Published:Updated:

எனக்கு ரேசன் கடை சேலை போதும்! - என்றும் வியப்புக்குரிய அம்மாயி

என் அம்மாயியை பற்றிய இந்த பதிவு உங்கள் எல்லோருடைய அம்மாயி/பாட்டிகளையும் நினைவூட்டும் என்பதில் எனக்கு அதீத நம்பிக்கை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"வாழ்க்கை என்பது என்ன... பள்ளிப்பாடமும் அல்ல... கற்றுக்கொண்டு அதில் மெல்ல முன்னேற..." - கற்றது தமிழ் படத்தில் வரும் பறபற பட்டாம்பூச்சி பாடலில் நா. முத்துக்குமார் எழுதிய வரிகள் இது.

அவருடைய பொன் வார்த்தைகளுக்கு தகுந்தாற்போல் வாழ்க்கையை நம்மால் தனிப்பாடமாக கற்றுக்கொள்ள முடியாது. நம்முடைய வாழ்க்கையில் நாம் கற்ற அனுபவ பாடங்களே நமக்கு வாழ்க்கைனா என்ன என்பதை உணர்த்தும். அல்லது இந்த வாழ்க்கையை பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதரின் அனுபவ பாடங்களை வைத்து அவருடைய செயல்பாடுகளை வைத்து வாழ்க்கைனா இதுதான் என்பதை ஓரளவுக்கு புரிந்துகொள்ளலாம். அந்த வகையில் வாழ்க்கை குறித்த வியப்பை உண்டாக்கிய என் அம்மாயி என்னை பொறுத்தவரை வியப்புக்குரிய மனிதர். என் அம்மாயியை பற்றிய இந்த பதிவு உங்கள் எல்லோருடைய அம்மாயி/பாட்டிகளையும் நினைவூட்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

Representational Image
Representational Image

1. "சென்ற நூற்றாண்டில் ஒரு மனிதன் நடந்த தூரத்தில் 10% கூட இன்று நாம் நடப்பதில்லை. நடை சுருங்கிவிட்டது. கால்களின் ஓய்வுதான் மனச்சோர்வின் முதல்படி. நீண்டதூரம் நடத்தலைக் கால்களால் சிந்திப்பது என்கிறார்கள்..."

- எஸ். ராமகிருஷ்ணன் (நன்றி. மணிகண்டபிரபு சார்...)


அம்மாயிக்கு தொண்ணூறு வயது இருக்கும். ஆனால் இன்றும் அசராத நடைபோடுகிறார். அவர் போல் நடப்பது நமக்கு கடினமான செயல். இத்தனை வயதிலும் மொட்டை வெயிலிலும் பத்து கிலோ மீட்டர் தூரத்தை அசால்ட்டாக நடப்பார். அவர் உடலில் அவ்வளவு தெம்பு.

2. "தாயாகிய ஆதாரமே...", "பிறந்தமடி சாய்ந்திட கிடைத்திடுமோ..." போன்ற வரிகள் கமலஹாசனின் நானாகிய நதிமூலமே பாடலில் வரும் வரிகள். இந்த வரிகள் திருமணமான பெண்களுக்கு பொருந்தும். வேலை செய்து செய்து முதுகெலும்பு வலியால் அவதிப்படும் பெண்கள் ஒரு வாரம் புருசன் வீட்டுக்கு லீவ் போட்டுவிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ள பிறந்தமடி தேடி அம்மா வீட்டிற்குச் செல்கிறார்கள் அல்லது பிறந்தமடியில் சாய்ந்திட அம்மாவை தன் வீட்டிற்கு வர சொல்கிறார்கள்.

"அம்மோவ்... எனக்கு இடுப்புலாம் வலிக்குது... காலுல்லாம் கவ்வுது... ஒரு வாரத்துக்கு எங்க வீட்டுக்கு வந்து கூடமாட வேலை செஞ்சு குடேன்..." என்று எப்போது போன் அடித்தாலும் சலித்துக் கொள்ளாமல் வந்து தங்கியிருந்து வீட்டு வேலைகளை செய்து கொடுத்து மகள்களை அக்கறையாக பார்த்துக் கொள்கிறார் அம்மாயி.

Representational Image
Representational Image

3. "எதிர்காலம் கவர் போட்டு வித்துடும்டா தாய்ப்பால ..." - குரங்குபொம்மை படத்தின் பீச்சு காத்து பாடலில் நா. முத்துக்குமார் எழுதிய வரி இது.

பணத்தின் அருமையை தேவையை நன்கு உணர்ந்தவர் அம்மாயி. இத்தனை வயதிலும் அம்மாயி ஒருநாள் கூட சும்மா இருக்க மாட்டார். நூறு நாள் வேலை அல்லது களை வெட்டும் வேலை என்று எதாவது ஒரு வேலைக்கு செல்லக்கூடிய மனிதராக தான் இருக்கிறார் அம்மாயி. மகள்களுக்கு காசு கொடுப்பாரே தவிர மகள்களிடம் இருந்து சல்லி பைசா வாங்க மாட்டார். யார் கையையும் எதிர்பார்க்காத அம்மாயின் தன்மானம் வியக்க வைக்கும்.

4. "நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி..." - மன்மதன் அம்பு படத்தில் நீலவானம் பாடலில் வரும் கமலஹாசனின் வரி இது.

அம்மாயி வாழ்ந்த வாழ்க்கைக்கு சான்றாக மொத்தம் ஐந்து பேரன்கள். ஒரு பேத்தி. இரண்டு கொள்ளு பேத்தி. ஒரு கொள்ளு பேரன். இந்த வயதிலும் "நான் இருக்கற வரைக்கும் எதுக்கும் மனசு தளராதீங்கடா... எப்ப காசு வேணும்னாலும் கேளுங்கடா... நான் ரெடி பண்ணி தரேன்..." என்று என்னை போன்ற பேரன்களிடம் சொல்வார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

5. "மழை வாசம் வருகின்ற நேரமெல்லாம்... உன் வியர்வை தரும் வாசம் வரும் அல்லவா..." - கற்றது தமிழ் படத்தில் "உனக்காக தானே..." பாடலில் நா. முத்துக்குமார் எழுதிய வரி இது. இந்த வரிகளில் மழை வாசம் என்ற வார்த்தையுடன் "வேர்க்கடலை வாசம்" என்ற வார்த்தையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அம்மாயி வீட்டுக்குள் நுழைந்தாலே வேர்க்கடலை வாசம் வீசும். எங்கு எப்போது அந்த வாசம் வீசினாலும் அம்மாயி வியர்வை சிந்தி கடலைக்கொடி பறித்து எங்களுக்காக கடலை சேர்த்து வைத்தது தான் நினைவுக்கு வரும். எப்போது அம்மாயி வீட்டுக்குப் போனாலும் இரட்டைக்கரு முட்டை அல்லது வேர்க்கடலை இதில் எதாவது ஒன்றை வாங்கி ஒயர் கூடையில் அல்லது கட்டபையில் சுமந்து கொண்டுதான் வருவார் அம்மா.

பாட்டி
பாட்டி
Representational Image | Pixabay

6. "வான் பார்த்த பூமி காய்ந்தாலுமே... வரப்பென்றும் அழியாதடி..." - உனக்காக தானே பாடலில் நா. முத்துக்குமார் எழுதிய வரி இது. வரப்பு போன்று வாழும் அம்மாயிடம் எங்களுக்கு கொடுப்பதற்கான காசு என்றும் இல்லாமல் போனதில்லை.

பேரன்களாகிய நானும் என்னுடைய சகோதரர்களும் எப்போது அம்மாயி வீட்டுக்குப் போனாலும் பலகாரம் செய்யாமல் இருக்க மாட்டார். அப்படி பலகாரம் செய்ய முடியாத நாட்களில் ஆளுக்கு நூறு ரூபாய் கையில் கொடுத்து "இந்தாங்கடா... பலகாரம் எதுவும் செய்யல... அதுக்குப் பதிலா டவுன்ல போறப்ப ரொட்டி கீது சாப்பிட்டு போங்கடா..." என்று சொல்லி அனுப்புவார்.

7. "பெத்தவளும் கட்டுகிற புடவை வாசம்..." - குக்கூ படத்தில் வரும் ஒத்த நொடியில தான் சித்தம் கலங்கிடுச்சே பாடலில் யுகபாரதி எழுதிய வரி இது.

அம்மாயிக்கு அவருடைய மகள்கள் நல்ல விலை உள்ள சேலைகளை எடுத்துக் கொடுத்தால் "அட இத எதுக்கு வாங்கிட்டு வர்றீங்க... எனக்கு ரேசன் கடை சேலையும் பழைய சேலையுமே போதுமே... ஏன் இப்படி காச வீணாக்குறிங்க..." என்பார்.

பாட்டி
பாட்டி
Representational Image

8. "ஊசி போல உடம்பு இருந்தா தேவையில்ல பார்மசி..." - காதலன் படத்தில் "ஊர்வசி ஊர்வசி" பாடலில் வரும் வரி இது.

தன் உடலை பேணிக் காப்பதில் அம்மாயிக்கு அவ்வளவு அக்கறை. எனக்கு வயது 25. இந்த 25 வருடங்களில் அம்மாயி இதுவரை ஒரு முறை கூட ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனதில்லை. அவர் வீட்டில் வெயிட் மெசின் இல்லை... அவர் வாக்கிங் போவதும் இல்லை... சைக்கிள் ஓட்ட தெரியாது. எப்போதும் ஒரே உடல் எடையை சீராக மெயின்டன் பண்ணி வருகிறார். படுத்த படுக்கையாக விழுந்திட கூடாது என்பதில் மகள்களுக்கு சிரமத்தை கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

9. "நம்மில் யார் இருந்தாலும் ஒரு தாய் அழுவாள்..." என்ற வரிகள் கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தில் வரும் அணு விதைத்த பூமியிலே பாடலில் வரும் வரிகள்.

அம்மாயிக்கு மொத்தம் மூன்று மகள்கள். அதில் ஒருவர் இறந்து விட்டார். அப்போது முதல் அவர் மீதமிருக்கும் இரண்டு மகள்களையும் பார்த்துக் கொள்வதில் அவ்வளவு கவனம் செலுத்துகிறார். அந்த இரண்டு மகள்களில் யாராவது ஒருவர் மருத்துவமனையில் அட்மிட் ஆனாள் பதறி அடித்துக் கொண்டு முதல் ஆளாக ஓடி வருகிறார்.

Representational Image
Representational Image

10. என் 25 வருட வாழ்க்கையில் இதுவரை அம்மாயி ஒருமுறை கூட எவ்வளவு கோபத்திலும் கெட்ட வார்த்தை பேசியதே இல்லை. நாங்கள் எதாவது கோபத்தில் யாரையாவது கெட்ட வார்த்தையில் திட்டினால்... "என்னடா வார்த்தை இது... பேரை கெடுத்துடுவ போலயே..." என்று சொல்வார் அம்மாயி.

இவ்வளவு சிறப்பு வாய்ந்தவரா அம்மாயி... இவரிடம் எந்த குறையுமே இல்லையா என்றால் கண்டிப்பாக அவரிடம் பொயிலை போடும் பழக்கம், போட்டோவுக்கு சிரிக்க தெரியாத பழக்கம் போன்ற சில குறைகளும் இருக்கிறது. இருந்தாலும் அவருடைய வாழ்க்கை பாதையை நினைக்கும்போது அவருடைய குறைகள் மறைந்து போகின்றன.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு