Published:Updated:

காத்திருத்தல் ஒரு தவம்! | சிறுகதை | My Vikatan

Representational Image

"ஒகே. ஒருவேளை நீ வர தாமதமானால், நான் கிளம்பி விடுவேன்" என்ற நிபந்தனையுடன் வந்தான். பக்கத்து பெரிய கட்டிட வளாகத்தில் உள்ள ஐடி நிறுவனம்.

காத்திருத்தல் ஒரு தவம்! | சிறுகதை | My Vikatan

"ஒகே. ஒருவேளை நீ வர தாமதமானால், நான் கிளம்பி விடுவேன்" என்ற நிபந்தனையுடன் வந்தான். பக்கத்து பெரிய கட்டிட வளாகத்தில் உள்ள ஐடி நிறுவனம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

விஷ்வா ஒருவாரத்திற்குமுன் பூனாவிலிருந்து இங்கு மாற்றலாகி வந்துவிட்டான். அழுத்தமான பணிச்சூழலில் தொந்தரவு செய்ய வேண்டாமென்று அடிக்கடி தொடர்பு கொள்வதைத் தவிர்த்தால், எங்கள் நீண்டகால நட்பில் தொய்வு ஏற்பட்டுவிட்டது போல்தான் தோன்றுகிறது.  இங்கு வந்து இன்னும் வேலையில் சேரவில்லையென்றும், அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருப்பதாகவும் சொன்னான்.. அன்று என் அலுவலகம் இருக்கும் பகுதிக்கு வர வேண்டியிருப்பதாகவும், அப்போது சந்திக்கலாமா என்றும் கேட்டான். இது என்னடா கேள்வி? என்னைப்பார்ப்பதற்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கொண்டுதான் வரவேண்டுமா? எப்போது வேண்டுமானாலும் வாடா!" என்று வரச்சொன்னேன்.     

Representational Image
Representational Image

இந்த ஏழு வருடங்களில், அவன் ஓரளவு குண்டாகி, வெளுத்து, முகம் உப்பி, மாறி இருந்தான். கைகுலுக்க நீட்டியபோது, இழுத்து கட்டிப்பிடித்துக் கொண்டான். "அப்பப்பா! எத்தனை வருஷம் ஓடிவிட்டது! என்ன, மெலிந்து விட்டாய்!" என்றான்.  "சரி, அது இருக்கட்டும். எங்க சீப் என்ஜினீயரிடம் சொல்லி விட்டு வரேன். நேரே வீட்டுக்குப்போவோம். மதியம் சாப்பிடுவோம். என் மனைவியிடமும்  சொல்லிவிவிடுகிறேன். ஸ்பெஷலாக சமைத்துவிடுவாள். அப்புறம் என்ன செய்யலாம் என்று யோசிப்போம்" என்றேன்.

"இல்லையப்பா! இன்னொரு நாள் வீட்டுக்கு வருகிறேன். இப்போது ஒருமணி நேரம் வரை உன்னுடன் கழிக்கலாம். அப்புறம் எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது" என்றான். "எதிர்புறம் கொஞ்சதூரத்தில் ஒரு நல்ல காஃபி கடை இருக்கிறது. வா! அங்கு பேசிக்கொண்டே போகலாம்" என்று அழைத்துச் சென்றேன். பொதுவான விஷயங்கள், வேலை நிலவரம் பற்றி பேசினோம்.

"நடந்து போகும் தூரத்தில், உள்ள ஒரு அலுவலகத்தில் ஒருவரைப்பார்க்க வேண்டியிருக்கிறது. உனக்கும் நேரம் இருக்கிறதே: நீயும் வாயேன்" என்று அழைத்தேன்.

"ஒகே. ஒருவேளை நீ வர தாமதமானால், நான் கிளம்பி விடுவேன்" என்ற நிபந்தனையுடன் வந்தான். பக்கத்து பெரிய கட்டிட வளாகத்தில் உள்ள ஐடி நிறுவனம். முன்னரே சென்றிருப்பதால், பாதுகாப்பு பணியாளரிடம் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தோம் நான் பார்க்க விரும்பியது ஸ்ரீராமை. அவன் இருக்கைக்கு சென்று, " ஸ்ரீராம்! விஷ்வா வந்திருக்கிறான், பார்!" என்றேன்.

எந்த ஒரு வியப்பின் அறிகுறியில்லாமல் ஸ்ரீராம் விழிக்க, விஷ்வா தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, வேலையில் சேர  பூனாவிலிருந்து வந்து விட்டதையும்  சொன்னான். விஷ்வா கைகுலுக்க நீட்ட, ஸ்ரீராம் எங்கேயோ பார்த்துக்கொண்டு, வேண்டாவெறுப்புடன் நீட்டினான். அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலையில், நானும் ஏதாவது பேசவேண்டும் என்று பேசிவிட்டு கிளம்பினோம்.

"அங்கு போகு முன்னரே அவனைத்தான் பார்க்கப் போகிறோம் என்று சொல்லியிருக்கக் கூடாதா? தவிர்த்திருப்பேன்" என்றான். "ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாமே என்றுதான்" என்று அசடு வழிந்தேன்.

"இன்னும் இப்படிப்பட்ட கொலை வெறியிலேயே இருப்பான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சரி. நேரமாகிவிட்டது " என்று  கிளம்பிவிட்டான்.

இருவரும் இவ்வளவு தூரம் வெறுப்பு கொள்ள என்ன காரணம் என்று புரியவில்லை. நினைவுகளைப் பின்னோக்கி செலுத்தி முன்கதை சுருக்கம் முழுவதும் ஓட்டிப்பார்த்தேன். மூவரும் ஒரே ஊரில், ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை, சில வருடங்களில் வெவ்வேறு செக்சனாக இருந்தாலும், ஒன்றாக படித்தவர்கள்.

பின்னர் பிரபலமான பொறியியல் கல்லூரியில், அவர்கள் கணிணிப்பொறியியலும், நான், அப்பா சொற்படி கோர் இன்ஜினியரிங் தான் படிக்கவேண்டுமென்று, இயந்திரவியலும் படித்தோம். நாங்கள் மூவரும் பள்ளி, கல்லூரி காலங்களில் அடித்த லூட்டியை சொல்லி மாளாது.. நான் சில வருடங்கள் வேலை கிடைக்காமல், பின்னர் அரசுவேலையில் சேர்ந்தது தனிக்கதை. விஷ்வாவும் ஸ்ரீராமும் ஒரே தெருவில் பிறந்து வளர்ந்தவர்கள். ஆரம்பப்பள்ளியிலிருந்தே ஒன்றாக படித்தவர்கள். ஸ்ரீராமுக்கு என்னை அறிமுகம் செய்ததே விஷ்வாதான்.

விஷ்வா வெளியூர் சென்ற பின்தான் ஸ்ரீராம் என்னிடம் நெருக்கம் காட்டினான். எனக்கு முன்னரே நட்பு பாராட்டிய இருவரும் பேசிக்கொள்ளவில்லையென்றாலும், அவர்களை இணைத்து வைப்பது என் கடமை என்ற உணர்வில்தான் சந்திக்கவைத்தேன். அது சொதப்பலானதில் வருத்தம்தான்.

Representational Image
Representational Image

சில நாட்களுக்குப்பிறகு, விஷ்வா வேலையில் சேர்ந்துவிட்டதாகவும், பக்கத்தில் வீடு பார்த்துவிட்டதாகவும் சொன்னான். முதல்நாள் சந்தித்தபோது சொன்னபடி, ஒருநாள் எங்கள் வீட்டிற்கு வருவதாகவும், நிறைய பேச வேண்டியிருக்கிறது என்றும் சொன்னான். ஆனால் அடுத்த இரண்டு மூன்று மாதங்கள் இருவரிடமிருந்து பேச்சே இல்லை. நானும் ஆபீஸ் இன்ஸ்பெக்சன் விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்லவேண்டியிருந்தது. என் வேலை மும்முரத்தில், யாரிடமும் பேசவில்லை.

அன்று ஞாயிற்றுக்கிழமை. வாரநாட்களில் கடும் அலைச்சலின் பிறகு, ஓய்வாக படுத்திருந்தேன். ஸ்ரீராம் வந்தான். பையிலிருந்து வெற்றிலை, பாக்கு, பூ, பழம் இவற்றை ஒரு தாம்பாளத்தில் வைத்து, என் மனைவியையும் அழைத்து, ஒரு பத்திரிக்கையுடன் எங்களிடம் கொடுத்து, " என் தங்கை கல்யாணத்திற்கு குடும்ப சகிதம் முன்னரே வந்து நடத்தி கொடுக்கவேண்டும்" என்றான். " என்னடா! கல்யாணமே வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்த விஷாலி, ஒருவழியாக ஒப்புக்கொண்டாளா! இனிமேல் உன் லைன் கிளீயர்தானே! கூடிய சீக்கிரம் உன் கல்யாணப் பத்திரிக்கையையும் எதிர்பார்க்கிறோம்" என்றபடி பத்திரிக்கையை எடுத்து பார்த்தேன். மணமக்கள்: "செல்வன் விஷ்வா என்கிற விஸ்வநாதன்: செல்வி விஷாலி என்கிற விசாலாக்ஷி" என்றிருந்தது.

Representational Image
Representational Image

நான் அதிர்ச்சியடைந்ததைக் காட்டிக் கொள்ளாமல்,"என்னடா இது? திடீர் ஏற்பாடா? என்று கேட்டேன். நெருங்கிய நண்பனாக இருந்தாலும், இந்த ஒரு விஷயத்தை சொல்லாமல் விட்டது தப்புதான்! அவர்கள் இருவரும் தங்கள் திருமணம் பற்றி முன்மொழிந்த போது, இரு குடும்பத்தினர் எதிர்ப்பால், கைகலப்பில் போய் முடிந்தது. நானே இதை எதிர்பார்க்காதபோது, முந்தைய தலைமுறையினர் எப்படி? இருவருக்கும் நிறைய உபதேசம் செய்து, இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இத்துடன் இந்த பேச்சை விட்டுவிடுவோமென்றும், யாரிடமும் இதைப்பற்றி பேசிக்கொள்ளவேண்டாமென்றும் தீர்மானிக்கப்பட்டது.

விஷ்வாவும் வெளியூர் சென்றுவிட்டான். கொஞ்சநாட்கள் கழித்து பார்த்த வரன்களை, தட்டிக்கழித்தாள். " நான், "இருவரும் பேசவோ, தொடர்பு கொள்ளவோ, செய்யவில்லையா?" என்று கேட்டேன். "இல்லவே இல்லை. அது எனக்கு நன்றாக தெரியும். ஏழு வருடங்களுக்குப்பிறகு, அன்று அழைத்து வந்தாயே, அதன் பிறகுதான் அவன் விஷாலியிடம் பேசியிருக்கிறான். இரு குடும்பங்களின் முழு சம்மதத்துடன் இப்போது இந்த ஏற்பாடு”. "அப்பாடா! ஏழு ஆண்டுகள் காத்திருத்தலை தவம்போல் நிறைவேற்றியிருக்கிறார்கள். இந்த அவசரயுகத்தில், இது சாத்தியமா, என்று வியக்க வைத்திருக்கிறார்கள். உண்மையில் இருவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். வாழ்க மணமக்கள்!" என்று கூறிக்கொண்டே மனைவியிடம் இனிப்பு கொண்டுவரச்சொல்லி, அவன் வாயில் திணித்து,"ஜாம், ஜாம் என்று கல்யாணம் நடக்கும். நாம் ஜமாய்த்து விடுவோம்" என்று அவன் வயிற்றில் செல்லமாக குத்த, பீறிட்டுவந்த வெடிச்சிரிப்பில் மகிழ்ச்சிவெள்ளம் கரைபுரண்டோடியது.

-தர்மபுத்ரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.