Published:Updated:

ஆல் இன் ஆல் ஆறுமுகம்! - கிராமத்தானின் பயணம் - 5

Representational image

மறக்கமுடியாத மனிதர்களில் ஒருவர். வித்தியாசமானவர். அட அப்படி பார்த்தால் நாம் எல்லோருமே வித்தியாசமானவர்கள்தானே.

ஆல் இன் ஆல் ஆறுமுகம்! - கிராமத்தானின் பயணம் - 5

மறக்கமுடியாத மனிதர்களில் ஒருவர். வித்தியாசமானவர். அட அப்படி பார்த்தால் நாம் எல்லோருமே வித்தியாசமானவர்கள்தானே.

Published:Updated:
Representational image

நான் போன வாரம் துருக்கியில் சொன்ன அந்த ஆறுமுகம் இவர்தான்.

(என் கட்டுரையை முதன் முதல் படிப்பவர்கள் இந்த கட்டுரையில் கொடுத்துள்ள "Link" உபயோகித்து பாகம் 1 முதல் 4 வரை படிக்கலாம்)

தோட்ட வேலை செய்வபவர். தேவைப்பட்டால் சுத்தம் செய்பவர். அப்புறம் எங்கள் வீட்டு ஆஸ்தான மசாஜ் ஆள். முக்கியமாக, நெல் வேய்ப்பவர். (பாதி பேருக்கு வேய்ப்பவர் என்றால் புரியாது. படித்த பின்னால் புரியும்). ஏறக்குறைய, கம்ப்யூட்டர் கோடிங் தவிர்த்து எந்த வேலையும் கொடுக்கலாம். தரும் கூலி சரியென்றால் ஆறுமுகம் தயார்.

ஆறுமுகம்
ஆறுமுகம்

என் கட்டுரையின் முதல் பாகத்தில் போகிற போக்கில் குறிப்பிட்டேன் மாரியம்மன் கோவில் பின்னால் "குயவர் வீடு" என்று. எங்கள் வீட்டில் இருந்து இறங்கி எதிர் வீட்டு நைனாவுக்கு (என் அப்பாவின் உறவினர், எப்போதும் திண்ணையில் அமர்ந்து சூரிய குளியல்) ஒரு வணக்கம் செலுத்திவிட்டு இடது பக்கம் நடந்து போனால் செட்டியார் வீடு, முறுக்குக்காரம்மா வீடு, பின் மாரியம்மன் கோவில்.

அப்படியே இடது திரும்பி உடனே வலது திரும்பினால் கோவில் சுவர் முடிந்து பெரிய ஆல மரம். கொஞ்சம் பயம் வரலாம், குறிப்பாக இரவு நேரங்களில். ஏனென்றால் எங்க ஊர் ராமலிங்கம் அவனுடைய அப்பா திட்டியதால் அந்த ஆலமரத்தில்தான் தூக்கு போட்டுக்கொண்டான். அதனால் ஆறுமுகம் வீட்டுக்கு நான் பகலில்தான் போவேன். ஆலமரத்தின் கீழ் ஆசாரியின் குடிசை. அவர் மரம் அறுக்கும் சத்தம் கூட ஒரு இசைதான். அந்த குடிசையை தாண்டினால் ஆறுமுகத்தின் வீடு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறிய குடிசை. வாசல்படி 5 அடி உயரம்கூட இருக்காது. ஆறுமுகம் அவர் அப்பா போலவே 6 அடி உயரம். அம்மாவும் நல்ல உயரம். ஆனால் லகுவாக அந்த குடிசையினுள் சென்று வருவார்கள். ஒரு அக்கா ஆறுமுகத்துக்கு. அஞ்சலை. குடும்பமே தொழிலில் ஈடுபடும். மழை நாள் தவிர்த்து மற்ற நாட்களில் நீங்கள் பார்க்கலாம்.

