Published:Updated:

வாழ்வை தேடி ஒருத்தர், உறவை தேடி இன்னொருத்தர்! - ரயில் கதைகள்

கையில் தடி ஊன்றி நடந்து வந்த பெரியவர் ஒருவர் “தம்பி எனக்கு ஒரு ரிசர்வேசன் பார்ம் எழுதிக் கொடு, செந்தூர் எக்ஸ்பிரசுக்கு” என்று சொன்னபடியே,கையை ஊன்றி மிகுந்த சிரத்தையுடன் என்னருகே இருக்கையில் அமர்ந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சென்னையில் இருந்து 2 வாரம் கழித்து சொந்த ஊர் செல்வதற்காக, எழும்பூர் ரயில் நிலையத்தில், டிக்கெட் முன்பதிவுக்காக வரிசையில் காத்திருந்தேன். அப்போது, கையில் தடி ஊன்றி நடந்து வந்த பெரியவர் ஒருவர் “தம்பி எனக்கு ஒரு ரிசர்வேசன் பார்ம் எழுதிக் கொடு, செந்தூர் எக்ஸ்பிரசுக்கு” என்று சொன்னபடியே, கையை ஊன்றி மிகுந்த சிரத்தையுடன் என்னருகே இருக்கையில் அமர்ந்தார்.

நான் போகும் சாத்தூருக்கே போவதாக அவரும் சொன்னார். “செந்தூர் எக்ஸ்பிரஸ் இங்கே சாயந்திரம் 4 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 4 மணிக்கு சாத்தூர் போகுமே.. அந்நேரம் போய் இறங்கனுமா? சாத்தூர் உங்கள் சொந்த ஊரா? இல்ல பக்கத்து ஊரா?” என்றேன்.

Egmore Station
Egmore Station

அவர் சாத்தூருக்கு பக்கத்தில் இருக்கும் என் சொந்த ஊரைச் சொன்னதும், எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. என் சொந்த ஊரும் அதே தாங்க. இதுவரைக்கு நான் உங்களை பார்க்கவே இல்லையே? என்றேன்.

“தம்பி என் பெயர் வேலுச்சாமி. எனக்கு வயசு இப்ப 75. நான் சுதந்திர தினத்தன்னைக்கு பிறந்தேனாம். எங்கம்மா சின்னவயசுல சொல்லிச்சு. 1955-ல் எங்கம்மா இறந்திடுச்சு. 5-ஆம் வகுப்பு வரை தான் படித்தேன். அதுக்கப்புறம் நான் பள்ளிக்கூடம் போகலை. நான் 1959-ல் ஊரை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்திட்டேன்.

இங்கே சென்னையில் பல கடைகளில் வேலை பார்த்தேன். அப்புறம் மாதவரத்தில் மளிகை கடை, காய்கறி கடை வச்சேன். ஓரளவுக்கு முன்னேறினேன். எப்படி முன்னுக்கு வந்தேனோ, அப்படியே நொடிச்சும் போய்ட்டேன். 2008-ல் சிக்குன் குனியா நோய் வந்தது. அதுல ரொம்பப்படுத்த படுக்கையாகிப் போனேன். உடம்பு குணமாகி கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வாங்கப் போறப்ப கீழே தவறி விழுந்திட்டேன். அப்ப கால் எலும்பு உடைஞ்சிபோச்சு. (காலை காட்டுகிறார்) அதுல இருந்து இப்படி தவங்கி தவங்கி நடக்கிறேன்” என்றார்.

இதற்கிடையே சுமார் 45 வயதை கடந்த பெண்மணி நேராக ரிசர்வேசன் கவுண்டருக்கு வந்து அங்கிருந்த ஊழியரிடம், “இப்ப ட்ரெயின் எந்த ஊருக்கு போகுது?” என கேட்டார். “எல்லா ஊருக்கும் ட்ரெயின் போகுது. நீங்க எந்த ஊருக்கு போகனும் அதைச் சொல்லுங்க?” என்ற பதிலை சொன்னார் கவுன்டரில் இருக்கும் ஊழியர்.

“நான் எதாவது ஊருக்கு போகனும், டிக்கெட் கொடுங்கள்” என்கிறார் இந்த பெண்மணி. “அப்படி கேட்டால் நான் எப்படி கொடுக்க முடியும்?. திருச்சி, மதுரை, கோவில்பட்டி, காரைக்குடி, தூத்துக்குடின்னு ஏதாவது ஒரு ஊரைச் சொல்லுமா?. அப்பசரி கோவில்பட்டிக்கு டிக்கெட் கொடுங்கள் என்ற பதில் சொல்கிறார் இந்த பெண்மணி.

ரிசர்வேசன் பார்ம் எழுதிட்டு வாங்க என, ரயில்வே ஊழியர் சொல்ல.

நாங்கள் இருவரும் ஆச்சரியத்துடன் அந்த பெண்மணியை பார்த்துகிட்டிருக்கும்போது, என்னிடமே வந்து தம்பி எனக்கு ஒரு அப்ளிகேசன் எழுதிக்கொடுப்பா? என்றார்.

