Published:Updated:

சிகப்பும் கறுப்பும் வெறும் நிறங்கள்தானே? | My Vikatan

Representational Image

அறச்சீற்றம் எழவேண்டிய ஒரு சமூக சப்பைக்கட்டுக்குக் குற்ற உணர்வுடன் பெண்ணின் தாயார் பேசியது இன்னும் அதிர்ச்சி . எனது கோபம் எடுபடவில்லை...

சிகப்பும் கறுப்பும் வெறும் நிறங்கள்தானே? | My Vikatan

அறச்சீற்றம் எழவேண்டிய ஒரு சமூக சப்பைக்கட்டுக்குக் குற்ற உணர்வுடன் பெண்ணின் தாயார் பேசியது இன்னும் அதிர்ச்சி . எனது கோபம் எடுபடவில்லை...

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

எனது மிக நெருக்கமான நட்பு வட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தின் பெண்ணுக்கு வரன் தேடிக்கொண்டிருக்கிறார்கள்...

படித்து முடித்து, பணியிலிருக்கும் பெண். அனைவரிடமும் மிகவும் இனிமையாகப் பழகும் சுபாவம் கொண்டவள். குடும்ப உறுப்பினர்கள் தொடங்கி நட்பு, சுற்றம் வரை அனைவரின் நல்லது கெட்டவற்றிலும் அக்கறையுடன் கலந்துகொள்ளும் பிள்ளை. அன்பு, அறிவுடன் உடை தேர்வு மற்றும் ஒப்பனையிலும் கவனம் கொண்டவள்.

அவர்களின் தூரத்து சொந்தத்திலேயே ஒரு பையன் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர்களின் சொந்தக்கார பெண்மணி ஒருவர், பெண்ணின் புகைப்படத்தை அனுப்பக் கேட்க, ஆர்வமற்ற ஒருவித வேண்டா வெறுப்புடன் தான் புகைப்படத்தைக் கொடுத்தார் பெண்ணின் தாயார்...

புகைப்படம் சென்ற சில நாட்களிலேயே மாப்பிள்ளை வீட்டாருக்கு விருப்பம் இல்லை என்பது சொந்தக்கார பெண்மணியின் மழுப்பலான பதில்களிலிருந்தே தெரிந்துவிட்டது .

பிடிக்காமல் போனதற்குக் காரணம் பெண் சற்று நிறம் குறைவு .

நேரில் பார்க்கவில்லை... பேசவில்லை...

"எனக்கு அந்த குடும்பத்தைப் பத்தி அப்பவே தெரியும்... அவங்க வீட்டுல புகுந்த பெண்ணுங்க எல்லோரும் சிகப்பு... நம்ம பொண்ணு நிறம் குறைவுதானே... அதனாலதான் அப்பவே தயங்கினேன்... ."

அறச்சீற்றம் எழவேண்டிய ஒரு சமூக சப்பைக்கட்டுக்குக் குற்ற உணர்வுடன் பெண்ணின் தாயார் பேசியது இன்னும் அதிர்ச்சி .

எனது கோபம் எடுபடவில்லை...

"பெண்ணை பெத்துட்டு இதுக்கெல்லாம் கோபப்படக் கூடாது..."

தேவையில்லாத தலைக்குனிவு .

என் "அறச்சீற்றம்" அதிகமானபோது,

"நீங்களும் நிறம் கம்மிங்கறதனால எத்துக்க முடியல... ."

என்பதான அஸ்திரம்... வாதத்துக்கு ஒன்றுமில்லாத போது,

"நீ அந்த கூட்டம் இல்ல ?... அப்படித்தான் பேசுவ ." எனும் அடையாள முத்திரையைக் குத்தி வாயடைக்க வைக்கும் நம் சமூக வழக்கம் .

Representational Image
Representational Image

எனக்கு உருவம் மற்றும் நிறம் பற்றிய கவலைகளெல்லாம் கிடையாது...

ஊர் வரும் சமயங்களில்,

"இவ்வளவு காலம் பிரான்சுல இருந்தும் நீ வெளுக்கலையே"

எனும் சித்தப்பு பெரியப்புகளின் புலம்பல்களின் போது மட்டுமே எனக்கு என் நிறம் பற்றிய ஞாபகம் வரும் .

பொருளாதார சூழலுக்கு அடுத்ததாக, பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களை நிர்ணயம் செய்வதில் பெண்ணின் நிறத்துக்கும் பெரும்பங்கு உண்டு...

"சுண்டினா சிவக்கிற நிறத்துல இருக்கனும், என்னா பொண்ணு கொஞ்சம் நிறம் குறைவு. மாப்பிள்ளை வெள்ளைக்காரன் மாதிரி இருக்காரு."

என்பதான உரையாடல்களுடன்,

"பொண்ணு நம்ம _ _ _ _ _ மாதிரி இருக்கனும்"

எனும் வாசகத்தின் கோடிட்ட இடத்தில் அவரவருக்குப் பிடித்த நடிகைகளின் பெயர்களை நிரப்பிய வாதங்களையெல்லாம் தாண்டிய பிறகு மட்டுமே தமிழ் கூறும் நல்லுலகின் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன . "வரதட்சணை விலை பேசுதல்களிலும்" நிறம் முன்னிறுத்தப்படுகிறது .

சில காதல் திருமண சம்மதங்களைக் கூட நிறம் நிர்ணயம் செய்வதுண்டு .

"என் மாமியாரிடம் நான் பட்ட கொடுமைகளை என்னிடம் நீ பட வேண்டும்" எனும் மாமியார் மருமகள் உளவியல் தொடர்ச்சியைப் போலவே,

"எங்க குடும்பத்து மருமகளுக எல்லோருமே சிகப்பு" எனும் வாழையடி வாழை தொடர்ச்சி காரணங்களும் உண்டு.

அழகுக்கான அளவுகோலாக மட்டுமல்லாமல், சமூக மதிப்பீடுகளிலும் வெள்ளைத்தோல் பொதுப்புத்தி நம் ஆழ் மனதில் அழுந்திக் கிடக்கிறது...

கூட்டம் அதிகமான பேருந்தில் இரு நபர்கள். ஒருவர் வெள்ளையான, கோட் சூட் அணிந்த மனிதர். மற்றொருவர் முண்டா பனியனும் மடித்துக் கட்டிய லுங்கியுமாக நிறம் குறைவான மனிதர்.

அந்த பேருந்தில் திடீரென திருடன் திருடன் என யாராவது சப்தமிட்டால் அனைவரின் பார்வையும் யாரை நோக்கித் திரும்பும் ?

பண மோசடி போன்ற அன்றாட செய்திகளிலும், ஏமாந்தவர்களின் பேட்டிகளிலும்,

"வெள்ளையும் சொள்ளையுமா இருந்தான், வெள்ளைக்காரனாட்டம் இருந்தான், ஏமாத்த மாட்டான்னு நெனைச்சேன்."

என்பதான வாசகங்கள் சகஜம் .

ஆங்கிலேயர்கள் தொடங்கி பிரெஞ்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் என ஐரோப்பியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியால் காலனியாதிக்கத்திலிருந்த மண்ணில்,

"வெள்ளைக்காரன் சூழ்ச்சி செய்வான்னு தெரியும் ."

என்பதான வார்த்தைகள் தான் வரலாற்றுப்படி நியாயமாக இருக்க வேண்டும் . ஆனால் "வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன் தாண்டா" என்பதான நமது பொதுப்பார்வை எதிர்மறை .

Representational Image
Representational Image

அமெரிக்க ஐரோப்பிய நிறவெறிக்குக் கூட ஆப்ரிக்க மக்கள் வேறொரு கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வாதம் வைக்கப்படலாம் ஆனால் ஒரே மண்ணின் மைந்தர்களின் வெள்ளை மோகத்துக்கும் கறுப்பு தாழ்வு மனப்பான்மைக்கும் சமூக காரணங்கள் என்ன ?

வெள்ளையாக இருப்பவர்கள், பளிச்சென்ற ஆடை அணிபவர்கள் எல்லோரும் உத்தமர்கள் எனும் பிரமை, பொதுப்புத்தி என்பதையும் தாண்டி மிகத் தந்திரமானதொரு புத்தி அரசியல் .

ஜாதீய கட்டமைப்பில் முக்கிய பங்கு வகித்த நிறபேதம், வரலாறு நெடுகிலும் வர்க்க பேதம் மற்றும் அரசியல் காரணங்களுக்காகவும் மிகத் தந்திரமாக கையாளப்பட்டுக் கொண்டு வருகிறது…

இத்துடன்,

ஆள்வதற்கான தகுதியில் முக்கியமானது வெள்ளை நிறம் என்ற எண்ணம் உருவாகி நம் ஜீன்களில் படிந்திருக்குமோ என்றும் தோன்றுகிறது…

கைபர் கணவாய் வழி வந்தவர்கள் தொடங்கி கேரளாவில் கால்பதித்த வாஸ்கோடகாமா வழி ஆங்கிலேயர்கள் வரை தென்கோடி தமிழன் கண்ட ஆளும் வர்க்கம் அனைத்துமே வெள்ளைதான் . சுதந்திர இந்தியாவிலும் நேரு தொடங்கி இந்திரா, ராஜிவ், வாஜ்பாய் என பெரும்பாலான பிரதமர்கள் நல்ல நிறம் . இந்திராகாந்தி பிரதமர் ஆவதற்குப் பக்கபலமாக நின்றவர் கறுப்பு காமராஜர் என்பது இன்று எத்தனை பேர் நினைவில் இருக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால் எம்ஜிஆர் என்றதுமே அவரது நிறத்தைச் சிலாகிப்பவர்கள் இன்றும் உண்டு .

நிறபேதத்துக்கான வரலாற்று ரீதியிலான காரணங்கள் எவையாக இருந்தாலும் அதை உளவியல்ரீதியாக எண்ணை வார்த்து எரிய வைத்துக்கொண்டிருப்பதில் தமிழ் சினிமாவின் பங்கு மிக முக்கியமானது . ஜாதீய கட்டமைப்பைக் காட்சிப் படுத்துவதில் கறுப்பு நிறம் சினிமாவில் மிகத் தந்திரமாக கையாளப்படுகிறது.

எண்பதுகளின் தமிழ் சினிமாவில் மருத்துவர், அரசு உயரதிகாரி, நீதிபதி போன்ற வேடங்களுக்கென்றே சில நடிகர்கள் உண்டு...

அனைவருமே உயரமாய், புஷ்டியாய், முக்கியமாக நல்ல சிவந்த நிறத்தவர்களாகவே இருப்பார்கள் .

Representational Image
Representational Image

அன்று முதல் இன்றுவரையிலும் தமிழ் சினிமாவின் அடியாட்கள் கூட்டத்தில் கறுப்புக்குத்தான் அறுதி பெரும்பான்மை .

அடியாட்கள் மட்டுமல்ல, குடித்துவிட்டு சலம்பும் கதாபாத்திரம், பிக்பாக்கெட் திருடன், கஞ்சா வியாபாரி என விளிம்புநிலை கதாபாத்திரங்கள் அனைத்தும் பெரும்பாலும் நிறம் குறைவான நடிகர்களை கொண்டே காட்சிப்படுத்தப்பட்டன என்பது மறுக்க முடியாத உண்மை.

கூட்டமான பேருந்தில் திருடன் எனும் கூச்சலைக் கேட்க நேர்ந்தால் முண்டா பனியனும் மடித்துக் கட்டிய லுங்கியுமாக நிற்கும் கறுப்பு மனிதன் மீது ஏனைய கறுப்பு நிறத்தவர்களே அவர்களையும் அறியாமல் சந்தேகம் கொள்வதற்கு சினிமா காட்சிகளின் மூலம் நம் மண்டையில் உறைந்த பொதுப்புத்தியும் ஒரு மிக முக்கிய காரணம். மிகைப்படுத்துவதாகத் தோன்றினாலும் உண்மை இதுதான்.

நகைச்சுவை என்ற பெயரில் நிகழ்த்தப்படும் சிரிப்பே வராத உருவகேலி உளறல்களிலும் நிறமே பிரதானமானதாக திகழ்கிறது

"தார் ரோடு முகம்" "தீச்சட்டி மூஞ்சி" போன்ற நகைச்சுவை நடிகர்களின் வசவுகள் தொடங்கி கோபுரங்கள் சாய்வதில்லை அருக்காணி முதல் சிவாஜி பட அங்கவை சங்கவைகள் வரை, அழகுக்கு எதிர்ப்பதமான அவலட்சணம் கறுப்பு நிறத்தின் மூலமாகவே காட்சிப்படுத்தப்படுகிறது…

நிறம் குறைவான நடிகைக்கு பளீர் ஒப்பனை, கதாநாயகியின் நிறத்தைத் தூக்கலாகக் காண்பிக்க அவளைவிட நிறம் குறைவான துணை நடிகைகள் கூட்டம் என நிறைய உதாரணங்கள் உண்டு .

கவுண்டமணி செந்தில் ஜோடியின் நகைச்சுவை காட்சிகளில் உச்சம் தொட்ட நிறம் மற்றும் இன்னபிற உருவகேலிகள் சந்தானம், யோகி பாபு போன்ற நகைச்சுவை நடிகர்களால் இன்றளவும் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன .

சமூகத்தின் அனைத்து மட்டத்துக்கும் சாத்தியமாகியிருக்கும் இணையவழி அறிவுசார் பரிமாற்றங்களின் வழியே சமூக விழிப்புணர்வு அதிகரிக்கக் கூடிய சாத்தியங்களுக்கு ஈடாகக் குழு மனப்பான்மையும் அதிகரிக்கும் சுழலில்...

சிகப்பும் கறுப்பும் வெறும் நிறங்கள்தான். சுமார், லட்சணம், அவலட்சணம் போன்ற அழகை குறிக்கும் பதங்களும் அவரவர் பார்வைக்கும் பக்குவத்துக்கும் ஏற்ப மாறுபடும் என்ற பிரசங்கமெல்லாம் நம் சமூகத்தின் எத்தனை பேரைச் சென்றடையும் என்ற சந்தேகமும் எழுகிறது.

-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.