“Drop down” மூலம் பாகம் 1-6 படிக்காதவர்கள் படிக்கலாம்
சின்ன முகவுரை. அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள். ஒரு மாகாணம் (District - வாஷிங்டன் DC). 48 மாநிலங்கள் ஒன்றை ஒன்று ஒட்டியவை. ஹவாய் மற்றும் அலாஸ்கா சற்று தனியே. மேற்கு மூலை சியாட்டலலில் இருந்து கிழக்கு மூலை போர்ட்லேண்ட், Maine State, (போர்ட்லேண்ட் Oregon State வேறு) ஏறக்குறைய 5,000 கிமீ.
நம் கன்னியாகுமரி காஷ்மீர் 3,500 கிமீ. அமெரிக்கா, இந்தியாவை போல மூன்று மடங்கு நிலப்பரப்பு கொண்டது. மக்கள் தொகை மூன்றில் ஒரு பங்குதான். நீண்ட பயணம் செல்லும்போது மைல் கணக்கில் திறந்தவெளி காணலாம். நிலம் விலையும் குறைவுதான், பொதுவாக.
பெரிய ஊர்களை விட்டு தள்ளி ஏக்கர் கணக்கில் வாங்கலாம். ஆனால் வாஷிங்டனில் இருந்து 50 கிமீ, சுத்தமான தண்ணி என்றெல்லாம் ப்ளாட் போட்டு விற்கமுடியுமா தெரியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அப்புறம் ஒரு வித்தியாசமான விஷயம். ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள். வாஷிங்டன் மாநிலம் (State) மற்றும் மாகாணம் (DC) இல்லாமல் 10+ இடங்கள். ஏதோ பெயர்களுக்கு தட்டுப்பாடு மாதிரி, சேலம் என்ற பெயரில் மட்டும் 30+ இடங்கள். இன்னும் குட்டையை குழப்பும் விதமாக சில இடங்கள் மற்ற நாட்டின் பெயரையே கொண்டிருக்கும். லெபனான், பாலஸ்தீன் என.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமே 10/11 – போர்ட்லேண்ட் (Oregon) காலை உணவு கிரோயிசன்ட், பிரட், முட்டை பொரியல் (from Egg Powder), யோகர்ட் (ஜெலட்டின் இருக்கும்), பேன் கேக்ஸ், கார்ன் ஃபலேக்ஸ். எல்லா விடுதிகளிலும் சொல்லிவைத்தாற்போல் இதே மெனு. மனைவி vegetarian. பழங்கள்தான் சிற்றுண்டி. எனவே, ஒவ்வொரு நாளும் கிளம்பும் முன், மதிய உணவு எங்கே என்று பரிந்துரைப்பது மனைவியின் உரிமை. சில நேரங்கள் தவிர்த்து இந்திய உணவுதான். அதிலும் தட்டு சேவை (Buffet). 6-7 மணி போல் விடுதிக்கு வந்து கதை பேசி நொறுக்கு தீனி, பழங்கள் என உண்டு தூங்கிவிடுவோம்.

போர்ட்லாண்டில் இருந்து 08.00 மணியளவில் கிளம்பி 09.00 மணியளவில் மல்டனோமா அருவியை அடைந்தோம். அருவி கொலம்பியா ஆற்று பள்ளத்தாக்கு பகுதியில் ஆனால் மலைமேல் உள்ளது. உள்ளேயே 2-3 மணி நேரம் நடந்து மலை ஏறி இறங்கி சிறு பெரு அருவிகள், ஓடைகள் என இயற்கையை பருகினோம். மே மாதம்தான் எனினும் நல்ல குளிர். அங்கிருந்து கிளம்பி கொலம்பியா ஆற்று பள்ளத்தாக்கை இரண்டு மூன்று சாதகமான (Vantage) இடங்களில் இருந்து பார்த்தோம். கண்கொள்ளா காட்சி. சுற்றி மலைகள் இடையே கொலம்பியா ஆறு. நிறைய நடந்து ஏறி இறங்கியதால் 2 மணிபோல ஈஸ்ட் இந்தியா என்ற இடத்தில் உணவருந்திவிட்டு சீக்கிரமே விடுதி.
மண்டையில் அந்த மீட்டிங் இந்த மீட்டிங் இல்லை. நினைத்தால் நிறுத்தி இளைப்பாறி, உடம்பை பற்றி கவலைப்படாமல் சிப்ஸ், ஐஸ் கிரீம் என கண்டதையும் சாப்பிட்டு வடிவேலு சொல்வதுபோல “சின்ன பிள்ளைத்தனமா” இருப்பதும் ஒரு அனுபவம்தான்.சங்கர் வெங்கடேசன்
மே 12 - நம்பா (Idaho) – அடுத்த இலக்கு சால்ட் லேக் சிட்டி. 1200 கிமீ என்பதால் இடையில் ஓரிரவு நம்பா என்ற ஊரில். 680 கிமீ, மனைவியும் நானும் மாற்றி மாற்றி ஓட்டினோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மே 13/14 - சால்ட் லேக் சிட்டி – (Utah) - நம்பாவில் இருந்து சால்ட் லேக் சிட்டி 556 கிமீ. சாலைகள் விசாலம். போக்குவரத்து குறைவே. துணைக்கு மனைவி, இளையராஜா, ஹிந்தி பாடல்கள் **. மண்டையில் அந்த மீட்டிங் இந்த மீட்டிங் இல்லை. நினைத்தால் நிறுத்தி இளைப்பாறி (பத்திரமான சுத்தமான இடங்கள் உண்டு) உடம்பை பற்றி கவலைப்படாமல் சிப்ஸ், ஐஸ் கிரீம் என கண்டதையும் சாப்பிட்டு வடிவேலு சொல்வதுபோல “சின்ன பிள்ளைத்தனமா” இருப்பது ஒரு அனுபவம்தான். 1200 கிமீ, இரு நாட்களில் மிக சுலபமாக கடந்தோம். (**படித்தபின், தலையணி ஒலிவாங்கி அணிந்து இந்த பாடல்களை கேட்டு எண்ணத்தை பகிருங்கள்)
ராஜா - கண்ணம்மா காதல் எனும்
ராஜா - இள நெஞ்சே
ஹிந்தி - Chura Liya Bally Sagoo remix

சால்ட் லேக்சிட்டிமிக அழகான நகரம். பெரிய உப்பு ஏரி உள்ளதால் அந்த பெயர். புகழ்பெற்ற மோர்மோன் கோவில் உள்ளது. மிக பரந்து விரிந்த கோவில். மோர்மோன்கள் கிருஸ்துவர்களில் ஒரு பிரிவினர். அந்த கோவிலினுள் பெரிய இசை கருவி (Organ), மிக பிரம்மாண்டம். கோவில் சுற்றி விட்டு Saffron என்ற உணவகத்தில் உணவருந்தி (அந்த அமெரிக்கன் Buffet என்ற போதிலும் வழிய வழிய தட்டில் உணவை பலமுறை எடுத்து சென்றது இன்னும் கண்ணிலேயே) உப்பு ஏரி (சால்ட் லேக்) நோக்கி வண்டியை செலுத்த ஆரம்பித்தேன். கடுமையான மழை. கடந்த 30 வருடத்தில் இத்தனை கடும் மழையில் கார் ஒட்டியதில்லை. சற்று பயமாகத்தான் இருந்தது.
மனைவியோ விடுதிக்கு திரும்பிவிடுவோம் என கூற, நான் ஒரு குருட்டு தைரியத்தில் செல்ல, நல்ல வேலையாக 20 நிமிடங்களில் மழை நின்றுபோனது. சால்ட் லேக் மொத்தம் 4,400 சகிமீ. நீண்ட நேரம் அந்த மலை சூழ்ந்த ரம்மியமான காட்சியை ரசித்துவிட்டு திரும்பினோம்.கிளம்பி 7 நாட்கள் ஆகிவிட்டது. அடுத்த நிறுத்தம் ஜியான் தேசிய பூங்கா(Zion). உள்ளாடைகள் இருப்பு அபாய நிலைக்கு. எனவே, சால்ட் லேக் சிட்டி விடுதியில் இயந்திரத்தில் துவைத்து/உலர்த்தி அடுத்த 10 நாள் தட்டுப்பாடு ஏற்படாத மாதிரி செய்துவிட்டோம்.ப்இந்த மாதிரி நேரத்தில், நான் கூடமாட உதவி பண்ணி, நற்பெயர் சம்பாரித்துக்கொள்வேன். நேரத்தில் உதவும்

மே 15-18 - ஜியான் தேசிய பூங்கா (Utah) - சால்ட் லேக்கிலிருந்து 515 கிமீ. ஜியான் கடல் மட்டத்தில் இருந்து 10,000 அடி. ஊர் நெருங்க நெருங்க மலைப்பாதை மேலே ஏறிக்கொண்டே சென்றது. பாதுகாப்பான சாலைகள்தான். வழியில் திடீரென ஏதோ ஒரு வித்தியாசமான சத்தம் வண்டியின் கீழிருந்து. ஏதோ பிளாஸ்டிக் பொருள் பட்டிருக்கலாம் என்று தொடர்ந்து ஓட்ட, சிறிது நேரம் கழித்து, மலையில் சற்றே ஏறி இறங்கும்போது சத்தம் அதிகமானது. வண்டியை ஒரு ஓரம் நிறுத்தி பார்த்தால் ஏதோ ஒரு பாகம் கிழிந்து தொங்குகிறது. நல்லவேளை அது ஒரு மூடி போன்ற பாகம். தொடர்ந்து ஓட்டுவதில் சிரமம் இல்லை.
ஆனால் கீழே தொங்க அனுமதித்தால் வேறு உபத்திரவம் வரலாம். எனவே முதல் வேலையாக விடுதியில் பெட்டிகளை போட்டுவிட்டு பக்கத்து கடையில் நைலான் கயிறு வாங்கி அந்த தொங்கும் பாகத்தை பத்திரமாக கட்டி ஸ்திரப்படுத்தினோம். எனக்கு வாகனம் பற்றி தெரிந்ததெல்லாம் ஓட்டுவதும் எரிபொருள் நிரப்புவதும் மட்டுமே. உள்விவகாரம் பூஜ்ஜியம். எனவே, வாடகை வண்டிக்கு முழு காப்பீடும் வாங்கி விடுவேன். சற்றே வாடகை அதிகம் ஆனால் வண்டியே தொலைந்தாலும் கவலை இல்லை.
ஜியான் பூங்கா வருடத்திற்கு 40 லட்சம் பேர் வந்து போகும் இயற்கையின் அற்புதங்கள் நிறைந்த இடம். பள்ளத்தாக்கு, செங்குத்து பாறைகள், ஓடைகள் என பலவிதமான நில அமைப்புகள். நிறைய நெடுந்தூர நடை பாதைகள் (Hiking / Trekking trails). எல்லாவற்றையும் விவரிக்க இடம் இல்லை. Angels Landing என்ற இடம்தான் மிகவும் அபாயகரமானது. 1000 அடிக்கு மேல் உயரம். 2.5 கிமீ சற்றே செங்குத்தான ஏற்றம். அந்த Angels Landing அடைய மிக மிக உயரத்தில் 1 ஆடி அகல பாதைதான். இருபக்கமும் 1000 அடி பள்ளம்.
பிடிக்க ஒரு பக்கம் மட்டும் சங்கிலி. ரெண்டு பக்கமும் வைக்க பட்ஜெட் இல்லை போலும். அந்த இடத்தின் அருகில் வந்துவிட்டோம், மிகவும் சிரமப்பட்டு. அதற்கு மேல் செல்வதா வேண்டாமா என்பது வாழ்வா சாவா கேள்வி. வாழலாம் என்று முடிவு செய்து மரியாதையாக கீழே வந்துவிட்டோம். அபாயம் அறிந்தும் நிறைய மக்கள் கடைசிவரை சென்று திரும்புகிறார்கள். மூன்று நாட்கள் பொறுமையாக நடந்து, ஏறி, இறங்கி, வாகனத்தில் என ஜியான் பூங்கா கண்டு மகிழ்ந்தோம்.

மே 19 -20 - க்ளென்வூட் ஸ்பிரிங்ஸ் (Colorado): எங்கள் முதல் நோக்கம், சுதந்திரமான பாதுகாப்பான சாலை பயணம். இடையே என்ன செய்ய முடியுமோ அதை நிதானமாக செய்து, இயற்கையை உணர்ந்து நன்கு உண்டு பாதுகாப்பாக திரும்பி வந்தால், அதுவே திருப்தி.இதனால்தான் எங்கள் பயணத்தின் நிறுத்தங்கள் வழக்கமான சுற்றுலா பாதையில் இருக்காது. இந்த இடமும் அப்படிதான்.சுற்றி மலைகள். அருமையான சீதோஷ்ணம், நாள் முழுதும் சிறு தூறலுடன்.20ம் தேதி "தொங்கும் ஏரி" (Hanging Lake) நோக்கி.இந்த ஏரி மலையின் அடிவாரத்தில் இருந்து 1 கிமீ உயரத்தில். செங்குத்தான ஏற்றம்.நிச்சயமாக பலகீனமானவர்கள் தவிர்க்கவேண்டும்.பட்ட சிரமங்கள் அனைத்தும் பறந்துபோய்விடும், அந்த ஏரியை பார்த்த கணத்தில்.மரகத குழைச்சல் மாதிரி அவ்வளவு அழகு.இயற்கைதான் எத்தனை அற்புதமானது.
மே 21 - டென்வர் (Colorado): எங்கள் அடுத்த இலக்கு அமிஸ் (Iowa). 1,500 கிமீ. எனவே இடையில் டென்வர் (273 கிமீ), பின் கியர்நீ (Kearney - Nebraska) (604 கிமீ) கடைசியில் அமிஸ் (636 கிமீ). டென்வர் செல்ல 2-3 மணி நேரம். 10 மணிக்கு கிளம்பி 1 மணிக்கு மதியம் உணவு டென்வர் என்று நம் திட்டம். ஆனால் நமக்கும் மேலே ஒருவனடா. முந்திய இரவு நல்ல குளிர். நன்கு இழுத்து போற்றிக்கொண்டு தூங்கி காலையில் அடுத்த இடத்துக்கு செல்ல தயாரானோம். சற்றே வெளிச்சம், மல்லிகை பூக்களை தூவினாற்போல் பனி பெய்துகொண்டு. விடுதி கணக்கு தீர்வு செய்து வெளியே வந்தால் வண்டியை காணோம். வண்டி நின்ற இடத்தில் பனியில் செய்த வைக்கோல் போர் மாதிரி ஒன்று நிற்கிறது. மனைவிக்கு பயம். எனக்கு பயமில்லை, வெளியில். உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகள்.

முதல் யோசனை, என் மகளை அழைத்து என்னம்மா செய்வது என்று கேட்டேன். அவள் அப்பொழுது வெர்மான்டில் (Vermont, நல்ல பனி கொட்டும் இடம்) படித்துக்கொண்டு இருந்தாள். வாகனம் வைத்திருந்தாள். கூல் அப்பா. ஒன்றும் பிரச்சனை இல்லை. இந்த ஊர் வண்டிகள் பனிக்கு ஏற்றவை. உள்ளேயே ஒரு பிரத்யேக துடைப்பான் இருக்கும். எல்லா பனியையும் நீக்குங்கள். பின் வழக்கம்போல் ஓட்டலாம் என்றாள். தொலைஇயக்கி (ரிமோட்) கொண்டு திறந்து குத்துமதிப்பாக கைவைத்து வண்டியின் பின் கதவை திறந்தேன். துடைப்பான் உடனடியாக கண்ணில் படவில்லை. மனைவி இந்த பனியில் நின்று தேட வேண்டாம், நான் விடுதியில் கேட்கிறேன் என்று துடைப்பான் பெற்று வந்தார். சரியான உடை இருந்தும் குளிர் சற்றே வாட்ட வண்டியின் நாலாபுரத்திலும் சுத்தம் செய்தேன். அடுத்த பயம், வண்டி கிளம்பவேண்டும். கிளம்பியது.