ஆறுமுகத்தின் அப்பா ஒரு நீண்ட மூங்கில் கழி வைத்து ஒரு சக்கரத்தை அவ்வளவு துல்லியமாக சுழற்றுவார். சரியான குடிகாரர். அந்த கழி இல்லையேல் அவர் கீழே மட்டை ஆகிவிடுவார்.

அம்மா கீழே அமர்ந்து களிமண்ணை பதன் செய்து அந்த சக்கரத்தின் மையத்தில் வைத்து அழகான பானைகளை உருவாக்குவார். பக்கத்திலே சூளையில் அந்த பானைகளை சுடுவார்கள். அந்த சூளையில் இருந்து எழுத்தில் உணர்த்த முடியாத ஒரு நல்ல மணம் வரும்.

Pot making
Pot making

கொஞ்சம் தள்ளி, குடிசையை ஒட்டி தயாரான பானைகள் சிறுதும் பெரிதுமாக அடுக்கி வைத்திருப்பார்கள். இடுபொருள் என்ன, என்ன பதம், என்ன விலை, எப்படி நகர்கிறது, லாபமா நஷ்டமா இதெல்லாம் அவர்கள் பார்த்தார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் அந்த தொழில் அவர்களை ஏதோ நகர்த்தி சென்றது. நம்ம நாயகன் ஆறுமுகத்துக்கு அந்த அளவுக்கு விவரம் பற்றாது. அதனால் அவர் வேறு தொழிலில் ஈடுபட்டார். மேல் சொன்னமாதிரி, உடம்பு பிடித்து விடுவது, தோட்ட வேலை, சுத்தம் செய்வது, நெல் வேய்ப்பது என்று. (கம்ப்யூட்டர் கோடிங் தவிர்த்து).

அந்த நாட்களில் நாங்கள் கூட்டு குடும்பம். அம்மாதான் நிர்வாகி. 20 பேருக்கு வாரமோ மாதமோ அரிசி வாங்குவதெல்லாம் முடியாத காரியம். நிறைய தேவைப்படும். அதிக விலையும் கொடுக்க முடியாது. அம்மா சிறந்த நிர்வாகி. வெய்யில் நாட்களில் தாத்தா உதவியுடன் மூட்டை மூட்டையாக நெல் வாங்கி வீட்டின் ஒரு பகுதியில் அடுக்கி வைத்துவிடுவார். நாங்களும் அதன் மீது ஏறி இறங்கி தாத்தாவை கடுப்படிப்போம். அவரும் கோபத்துடன் இதுங்க எங்க உருப்படப்போகுதுங்க என ஆசீர்வதிப்பார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீட்டில் தொம்பை (Wooden Silo) அறையை அவ்வப்போது கண்காணித்து, நாட்களை கணக்கிட்டு அம்மா முடிவு செய்வார், நேரம் வந்துவிட்டது நெல் வேய்க்க என்று. அம்மாவை பொறுத்தவரை ஆறுமுகம் மட்டும்தான் அதற்கு தகுதியானவர். அப்போதுதான் நான் போவேன் ஆறுமுகம் வீட்டுக்கு, பகலில். நேரம் சொல்லிவிட்டால் சரியாக வந்துவிடுவார். கை கடிகாரம் ஆறுமுகத்துக்கு அறிமுகமாகவில்லை.

எப்போதும் முட்டி வரை நீளும் காக்கி கால் சட்டை, வெற்றுடம்பு, ஒரு அழுக்கு துண்டு. காதில் ஒரு பீடி. உதட்டின் இரு ஓரங்களிலும் ஒருமாதிரி வெள்ளை பூத்து இருக்கும். பீடியினால் ஆறுமுகத்தின் உதடுகள் கருத்திருக்கும். இதெயெல்லாம் பின்னுக்கு தள்ளி எப்போதும் ஒரு பீடி நாற்றம் வரும். ஆனால் மிக பலசாலி. நெல்வேய்ப்பதென்பது கடின உழைப்பு.

