Published:Updated:

நேர்மையின் அடையாளக் குறியீடு! - எனக்கு பிடித்த கிராம நிர்வாக அதிகாரி| My Vikatan

திரு. ஷேக் தாவூது

இந்த சமூக அந்தஸ்து மிக்க பணிகளையும், பதவிகளையும் பிறர் மெச்சும் ஏற்புடைய வடிவில் பணிசெய்து கடப்பவர்கள் சமூகத்தில் மற்றும் தாம் சார்ந்திருக்கும் நிலப்பரப்பில் வாழும் பல்வேறு சமூக மக்களின் மனங்களில் மகுடம் சூட்டிக் கொள்கின்றனர்.

நேர்மையின் அடையாளக் குறியீடு! - எனக்கு பிடித்த கிராம நிர்வாக அதிகாரி| My Vikatan

இந்த சமூக அந்தஸ்து மிக்க பணிகளையும், பதவிகளையும் பிறர் மெச்சும் ஏற்புடைய வடிவில் பணிசெய்து கடப்பவர்கள் சமூகத்தில் மற்றும் தாம் சார்ந்திருக்கும் நிலப்பரப்பில் வாழும் பல்வேறு சமூக மக்களின் மனங்களில் மகுடம் சூட்டிக் கொள்கின்றனர்.

Published:Updated:
திரு. ஷேக் தாவூது

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

வாழ்வில் ஒவ்வொருவரும் தமது தனிப்பெரும் இலட்சியங்களில் ஒன்றாகவும், தமக்கு கிடைத்திருக்கும் சமூக அந்தஸ்தாகவும் கருதுவது தமக்கு கிடைத்திருக்கும் நல்ல பணிகளையும், பதவிகளையும்தான்.

அந்த தனிப்பெரும் பணிகள் மற்றும் பதவிகள் மூலமாகவே ஒவ்வொருவரும் தாம் சார்ந்திருக்கும் நிலப்பரப்பிற்கு மற்றும் தம் சமூகத்திற்கு அடையாளப் படுத்தப்படுகின்றனர்.

இந்த அடையாளம் என்பது தலைமுறைகளைக் கடந்து அவர்தம் பெயருடன் ஒட்டிக் கொண்டு அவர்தம் பெருமையை சொரிந்த வண்ணமிருக்கும், இப்பெருமையின் மூலம் அவர்தம் சந்ததியரும் சமூகத்திற்கு அடையாளப்படுத்தப் படுகிறார்கள்.

Representational Image
Representational Image

இந்த சமூக அந்தஸ்து மிக்க பணிகளையும், பதவிகளையும் பிறர் மெச்சும் ஏற்புடைய வடிவில் பணிசெய்து கடப்பவர்கள் சமூகத்தில் மற்றும் தாம் சார்ந்திருக்கும் நிலப்பரப்பில் வாழும் பல்வேறு சமூக மக்களின் மனங்களில் மகுடம் சூட்டிக் கொள்கின்றனர்.

அப்படித்தான் தாம் முன்பு கிராம நிர்வாக அதிகாரியாக பதவி பெற்று பணி செய்து வந்த காலம் முழுதும் தம்மை ஓர் அதிகாரமிக்கவராக அடையாளப் படுத்தாமல் அவர் பணி செய்யும் பகுதி சார்ந்த மக்களோடு தாமும் ஒரு சாமானியனாக அம்மக்களுக்கு சேவை செய்ய வந்த சேவையாளராக தம்மை ஐக்கியமாக்கிக் கொண்டு பணி செய்ததை அவரோடு பயணித்த பல சமயங்களில் நான் கண்ணுற்று இருக்கின்றேன்.

அப்படி சேவை மனப்பாங்குடன் சகல மக்களையும் தமது அர்ப்பணிப்பு நிறைந்த சேவைகளின் மூலம் தன்பால் ஈர்த்த அந்த உன்னதர், கடந்து முடிந்த 2015ஆம் ஆண்டு வரையில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட சுற்று வட்டாரங்களிலுள்ள பல்வேறு கிராமங்களில் கிராம நிர்வாக அதிகாரியாக (VAO) பணியாற்றிய திரு. ஷேக் தாவூத் அவர்கள்.

அவர் பணி செய்த காலங்களில் சில பொழுது நான் அவருடன் பணி செய்த இடங்களுக்கு அவருக்காக அவர்தம் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வதுண்டு.

திரு. ஷேக் தாவூது
திரு. ஷேக் தாவூது

அப்படி அவருடன் நான் சென்ற இடங்களிலெல்லாம் அவர் பணி செய்யும் பகுதி மக்கள் அவர் வருகையை எண்ணி ஆவலுடனும் அதே சமயம் தமது கோரிக்கைகள் எப்படியும் நிறைவேற்றப் பட்டுவிடும் என்ற தீரா நம்பிக்கையுடனும் அவரை வரவேற்பதை அந்த கிராம மக்களின் விழியோரம் பூத்து நிற்கும் நீர்குமிழை வைத்து அடையாளம் கண்டிருக்கின்றேன்.

சிலவேளைகளில் இயற்கை மற்றும் விபத்துகளால் இன்னலுற்று கலங்கி நின்று அரசாங்கத்தின் உதவி ஒன்றையே பேருபகாரமாக எதிர்நோக்கி காத்திருக்கும் பாதிக்கப் பட்டவர்களை அன்போடும், கட்டற்ற கரிசனமோடும் அவர்தம் தோளில் கரம் தொடுத்து ஆறுதல் படுத்துவதாகட்டும், அவர்தம் இன்னல்களுக்கு வெகு விரைவில் தீர்வு காண வழி ஏற்படுத்துவதில் ஆகட்டும்! அத்தருணங்களில் எல்லாம் அம்மக்கள் இதழோரம் சிறு புன்னகையோடு தமது விழிகளிரெண்டும் நீர் சொரிய இருகரம் கூப்பியதில் காணக் கிடைத்தது அவரது அறமொழுகும் மனிதநேய மனப்பாங்கு.

வழியனுப்பு நிகழ்வின் போது
வழியனுப்பு நிகழ்வின் போது

அந்த மா பாங்கே! தாம் பணி செய்த இடங்களிலெல்லாம் அவர்மீது அம் மக்கள் கொண்டிருந்த மதிப்பின் விகுதியை, மரியாதையின் உச்சத்தை வெகு இயல்பாய் காட்டியது என்பது மிகையல்ல.

அரசுத்துறை நிறுவனத்தார் என்றால் விரலிறுக்கி வரையும் அவர்தம் கையெழுத்திற்கு ஈடாக கரமொழுகி கையூட்டினை திணிக்க வேண்டும் என்ற வகுக்கப்படாத ஓர் தனிச் சட்டம் சமூக புழக்கத்தில் சகஜமாய் உறவாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தானிடும் ஒவ்வொரு கையெழுத்திலும் பிறர் நலனை மட்டுமே தமது பிரதிபலனாக கொண்டு பயனாளர் அடையும் பெரு மகிழ்வொன்றே தமக்கு கிடைத்த தன்னிகற்ற ஊழிய வெகுமதியாய் ஏற்றுக் கொண்டதில் தெரிந்தது அவர்தம் வற்றாத அறத்தொண்டு.

தமது நிர்வாக பணியில் அவர்தம் நேர்மையை பறைசாற்றும் பல நிகழ்வுகளில் ஓர் முத்தாய்ப்பாக பலவாண்டுகளுக்கு முன்னர் அவர் திருமருகல் எனும் ஊரில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றியபோது அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த செவிலியர் ஒருவர் மரணித்து இருந்தார்.

Representational Image
Representational Image

தமது உறவுகள் எவரொருவரின் ஆதரவுமற்று தனியொருவராக வசித்துவந்த அவர் மரணித்திருந்த வேளையில் அவரது உடலை கைப்பற்றிய அவரது வசிப்பிடத்திலிருந்து அவருடைய சேமிப்பாய் சிறிது சிறிதாக சேமித்து வைத்திருந்த சுமார் இரண்டரை இலட்சம் மதிப்புள்ள ரொக்கப் பணமும் அத்தோடு சுமார் 22 பவுன் நகைகளும் கண்டெடுக்கப்பட்டு அதனை அப்போதைய நிர்வாக அதிகாரியும், நேர்மையின் நிழலுமான திரு. ஷேக் தாவூது அவர்களிடம் வழங்கி மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு உயரதிகாரிகள் பணித்திருந்தனர்.

அதனை முறைப்படி பெற்றுக் கொண்டவர் அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பொருட்களையும், பணத்தையும் மரணித்த அந்த செவிலியரின் இரத்த பந்த உறவினர்களைப் பெரும்பாடுபட்டு தொடர்பு கொண்டு அவர்களை வரவழைத்து அவர்தம் ஆவணங்களை சரிபார்த்து அவர்களிடம் அப்பொருட்களை வழங்கி தமது கடமையில் தவறாத கண்ணிய வேந்தராய் தாம் வகித்திட்ட பொறுப்புக்கு வாழும் சாட்சியானார்.

இன்று பரவலாக பேசுபொருளாக வலம்வரும் 'லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்' எனும் வழக்காட்டிற்கு இலச்சினையாக பலவாண்டுகளுக்கு முன்பே ஒரு மாசற்ற மாண்பராக தன்னை அவர் பறைசாற்றி இருந்தார்..

Representational Image
Representational Image

சுமார் 22 ஆண்டுகாலம் வரையிலான அவரது அரசுப் பணியில் சில காலம் வரையில் பட்டார்மணியராகவும் சுமார் 9 ஊர்களில் கிராம நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியிருக்கும் அவர் பின்னர் கிராம நிர்வாகத் துறையில் தாம் வகித்த பொறுப்பிலிருந்து தம்மை விடுவித்து ஓய்வு பெற்றார்.

சான்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பென்னும் உவகைக்கு உதாரண புருஷராய் தாம் கடமையாற்றப் புறப்பட்ட தலங்கள் அனைத்திலும் மக்களின் நலன் ஒன்றையே தமது பிரதான இலக்காகக் கொண்டு களமாடி களிப்புற்றுக் கடந்த அவரது கரங்களும், கால்களும் அவரது ஓய்வு காலம் வரை ஓயாமல் மக்கள் பணிகளில் இயங்கிக் கொண்டிருந்தது என்பதுவே நிதர்சனம்.

Representational Image
Representational Image

தமது பணி காலத்தில் அரசு வழங்கிய ஊதியம் ஒன்றையே தமது பிரதான மூலதனமாகக் கொண்டு மக்கள் மகிழும் தொண்டாற்றிய நேர்மையின் அடையாளக் குறியீடான திரு. ஷேக் தாவூத் அவர்கள் ஓய்வு பெறும்போது பெரும் திரளான வகையில் அவர் பணிசெய்த பணியிடங்களில் பணியாற்றிய அவரது சக பணியாளர்கள் அவரை கண்ணியப்படுத்தும் விதமாக இல்லம் வரை வந்து அவரை ஆரத் தழுவி இந்த கண்ணியம் நிறை மாண்பரை தமது கண் நிறைவாக கண்டு அவரோடு இணைந்து கடமையாற்றியதில் தாம் பெரு உவகை அடைவதாக கூறி அவரை ஆரத்தழுவி உச்சி நுகர்ந்து பாராட்டிச் சென்றது, இன்னமும் அவரது இல்லத்தவர் மற்றும் அவர் சார்ந்த கிராமப் பகுதி மக்கள் அனைவரின் செவிகளில் இனிய நாதமாய் ஒலித்தோடிக் கொண்டிருக்கும்.

வாடிய மக்களை கண்ணுறும் போதெல்லாம் தாமும் வாடி, அவர்தம் வாழ்வு சிறக்க தமது அதிகார எல்லைக்குள்ளான அத்துனை கரத்தொண்டுகளையும் தமது இன்னுள்ளம் குளிர இமைவழி இரக்கம் சொரிந்து அம்மக்கள் பயனுற எப்பொழுதுகளிலும் தம்மை தயார்படுத்திக் கொண்டதில் ஏராளம் குறியீடுகளாய் கொட்டிக் கிடக்கின்றது அவர்தம் நேருற்ற நெறிவாழ்வில்.

Representational Image
Representational Image

அரசுத் துறை பொதுப் பணிகளில் பொறுப்பில் இருப்பவர்கள் தமது நேர குறைபாட்டால் பொதுவாக வேறெந்த பணிகளிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முனைவதில்லை காரணம் அலுவல் சார்ந்த பணிகளை நிறைவு செய்வதில் ஏற்படும் சோர்வு மற்ற தளங்களில் இயங்குவதற்கு அவர்களுக்கு அத்துனை இலகுவானதல்ல, இருப்பினும் தாம் மேற்கொண்டிருக்கும் அலுவல் பணிகளுக்கிடையில் கிடைக்கின்ற அரிதான ஓய்வு நேரங்களிலும் அவரது நேரிய வழிமுறையின் காரணமாக அவர் சார்ந்த கிராமத்தின் நலனுக்காக அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த பொறுப்பினை ஏற்று நிர்வாகப் பணியாற்றியதிலும், ஊர் கூடும் ஒவ்வொரு நிகழ்விலும் தம்மை முற்படுத்திக் கொண்டு அறப் பணியாற்றியதிலும், அவர் பிறந்த மண்ணோடு அவருக்கிருந்த பந்தமானது பரந்து விரிந்தது.

பல பரிமாணங்களில் தமது நற்தொண்டுகளால் நல்லிதயங்களைக் கவர்ந்து நீக்கமற நெஞ்சுக்குள் நிறைந்திருக்கும் இந்த நன்னெறி நற்பண்பாளர் நேர்மையின் அடையாளக் குறியீடாய் பலர் மனங்களில் நிறைந்து நிற்கிறார்.

எண்ணமும் எழுத்தும்.

பாகை இறையடியான்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.