விடுதிக்கு நன்றி சொல்லி வண்டியினை செலுத்த ஆரம்பித்தேன். மனைவி சொன்னார்கள் எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம் என்று. முன் ஜாக்கிரதை அதிகம். எனக்கில்லை. வேண்டாம், தேவைக்குமேல் இருக்கிறது என்று நிராகரித்து I-70 (நம்மூர் தேசிய சாலை மாதிரி) நோக்கி ஆரம்பித்தேன். விடுதியில் இருந்து 1 கிமீ தூரத்தில் I-70 அடைந்தோம். I-70 சாலையில் இணையும் சாலை தடுக்கப்பட்டு சாலை மூடப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பதாகை இருந்தது. அதனால் என்ன, வேற வழியாக அடைவோம் என்று கூகுளை கேட்டு ஓட்டினேன். சிறிது நேரத்தில் மற்றுமொரு இணையும் சாலையில் அதே. சரி, சென்னை பாண்டிக்கு ECR மட்டும் இல்லையே. திண்டிவனம் வழியாகவும் போகலாமே. அதேபோல் டென்வர் செல்வதற்கான "திண்டிவனம்" சாலையை கூகுளிடம் கேட்டேன். சரியாக 9 மணி நேரம் ஆகும் என்று மாற்று பாதையை தந்தது.

இரவு 8 மணியாகிவிடும். சரி, ரூம் போட்டு யோசிக்கலாம் என்று திரும்ப விடுதிக்கே வந்து, ரூம் போடாமல், வரவேற்பில் உட்கார்ந்து "Twitter" இல் தேடினேன், என்னதான்டா உங்க பிரச்னை என்று. I-70 இல் பாறை சரிவால் ஒன்றுக்கும் மேற்பட்ட விபத்துக்களும் வாகன குவியலும் (Multiple crashes & vehicle pile-up) ஏற்பட்டுள்ளதாம். ஆதலால் இரண்டு மார்க்கமும் மூடப்பட்டுள்ளதாகவும் நிலைமை மாறும்போது அறிவிப்பதாகவும் சொல்லிவிட்டு டீ சாப்பிட போய்விட்டார்கள். ஒரு பக்கம் விடுதி அறை ஒப்படைத்தாயிற்று. சரி டென்வர் அறை ரத்து செய்யலாமென்றால், மன்னிக்கவும், 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்ய இயலாது என்றார்கள்.
சரி செய்வதற்கு ஒன்றுமில்லை. எரிபொருளையாவது நிரப்பலாம் என்று அதை செய்தோம். என் வேண்டுகோளுக்கு இணங்க (!) Twitterஇல் அறிவித்தார்கள், டென்வர் மார்க்கம் இப்போது திறக்கப்பட்டுள்ளது, கவனமாக ஓட்டவும் என்று. ஒரு வழியாக கிளம்பி ஓட்ட ஆரம்பித்தால் I-70 நன்கு பளிச்சென்று ஜொலித்தது. ஏண்டா இதுக்காடா இவ்ளோ பில்டப்பு என்று நினைத்த 15 நிமிடத்தில் மலைப்பாதை ஆரம்பித்தது. கண்ணாடியை இறக்கி, இந்த ரோடு டென்வர் போகுமா சார் என்று கேட்கலாம் என்று நினைத்தால் கூட பக்கத்தில் வண்டி எதுவுமே இல்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வீடுகள், மரங்கள் என வெள்ளை போர்வை. வேறு வழியில்லை.

அப்படியே திரும்ப முடியாது. (அடுத்த மார்க்கம் மூடப்பட்டுள்ளது). ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு ஓட்ட, பாதை மலை மேல் ஏறிக்கொண்டே போகிறது. 120-130 கிமீ கடந்து வைல் பாஸ் (Vail Pass) என்ற இடம், 10,000 அடி உயரம் கடல் மட்டத்தில் இருந்து. லேசான மழை, முற்றிலும் வெள்ளை, வானம் கருப்பு. வேறு வாகனங்களோ மனிதரோ இல்லை. சாலை முழுதும் ஈரம். மனம் முழுதும் கலக்கம். இன்னும் 130 கிமீ இருக்கிறது. ஏதோ காரணங்களால் வண்டி நின்றால்? ஒவ்வொரு கிமீ கடக்கும்போதும் இன்னும் 99, 98 என்று நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாக திரும்பியது. டென்வருக்கு 50 கிமீ அருகில் நிலைமை மாறியது. நல்ல வேலை எரிபொருள் நிரப்பினோம். இல்லை என்றால் இன்னொரு பயமும் சேர்ந்திருக்கும் என்று மனைவியிடம் சொன்னேன்.
ஒரு கனவு போல இந்த 3 மணி நேரங்கள். நேராக உணவருந்தி விடுதியில் சென்று கட்டையை நீட்டி மகள்களுக்கும் தம்பிக்கும் விவரித்தேன். நல்ல வேலை நீங்கள் "திண்டிவனம்" ரூட் எடுக்கவில்லை. சமயத்தில் அது அபாயகரமான ஊர்கள் (Dangerous Neighborhoods) வழியாக செல்லும் சாலையாக இருந்திருக்கலாம் என்று சொன்னார் தம்பி.
எனக்கு இந்தியாவில் ஓட்டி பழக்கமில்லை. துபாயில் நோ மழை நோ பனி. நில அமைப்பும் ஒரே சமதளத்தில். கண்ணை மூடிக்கொண்டு ஓட்டலாம். நான் ஓட்டுவது ஏறக்குறைய அப்படிதான் உள்ளது என்று மகள்கள் சொல்லுவார்கள். அமெரிக்காவில் மலைச்சாலைகள் ஓரளவு எதிர்பார்த்ததுதான். 2018இல், அக்காடியா (Acadia), எல்லோ ஸ்டோன் தேசிய பூங்கா (Yellow Stone) என முன் அனுபவம் உண்டு. இர்வைனில் (Irvine) இருந்து சான் ஹுஸேக்கு (San Jose), சாண்டா பார்பரா (Santa Barbara) வழியாக CA1 என்ற நெடுஞ்சாலையில் ஓட்டியது உச்சம். ஆனால் அமெரிக்க மழை மற்றும் பனி முதல் அனுபவம். சும்மா சொல்லக்கூடாது. இந்த டொயோட்டா செம்ம வண்டி. சான்சே இல்லிங்ணா. சால்ட் லேக் மழை மட்டுமில்லை டென்வர் பனியும் எனக்கு ஜுஜுபி என்று சொல்வதுபோல் நின்றது.

இந்த வாடகை வண்டி விஷயம் ஒரு நல்ல எண்ணை பூசப்பட்ட இயந்திரம் (Well oiled machine) மாதிரி அமெரிக்கன் வாழ்க்கையின் ஒரு அங்கம். அதற்கு முன்னோடி என்றால் நம்மூர் சைக்கிள் கடைகளை சொல்லலாம். அப்போதே வரக்கால்பட்டில் என் மாமா வாடகை சைக்கிள் நிலையம் நடத்தி வந்தார்.
அடுத்தவாரம் மாமா சைக்கிள் கடை சுற்றிக்காட்டிவிட்டு, மீதி அமெரிக்க இடங்களை சுருக்கமாக. பார்ப்போம். அதற்கடுத்த வாரம் நான் ஒரு வருடம் வாழ்ந்த மிகவும் விரும்பிய போலந்தில் சுற்றி வருவோம்.
[எத்தனை பேர் சால்ட் லேக் ஐ "சாக்லேட்" என்று படித்தீர்கள்? :-)]
-சங்கர் வெங்கடேசன்
(shankarven@gmail.com)
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.