Published:Updated:

பாச மலர் 2.0 - வாசகி ஷேரிங்ஸ்

பதிமூன்று வருடங்கள் கடந்தும் இன்னும் அந்த நினைவு மனதில் பசுமையாக நிற்கின்றது. என்னை அக்காவாக்கி வைத்த பல கணங்களில் அதுவும் ஒன்று.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"ஏன் காயத்ரி இவ்ளோ பயப்பட்ற.. அக்கா பாரு எவ்ளோ தைரியமா இருக்கா" என்று அப்பா என் தங்கையிடம் சொல்லும் வரை நானும் பயந்து கொண்டுதான் இருந்தேன்.


என்னைக் காட்டி என் தங்கைக்கு தைரியம் சொல்கிறார் என்று தெரிந்ததும் எங்கிருந்து தான் அப்படி ஒரு வீரம் வந்ததோ.. வேக வேகமாக ஆற்றில் இறங்கினேன்.


எனக்கு அப்பொழுது பன்னிரெண்டு வயதிருக்கும் என் தங்கைக்கு ஒன்பது வயது.. மூன்று முறை ஆற்றில் முங்கி எழ வேண்டும். நாங்கள் இருவரும் இரு கைகளிலும் அப்பாவை இறுக்கிப் பிடித்துக்கொண்டோம்.


மூன்று படிக்கட்டுகள் இறங்க வேண்டும்.. முதல் படியிலேயே பாசி வழுக்கியது.. தடுமாறித் தடுமாறி இறங்கினேன். இப்பொழுது நான் பயந்தால் என் தங்கையும் பயந்துக் கொள்வாள். அதனால் முதலில் அந்த பயத்தை மறைத்தேன். பின் பயம் என்னை விட்டுப் போய்விட்டது.


பதிமூன்று வருடங்கள் கடந்தும் இன்னும் அந்த நினைவு மனதில் பசுமையாக நிற்கின்றது. என்னை அக்காவாக்கி வைத்த பல கணங்களில் அதுவும் ஒன்று.

Representational Image
Representational Image

பல நேரம் யோசித்து உள்ளேன்.. ஒரே வீட்டில் ஒரே உணவை உண்டு வாழ்கிறோம். ஆனால் எனக்கும் தங்கைக்கும் உடல் வாகு, நிறம் குணம் என்று எல்லாம் வேறு வேறு.

வளர்ந்த சூழல்.. பள்ளி.. நண்பர்கள் இதெல்லாம் ஒரு காரணம் என்றாலும் தங்கைகளையும் அக்காக்களையும் வளர்க்கப்படும் விதம் மாறுபடுவதும் ஒரு காரணம்.


நான் பள்ளிக்கூடம் செல்லும் பொழுதே தானும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று என் தங்கை அடம் பிடித்ததில் மூன்று வயது தொடக்கத்திலே சரஸ்வதி பூஜை அன்று அவளை பள்ளியில் சேர்த்தனர்.


அப்பொழுது அவள் வகுப்பறைக்கு செல்லாமல் என் வகுப்பில் வந்து அமர்ந்து கொள்வாள். நான் கூட்டிச் சென்று அவள் வகுப்பில் விட்டுவிட்டு வருவேன். மீண்டும் உணவு இடைவேளையில் ஓடி வந்து விடுவாள்.


எத்தனையோ நாட்கள் என் வகுப்பில் அமர வைத்து என்னுடன் உணவு உண்ண வைத்துள்ளேன். இப்பொழுது அந்த காட்சியின் பிம்பத்தை என் மனதில் காணும் பொழுது எனக்கு ஆச்சர்யம் ஏற்படும். எப்படி நாம் அவளைப் பார்த்துக் கொண்டோம். நானே அப்பொழுது அத்தனை பெரிய பெண்ணல்லவே...

வீட்டில் இருந்து கிளம்பும்பொழுது அம்மா சொல்லும் வார்த்தை 'காயத்ரிய பத்திரமா பாத்துக்கணும்' இந்த ஒன்று தான் அந்த பொறுப்பை என்னுள் சுரக்கச் செய்திருக்கும்.

வளர வளர என்னோடு விளையாடும் துணையானாள். சில சமயங்களில் தோழி ஆவாள்.

பின் என்னைப் பார்த்து பலவற்றை கற்கத் தொடங்கினாள். சைக்கிள் ஓட்டுவது தொடங்கி, கணினி வகுப்பில் சேர்வது, தட்டச்சு பயில்வது என்று என்னைப் பலவற்றில் பின் தொடர்ந்தாள்.

இது ஒரு புறம் இருக்க அவளிடம் நிறைய நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். சமூக ஊடகங்களில் ஈடுபடாமல் அதிகம் அலைபேசியை உபயோகிக்காமல் ஆரவாரம் இல்லாமல் வாழ்கிறாள்.. வீட்டு வேலைகளை பொறுமையாக பக்குவமாக கற்றுக்கொள்வாள். செய்தும் முடிப்பாள். அவளை பார்த்து பல நிலைகளில் வியந்துள்ளேன்.

என்னோடு வாழ்வை கற்றுக்கொள்பவள்.. எனக்கும் கற்றுக்கொடுப்பவள்.

அம்மாவிடம் சொல்லாதடி என்று நான் சொல்வதை நொடி தாமதிக்காமல் ஓடிச் சென்று சொல்வாள். எனினும் என் வாய் சும்மா இருக்காமல் என்னுடைய பெரும்பாலான ரகசியத்தை அவளிடம் பகிர்ந்து கொள்வதில் எனக்கொரு சுகம்.


எனக்கு வேண்டியதை நான் சொல்லாமலே செய்துக் கொடுத்து, என் துன்பங்களை பகிர்ந்து கொண்டு இன்னொரு தாயாகிப் போவாள் பல அபூர்வ நொடிகளில்!

என் தனிமைக்குப் பெரும் துணையாக இருந்துள்ளாள். அம்மா, அப்பா வீட்டில் இல்லாதபோது அவள் வீட்டில் இருந்தாலே எனக்கு மிகப்பெரிய தைரியம். பகிர்ந்து உண்ணுவதும், இருவரும் இருவரையும் பார்த்துக் கொள்வதும் தான் சகோதரத்துவத்தின் முழுமை என நினைக்கிறேன்.

Representational Image
Representational Image

இவ்வளவு பாசக்காரியா என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள் அவள் பொருட்களைத் தொட்டு விட்டால் போதும்... வீட்டில் பெரும் போர் நிகழும். என்னை விட்டுவிட்டு அம்மா அவளுக்கு வேலை வைத்தால் சண்டை.. ரிமோட்டிற்கு சண்டை.. வளையல், கம்மல்களுக்குச் சண்டை.. இப்பொழுது அம்மாவின் புடவைக்கும் சண்டை வருகிறது. பின் இரு பெண் பிள்ளைகள் இருக்கும் வீடு என்றால் சும்மாவா!


ஒருமுறை இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டதில் அவளுக்கு பயங்கரமாக அடி விழ அவளால் வலது கையைத் தூக்கவே முடியாத அளவிற்கு கை வீங்கிவிட்டது. என் மனம் நொந்தது. அப்படி என்ன நொடி நேரக் கோபத்தில் இப்படி நடந்து கொண்டேன். ஏன் அடித்தோம் தங்கையை.. அடித்துவிட்டு சில நிமிடங்களில் மனம் புலம்பி கலங்கும். அந்த அன்பு தான் இறுதியில் நிலைத்து நிற்கும். எனினும் அந்த அன்பை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள மாட்டோம்.


மொத்தத்தில் இவள் எப்படிப்பட்டவள் என்று சிந்தித்த நொடிகள் உண்டு..


இவள் யாரென்றால் மயக்கும் மணம் கமழ்ந்து கொண்டே இருக்கும் பாச மலர்!

-செ. ரேவதி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு