Published:Updated:

சிக்ஸ் பேக்கெல்லாம் வேணாம், மீசையை நீவிவிட்டு செல்பி எடுத்தாலே மாஸ்தான், ஆனா இப்போ?

விழா நாயகன் பேசிய வசனங்களையோ அல்லது அவரது மேனரிசங்களையோ பேசி நடித்து காண்பிப்பது கட்டாயம் எனும் தமிழ் சினிமா மற்றும் அரசியல் மேடை மரபை அறிந்தவர்களுக்கு மட்டுமே விஜய் சேதுபதியின் துணிச்சல் புரியும்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

விக்ரம் போல நீண்ட நெடிய போராட்டத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தையும் உயரத்தையும் எட்டி பிடித்தவர் விஜய் சேதுபதி. சேது படத்தின் மூலம் விக்ரம் புகழ் வெளிச்சத்துக்கு வந்த போது தமிழ் திரைத்துறை இருந்த சூழல் வேறு. தன் தனித்துவமான நடிப்புடன் மட்டுமல்லாமல் நான்கு பாடல்கள் நான்கு சண்டைகள் நிறைந்த மசாலா படங்களில் அடுத்தடுத்து நடித்துத்தான் தன் இருப்பை தக்கவைத்துக்கொண்டார் விக்ரம்!

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

1999ம் ஆண்டு வெளிவந்த படம் சேது. அந்த படம் வெளிவந்து ஐந்து ஆண்டுகள் கழித்து, 2004ம் ஆண்டில் வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலெட்சுமி படத்தில் தலைகாட்டி, எட்டு ஆண்டுகள் தொடர்ந்து போராடி 2012ல் வெளிவந்த பீட்சா படத்தின் மூலம் வெற்றி வெளிச்சத்துக்குள் நுழைந்தவர் விஜய் சேதுபதி. எம்.குமரன் சன் ஆப் மகாலெட்சுமி படத்துக்கும் பீட்சா படத்துக்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டுகளில் கதை சொல்லலிலும் தொழிநுட்பத்திலும் தமிழ் திரைத்துறை கண்ட மாற்றங்கள் ஏராளம். கதாநாயக வழிபாட்டு சினிமா காலகட்டத்தில் நடிக்க தொடங்கிய விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவின் புது அலை இயக்குநர்களின் மூலம் வெற்றி கண்டதே பெரும் சாதனை தான் !

வெற்றிக்கான பார்முலாக்கள் எனத் தமிழ் திரைத்துறை வகுத்து வைத்திருந்த இலக்கணத்துக்கு எதிர்மறையான படங்களில் தொடர்ந்து நடித்தே தமிழ் சினிமாவில் தன் இருப்பை பலமாக தக்கவைத்துக்கொண்ட விஜய் சேதுபதி, நடிப்போடு நிறுத்திக்கொள்ளாமல் தயாரிப்பாளராகவும் பரிமாணமெடுத்தார். படத்துறை சார்ந்த பிரச்சனைகளிலும் குரல் கொடுத்து, ஒட்டுமொத்த தமிழ் திரைத்துறையின் நலம்விரும்பிகளில் ஒருவராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.

திரைக்கு வெளியிலும் மற்ற நடிகர்களிலிருந்து மாறுபட்டவராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டதும் அவரது வெற்றிக்கான காரணங்களில் ஒன்று. அதுவரையிலும் திரைத்துறை நடிகர்கள் பொது இடங்களிலும், விழாக்களிலும் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும், பேச வேண்டும் என்றிருந்த எழுதப்படாத இலக்கணங்களிலிருந்ததெல்லாம் மாறுபட்டு பொதுவெளியில் தன் தனித்தன்மையை விட்டுக்கொடுக்காத ஒரு இயல்பான மனிதனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

"இந்த பிண்டம் நினைப்பதை அண்டம் நிறைவேற்றி கொடுக்கும்",

"மற்றவர்கள் சொல்லியெல்லாம் முயற்சி வராது. அது இயல்பாகவே வரவேண்டும்"

என்றெல்லாம் தத்துவார்த்தமாகப் பேசுவதோடு மட்டுமல்லாமல் சமூகம் மற்றும் அரசியல் பற்றிய தன் பார்வையையும் கருத்துகளையும் எந்த சமரசங்களும் இன்றி பேசுபவர். கமல் திரையில் செய்த கட்டிப்பிடி வைத்தியத்துடன் அன்பு முத்தத்தையும் சேர்த்து மக்கள் மனம் கவர்ந்தவர் !

பேட்ட பட ஆடியோ விழாவில் விஜய் சேதுபதியின் நடிப்பையும், சிந்தனைகளையும் வியந்து பேசிய ரஜினி, அவரை ஒரு "ஹியூமன் சயின்டிஸ்ட்" என ஒப்பிட்டார். ரஜினியே விஜய் சேதுபதியை அவ்வளவு புகழ்ந்த, ரஜினிக்கான அந்த மேடையிலேயே ரஜினியை போல தனக்கு பேசிக்காட்டவோ நடித்துக்காட்டவோ வராது என மறுத்தார் விஜய் சேதுபதி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விழா நாயகன் பேசிய வசனங்களையோ அல்லது அவரது மேனரிசங்களையோ பேசி நடித்து காண்பிப்பது கட்டாயம் எனும் தமிழ் சினிமா மற்றும் அரசியல் மேடை மரபை அறிந்தவர்களுக்கு மட்டுமே விஜய் சேதுபதியின் துணிச்சல் புரியும் ! நடிக்க வாய்ப்பளித்த பெரிய நடிகர்களை வானளாவ புகழும் வழக்கத்துக்கு மாறாக, அவர்களின் "Acting process" பற்றி பேசும் தமிழ் சினிமாவின் முதல் நடிகர் விஜய் சேதுபதியாகத்தான் இருக்கும் ! அதே போல மாஸ்டர் பட விழாவிலும் தன் பாணியில் பேசி தனித்து ஜொலித்தவர் விஜய் சேதுபதி.


தமிழ் திரைத்துறையின் இருபெரும் பிரபலங்களின் விழாக்களிலும் விஜய் சேதுபதிக்கு எழுந்த கரகோஷமும், அவரை அவராகவே ஏற்றுக்கொண்ட தமிழ் திரைத்துறை உலகமும் தான் விஜய் சேதுபதி என்ற இயல்பான நடிகனுக்கு கிடைத்த மக்கள் பரிசு!

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

ரே மாதிரியான நடிப்பு, புரியாத உச்சரிப்பு என விஜய் சேதுபதியை ஆரம்பத்திலிருந்தே விமர்சிப்பவர்களும் உண்டு. யதார்த்த நடிப்பின் ரசவாதம் புரிந்தவர்களுக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்கும் சூது கவ்வும் படத்துக்கும் உள்ள நடிப்பு வித்தியாசம் நிச்சயம் புலப்படும். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்துக்கும் ஆண்டவன் கட்டளை படத்துக்குமான வேறுபாடும் அப்படியே.

ஹீரோ ஒரு பக்கம், கேமியோ மற்றும் வில்லன் பாத்திரங்கள் மறுபக்கம் என ஆரம்பம் முதலே தொடர்ந்து இரட்டை குதிரை சவாரி செய்துகொண்டிருக்கும் முதல் நடிகரும் விஜய் சேதுபதிதான்.

ஜிகர்தண்டா படத்தில் அவர் தோன்றியது ஒரே காட்சியில் மட்டும் தான். அதிலும் தீர்க்கமான பார்வை, அலட்சிய பேச்சு என அசத்தினார்.

கதாநாயகன் படத்தின்,

"ஒரு ஆம்பளையோட முத்தம் எவ்வளவு கேவலமா இருக்கு...ப்பே !"

என்ற ஒற்றை வசனத்தின் மூலம் முழுநீள நகைச்சுவை படத்திலும் தன் தனித்த நகைச்சுவை நடிப்பை நிரூபித்தவர்.

மொத்த தமிழ் சினிமா நடிகர்களையும் தன் "மோல்டுக்குள்" உருக்கி வார்த்துவிடும் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானத்திலும் தனித்து பிரகாசித்தவர் விஜய் சேதுபதி.

கதை தேர்வில் மட்டுமல்லாமல், மேக்கிங் ஸ்டைல், ஜானர் என பார்த்துப் பார்த்து வித்தியாசமாக நடித்த அவரது கரியரில் விக்ரம் வேதா மிக முக்கியமான ஒரு படம். அந்த படத்துக்கு பிறகு இன்னும் மேலே சென்றிருக்க வேண்டிய அவரது நடிப்பு கிராப் செங்குத்தாகக் கீழ் நோக்கி இறங்கிக்கொண்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

ரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன், சிந்துபாத், சங்கத்தமிழன் என விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த படங்களிலிருந்து தொடங்கியது அவரது சறுக்கல்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

நாயகனாக நடித்த படங்கள் சொதப்பினாலும், சிகரெட்டை தூக்கிப் போட்டு வாயில் பிடித்த சூப்பார் ஸ்டாருக்கே போட்டியாக ஆழ தம் இழுத்து புகை ஊதி பேட்டை படத்தில் ஜித்துவாக கெத்து காட்டினார். ஓ மை கடவுளே படத்தில் கோட் சூட் கடவுளாக கலகலக்க வைத்தார். மாஸ்டர் படத்தின் வில்லன் வேட நடிப்பில் பீஸ்ட்டாக விஸ்வரூபம் எடுத்தார்.

ஆனால் கடைசியாக வெளிவந்த மூன்று படங்களில், அனபெல் சேதுபதி படத்தில் கேமியோ பாத்திரமும் சறுக்கிவிட்டது !

விஜய் சேதுபதி நடித்துக்கொண்டிருக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ தலைப்பைப் போலவே, அடுத்தடுத்து வெளிவரும் படங்களில் அவரது நடிப்பும் "போகிற போக்கில் கேமராவுக்கு முன்னால் நின்றது போல" அமைந்து, கொட்டாவி விட வைக்கிறது.

விஜய் சேதுபதி போன்ற ஒரு நடிகர் துக்ளக் தர்பார் போன்ற ஒரு அரசியல் பகடி கதையை இப்படி சொதப்பியதற்கான காரணம் ஒரு புரியாத புதிர். இறங்கி அடித்து பிரித்து மேய்ந்திருக்க வேண்டிய ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி கதாபாத்திரத்தை கண்சிமிட்டல் வித்தியாசம் மட்டுமே காட்டி அவர் திருப்திப்பட்டுக்கொண்டது ஏனோ ? !

ஒரு மனிதனின் மனநிலை மாற்றம் அவனது உடல் மொழியிலும் நிச்சயம் எதிரொலிக்கும். அந்த வகையில் அந்நியன் படம் அதீதமாக பெரிதுபடுத்திய ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியை யதார்த்தமான உடல்மொழி அல்லது குரல் வேறுபாட்டின் மூலம் விஜய் சேதுபதி திரையில் இயல்பாக தோற்றுவித்திருக்கலாம்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

பெரிய நடிகர்களுடன் நடித்து அவர்களின் "Acting process" பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்னரே அறுபதை தொட்ட முதியவராக ஆரஞ்சு மிட்டாயில் அசத்தியவர், சீதக்காதி படத்தில் மூச்சு விடும் சப்தத்திலேயே முதுமையை உணர செய்தவர், சேதுபதி படத்தில் சிக்ஸ் பேக் எல்லாம் வைக்காமல் மீசையை நீவிவிட்டு செல்பி எடுத்தே போலீஸ் கெத்தை காட்டியவர், பார்த்திபன் சத்யராஜ் போன்ற நடிகர்களுக்கு முன்னால் கோட்டைவிட்டது ஏன் என்பது அவருக்கே வெளிச்சம்.

டுநிலையான விமர்சன கண்ணோட்டத்தில் பார்க்கும் போது அவர் ஒத்துக்கொள்ளும் படங்களின் எண்ணிக்கையும் தேர்ந்தெடுக்கும் இயக்குநர்களுமே இந்த சூழலுக்கு காரணம் என தோன்றுகிறது...

நல்ல உள்ளம், நன்றிக்கடன், தயாரிப்புக்கான பண தேவை என விஜய் சேதுபதி நிறைய படங்களை ஒப்புக்கொள்வதை பற்றி பல கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன. காரணம் என்னவாக இருந்தாலும் படங்களின் எண்ணிக்கை கூடக் கூட, இயக்குநர்களை நம்பி தன்னை ஒப்படைப்பதற்கு மாற்றாக, கதையின் ஒரு வரியுடன் திருப்திபட்டுக்கொண்டு தனது ஓட்டத்துக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் இயக்குநர்களை விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கத் தொடங்கிவிட்டாரோ என்ற ஐயம் எழுகிறது.

சினிமா என்பது இயக்குநரின் ஊடகம். கதாநாயகனாக அல்லாமல் இயக்குநரின் கதைக்கான நாயகனாக தன்னை ஒப்புக்கொடுத்து வளர்ந்த விஜய் சேதுபதிக்கு இது நன்றாகவே தெரியும். பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் போன்ற ஆரம்ப கால படங்கள் மட்டுமல்லாமல் ஆண்டவன் கட்டளை, காதலும் கடந்து போகும், விக்ரம் வேதா, 96, சூப்பர் டீலக்ஸ் என அவரது அனைத்து வெற்றி படங்களுமே "Director’s touch" படங்கள் தான்.

சமீப காலமாக விஜய் சேதுபதியின் படம் எப்போது வெளிவரும் என்ற ஆர்வம் மறைந்து, அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் படங்களின் நீண்ட பட்டியலை படிக்கும் போதெல்லாம் இவற்றில் எத்தனை தேறும் என்ற சந்தேகம் மேலோங்க தொடங்கி விடுகிறது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

அவரது படங்கள் தொடர்ந்து ஏமாற்றினாலும் விஜய் சேதுபதி மீதிருக்கும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் குறைவில்லை என்பதும் ஒரு ஆச்சரியம் தான்! ஒற்றை சொல்லுக்கு கூட ட்ரோல் செய்து துவைத்துவிடும் சமூக வலைத்தளத்தில் கூட விஜய் சேதுபதியை பற்றிய "Soft corner" பகிர்வுகள்தான் அதிகம்! வெகுஜன அபிமானமும் அன்பும் லட்சத்தில் ஒரு கலைஞனுக்கு கிடைப்பது. அந்த அபிமானமும் அன்பும் விஜய் சேதுபதிக்கு இயற்கையாகவே வாய்த்திருக்கிறது.

காலங்காலமாக கதாநாயக பிம்பத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்கும் தமிழ் திரைத்துறையில் பன்ச் வசனம் பேசும் மாஸ் ஹீரோக்கள் கொண்டாடப்படுவதுதான் வழக்கம் ! இரண்டு வித்தியாசமான முயற்சிகளுக்கிடையே மூன்று மசாலா படங்களில் நடிக்கவேண்டிய கட்டாயம் கமலஹாசனுக்கே இருந்தது ! அந்த வகையில் மாற்று படங்களின் நாயகனாக பரிணமித்த விஜய் சேதுபதி வெகு குறுகிய காலத்தில் பெரும்பாலானவர்களால் கொண்டாடப்படுவது மிக அரிதான நிகழ்வு.

ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகர் என்ற குறுகிய வட்டத்தையும் தாண்டி, நல்ல சினிமாவை ரசிக்கும் அனைவருக்குமான நடிகனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விஜய் சேதுபதியிடம் சினிமா பிரியர்கள் எதிர்பார்ப்பது படங்களின் எண்ணிக்கையை அல்ல, தரத்தையும் அவரது நடிப்பையும் தான் !

எத்தனையோ நடிகர்கள் எந்த ஜானரில் நடித்தால் தாக்குபிடிக்க முடியும் என போராடிக்கொண்டிருக்க, "இதற்கு மட்டும்தான் ஆசைப்படுகிறோம் பாலகுமாரா" என அவரது ரசிகர்கள் மிக தெளிவாகவே உள்ளனர். கதைகளின் தேர்வையும் எண்ணிக்கையையும் தெளிவாக வரையறுத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்வது இனி விஜய் சேதுபதியின் முடிவுகளில் தான் உள்ளது...

புரிந்துகொள்வாரா மக்கள் செல்வன் ?!


-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு