Published:Updated:

உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தும் மல்லர் கம்பம்! |My Vikatan

மல்லர் கம்பம்

பெரும்பாலும் அந்த நாட்களில் கிணத்துக் குளியல், மரம் ஏறுதல், சேற்று வயலில் குதித்து குதூகலித்தது, சூரியனே டென்ஷனாகும் அளவுக்கு இருட்டும் வரை விளையாடியது என மனதும் உடலும் வலிமையாக இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை.

உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தும் மல்லர் கம்பம்! |My Vikatan

பெரும்பாலும் அந்த நாட்களில் கிணத்துக் குளியல், மரம் ஏறுதல், சேற்று வயலில் குதித்து குதூகலித்தது, சூரியனே டென்ஷனாகும் அளவுக்கு இருட்டும் வரை விளையாடியது என மனதும் உடலும் வலிமையாக இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை.

Published:Updated:
மல்லர் கம்பம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

90'ஸ் கிட்ஸ்கள் மட்டுமே அனுபவித்த வாழ்க்கை... வீட்டுக்கு தெரியாமல் ஓடிப்போய் நண்பர்களுடன் விளையாடிவிட்டு காலில் மண்ணும், முகத்தில் வியர்வையும், சட்டையில் அழுக்கும் நிறைந்து வீடு வரை குதித்து குதூகலமாக வந்துவிட்டு அம்மா முன்னால் எதுவுமே தெரியாத அப்பாவி போல் நின்றதும் விடிய விடிய திட்டு வாங்கி மீண்டும் எதுவுமே நடக்காதது போல் அடுத்த நாள் அதே நேரத்திற்கு விளையாட ஓடியதும் வாழ்வில் மறக்க முடியாத இனிமையான நாட்களாகும். பெரும்பாலும் அந்த நாட்களில் கிணத்துக் குளியல், மரம் ஏறுதல், சேற்று வயலில் குதித்து குதூகலித்தது, சூரியனே டென்ஷனாகும் அளவுக்கு இருட்டும் வரை விளையாடியது என மனதும் உடலும் வலிமையாக இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. நிலைமையே வேறு. அன்று இயற்கையாகவே கிடைத்தது அனைத்தும் இன்று வியாபாரமாகிவிட்டது.

பயிற்சியாளர் ஜெ.சண்முகம்
பயிற்சியாளர் ஜெ.சண்முகம்

இன்று பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் வெஸ்டர்ன் டான்ஸ், கீ போர்டு, கிடார், கராத்தே, சிலம்பம் என அனைத்து கலைகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அத்தனைக்கும் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. பொதுவாக பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் இதுபோன்ற கலைகளை கற்றுக் கொள்வதை தான் விரும்புகின்றனர். மேற்கத்திய கலைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நமது நாட்டுப்புறக் கலைகளுக்கு கொடுப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஒருபுறம் இதுபோன்ற மேற்கத்திய கலாச்சாரத்தின் மோகத்தில் மூழ்கி போய் இருந்தாலும் அதே வேளையில் சத்தமே இல்லாமல் நமது பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் முயற்சியும், பயிற்சியும் ஏதோ ஒரு மூலையில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

பெரும்பாலும் நமது பாரம்பரிய கலைகளான பறை, ஒயில், கரகம், வீரக்கலையான சிலம்பம் போன்றவற்றைத் தான் கேள்விப்பட்டிருப்போம் ஆனால் தமிழகத்தில் வெகுவாக அறியப்படாது மிகவும் சுவாரஸ்சியமான கலை என்றால் அது "மல்லர் கம்பம்" ஆகும். கரணம் தப்பினால் மரணம் என்பது போல அந்தரத்தில் ஒரு பறவையை போல தொங்கி, உடலை ரப்பர் போல வளைத்து சாகசம் செய்யும் வீரமும் தைரியமும் நிறைந்து, பார்வையாளர்கள் கண் சிமிட்டக் கூட யோசிக்கும் அளவிற்கு சவாலான, அற்புதமான கலை மல்லர் கம்பம்.

மல்லர் கம்பம்
மல்லர் கம்பம்

அன்றைய சோழ ,பல்லவ மன்னர் காலத்தில் அதிகமாக விளையாடப்பட்ட விளையாட்டுகளில் ஒன்று மல்லர் கம்பம் ஆகும். "மல்" என்னும் சொல் "வளத்தை" குறிக்கும். மல்லன் என்றால் "வீரன்" என்று பொருள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நிலை மல்லர்கம்பம், கயிறு மல்லர் கம்பம், தொங்கும் மல்லர்கம்பம் என்று மூன்று வகையான மல்லர் கம்பம் உள்ளது. மாணவர்கள் மல்லர்கம்பம் பயில்வதால் உடல் வளைவு திறன் மேம்படுகிறது. உடலையும் ,மனதையும் ஒருநிலைப்படுத்த உதவுகிறது. இளைஞர்கள் போதை பழக்கத்திலிருந்து மீளவும் மல்லர்கம்பம் உதவுகிறது. பெண்கள் பயிற்சி பெறுவதால் அவர்களின் உடல் வலு பெறுவதோடு கர்ப்பகாலத்தில் பெரிதும் உதவியாக இருக்கும் போன்ற நன்மைகள் உள்ளன.

தமிழகத்தை தாயகமாகக் கொண்டாலும் இக்கலை இன்று வடமாநிலங்களில் "மால்கம்" என்று பரவலாக பயிற்றுவிக்கப்படுகிறது.

தமிழகத்திலும் வெகு சில இடங்களில் மட்டுமே பயிற்றுவித்துக் கொண்டிருக்கும் இக்கலை தருமபுரி மாவட்டத்தில் தற்போது ஜெ. சண்முகம் என்னும் இளைஞரால் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இளங்கலை வேளாண்மை பயின்றுக் கொண்டிருந்த கல்லூரி நாட்களில் இக்கலையைக் கற்றுக்கொண்டவர் பின்னர் கலையின் மீதிருந்த தீராத ஆர்வத்தால் இதையே முழுநேர பணியாக்கிக் கொண்டுள்ளார். மல்லர்கம்பம் மட்டுமல்லாது வளரி , கர்லாக்கட்டை மற்றும் சிலம்பத்திலும் கைதேர்ந்தவர்.

மல்லர் கம்பம்
மல்லர் கம்பம்

மேலும் தருமபுரி மாவட்டம், நல்லாம்பட்டியில் இயங்கி வரும் இவரது "தமிழர் தற்காப்பு பயிற்சி" பள்ளியில் தமிழர் பாரம்பரியக் கலைகளான சிலம்பம், மல்லர்கம்பம், வளரி, கோலாட்டம் போன்ற எட்டு வகையான தமிழர்களின் பாரம்பரிய கலைகளை பயிற்றுவித்து வருகிறார். தமிழர்களின் பாரம்பரிய கலைகளை அனைவருக்கும் தெரிவிக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் தமிழர் திருநாளில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார்.

இவரது மாணவர்கள் சிலம்பம் ,மல்லர் கம்பம் என இரு கலைகளிலும் ,மாநில, தேசிய அளவில் பரிசுகளை வென்றுள்ளனர். சமீபத்தில் இந்த "தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளி"யின் மாணவி இரா.நிஷா தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சார்பில் சிலம்ப கலைக்காக "கலை இளமணி" விருதினை பெற்று சாதனைப் படைத்துள்ளார். மேலும் மாணவி இரா.நிஷா பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து தற்போது "விளையாட்டு துறை" மூலம் கல்லூரியில் முதலாமாண்டு இளங்கலை நுண்ணுயிரியல் (B.Sc. Microbiology) சேர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழர் பயிற்சி பள்ளியின் நோக்கமே கலையை வளர்ப்பதும், கலையின் மூலமாக மாணவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதுமாகும். அதுமட்டுமல்லாமல் தருமபுரி மாவட்டம் முழுவதும் கடைக்கோடி கிராமம் வரை தமிழர்களின் பாரம்பரிய கலைகளை கொண்டு சேர்க்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் பயன்பெற வேண்டும். குறைந்தது ஆயிரம் மாணவர்களையாவது உருவாக்க வேண்டும் என்பதே தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளியின் கனவு என்கிறார் நிறுவனரும்,பயிற்சியாளருமான திரு. ஜெ.சண்முகம் அவர்கள்.

மல்லர் கம்பம்
மல்லர் கம்பம்

இதுபோன்ற கலைகள் அரசின் கவனம் பெற்று இந்தக் கலையை தமிழகத்தில் பரவலாக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மல்லர்கம்பம் போன்ற கலைகளை பயிற்சிக் கொடுத்து இந்த கலையையும், இதன் பயிற்சியாளர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும். நமது கலைகள் பாரெங்கும் பரவ வேண்டும். கலைகளும் கலைஞர்களும் கொண்டாடப்பட வேண்டும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.