வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
ரகுவின் சொந்த ஊர் கோவை, அங்கே அவர் ஒரு சிறிய நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரின் மாத வருமானம் 30,000 ரூபாய். அவர் சரண்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் கோவையில் ரகுவின் இல்லத்தில் அவரது பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். வீட்டு செலவிற்கென்று ரகு ஒவ்வொரு மாதமும் 15,000 ரூபாய் கொடுப்பது வழக்கம். மீதம் உள்ள 15,000 ரூபாயை அவரது செலவிற்கும் சிறுது சேமிப்பிற்கும் எடுத்து வைப்பார்.
சரண்யா ஒருநாள் தன் தோழிகளிடம் தொலைபேசியில் பேசுகையில், ஒவ்வொரு மாதமும் அவர் பதினைந்து ஆயிரம் தான் தருகிறார் அதில்தான் நாங்கள் குடும்பத்தை நடத்துகிறோம் என்றார். அதற்கு அவரது தோழிகள், எங்கள் கணவர்கள் எல்லாம் மாதம் 60,000 முதல் 80,000 வரை சம்பாதிக்கிறார்கள். எங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறையில்லை. உன் கணவரையும் சென்னை, பெங்களூர் போன்ற மெட்ரோ நகரத்தில் வேலை தேட சொல் என்றனர்.

இதை ரகுவிடம் கூறினார் சரண்யா. ஆம் நீ சொல்வது சரிதான், வேலை தேட தொடங்குகிறேன் என்றார் ரகு. சரியாக மூன்றே மாதத்தில் அவருக்கு சென்னையில் ஓர் மென்பொருள் நிறுவனத்தில் மாதம் 50,000 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. ரகுவும் சரண்யாவும் மகிழ்ச்சி கடலில் மூழ்கினர்.
தான் தற்போது வேலை செய்யும் நிறுவனத்தின் மேலாளருக்கு விலகல் கடிதத்தை அனுப்பினார் ரகு. உங்கள் சம்பளத்தில் மாதம் 10,000 ரூபாய் உயர்த்தி தருகிறோம் இங்கேயே உங்கள் பணியை தொடருங்கள் என்றார் மேலாளர். ஆனால் ரகு அதற்கு மறுத்து விட்டார்.

புதிய வேலையில் இணையும் நேரம் நெருங்கிவிட்டது, முதல் முறை தன் சொந்த ஊரை விட்டு சம்பாதிப்பதற்காக வெளியூர் செல்கிறார் ரகு. தன் மகன் தங்களை விட்டு பிரிவது ரகுவின் தாய் தந்தைக்கு விருப்பம் இல்லை, இருப்பினும் இப்போது வேறு வழியில்லை.
இத்தனை நாள் கோவையில் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தனர், ஆனால் இப்போது சென்னையில் வாடகை வீடு ஒன்று பார்க்க வேண்டும்.
தன் அலுவலகத்திற்கு அருகில் அவர் பார்த்த வீடுகளின் வாடகை எல்லாம் மிக அதிகமாக இருந்தது, ஆதலால் அவர் சற்று தொலைவில் வாடகை குறைவாக உள்ள ஒரு வீட்டை தேர்ந்தெடுத்தார்.

வாடகை 10,000 ரூபாய் முன்பணம் 50,000 ரூபாய். புது வீட்டிற்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்குவதற்காக தான் பல வருடம் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்தார் ரகு, கரைந்தது சேமிப்பு. முதல் வாரத்திலேயே லட்சக்கணக்கில் செலவு செய்தார்.
வேலைக்கு செல்ல தொடங்கினார், தன் வீட்டில் இருந்து 45 நிமிடம் பயணம், முதல் முறையாக வெளியூர் வருவதால் உற்சாகத்துடன் இருந்தார் ரகு. வார இறுதியில் ஹோட்டலில் சாப்பிடுவது, விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வது, புதிய நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபடுவது என மகிழ்ச்சிக்கு அளவில்லை.
ஒரு சில மாதங்கள் ஓடின, வேலைப்பளு அதிகமானது, ரகுவின் உடல்நிலை மோசமானது, என்னதான் சம்பளம் அதிகமானாலும் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தது. தன் மனைவியும் ஒரு வேலைக்கு சென்றால் உதவியாக இருக்கும் என்று எண்ணினார் ரகு.
சரண்யாவும் வேலை தேட தொடங்கினார், மாதம் 20,000 ரூபாய் சம்பளத்தில் அவருக்கும் ஓர் வேலை கிடைத்தது.

இப்போது இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டு வேலை செய்வது கடினமானது. அதனால் சமையலுக்கும், மற்ற வேலைகளுக்கும் வேலையாட்களை வைத்தனர். ஒருபுறம் வருமானம் வந்தாலும் மறுபுறம் அவர்கள் செலவுகளை அதிகமாகிக்கொண்டே இருந்தனர்.
கார் வாங்க வேண்டும் என்பது அவர்களது நீண்ட நாள் கனவாக இருந்தது. 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய கார் ஒன்றையும் மாத தவணையில் வாங்கினார்கள். மீண்டும் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கிறதே என்றெண்ணி வருந்தினார்கள்.
ஓராண்டில் அவர்களின் வரவை விட செலவு தான் அதிகமாக இருந்தது. தன் சொந்த ஊரில் வேலை செய்து கொண்டிருந்த போது சம்பளம் குறைவாக இருந்தாலும் அதுவே போதுமான அளவு இருந்தது. இப்போது சம்பளம் அதிகம் கிடைத்தாலும் செலவுகள் அதை விட அதிகமாகின. ரகுவும் சரண்யாவும் தங்கள் தவறை புரிந்து கொண்டனர்.

தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனர். மற்றும் அவர்களது சொந்த ஊரில் மீண்டும் ஓர் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்கள்.
நண்பர்களே இவர்களின் வாழ்க்கையில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன என்பதை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துக்கள் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி,
நரேந்திரன் பாலகிருஷ்ணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.