நெல்
நெல்

கூடை கூடையாய் நெல்லை தண்ணி நிரப்பிய ட்ரம்மில் கொட்டி அடுப்பை நிரந்தரமாக எரியவிட்டு சரியான நேரத்தில் இறக்கி நெல்லை தளத்தில் (மாரியம்மன் கோவில் உள்தளத்தில்) பரப்பி காயவைத்து பின் சேகரித்து மூட்டையில் கட்டவேண்டும். மறுநாள் ஐய்யாசாமி அரவை மையத்துக்கு கொண்டு சென்று "பார்ர்ர்ரக்க் பார்ர்ர்ரக்க்" என்று மெஷினில் அரைத்து அரிசியாக்கி தொம்பையில் கொட்டி சேகரித்தால் வீட்டில் 20 பேருக்கும் தினமும் சுவையாக மீன் குழம்போ வெங்காய சாம்பாரோ வைத்து சாப்பாடு போட முடியும். நாக்கு செத்துப்போனால் (சித்தப்பா வார்த்தைகள்) கருவாட்டு குழம்பு. இதில் கடினமான வேலைக்கெல்லாம் (வேய்ப்பது) ஆறுமுகம் முக்கிய தேவை. அதற்கேற்றாற்போல் ஆறுமுகமும் கடுமையாக உழைப்பார். ஒரே தேவை 2-3 மணிக்கு ஒருமுறை பீடி. சற்றே ஒதுங்கி பீடி சில இழுப்புகள் இழுத்து பின் அணைத்து மீதி பீடியை காதில் சொருகிக்கொண்டு வேலையில் மூழ்கிவிடுவார்.

அம்மாதான் மேலாளர். தாத்தா கண்கணிப்பாளர். ஆறுமுகம் ஆல் இன் ஆல் அழகுராஜா. சன்மானமாக ஏதோ அம்மா கொடுப்பார்கள். அது எதுவாயினும், “அக்கா இன்னும் கொஞ்சம் குடுக்கா” என்று கேட்டு வாங்கிவிடுவார். கூடவே அவருக்கென்று சாப்பாடும் இருக்கும். ஒரு பாத்திரத்தில் சாதம், குழம்பு, கூட்டு, பொரியல் எல்லாம் கலந்து கொடுப்பார்கள். வேலையெல்லாம் முடித்து, ஒரு மூலையில் அமர்ந்து அவர் சாப்பிடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். பெரிய உருண்டைகளாக்கி அப்பிடியே விழுங்கும்போது தொண்டையினுள் ஒரு பந்து இறங்குவது போல இருக்கும். அருகில் உட்கார்ந்து பார்த்து ரசிப்பேன்.

Representational image
Representational image

இதெல்லாம் முடிந்து சற்று நேரம் இருப்பார். அந்த நேரத்தில்தான் நானோ என் அண்ணனோ "ஆறுமுகம் கொஞ்சம் உடம்பை பிடித்திவிடுப்பா" என்போம். நெல் வேய்த்த கை. கடினமாக இருக்கும். ஆறுமுகம் பிடித்துவிடும்போது தசைகள் கொஞ்சம் நசுங்கி விடுபடும்போது ஒரு நல்ல புத்துணர்வு கிடைக்கும். ஆறுமுகத்துக்கு 50 பைசாவும் கிடைக்கும். அப்படி ஒருநாள் பிடித்துவிடும்போது ஆறுமுகம் வழிந்துகொண்டே சொன்னார், தனக்கு கல்யாணம் என்று. நினைவுக்கு வருகிறது. மாரியம்மன் கோவிலில் கல்யாணம். ஆறுமுகம் அப்பா வழக்கம்போல் சாராய வாடையில். ஆறுமுகம் ஒரு மஞ்சள் சட்டை, கை மடித்து மற்றும் வெள்ளை வேட்டியில். கழுத்தில் சாமந்தி மாலை. காதில் பீடி காணவில்லை. கையில் ஒரு நூறு ரூபாய் (நினைக்கிறேன்) திணித்தேன். வாங்கி கை மடிப்பில் சொருகிகொண்டார்.

படிப்பு பின் வேலை என்று வரக்கால்பட்டு சற்றே அந்நியமானது. அடுத்தமுறை நான் ஆறுமுகத்தை பார்த்தது 10 வருடம் கழித்து. உதடுகள் இன்னும் கருத்து மெலிந்து போயிருந்தார். பற்களும் விழுந்துபோயிருந்தன. பீடி நாற்றமும், காதில் பீடியும் உறுதி செய்தன இது ஆறுமுகம்தான் என்று. எப்போதும் போல் காசு கேட்டார். கொடுத்தேன். நலம் விசாரித்தேன். மனைவி எப்படி உள்ளார்கள் என்றேன். சிறிதும் தயங்காமல் "அது ஓடிப்போய்விட்டது" என்று ஏதோ ஆடு மாடு ஓடிய மாதிரி சொல்லி வெற்று பார்வை பார்த்தார்.

Representational image
Representational image

என் மனது ரொம்ப வருடியது. என்ன ஒரு புரியாத நியதி இந்த உலகத்தில். ஒரு பக்கம் உலகாளும் மக்கள். மறுபக்கம் என்னை மாதிரி அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் ஓரளவுக்கு வாழ்பவர்கள். ஆறுமுகம் போலவும் மக்கள். இதில் கீழே மேலே என்றில்லை. இவ்வளவு வித்தியாசம் ஏன் என்பதுதான் எனக்கு புலப்படாத ஒன்று. யார் முடிவு செய்தது ஆறுமுகம் அவர் வீட்டிலும் நான் என் பெற்றோருக்கும் பிறக்க கடவது என்று.

துருக்கியில் இருந்து வந்த சில நாட்களில் வரக்கால்பட்டு சென்று ஒரு வலம் வந்தேன் காரிலேயே. ஊரே அந்நியமாக இருந்தது. ஆறுமுகம் கண்ணில் படவில்லை. மனம் சிறிது சஞ்சலப்பட்டது. பல நேரங்களில் இருப்பதை நிதர்சனமாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்தவேண்டும். எல்லாவற்றிற்கும் விடை தேடினால் மிஞ்சுவது கேள்விகளே. கேள்விகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு, 15 நாட்கள் பெங்களூரு, மைசூரு, பேலூர், ஹளபீடு, சிரவணபெலகோலா, கூர்க், கபினி என சுற்றிவிட்டு துபாய் திரும்பி மே மற்றும் ஜூன் மாதத்திற்க்கான அமெரிக்கா பயணம் இறுதி செய்ய துவங்கினோம்.

மேற்கு மூளை, சீயாட்டலில் (Seattle) துவங்கி கிழக்கு கோடியில் வெர்மான்ட் (Vermont) வரை காரிலே செல்வதாக திட்டம். (திட்டம் கீழ்). அமெரிக்காவில் உள்ள நெருங்கிய உறவினர்களிடம் சொல்லிவிட்டேன். 2018 அனைவரையும் சந்தித்து சில நாட்களும் செலவிட்டேன். ஆகையால் 2019 திட்டம் அவர்களை அண்டாது. (நிம்மதி, அவர்களுக்கு?). கடந்த முறை போலில்லாமல் முற்றிலும் சாலை வழியே. மனைவி பல காரியங்கள் என்னை விட செம்மையாக செய்வார்கள். கார் ஓட்டுவது அதில் ஒன்று. இருவருக்குமிடையில் 7,000 கிமீ ஓட்டுவது (35 நாட்களில்) சிரமமில்லை. இந்த முறை No விசா சொதப்பல்ஸ். எல்லாம் ஸ்மூத்.


-சங்கர் வெங்கடேசன்

shankarven@gmail.com

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism