மாலை நேர தொழுகைக்கு பின், கிராமத்திலிருக்கும் மசூதியின் வெளிப்புறத்தில் நின்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வானத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன சுல்தான் பாய் பிறை தெரியுதா? என குரல் கொடுத்தவாறே வந்தார் உமர் பாய்.
வாங்க பாய்.. இன்னும் தெரியல என்றார் சுல்தான் பாய். இன்று பிறை தெரிந்தால் நாளை முதல் நோன்பு நோற்க வேண்டும். அந்த ஆர்வம் அனைவரின் முகத்திலும் தெரிந்தது. சிறிது நேரத்தில் அதோ அங்கே பிறை தெரியுது என சிறுவன் ஒருவன் குரல் கொடுக்க எங்கே எங்கே என அனைவரும் ஆர்வத்துடன் பார்க்க... வானத்தில் ஒரு மெல்லிதான வளைந்த கோடு போல் காட்சியளித்தது பிறை.

பார்த்ததும் அனைவரின் முகத்திலும் ஆனந்த பூரிப்பு. "அல்ஹம்துலில்லாஹ்"எனக் கூறிக் கொண்டனர். உடனே சிறுவன் கபீர் வீட்டிற்கு ஓடி வந்து பாட்டி பிறை தெரிகிறது என குரல் கொடுக்க, வீட்டில் அமர்ந்து பீடி சுற்றிக் கொண்டிருந்த பாட்டி நூர்ஜஹான் சந்தோஷத்துடன் அப்படியா?.. "அல்ஹம்துலில்லாஹ்"என கூறிக்கொண்டே செய்யும் வேலையை அப்படியே விட்டுவிட்டு உடனே தன் வெள்ளை நிற புர்கா(சத்தர்) எடுத்து உடுத்திக்கொண்டு, பையை எடுத்து கொண்டு,பேரன் கபிரை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள் இப்ராஹிம் சாஹேப் கடைக்கு. அவரின் கடைதான் ஊரிலேயே பெரிய மளிகை கடை. தெருமுனையில் நின்று கொண்டிருந்த முருகேசன் என்ன பூமா... அவசரமா எங்க போற? எனக் கேட்டார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபிறை வந்துடுச்சுல்ல. அதான் நம்ம பாய் கடைக்கு போய் மளிகை சாமான் வாங்கி வரலாம்னு. நாளையில இருந்து நோன்பு வைக்கணும்ல என்றாள் பாட்டி நூர்ஜஹான். இளம் வயதிலேயே கணவனை இழந்துவிட்ட நூர்ஜஹானுக்கு ஒரே மகள்.
பீடி சுற்றும் வேலை செய்து மகளை வளர்த்து திருமணம் செய்து வைத்து விட்டாள். மகள், மருமகன், பேரன் என அவர்கள் கூடவே தங்கி விட்டாள் நூர்ஜஹான். தன் கடை அருகே வந்த நூர்ஜஹானை பார்த்ததும் வாம்மா... உன்னை தான் எதிர் பார்த்துட்டு இருந்தேன்.

பிறை தெரிந்த அடுத்த நிமிஷமே நீ வந்து விடுவாயே! என்றார் பல வருஷமாக நட்பில் இருக்கும் இப்ராஹிம் சாஹேப். ஆமாம் பாய். மளிகை சாமான் வாங்க தான் வந்தேன். உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. பீடி சுற்றும் கூலி வாரம் ஒருமுறை தான் தருவாங்க. இப்போ என்கிட்ட காசு இல்ல. பொருட்களை இப்ப கொடுங்க. கூலி வாங்கினதும் கொடுத்துடறேன் என்றாள் நூர்ஜஹான்.
அட என்னம்மா நீ? இதையெல்லாம் சொல்லிக்கிட்டு? உன்னைப்பற்றி எனக்கு தெரியாதா? என்ன வேண்டுமோ தாராளமாக வாங்கிக்கோ! எப்போ முடியுதோ அப்போ கொடு போதும் என்றார் இப்ராஹிம் சாஹேப். அனைத்தையும் அமைதியாக நின்று கேட்டுக் கொண்டிருந்தான் பேரன் கபீர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தனக்குத் தேவையான பொருட்களை நூர்ஜஹான் சொல்லச் சொல்ல கடையின் வேலையாள் ஒவ்வொரு பொருளாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். நாளைல இருந்து நானும் லிஸ்ட் ரெடி பண்ணனும் ஜகாத் கொடுக்கவேண்டிய மாதம் வந்துடுச்சுல்ல என்றார் இப்ராஹிம் சாஹேப்.
நல்லது பாய்... ஆனா பத்து நோன்பு முடிந்த பிறகு தானே பணக்காரர்கள் பணப்பெட்டி திறக்கும். அதுவும் உங்களைப்போல தேவையானவர்களுக்கு வீடு தேடி வந்து யார் கொடுக்குறாங்க? எல்லோரும் அவர்கள் வீட்டைத் தேடிப் போய் வாங்க வேண்டும், மக்களை கூட்டமாக சேர்த்து வைத்து கொடுப்பதில் அவர்களுக்கு ஒரு பெருமை என்று அலுத்துக் கொண்டு கூறினாள் நூர்ஜஹான்.
அப்படி சொல்லாதம்மா! கொடுக்கும் முறை அவரவர் விருப்பம். நாம் எதுவும் சொல்லக்கூடாது என்றார் இப்ராஹிம் சாஹேப். பொருட்கள் அனைத்தையும் வேலையாள் பையில் போட்டுக் கொடுக்க மகிழ்ச்சியுடன் அவசர அவசரமாக கிளம்பினாள் நூர்ஜஹான். என்ன பாய்! இவ்வளவு பரபரப்பாக போறாங்க என்றார் வேலையாள்.

''தம்பி! ரம்ஜான் மாதம் வந்தாலே பெண்களுக்கு வேலை அதிகமாகிவிடும். அதிகாலை 3 மணிக்கு எழுந்து அனைவருக்கும் சமையல் செய்து கொடுத்துவிட்டு பின்பு தானும் சாப்பிட்டுவிட்டு, நோன்பு வைத்து, தொழுகைக்கு தயாராக வேண்டும். இரவு அனைவரும் உண்ட பின்பு தொழுகை செய்ய ஆரம்பிப்பார்கள். நடு இரவுவரை தொழுவார்கள். பின்பு சிறிது நேரம் உறங்கி, மீண்டும் 3 மணிக்கு எழுந்து சமையல் வேலையை ஆரம்பிப்பார்கள்.
இந்த மாதம் முழுவதும் பெண்களுக்கு வேலைகள் அதிகம். இதை உணர்ந்து கொண்டு ஆண்களும் அவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டியது அவசியம். அல்லாஹ்வின் மீதும், நபிகளார் மீதும் கொண்ட பாசத்தினால் இது ஒரு சுமையாக இருப்பதில்லை'' என்று சொல்லிவிட்டு, இன்றிலிருந்து இரவு தராவீஹ் தொழுகைக்கு போகவேண்டும் அதனால் சீக்கிரமாகவே கடையை சாத்த வேண்டும் பொருட்களை எடுத்து உள்ளே வை என்று சொல்லிவிட்டு தொழுகைக்கு தயாரானார் இப்ராஹிம் சாஹேப். அருகில் இருக்கும் மசூதியிலிருந்து பாங்கொலி கேட்டது அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!
- தமிழ் தரணி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் +சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும்
வெளிப்படுத்தலாம்.