Published:Updated:

ரொம்ப தூரம் போயிட்டியா ராம்! - HBD விஜய்சேதுபதி! | My Vikatan

விஜய் சேதுபதி

ஆண்டவன் கட்டளையில் கூத்துப்பட்டறையில் நாசர் ஒரு கதாபாத்திரத்தை கூறி அதுபோல செய் என்று சொன்னதும் அதை ஏற்று விசே நடித்துக்காட்டும் காட்சியை பார்த்து சிலிர்த்து.. அதை நினைவில் வைத்து, அவருடைய 25 படமான "சீதக்காதி"க்கு பெரும் எதிர்ப்பார்ப்போடு சென்று ஏமாற்றத்துடன் திரும்பினேன்..

ரொம்ப தூரம் போயிட்டியா ராம்! - HBD விஜய்சேதுபதி! | My Vikatan

ஆண்டவன் கட்டளையில் கூத்துப்பட்டறையில் நாசர் ஒரு கதாபாத்திரத்தை கூறி அதுபோல செய் என்று சொன்னதும் அதை ஏற்று விசே நடித்துக்காட்டும் காட்சியை பார்த்து சிலிர்த்து.. அதை நினைவில் வைத்து, அவருடைய 25 படமான "சீதக்காதி"க்கு பெரும் எதிர்ப்பார்ப்போடு சென்று ஏமாற்றத்துடன் திரும்பினேன்..

Published:Updated:
விஜய் சேதுபதி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

"கரை வந்த பிறகே பிடிக்குது கடலை! நரை வந்த பிறகே புரியுது உலகை!" என்ற "96" பட பாடலை ஆறிலிருந்து அறுபது வரை எல்லோருமே ரசிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். அந்தப் பாடலை போலவே எல்லோருக்கும் பிடித்தமான நம் சமகாலத்து கலைஞன் விஜய்சேதுபதி பற்றிய பதிவு இது.

"புதுப்பேட்டை" படத்தில் ஒரு ஓரமாக நின்று ஒட்டுமொத்த படத்திலயே ஒன்றிரண்டு வசனங்கள் மட்டும் பேசிய ஒரு நடிகன், அதே படத்தின் நாயகனான தனுஷ் கண்முன் மேடையேறி குடியரசுத்தலைவரிடம் தேசிய விருது பெற, தனுஷ் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு பெரும் மரியாதை செலுத்திய அந்த தருணம் எவ்வளவு உன்னதமானது.

விஜய்சேதுபதி நாயகனாக அறிமுகமான "தென்மேற்குப் பருவக்காற்று" படத்தை இப்போது திரும்பி பார்க்கையில் மண்சார்ந்த படைப்புகளை, நம் மண்ணின் அழகியலை, மக்கள் பிரச்சினைகளை, அசலான மனிதர்களை திரையில் காட்டுவதில் மிக குறுகிய காலத்தில் விசேவின் பங்கு பெரியது என்றே தோன்றுகிறது.

Vijay Sethupathi
Vijay Sethupathi

"க/பெ ரணசிங்கம்" அயல்நாட்டிற்குச் சென்று உயிரிழக்கும் தமிழர்களையும் அவர்களது சடலங்களை சொந்த மண்ணுக்கு கொண்டுவருவதில் உள்ள சிக்கல்களையும் உறவினர்களின் தவிப்புகளையும்...

"ஆண்டவன் கட்டளை" அயல்நாட்டிற்குச் செல்ல முயற்சிக்கும் இளைஞர்கள் போலி ஏஜன்சிகளிடம் ஏமார்ந்து அதனால் சந்திக்கும் சட்டப் பிரச்சினைகளையும், சென்னையில் வீடு வாடகைக்கு தேடி அலையும்போது ஏற்படும் பிரச்சினைகளையும், பெண் ரிப்போர்ட்டர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும், இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளையும் பேசி...

அயல்தேசத்தில் வாழும் எளிய கிராமத்து இளைஞர்களின், புலம்பெயர் தொழிலாளர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டது.

ஆண்டவன் கட்டளை
ஆண்டவன் கட்டளை

"காதலும் கடந்து போகும்" படம் வேலையின்மை என்பது எவ்வளவு பெரிய பிரச்சினை என்பதை அழுத்தமாகப் பேசியது. அந்தப் படத்தில் வேலை தேடி அலையும், சொந்தக்காலில் நிற்கத் துடிக்கும் ஒரு இளம்பெண்ணின் (மடோனா) கடினமான சூழல்களில் துணைநின்று உதவுவது, அதே ஏரியாவில் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய சிறுவர்களை,

"இனிமே இங்க வராத"

என்று துரத்தும் கடைக்காரரை பார்த்து,

"திருடாதனு சொல்லு... வராதன்னு சொல்லாத... எங்க ஏரியால வந்து கடைய போட்டுட்டு எங்களையே வர வேண்டாம்னு சொல்வியா" என்று அவரை மிரட்டுவது,

ரவுடிச தொழிலுக்குள் நுழைய விரும்பும் அப்பாவி இளைஞன் மணிகண்டனின் கன்னத்தில் நாலு அறைவிட்டு,

"இதெல்லாம் பண்ணா தூக்கி வச்சு கொண்டாடுவானுங்கனு நெனச்சியா... நல்ல வேலையா தேடிக்கு..." என்று அறிவுறுத்துவது என்று...

சிறைக்குச் சென்றுவந்த ஆதரவற்ற இளைஞன் கதாபாத்திரம் மூலம் இன்றைய இளைய சமுதாயத்தின் பிரச்சினைகளை அதற்குப் பின் உள்ள அரசியலை விசே விவரித்தது புதுவிதமான அனுபவத்தை தமிழ் சினிமாவுக்கு தந்தது என்றே சொல்ல வேண்டும்.

காதலும் கடந்து போகும்
காதலும் கடந்து போகும்

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுடன் இணைந்த "புறம்போக்கு எனும் பொதுவுடைமை" படத்தில் விசேவின் கதாபாத்திரம் முற்றிலும் புதுமையானது. பெரிய அளவில் உரையாடலை தொடங்கி வைத்திருக்க வேண்டிய கதாபாத்திரம் ஏனோ பேசப்படாமலே போனது பெரும்சோகம். ஜனநாதனும் விசேவும் இரண்டாவது முறையாக இணைகிறார்கள் என்றதும் எழுந்த எதிர்பார்ப்பும் "லாபம்" படத்தில் சற்றே தோல்வியில் முடிந்ததும் கொஞ்சம் வருத்தமானது. திரையில் வெற்றி இல்லை என்றாலும் நிஜத்தில் ஜனநாதன் மாதிரியான மகத்தான கலைஞனுக்கு சிலை திறந்த வைத்த விசேவுக்கு அடர்சிவப்பு ஹார்ட்டீன்களை அள்ளி வீசலாம்.

"தர்மதுரை" படத்தில் தன் அண்ணன் மகளிடம் மந்திரம் சொல்லி விளையாடும் காட்சி,

"பண்ணையாரும் பத்மினி" படத்தில் பத்மினி காரில் ஒரு பெண்மணி குழந்தை பிரசவிக்க, அப்பெண்ணின் கணவர் எடுத்துக் காட்டும் அந்தக் குழந்தையை பார்த்து விஜய்சேதுபதி காருக்கு வெளியே மழையில் நனைந்தபடி துள்ளலாட்டம் போடும் காட்சி, "உனக்காக பொறந்தேனே" என்று உருகும் கிராமத்து முதியவர்களின் காதலுக்கு தூதுவனாக சென்று, அவர்களின் காதலை ஓரமாக நின்று ரசிக்கும் காட்சி, "இறைவி" படத்தில் தன் மகள் முதல்முறையாக தன்னை "அப்பா" என்று அழைக்க விஜய்சேதுபதி மகிழ்ந்து ஓடிப்போய் ஆசையாக குழந்தைக்கு திண்பண்டங்கள் வாங்கி வரும் காட்சி..

 விஜய் சேதுபதி, #Dharmadurai
விஜய் சேதுபதி, #Dharmadurai

"கடைசி விவசாயி" படத்தில் விசேவின் நெற்றியில் திருநீறு பூசிவிட்ட சித்தர் "அங்கொருத்தி இருக்காளே அவளுக்கு..." என்று சொல்லி விசேவுக்கு திருநீறு கொடுக்க, நடுங்கிய கரங்களுடன் விசே சித்தரை வணங்கும் காட்சி, "சூப்பர் டீலக்ஸ்" படத்தில் "நீ ஆம்பளையா இரு, பொம்பளையா இரு... ஆனா என் கூடவே இரு..." என்று தன் மகன் ராசுக்குட்டி சொல்ல திருநங்கை அப்பாவாக விசே தவிக்கும் காட்சி, "சேதுபதி" படத்தில் கரண்டியை மனைவி காலருகே போட்டு அதை எடுப்பது போல மனைவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சி... "விக்ரம் வேதா" படத்தில் தன் அப்பாவி தம்பி "புள்ளி"க்கு நேர்ந்த அநீதிக்காக உருகும் காட்சி போன்றவை அவரை அதிகம் ரசிக்க வைக்கின்றன.

சமீபத்தில் கொல்லிமலைக்கு சென்று மொட்டை வெயிலில் மலைப்பாதை வழியாக பெரியசாமி கோவிலுக்கு ஏறிச்செல்லும்போது பாதி வழியில் மூச்சிரைக்க நின்றுவிட்டேன். அப்போது "மேற்குத் தொடர்ச்சி மலை" படத்தில் முதியவர் ஒருவர் ஏலக்காய் மூட்டையை சுமக்க முடியாமல் கீழே சுருண்டு விழுந்து லொக் லொக் என்று இரும, அந்த இருமல் சத்தம் மலையெங்கும் எதிரொலிக்கும் காட்சி அனிச்சையாக என் மனதில் தோன்றி மறைந்தது. அது தான் தாயாரிப்பாளர் விசேவுக்கு கிடைத்த உண்மையான வெற்றி.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

ஆண்டவன் கட்டளையில் கூத்துப்பட்டறையில் நாசர் ஒரு கதாபாத்திரத்தை கூறி அதுபோல செய் என்று சொன்னதும் அதை ஏற்று விஜய்சேதுபதி நடித்துக்காட்டும் காட்சியை பார்த்து சிலிர்த்து... அதை நினைவில் வைத்து, அவருடைய 25 படமான "சீதக்காதி"க்கு பெரும் எதிர்ப்பார்ப்போடு சென்று கொஞ்சம் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தாலும் "கடைசீல பிரியாணி" மாதிரியான படத்தில் அப்பாவி டிரைவரின் மகனை உயிரோடு எரித்துக்கொன்ற கொடூர வில்லனை ஒரே அடியில் அடித்துக் கொல்லும் இன்னொரு லாரி டிரைவராக, சாதாரண வாழ்க்கைக்கு ஏங்கித் தவிக்கும் அப்பாவி இளைஞனுக்கு கடவுளின் தூதுவனாக வந்து வாழ்வளிக்கும் இரண்டு நிமிட டிரைவர் கதாபாத்திரம் மூலம் மனதை நிறைய வைத்துவிடுகிறார்.

"மாஸ்டர்" படத்தில் விசே பேசும் நெருப்புக்கோழி முட்டையிடுவது குறித்த வசனம், "விக்ரம்" படத்தில் கழுத்துக்கும் வயித்துக்கும் நடுவுல பிரச்சினை என ஒருவர் சொல்ல அப்போது போலி மருத்துவர் விசே பேசும் "அந்தப் பாடம் எடுக்குற அன்னிக்கு நான் காலேஜ்க்கு போகல" போன்ற நக்கல் வசனங்களும் அவரது தனித்த அடையாளங்களாக இருக்கின்றன.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

ஒரே மாதிரியான உடல்மொழியில் நடிக்கிறார், அடிக்கடி தத்துவம் பேசுகிறார், கஜாமுஜாவென படங்கள் நடித்து ரசிகர்களை ஏமாற்றுகிறார், தொப்பை குலுங்க நடந்து வந்தாலும் அதை பார்த்து ஆர்ப்பரிக்கும் அளவுக்கு ரசிகர்களை சம்பாதித்தவர் மது அருந்துகிறார் என்று அவர் மீதான விமர்சனங்கள் இருந்தாலும் நிச்சயம் ஒரே அடியாக ஒதுக்கித்தள்ளிவிட முடியாத ஒரு அற்புத கலைஞன் தான் விசே. வெற்றிமாறனின் "விடுதலை" படத்தில் வாத்தியாராக அவரது உருவத்தோற்றம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கிறது. அந்தக் கதாபாத்திரம் "அற்புத கலைஞன்" என்கிற வார்த்தைக்கு வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்!

தமிழ் சினிமாவில் நிறைய அம்மா பாடல்கள் வந்தாலும் "கள்ளிக்காட்டில் பிறந்த தாயே" பாடல் மட்டும் ஏனோ கொஞ்சம் தனித்துவமாகவே ஒலிக்கிறது!

"ப்பா யாரு இந்தப் பொண்ணு... பேய் மாதிரி இருக்கு மேக்கப் போட்டுட்டு...", "குமுதா ஹேப்பி அண்ணாச்சி", "ஆர் யூ ஓகே பேபி" விசேதுக்களை விட, இருளுக்குள் ஒலிக்கும் ஜானுவின் "யமுனை ஆற்றிலே" பாடலைக் கேட்டு, அரக்கபறக்க லைட்டை தேடி எடுத்து மூச்சிரைக்க ஜானுவை தேடிச்சென்று அவரது முகத்தில் ஒளிபடர விடும் விசேவை தான் அதிகம் பிடிக்கிறது.

orange mittai film still
orange mittai film still

"ரொம்ப தூரம் போயிட்டியா ராம்!" என்று கேட்கும் ஜானுவுக்கு,

"இல்ல ஜானு... உன்ன எங்க இறக்கிவிட்டோனோ அங்க தான் இருக்கேன்!" என்று ராம் பதில் சொல்வதைப் போல...

தமிழர்களின் மனதிலும் விசேவுக்கான அதே இடம் அப்படியே இருக்கும்!

HBD சேது! (ஜனவரி 16)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.