிய அந்த நாள் ஞாபகங்கள் அவளை ஒரு புது உலகத்திலேயே பிரவேசிக்க செய்திருந்தன.

காலச்சக்கரம் சுழன்றதில் எத்தனை யோ மாறுதல் கள்.கல்லூரி வாழ்க்கை முடிந்து திருமணமாகி பிஸினஸில் நஷ்டப்பட்டு கணவன் எங்கோ போய் விட தன்னந்தனியளாக தான் எத்தனை யோ நெருக்கடிகளில் சிக்கிக் கொண்டு தவித்து பிள்ளைகள் உற்றவர்களின் கேலிக்கும் பேச்சுக்கும் ஆளாகி ஒருவழியாக மீண்டு இந்த கிராமத்துக்கு வந்து சிரமப்பட்டு கொண்டிருக்கையில் சற்றும் எதிர்பாராமல் மீனாட்சி தரிசனம் அந்த மதுரை மீனாட்சியையே பார்த்த மாதிரி மனசுக்குள் ஒரு ஜில்லிப்பை பரவ விட்டுக் கொண்டிருந்தது.

Representational Image
Representational Image

காரின் வேகம் தடைப்படவே மீனாட்சி வெளியே சாலையை பார்த்தாள். தண்ணீர் லாரி ஒன்று ஓரமாக நின்று கொண்டிருக்க, சுற்றிலும் மக்கள் கூட்டம் . ஒருவர் மாற்றி ஒருவர் பக்கெட் டையும் குடத்தையும் நீட்டி தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தனர்.பச்சை, சிவப்பு, நீலம் என்று எல்லா நிறங்களிலும் வாளிகளில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

'நாம் படிக்கும் போது எல்லாம் இப்படி தண்ணீருக்கு கஷ்டப்பட்டதே இல்லையே. இப்போது பாரேன் பூமா' என்று திரும்பினாள் மீனாட்சி.

'வைகையில் வெள்ளம் எப்போதாவது தான் வரும் என்றாலும் மணலில் எப்போதும் ஊற்று இருக்கும்.எத்தனை முறை நாம் ஆற்றங்கரை மணலில் ஊற்று தோண்டியிருப்போம்', பழைய நினைவுகளில் மூழ்கினாள் அவள்.

'இப்போதெல்லாம் வெள்ளம் கரைபுரண்டு வந்தால் கூட மக்கள் கூட்டம் ஆளுக்கு இரண்டு பக்கெட் பிடித்துக்கொண்டு போய்விடும். அப்புறம் வெள்ளமாவது ஒன்றாவது 'என்று பெருமூச்செறிந்தாள் பூமா.

'நீங்கள் சொல்வது நிஜம்தான் அம்மா! நிலத்தடி நீரை மட்டுமில்லை நிலத்தையே வறள வறள தான் வைத்து கொண்டு இருக்கிறோம்.

உங்கள் காலத்தில் எல்லாம் சனங்களுக்கு கொஞ்சமாவது பயம் இருந்ததும்மா. கடவுளுக்கு பயப்படுவாங்க அட அதுவும் இல்லைன்னா மனசாட்சிக்கு பயப்படுவாங்க தன் வருங்கால சந்ததி நல்லா யிருக்கணுமே என்று பழி பாவம் செய்ய பயப்படுவாங்க ,இப்போ அப்படி இல்லையே! மனசிலே ஈரம் துளி கூட கிடையாது, எல்லாமே வறண்டு போய் விட்டதே.!'

மீராவுக்கு எரிச்சலாக வந்தது. பெரிய ஆட்டோகிராப் ரேஞ்ச்சில் இவர்கள் இருவரும் பழைய நினைவுகளை புரட்டிப் பார்த்துக்கொள்கிறார்களாக்கும்!

கட்டுப்படுத்த முடியாமல் டிரைவரைப் பார்த்து சீறினாள். வந்ததும் வராததுமாக பூமாவை அவுட் ஹவுசுக்கு கொண்டு போய் விட்டதும் அங்கேயே இருக்க சொன்னதும் தன்னிடம் வந்து வாதாடியதும் கண்முன் விரிந்தது.

'உன் ஃபரெண்ட் என்றால் ஏதோ ரூபாயை கொடுத்து கழற்றி விட வேண்டியது தானே! எதற்கு கூடவே இழுத்து கொண்டு வருகிறாய்!. முதலில் கொஞ்சம் பணத்தை கொடுத்து அவளை விரட்டி விடு.!'

சர்வாதிகாரியாக அப்போது விரட்டியவள் இப்போது
கொஞ்சிக் குழைகிறாள். எல்லாம் பணத்துக்காக. அம்மா எனற பாசம் கூட சில பேருக்கு பணத்துக்கு பிறகு தான் வரும் போலிருக்கிறது.

'நான் ஊருக்கே திரும்பிப் போகலாம் என்று இருக்கிறேன். வந்ததற்கு இரண்டு நாள் தங்கிப் போகிறேன்.

'ஏன் ? என்ன ஆச்சு உனக்கு?

'எனக்கென்று எதுவும் இருக்க கூடாதா ? நான் பாட்டுக்கு என் இஷ்டத்துக்கு கோயில் குளம் என்று சுற்றிக் கொண்டு இருப்பேன்.

இப்போது தான் பூமா வேறு இருக்கிறாளே'

என்னது! என்று அதிர்ந்தாள் மீரா

'அவளைப் போய் நம் வீட்டிலா?'

'உஷ் 'என்று அடக்கினாள் மீனாட்சி.

'அது நம் வீடு இல்லை.என் வீடு.

Representational Image
Representational Image

உன்னுடைய வீடு இது . உன் வாழ்க்கை உன் குடும்பம். இதில் நான் ஏன் தேவை இல்லாமல்?'


'என்னம்மா சொல்றே? நீ என் அம்மா! உனக்கில்லாத உரிமை யா?!'


'உரிமையா? சாதாரணமா ஒரு வாட்ச் மேனை சத்தம் போடக்கூட எனக்கு அதிகாரம் கிடையாது.!'

.
'நேற்று மோட்டார் போட்டு தண்ணீர் நிரம்பி வழிந்தபோது அவனை திட்டினேன் என்று ஒரு மணி நேரம் சண்டை போட்டாய்

என் சிநேகிதியை கூட்டி வரக் கூடாது அவளுக்கு உதவ க்கூடாது என்று லெக்சர் கொடுக்கிறாய் இப்போதே என் கைகளை இவ்வளவு கட்டுகிறவள் பின்னாளில் எப்படி இருப்பாயோ?!'


'அம்மா' ,என்று அதிர்ந்தாள் அவள்.


இன்றைக்கு பார்க்கிற பூமா உனக்கு ஏழை. எனக்கு பள்ளி சிநேகிதி.என்னால் முடிந்த உதவியை நான் செய்து விட்டு போகிறேன் அதில்நீ ஏன் தலையிடுகிறாய்.!

உன் வீட்டு வாட்ச் மேன் தண்ணீரை வீணாக்கும் போது அந்த தண்ணீரின் மதிப்பு உனக்கு தெரியவில்லை. அவன் கோபித்துக் கொண்டு போய் விடுவான் என்கிறாய்.

இப்படியெல்லாம் இருக்க என்னால் முடியாது.'

'பார்க்கிறவர்கள் கேட்கிறவர்களுக்கெல்லாம் கொடுத்துக் கொண்டே இருந்தால் நமக்கு எதுவும் மிஞ்சாது. தானம் தருமம் எல்லாம் தனக்கு மிஞ்சித்தான். என்னதான் இருந்தாலும் உனக்கு என்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? யோசித்துப்பார்.'

மகளையே வெறித்து பார்த்தாள் மீனாட்சி.

'போதுமடி ! நிறுத்திக்கொள் உன் உபதேசத்தை.!

தெரியாதவர்களுக்கு செய்தால் அது ரிஸ்க் .

தெரிந்தவர்களுக்கு செய்தால் மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருப்பார்கள் அதனால் உதவக்கூடாது. மற்றபடி ஏழை ஆதரவு இல்லாதவர்கள் பக்கமே திரும்பக் கூடாது அப்படி தானே!
என்னடி உங்கள் பணமும் அந்தஸ்தும் இதைவிட மேலான நிலையில் இருந்தவள் என் பூமா.'

நிறுத்தி மூச்சு விட்டு க் கொண்டவள் தொடர்ந்தாள்.

'இப்போது தானடி புரிகிறது. வழி யெல்லாம் ஆறு ஏரி வறண்டு கிடப்பதை பார்த்து கொண்டு தானே வந்தாய்!.மனதில் ஈரம் வறண்ட மாதிரி மண்ணும் வறண்டு போய் விட்டது.!

யானையின் ஒரு கவளம் சோறு ஒரு கோடி எறும்புகளுக்குஉணவாகுமாம்.அந்தஸ்த்திலும் செல்வாக்கிலும் இருக்கும் உங்களை போன்றவர்கள் சாதாரணமாக செய்தாலே எத்தனையோ ஏழைகளின் பசி தீரும் ஆனால் நீங்களோ உங்களைப் போன்றவர்கள் நீங்களும் செய்ய மாட்டீர்கள், மற்றவர்களையும் செய்ய விட மாட்டீர்கள்.

Representational Image
Representational Image

நமக்குள்ளேயே இப்படி இருக்கும் போது மாநிலத்துக்கு மாநிலம் மனசு ஏன் வேறுபடாது.?

ஒரு மாநிலம் பயன்படக்கூடாது என்று நதியின் இயற்கை போக்கையே கட்டுப்படுத்துபவர்கள். தன் மாநிலத்து மக்களும் இங்கு இருக்கிறார்கள் அவர்களுக்காகவாவது விட்டுக் கொடுப்போம் என்று நினைக்கிறார்களா?

சமுதாயம் என்பது ஒரு வீடோ மாநிலமோ மட்டுமில்லையே !'


'புரியாமல் பேசாதே அம்மா . உனக்கு உடம்பு சரியில்லை என்றால் தனியாக தவிப்பாயே என்று தான் கூப்பிட்டேன். தவிர அந்த வீடு நிர்வகிக்க சிரமமாயிற்றே என்று தான் விற்று விடலாம் என்றேன்'. அவள் குரல் மிகவும் தாழ்ந்திருந்தது .


'அப்படியா' என்று கிண்டலாக கேட்டவள் தொடர்ந்தாள்.

சொந்த சகோதரர்களே சொத்து என்றால் உடன் பிறந்த பாசத்தை கூட மறந்து போவது மாதிரி உனக்கு அம்மாவுடைய அன்பு பாசம் அவள் உணர்வுகள் பற்றி கவலை இல்லை.சொத்து மட்டும் வேண்டும். சிறைக் கைதி மாதிரி என் மனசை கட்டு படுத்தி கொண்டு அப்படியாவது உங்களுடன் சேர்ந்து இருக்க வேண்டுமா என்ன.?


'..உன்னை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை அம்மா. நீ வித்தியாசமாக சிந்திக்கிறாய் இது சரிப்பட்டு வராது..'


'என்னாலும் தான் உன்னை புரிந்து கொள்ள முடியவில்லை. ஏழைகளை துச்சமாக பார்க்கிறாய் . அதே சமயம் உன்னிடம் வேலை பார்ப்பவனை கண்டிக்க யோசிக்கிறாய்! போதும் பேசியது ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌எஙகளதலை முறை யிலாவது இன்னும் கொஞ்சம் ஈரம் இருக்கிறது என்று சந்தோஷப்படுகிறேன்'.


'பூமாவை என்னுடன் என் வீட்டில் என் சொந்த சகோதரி மாதிரி வைத்து கொள்ள போகிறேன்.'

அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல தலையசைத்தவள்.‌மகளின் முகத்தை பார்த்து விட்டு மேலும் தொடர்ந்தாள்.


'இப்போதைக்கு நான் இங்கு வருவதாக இல்லை .உனக்கு வேண்டுமானால் நீ அங்கு வந்து பார்த்து க் கொள்.'

சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் மீனாட்சி.


கேட்டு கொண்டு வெளியே நின்ற டிரைவரின் கண்கள் பனித்திருந்தன..

புண்ணியவதி இவர்களை போல ஒருசிலர் வாழ்ந்து கொண்டு இருப்பதால் தான் வானம் இன்னும் பொய்க்காமல் ஓரளவாவது பெய்கிறது. ஒரு ஆழ்ந்த மூச்சுடன் காரை எடுக்க கிளம்பினார் அவர்.

-காந்திமதி உலகநாதன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு