Published:Updated:

தில்லானாவும் திருவிளையாடலும்! | My Vikatan

திருவிளையாடல்

இல்லையென்றால், ஜாதகப்படி நேரம் சரியில்லாதபோது சில பரிகாரங்கள் செய்யச்சொல்லி சோதிடர்கள் சொல்வார்களே, அதைப்போல இங்கும் சில பரிகாரங்கள் உண்டு.

தில்லானாவும் திருவிளையாடலும்! | My Vikatan

இல்லையென்றால், ஜாதகப்படி நேரம் சரியில்லாதபோது சில பரிகாரங்கள் செய்யச்சொல்லி சோதிடர்கள் சொல்வார்களே, அதைப்போல இங்கும் சில பரிகாரங்கள் உண்டு.

Published:Updated:
திருவிளையாடல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

குடும்ப வாழ்க்கை என்பது ரெட்டை மாடுகள் பூட்டிய வண்டி போன்றது. மாடுகளுக்குள் புரிந்துணர்வு இருந்தால்தான், வண்டி பிரச்னைகள் இன்றி ஓடும். மாறுபட்டு, ஒன்றுக்கொன்று தன் போக்கில் செல்ல எத்தணித்தால் வண்டி சேரிடம் செல்வது, கடினமாகி விடும்.

கணவனும், மனைவியும் ஒத்த கருத்துடையவர்கள் என்றால் ஏதுமில்லை தொல்லை. இல்லையென்றால், ஜாதகப்படி நேரம் சரியில்லாதபோது சில பரிகாரங்கள் செய்யச்சொல்லி சோதிடர்கள் சொல்வார்களே, அதைப்போல இங்கும் சில பரிகாரங்கள் உண்டு.

அந்தப் பரிகாரங்களில் முக்கியமானவை விட்டுக் கொடுத்தலும், பொறுத்துப் போதலும். இவ்விரண்டு பரிகாரங்களையும் செவ்வனே செய்தால் குடும்ப வண்டி மகிழ்வாகவே ஓடும். வாழ்வின் அடிப்படையே மகிழ்வுதான். மட்டற்ற மகிழ்ச்சியில் மனம் கூத்தாடினால், நோய்கள் பறந்து போகும். இளமை என்றும் நிலைக்கும்.

Representational Image
Representational Image
Photo by RUPAM DUTTA on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்காலத்தில் சாதி, மதம், இனம் என்று பிரித்து, அதற்குள்ளேயே மண ஏற்பாடுகள் செய்து கொண்டனர். நாளடைவில் சாதி, மதம், இனம் என்ற அடையாளங்களைத் தாண்டி, ஒரேவித பணிபுரிபவர்கள் தங்களுக்குள் மணவாழ்வை ஏற்படுத்திக் கொள்வது சமீப கால ட்ரெண்ட் ஆகியுள்ளது. மருத்துவர் மருத்துவரையும், பொறியாளர் பொறியாளரையும், ஐ. ஏ. எஸ். ஆபீசர்கள் ஐ. ஏ. எஸ். ஆபீசர்களையும் காதலித்தோ அல்லது வீட்டார் பார்த்தோ(arranged) கல்யாணம் செய்து கொள்வது தற்போதைய நடைமுறை. ஒரே மாதிரியான தொழிலில் இருப்பதால் ஒற்றுமை நிலவும் என்பது எதிர்பார்ப்பு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தியேட்டருக்குள் நுழைந்து, உள்ளே இருக்கும் இரண்டரை மணி நேரமும் ஊட்டி, கொடைக்கானல், அமெரிக்கா, ஐரோப்பா, சுவிட்சர்லாந்து என்று அனுபவித்து வரச் செய்யும் அழகிய சாதனம் இந்த சினிமா. துரும்பைக்கூடக் கிள்ளிப்போடத் துணிவில்லாதவனும், கதாநாயகனோடு சேர்ந்து ஐம்பது பேரை உண்டு-இல்லை என்று ஆக்கும் உயர்ந்த சாதனம் இந்தச் சினிமா. அதனால்தான் இதன் வளர்ச்சி அசுர வேகம் கொண்டுள்ளது. எத்தனையெத்தனை கோடிகள் இந்தத் துறையில் கொட்டவும், அள்ளவும் படுகின்றன. எத்தனை பேர் பொருளின், புகழின் உச்சிக்கும், எத்தனையெத்தனை பேர் ஓட்டாண்டிகளாகவும் போயிருக்கின்றனர் இத்துறையால். அதே நேரத்தில், நாம் அறியாத பல அரிய விஷயங்களையும் நம்மை அறியச் செய்யும் அற்புதச் சாதனமாக இன்று வரை இது விளங்கி வருகிறது என்பதும் உண்மையல்லவா?

 தில்லானா மோகனாம்பாள்!
தில்லானா மோகனாம்பாள்!

மேலை நாடுகளில் 3D, 4D, 5D தியேட்டர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு செல்கிறார்கள். திரையில் திமிங்கிலம் நீருக்குள் தாவும்போது, நம்மீது நீர் தெறிக்கிறது. இடி இடிக்கையில் நம் இருக்கைகளும் குலுங்குகின்றன. ’குடைக்குள் மழை’ என்பதுபோல திரையில் பெய்யும் மழை நம் மீதும் பொழிகிறது-லேசாக. சரி. நம்மூர் கதைக்கு வருவோம். காதலும் கல்யாணமும் சில வேறுபாடுகளுடன் இருந்தாலும், உலகம் முழுமைக்கும் பொதுவானதே.

நாட்டியத் தாரகைக்கும், நாதஸ்வர வித்வானுக்கும் இடையே ஏற்படும் காதலும், ஆரம்ப காலப் பிணக்குகளும், அதனைத் தொடர்ந்த போட்டிகளும், ஒருவர் இன்றி மற்றவர் இல்லை என்று காதலில் பிணைந்து போவதும்தான் ‘தில்லானா மோகனாம்பாள்’ கதை.

வழக்கம்போல நாட்டியப் பெண்களை நம்மூர் பெருந்தனக்காரர்கள் சுற்றிச் சுற்றி வருவதும், அப்பெண்களோ அவர்களைத் தவிர்ப்பதும், அப்பெண்களின் தாய்மார்களோ தனவந்தவர்களுக்குத் துணை போவதுமே நமக்கு வழக்கமாகச் சொல்லப்படும் கதை. இப்படத்திலும் அதுவே நிகழும். ஏனெனில் இது வெளியானது 54 ஆண்டுகளுக்கு முன்பு(1968).

நாதஸ்வர வித்வான் சண்முக சுந்தரமாக நடிகர் திலகம் சிவாஜியும், நாட்டியத் தாரகை மோகனாம்பாளாக நாட்டியப் பேரொளி பத்மினியும் அசத்தியிருப்பார்கள். இருவரின் நடிப்பும், ஜோடிப் பொருத்தமும், கதையின் போக்கும் வெகுவாகவே அனைவரையும் கவரும். நாதசுரக் கச்சேரி செய்யும் நடிகர்கள் அனைவருமே, அசல் உறுப்பினர்களாகவே மாறி விடுவார்கள். நடிப்பென்றாலும், அதனை நேர்த்தியாகவும், குறை கூற முடியாத அளவுக்கும் செய்ய வேண்டுமென்ற துடிப்பு, அக்கால நடிகர்களிடம் நிறையவே இருந்தது. கத்திகளின் ‘சதக்’கும், துப்பாக்கிகளின் ‘டுமீலு’ம் இல்லாமல், அதே நேரம் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாக அமைந்த பல படங்களில் இதுவும் ஒன்று. ’இசை’ எப்பொழுதுமே மனிதர்களுக்கு இதம் தருவது.

அதனால்தான் கோயில்களின் திருவிழாக்களின்போது, இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இசைக்கு, இறைவனும் ரசிகரே. ’நல்ல தொழிலாளியே நல்ல முதலாளியாகப் பரிணமிக்க முடியும்’ என்பதற்கிணங்க, ரசிகராகிய இறைவனே இசைகளின் அரசன் என்பதும் நமக்குச் சொல்லப்பட்டுள்ளது.

தில்லானா மோகனாம்பாள்!
தில்லானா மோகனாம்பாள்!

வாய்ப்பாட்டில் ஆரம்பித்த இசைக் கச்சேரிகள், பின்னர் நாதஸ்வரம், வயலின், கிளாரிநெட், மாண்டலின், முகர்சிங், கடம், வில்லுப்பாட்டு எனத் தனி ஆவர்த்தனங்கள் நடத்துவதும், பட்டி மன்றங்கள், வழக்காடு மன்றங்கள் என்று பரபரப்பதும், அப்புறம் பெருந்திரையில் சினிமா என்றும் போய்க்கொண்டிருப்பதைக் காண்கிறோம். அது ஏனோ தெரியவில்லை, பொழுது போக்க எத்தனையோ நிஜங்கள் இருந்தாலும், பெரும்பாலானவர்களின் சாய்சாக இருப்பது நிழலாகிய சினிமாவே.

’சினிமாவை விரும்பார் ஒருவரும் இலர்’ என்று கூறுமளவுக்கு அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

எழுத்தாளர் கொத்த மங்கலம் சுப்பு ஆனந்த விகடனில் எழுதிய கதையே, இயக்குனர் ஏ. பி. நாகராஜனால் திரைப்பட வடிவம் பெற்றது. ‘நலந்தானா? நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா? நலம் பெற வேண்டும் நீயென்று நாளும் என்நெஞ்சில் நினைவுண்டு!’ என்ற பாடல், பல காதலர்களின் வேதமாகிப் போனது. இதழில் நுழைந்து இதயம் வரை ஊர்ந்து சென்றது. உடலெங்கும் உற்சாக ரத்தம் பாய்ச்சியது. அது போலவே ’மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன? ’ பாடலும் பிரபலமானது. பத்மினிக்குப் பரத நாட்டியம் அறிந்த பாத்திரமென்பதால், ஊதித் தள்ளி விடுவார். அத்தனை நடிகர்களும், படத்தின் வெற்றிக்குத் தங்களாலான பங்கைச் சரியாகச் செய்திருப்பாரகள்.

மனோரமாவின் நடிப்பு என்றும் மனத்தில் நிற்பது. படம் முடிந்ததும் மனதில் ஒரு நிறைவும். நிம்மதியும் தோன்றுவதை உணரலாம். ‘இறைவன் இருக்கின்றானா?’ என்ற கேள்வி காலங்காலமாக உலவி வருவது. ’இருக்கின்றான்!’என்று ஆத்திகர்களும், ‘எங்கே? ’என்று நாத்திகர்களும், வாதிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இயற்கையை இயக்குபவன் இறைவன் என்றும், இயற்கையே இறைவன் என்றும் சொல்லப்படுகிறது. கரண்டை, காற்றை எப்படிக் கண்ணில் காண முடியாவிட்டாலும், அவை பிறவற்றை இயக்குகையில் உணர்கிறோமோ, அது போலவேதான் இறைவன் என்கிறார்கள் ஆன்றோர்.

சில தர்க்கங்கள் முடிவுக்கு வராமலே பல காலம் தொடர்வதுண்டு. உதாரணமாக, யூகலிப்டஸ் மரங்கள் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுகிறது என்று ஒரு சாராரும், இல்லை என்று மறு சாராரும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். உண்மையான முடிவு இது வரை வெளிவரவில்லை. ஒரு மரத்திற்கே இப்படி என்றால், மகேசனுக்கு எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரிந்ததுதானே.

மனோரமா
மனோரமா

எது எப்படியோ, நாம் பார்க்காத பரமசிவனை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டார் சிவாஜி-திருவிளையாடல் திரைப்படம் மூலமாக. ஐம்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பாகவே(1965)சிவ பெருமானைத் திரையில் தரிசிக்கும் வாய்ப்பு ஆன்மீகவாதிகளுக்கு நடிகர் திலகம் மூலம் கிடைத்தது. அறுபத்து நான்கு தொகுதிகளைக் கொண்ட திருவிளையாடற் புராணத்தின் நான்கு தொகுதிகளைத் திரைப்படமாக்கி, வெள்ளி விழா கொண்டாடினார் ஏபிஎன். சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெறச் செய்தார். ’நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே!’என்ற புலவர் நக்கீரராகவும் திரையில் தோன்றினார்.

திருவிளையாடல் என்றதும், உடன் நமக்கு நினைவுக்கு வருவது சிவனும், புலவர் தருமி(நாகேஷ்)யும் சந்திக்கும் காட்சிகளும், தருமியின் கேள்விகளுக்கு சிவனான சிவாஜி அளிக்கும் பதில்களுந்தான். அவை மறக்க முடியாதவை.

‘ஐந்து வயதில் அண்ணன்-தம்பி, பத்து வயதில் பங்காளி’ என்பார்கள். ’அம்மையும் அப்பனுமே அடியேனின் உலகம்’என்று கூறி, இருவரையும் எளிதாகச் சுற்றி வந்து, ’ஷார்ட் கட்’ டில் மாம்பழத்தைப் பெற்று விடுவார் கணேசர்!

அழகு மயிலில் அகிலத்தைச் சுற்றி வரும் முருகன் ஏமாற்றமடைந்து கோபித்துக் கொள்வதும், அவருக்குத் தாய் பார்வதி (சாவித்திரி)தன் கணவரின் திருவிளையாடல்களைச் சொல்வதே கதை. கதைகள் மூலமே அக்காலத்தில், வளரும் இளம் பிஞ்சுகளின் மனத்தில் நல்ல கருத்துக்களை விதைத்தார்கள் வீட்டுப் பெரியோர்கள். அதற்குக் கூட்டுக் குடும்பம் (joint family) சாதகமாக இருந்தது.

திருவிளையாடல்
திருவிளையாடல்

’இறைவியும் தன் இளைய மகனுக்குக் கதை சொல்லி வளர்த்துள்ளார்!’ என்ற வரலாறு நெகிழச் செய்யும் ஒன்றுதானே. குடும்ப உறுப்பினர்கள் கதை சொல்வதை நிறுத்திக் கொண்டதாலும், கூட்டுக் குடும்ப முறை குறைந்து விட்டதால், கதை சொல்லப் பெரியவர்கள் இல்லாததாலும், இப்பொழுது சின்னத்திரையில்‘கதை சொல்லிகள்’தோன்றி வருகிறார்கள். இருப்பினும், தாத்தா, பாட்டியின் அன்பிலும், அரவணைப்பிலும் எங்கள் போன்றவர்களுக்கு சொல்லப்பட்ட கதைகள், தற்போது மிஸ்ஸிங் என்பதே நிதர்சனம்.

கே. வி. மகாதேவன், கண்ணதாசன் கூட்டணியில் பத்து பாடல்கள். அப்பொழுது ஃபீல்டில் உச்சத்தில் இருந்த அனைத்துப் பாடகர்களும் பாடினார்கள்- பக்தி ரசம் ததும்ப. ’பாட்டும் நானே’, ’பார்த்தா பசுமரம்’ போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமாகின. கே.பி.சுந்தராம்பாளின் நடிப்பையும், கணீர் குரலையும் ஒருசேர ரசிக்கலாம் இப்படத்தில். அந்தக் காலத்திலேயே லட்சத்தில் சம்பளம் பெற்ற உயர்ந்த நடிகை இவர் என்பர். ’வேலைக்கு உணவுத்திட்டம்’ (Food for Work Programme) முதலில் சிவன் காலத்திலேயே அறிமுகமாகி விட்டது போலும். ’பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னைப் பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன? ’ என்ற வரிகள் இதனைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.

சாந்தி தியேட்டரில் படம் 25 வாரங்கள் ஓடி, வெள்ளி விழா கண்டது. வசூலை வாரி வழங்கியது. சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றது. நடிகர் திலகத்திற்கு மிகப் பெரும் பெருமை என்னவென்றால், நமது புராணங்கள் கூறும் சில தெய்வங்களையும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிலரையும் நம் கண் முன்னே கொண்டு வந்து, இவர்களெல்லாம் இப்படித்தான் வாழ்ந்திருப்பார்கள் என்று நம்மை நம்ப வைத்துச் சென்றதுதான்.

திருவிளையாடல், சிவாஜிகணேசன், சாவித்ரி
திருவிளையாடல், சிவாஜிகணேசன், சாவித்ரி

எவ்வளவுதான் அவர்கள் வரலாற்றைப் படித்தாலும் கிடைக்காத திருப்தியை, அவர் நமக்கு ஏற்படுத்தித் தந்தார். ஒன்றுதான் நமக்குச் சரியாகப் புரியவில்லை. 64 தொகுதிகளைக் கொண்ட திருவிளையாடற் புராணத்தின் 4 தொகுதிகள் மட்டுமே படமாக்கப்பட்டன. அதுவும் 57 ஆண்டுகளுக்கு முன்பு. அதன் பிறகு மீதமுள்ள 60 தொகுதிகளைப் பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லையே ஏன்? அங்கொன்றும், இங்கொன்றுமாக வந்ததா என்பதும் சரியாகத் தெரியவில்லை. இவ்வளவுக்கும் திருவிளையாடல் பெரும் வெற்றிப்படமே. ஏ. பி. என். னும், நடிகர் திலகமும் இல்லாததாலா? கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் திரைப்படமாக்கும் இயக்குனர் மணிரத்னம், திருவிளையாடற் புராணத்தின் மீதித் தொகுதிகளுக்குத் திரை வடிவம் கொடுக்க முன்வரலாமே!

- ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.