“அக்கா… என்ன தான் பிரச்சனையா இருந்தாலும், நீங்கள் ஊரை விட்டு போவது எனக்கு சரியின்னு தோணவில்லை. கோவில்பட்டியில் உங்களுக்கு சொந்த காரங்க யாராவது இருக்காங்களா? அங்க போனால் எங்க தங்குவீங்க? நல்ல யோசிச்சு சொல்லுங்க” என்றேன் தயக்கத்தோடு.

வேலுச்சாமி
வேலுச்சாமி

“நான் இருக்கிற நிலைமையில எங்காவது போய் செத்திடலாம்னு இருக்கேன். இன்னொரு பக்கம் நாம ஏன் சாகனும்.? எங்காவது போய் பிழைச்சிக்கிடலாம்னு நம்பிக்கையோடு புறப்படுறேன். என்கிட்ட இப்ப ரு.500 இருக்கு. நீ அதுக்குள்ள டிக்கெட் வருகிற மாதிரி, திருச்சியோ, மதுரையோ இல்ல கோவில்பட்டியோ எழுதிக்கொடு” என்றார்.

இருந்தாலும் எனக்கு மனசு சங்கடமாக இருந்ததால், அக்கா வீட்டில சொந்தக்காரங்க இருக்காங்களா? என்றேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“எல்லாம் இருக்காங்க. பொம்பளை பிள்ளை ஒன்னு அத கட்டிக் குடுத்திட்டேன். வூட்டுக்காரர் இருக்கார். நல்லா குடிப்பாரு, அப்புறம் அடிப்பாரு, அதான் வாழ்க்கையே வெறுத்து கிளம்புறேன். எந்த ஊருக்கு போனாலும், உழைக்க தெம்பு இருக்கு தம்பி. நீ எழுதிக் கொடு” என்று அவர் சொல்லும் போது உள்ளத்தில் வலி இருந்தாலும், பேச்சில் இருந்த உறுதி வெளியே தெரித்து விழுந்தது.

என்னருகே இருந்த எங்க ஊர் பெரியவரும் “அந்தம்மா ரொம்ப மனசு நொந்து வந்திருக்கு. நீ எழுதிக்கொடு தம்பி. கோவில்பட்டி தானே போகனும்னு சொல்லுது. நம்ம ஊர்ப்பக்கந்தானே போகுது. பிழைச்சிக்கும்” என்றார்.

சரின்னு நானும் எழுதிக் கொடுத்திட்டேன். அனந்தபுரி எக்ஸ்பிரசில் கோவில்பட்டிக்கு ஒரு டிக்கெட் எடுத்திட்டு, அந்த அம்மா அங்கிருந்து நடைமேடைக்கு நகர்ந்து செல்லும்போது, எனக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பியது. இருந்தாலும் எனக்கு மனசு பாரமாக இருந்தது.

எக்மோர்
எக்மோர்

அப்புறம் பெரியவரே, நீங்க ஏன் ஊருக்கு போறீங்கன்னு? கேட்டேன். “நான் ஊர விட்டு வந்தாலும், ஊருல இருக்கிற விவசாய நிலங்களை கைவிட மனசு இல்ல. அதனால், அவ்வப்போது ஊருக்கு போய் விதைச்சிட்டு, சொந்த பந்தங்களை பார்த்திட்டு வருவேன். இப்ப புரட்டாசி பிறந்திருச்சுல்ல. அதான் ஊருக்கு போறேன். ஊருண்ணி கிட்ட கொஞ்ச நிலம் கிடக்குது. அதுல சோளமோ, கம்போ, மக்காச்சோளமோ எது தோதுப்படுதோ? அதை விதைச்சிட்டு வரப்போறேன்” என்று சொல்லும்போது, டிக்கட் கவுன்டரில் அவரது வரிசை வந்துவிட்டது.

அவரிடம் “பெரியவரே செந்தூர் எக்ஸ்பிரஸ்ல டிக்கெட் இல்ல. அதனால், அனந்தபுரியில் டிக்கெட் போடுகிறேன்” என்று சொல்லிவிட்டு, ரயில்வே பணியாளர் டிக்கெட் கொடுத்தார். பெரியவர் வேலுச்சாமியும் எனக்கு நன்றி சொல்லிவிட்டு நகரும்போது, என் வரிசை டிக்கெட் கவுன்டர் அருகே வந்துவிட்டது.

ஊர், உறவைத் தேடி ஒரு பெரியவர். இந்த ஊரும் வேண்டாம், உறவும் வேண்டாம்னு ஒரு பெண்மணி. இருவருடைய பயணமும் ஒரே ரயிலில்.!

அந்தம்மா நல்லா இருக்கனும்னு வேண்டிகிட்டே நான் அங்கிருந்து நகரும்போது தூரத்தில் ஒலித்தது, “பயணிகளின் பணிவான கவனத்திற்கு….வண்டி எண் 16723 அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இதோ புறப்படத் தயாராகிவிட்டது” என்று. வாழ்க்கை எத்தனை விசித்திரமானது பாருங்கள்.!


-சி.அ.அய்யப்பன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு