வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு, இப்போதுதான் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்றிருந்தோம். இனிமையான வானிலை. தெற்கு மாட வீதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு, பிரதான வாயிலை நோக்கி நடக்கையில், கோவிலின் மதில் மேல் எண்ணிலடங்கா பச்சைக் கிளிகளின் சத்தம் இனிமையான சங்கீதம். அவ்வளவு அழகு ஒவ்வொன்றும். ஆண்டாளைப் பார்க்க வருகின்றனவோ என்னமோ??..
சுமாரான கூட்டம் அன்று. உள்ளே நுழைந்தவுடன் இருபக்கமும் கடைகள்.. ரசித்துக் கொண்டே உள்ளே சென்றவுடன் யானை தரிசனம். அதனிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு இன்னும் சற்று உள்ளே சென்றவுடன், இடப்புறம் சக்கரத்தாழ்வார் சந்நிதியையும், வலப்புறம் ராமானுஜர் சந்திதியையும் , தூர இருந்தபடியே பார்த்து விட்டு இன்னும் சற்று உள்ளே சென்று வேணுகோபால சுவாமியையும் தரிசித்து, வலப்புறம் ஆஞ்சநேயரையும் தரிசித்து, எதிரே பார்த்தால் பிரம்மாணடமாக வீற்றிருக்கும் கருடாழ்வாரையும் நமஸ்கரித்து, மீண்டும் உள்ளே நுழைய , காயத்திரி மண்டபத்தில் இருக்கும் ஸ்ரீ ரங்கனைப் பார்க்க அரைமணி நேரத்திற்கும் மேலானது.

அவரை தரிசித்து தீர்த்தம் பிரசாதம் வாங்கியபின், தாயாரை நோக்கிய நடை. அவரைப் பார்ப்பதற்கு முன், பக்கவாட்டிலே சிறிய அளவில் இருந்த நாச்சியாரின் கருவறைக்குள் சென்றோம். தாயாருடன் பக்கவாட்டில் கிருஷ்ணரும், நரசிம்மரும் காட்சியளித்தனர்.
திருமணத்தடைகள் நீக்கும் லக்ஷ்மி இவள் என அங்கிருந்த பட்டாச்சாரியர் பக்தர்களுக்குக் கூறிக்கொண்டிருந்தார். அங்கிருந்து தன்வந்திரியையும் (God of health) தரிசித்து பின் பக்கத்திலேயே ராமரையும் பார்த்த பின், நாச்சியாரின் தரிசனம் கிடைக்க சென்றோம்.

வழியிலேயே, மீண்டும் ஒரு பெருமாள் சந்நிதி சிறியதாக. தாயாரைப் பார்க்கச் செல்கையில் மிகமிக அழகாக பூமாலைகளும், பூக்களும் விற்கிறார்கள். அவ்வளவு அழகு அந்த இடம். மனமிருப்பவர்கள் பூக்கள் வாங்கிக் கொண்டு தாயாரைப் பார்க்கச் செல்கிறார்கள். தாயாரை தரிசித்து வெளியில் வந்தால் சந்திர புஷ்கரணியைக் காணலாம். சுற்றிலும் தடுப்புக்கம்பிகளுடன் மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அப்படியே நடந்து வந்தால் கண்ணாடி மாளிகையில், அழகிய பெண்ணாழ்வார் ஆண்டாளையும்.. மற்ற ஆழ்வார்களையும் தரிசிக்கலாம்.
வெளியே வந்து பிரகாரம் சுற்றுகையில் அங்கங்கு சிறிய சிறிய ராமர், கிருஷ்ணர் சிலைகள். ஒரு இடத்தில் சொன்னவண்ணம் காத்த பெருமாள் தனி மண்டபத்தில் அமைத்துள்ளார். பிறகு மிகப்பெரிய அளவில் கோதண்ட ராமரும், சீதா தேவியும், லட்சுமணரும், தங்கக் கவசத்தில் காட்சி அளித்தனர்.

அங்கிருந்து புறப்படுகையில், அர்ச்சகர் வந்து வெண்பொங்கல் பிரசாதத்தை அனைவருக்கும் வழங்கினார். பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் பார்க்கலாம். அங்கங்கு பிரசாதம் விற்பனை செய்கிறார்கள். அரங்கன் பல்வேறுபட்ட பெயர்களில், இராமனாகவும், கிருஷ்ணனாகவும் ஏகப்பட்ட இடங்களில் வீற்றிருக்கிறார். ஒவ்வொருவரையும் கண்ணாரப் பார்த்து , மனதார வணங்க ஒருநாள் போதாது. பிரகாரம் சுற்றும் போது, ஜலதரங்க இசையில், ஆடுசிதளே யசோதா.. ஜகதோதாரன..என்ற பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது அவ்வளவு இனிமையாக இருந்துது காதுகளுக்கு.. வெளியே வர மனசேயில்லை.
வெளிப்புற மதில்களில் கிளிகள் போல், உட்புறத்தில் புறாக்கள். வரம் வாங்கி வந்த பறவைகள் அனைத்தும். வெளியே வந்து சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு , யானைக்கு டாட்டா சொல்லிவிட்டு, நேரமின்மை காரணமாக கடைகளில் எதுவும் வாங்காமல் , அவசர அவசரமாக வாகனம் ஏறி, சென்னை நோக்கிய பயணம் ஆரம்பித்து விட்டது. இன்னும் சிலமணி நேரங்கள் கோவிலிலேயே இருந்திருக்கலாம் என மனசு அடித்துக் கொண்டது. அடுத்த முறை ரங்கா உன்னைப் பார்க்க வரும்போது எனக்கு நிறைய நேரம் அங்கிருக்க அருள் கொடு என வேண்டிக்கொண்டேன்.

நீண்ட நேரம் பயணம் செய்து ரங்கனைப் பார்க்க தவம் இருந்து உள்ளே சென்றால் ,, அவரின் அனந்தசயனத்தைப் பார்க்க ஒரு சில நிமிடங்களாவது வேண்டும்.. ஆனால் அங்கிருந்தவர்கள் அரைநொடி கூட நிற்க விட அனுமதிப்பதில்லை. முழுதாக அவரை பார்க்க முடியாமல் போனது தவிர.... குறை ஒன்றும் இல்லை கண்ணா!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.