Published:Updated:

பூட்ஸ்! - குறுங்கதை

Representational Image
Representational Image

வாகன ஓட்டிகள் மெல்லத் தங்கள் வண்டிகளை நகர்த்த, கிடைத்த இடைவெளியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பூந்து, புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அந்தப் புறநகரின் மெயின் சாலைக்குத் தார் போடும் பணி ஜரூராக நடை பெற்றுக் கொண்டிருந்தது. வெயில் நாற்பது டிகிரியை நெருங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் உருகியோடும் தாரை ஊற்றியபடி ஆட்கள் அயராத வேகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். வாகன ஓட்டிகள் மெல்லத் தங்கள் வண்டிகளை நகர்த்த, கிடைத்த இடைவெளியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பூந்து, புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள்.

வேலை செய்பவர்கள் நடுவில் புகும் வாகனங்களுக்கும் தங்களால் ஆன வரை உதவியபடி, அதேசமயம் வேலை தாமதமாகாமலும் பார்த்துக் கொண்டார்கள்.

Representational Image
Representational Image

வந்து நின்ற காரைப் பார்த்ததும்,கடையோரமாக நிழலில் நின்று கொண்டிருந்த கான்ட்ராக்டரும், சூபர்வைசரும் அவசரமாக ஓடி வந்தார்கள். அவர்கள் அவசரத்தைக் கண்ட வேலையாட்களும் பணியில் மேலும் கவனம் காட்டினர். கான்ட்ராக்டர் அருகில் வந்ததும், உள்ளிருந்த ஆபீசர் கதவுக் கண்ணாடியைக் கீழே இறக்க, குளிர்ச்சியான ஏசி காற்று கான்ட்ராக்டரின் முகத்தில் பட, அவர் கண்கள் லேசாகக் கிறங்கின.

பணிவாக வணக்கம் சொன்ன அவரைத் தொடர்ந்து சூபர்வைசரும் வணக்கம் சொல்ல, உள்ளிருந்தவர் ஓட்டுனரைப் பார்த்து “என்ன சாமி?அந்த ஸ்பெஷல் ஷூ எங்க?” என்று கேட்க, சாமி தலையைச் சொறிந்தபடி,”சாரிங்க ஐயா!நேற்று அந்தக் கார்ல ஏசி போதலைன்னு சொன்னீங்களேன்னு இந்தக் காரை எடுத்தேன். பூட்ஸ் அதிலேயே இருக்கு.. மறந்துட்டேன் ஐயா”என்க, அந்த ஆபீசர் ஸ்பெஷல் ஷூ இல்லாததால கீழே இறங்காமலே,” மேடு பள்ளம் இல்லாம சரியாப் போடணும்... என்ன... எனக்கு எறங்கிப் பார்க்க நேரம் இல்லை..மீட்டிங் இருக்கு…” என்று சொல்லியபடியே ஓட்டுனரைப்பார்க்க,அவர் மெல்லக் காரை நகர்த்தினார். கான்ட்ராக்டரும்சூபர்வைசரும் பெரிதாகத் தலையையாட்டிவிட்டு வணக்கம் சொல்ல, கார் வேகமெடுத்தது. கீழே, தகிக்கும் தாரில், கொதிக்கும் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மூன்று, நான்கு பேரின் கால்களில், கிழிந்த கோணிப்பையும், அதனை இறுகக் கட்டிய இளக்கயிறும் தாரில் அமிழ, தார்ச்சாலைப் பணி நன்கு நடை பெற்றுக் கொண்டிருந்தது!

-ரெ.ஆத்மநாதன்,

மெக்லீன்,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு