Published:Updated:

நேற்றிரவு ஒரு கனவு! | My Vikatan

Representational Image

ஆனால் எங்கள் பழைய வீட்டிலோ ஓட்டின் ஊடே சூரிய ஒளி தான் என்னை எழுப்பும். மழை வந்தால் தூரலில் இருந்தே வீட்டின் சத்தம் நம்மை தயாராக்கும். வீட்டின் சன்னல் கம்பிகளுடன் காற்று எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கும்.

நேற்றிரவு ஒரு கனவு! | My Vikatan

ஆனால் எங்கள் பழைய வீட்டிலோ ஓட்டின் ஊடே சூரிய ஒளி தான் என்னை எழுப்பும். மழை வந்தால் தூரலில் இருந்தே வீட்டின் சத்தம் நம்மை தயாராக்கும். வீட்டின் சன்னல் கம்பிகளுடன் காற்று எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கும்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

வீட்டின் பின்புறத்தில் நானும் என் தங்கைகளும் சொப்பு சாமானில் சோறு சமைத்து விளையாடிக் கொண்டிருக்கிறோம். தேங்காய் மூடிகளை உடைத்தும் இன்னும் கைக்கு கிடைக்கும் குச்சிகளை எரிய வைத்தும் சாதத்தை வேக வைத்து கொண்டிருக்கிறோம். இன்னொரு அடுப்பில் ரசம். செடியில் இருந்து கருவேப்பிலை கொத்தமல்லியை ஒருவர் பறிக்க அண்ணன் சாப்பாடு பரிமாற இலை வெட்டிக் கொண்டிருந்தான்.

அரிசி வேக வெகு நேரம் ஆக.. நான் உள்ளே சென்று என் பழைய நோட்டுப்புத்தகத்தில் இருந்து சில காகிதங்களை கிழித்துக் கொண்டு வந்து விறகுடன் வைக்கிறேன். வீட்டின் உள்ளே இருந்து என் அம்மா அழைக்கும் குரல் கேட்டது. நான் வேறு காகிதங்களை அடுப்பில் வைக்கிறேனே அம்மா பார்த்தால் திட்டுவார்களே என்ற பதட்டத்தில் வேக வேகமாக காகிதங்களை மறைக்க முயல்கையில் மீண்டும் அம்மா அழைக்கும் ஓசை என்னருகில் கேட்க திடுக்கிட்டு எழுந்தேன்.

"நேரம் ஆச்சு டி... எழுந்துரு.."

நிகழ்ந்த காட்சிகள் யாவும் கனவே என்றே கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்தேன்.

கனவில் வந்த வீடும் அதன் தோற்றமும் இன்னும் கண்ணுக்குள்ளே இருந்தன.

Representational Image
Representational Image

கனவில் வந்த வீடு எங்கள் பழைய பாட்டி வீடு.. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன் அந்த வீட்டின் பின்புறத்தில் தோட்டம் போட்டிருப்பார்கள். அங்கே ஒரு தென்னை மரம் இருந்தது.. குட்டி குட்டியாக நிறைய செடி கொடிகள். முருங்கை மரத்தை சாணியிட்டு வளர்த்த நியாபகம்.. கனகாம்பரம் செடியின் பூவின் நிறம்.. வெண்டைக்காய் செடி.. காய்த்து கொட்டும் சின்ன நெல்லிக்காய் மரம்.. சுண்டக்காய் செடி.. குட்டிகளை பெருக்கிக் கொண்டே இருந்த வாழை மரம்..

எனக்கு பத்து வயது வரை அங்கே தான் விளையாடி கழித்துள்ளோம்.

பின் அவர்களும் அந்த வீட்டை காலி செய்து விட்டார்கள். வீடும் இடித்து கட்டப்பட்டுவிட்டது.

சிறு வயதின் இனிய நினைவுகள்.. இப்பொழுது கூறுகிறார்களே நாஸ்டால்ஜியா( Nostalgia) அவ்வளவு தானே என்று கடந்து போக முடியவில்லை. அவ்வப்பொழுது ஆசையும் சிறிய கோபமும் நிகழ் காலத்தின் மேல் வரும்.

இப்பொழுது இருக்கும் பாட்டி வீட்டில் இவைகள் வசிக்க இடமும் சூழலும் இல்லை.

நாங்கள் வசிக்கும் வீட்டிலோ மழை வந்தாலும் தெரியாது வெயில் அடித்தாலும் தெரியாது.

ஆனால் எங்கள் பழைய வீட்டிலோ ஓட்டின் ஊடே சூரிய ஒளி தான் என்னை எழுப்பும். மழை வந்தால் தூரலில் இருந்தே வீட்டின் சத்தம் நம்மை தயாராக்கும். வீட்டின் சன்னல் கம்பிகளுடன் காற்று எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கும். ஓட்டின் கண்ணாடிகளில் நிலா தேய்ந்து வளரும்.

ஏன் இப்பொழுது இயற்கை சூழல் நிறைந்த வீடுகளே இல்லையா என்றால் நான் பெரும்பான்மையை பற்றி கவலையுறுகிறேன்.

என் பாட்டி வீடும் மாறியாயிற்று... என் அம்மா வீடும் புகுந்த வீடும் மாறியாயிற்று... நாங்கள் வேலைக்காக வெளியூரில் தங்கியுள்ள வீடும் பழைய மாதிரி இல்லை.

அலுவலகத்திற்குப் பக்கத்தில் இருக்கும் பகுதியில் உள்ள பாதுகாப்பான வீட்டை தான் தேர்வு செய்ய முடிந்ததே தவிர வேற எதையும் பார்க்க முடியவில்லை.

ஏன் விரும்பும்படியான அந்த கட்டமைப்பு உடைய வீட்டிற்குக் குடிப்போகலாமே என்றால் இப்பொழுது என் வருத்தமெல்லாம் இயல்பாகவே வாழ்வியல் ஆக இருந்த வாழ்க்கை முறையை மாற்றிவிட்டு நாஸ்டால்ஜியா ஆக்கிக் கொண்டு விரும்புவோர் மட்டும் மெனக்கெட்டால் இயற்கையோடு இயைந்து இருக்கலாம்.. இது சரி தானா!

20 வருடத்திற்கு முன் இருந்த வாழ்க்கை முறையை பார்த்து எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது.

ஆடம்பரமற்ற அமைதியான வாழ்க்கை.. எளிமையான வீடுகள்.. மரங்கள் செடிகளுடன் அமைந்த சூழல்..

Representational Image
Representational Image

அவர்கள் வாழ்க்கை முறையை கவனித்துப் பார்த்தால் ஆண்கள் வயல் வெளியில் உழைக்கிறார்கள்.. இன்னும் பிற உடல் உழைப்பு சார்ந்த வேலையில் இருப்பார்கள்.. பெண்கள் இயந்திரங்கள் உதவியின்றி வீட்டு வேலைகளை தாங்களே நிதானமாக செய்து முடிக்கிறார்கள். அவசர அவசரமான வாழ்க்கை முறையெல்லாம் அங்கே இல்லை.

பொழுதுபோக்கிற்கு அலைபேசியோ இணையமோ இல்லை. டீ கடையில் மர பலகையில் அமர்ந்து கொண்டு நிதானமாக பேசி நேரம் கழிப்பார்கள். பெரும்பாலும் அப்பொழுது பேருந்தில் தான் ஊருக்குள் வருகிறார்கள்.. பேருந்தில் இருந்து இறங்கும் பொழுதே யார் புதிதாக வந்தாலும் கண்டறிகிறார்கள். பெண்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்து தங்கள் தலை சீவி பூ சூடுகிறார்கள். வீட்டு முற்றத்தில் உணவு பொருள்களை காயவைத்து பதப்படுத்துகிறார்கள்.. திண்ணையில் அமர்ந்து ஒருவரோடு ஒருவர் அளாவுகிறார்கள்.

அப்பொழுது வந்த பாட்டுக்களில் குயில் மயில்.. வீட்டு தோட்டம் பூக்கள் செடிகள் நிலா என அவர்களை சுற்றி நிகழும் உயிர்ப்புகளை அழகாக வர்ணிக்கின்றன

ஆம் அத்தனையும் இருந்தது தான் அதோடு சேர்த்து பல கட்டுப்பாடுகள் இருந்ததே பெண்களுக்கு இப்பொழுது எவ்வளவு சுதந்திரம் இருக்கிறது. பிடித்ததை படிக்கிறோம். விரும்பும் பொழுது திருமணம் செய்து கொள்கிறோம். இயந்திரங்களின் உதவியால் வீட்டு வேலைகளை சீக்கிரமே முடிக்கிறோமே என்று சந்தோச பட்டுக்கொள்ளலாம் தான்.. இந்த வாழ்க்கைக்கு பெரிதும் பழக்க பட்டுக் கொண்டோம். இந்த வாழ்க்கையும் ஆனந்தமாகத்தானே இருக்கிறது.

எதுக்கு இப்போ பழமையை யோசிக்க வேண்டும்.. புதிதாக எத்தனை நல்ல மாற்றங்கள் வந்துவிட்டன.. எந்திரமயமாக்குதலால் எத்தனை முன்னேற்றம் கண்டுள்ளோம்.. அந்த காலத்து பெண்கள் எவ்வளவு கொடுமையை அனுபவித்தார்கள்.. இப்பொழுதோ எல்லாவற்றிலும் வெற்றி காண்கிறார்களே.

இதெல்லாம் உணராமல் ஏன் வீண் சிந்தனை.. அலைபேசி இல்லாமல் ஒரு மணி நேரம் இருக்கமுடியுமா என்றும் தோன்றும்..

ஆனால் ஒன்று.. இப்பொழுது இருக்கும் சிறுவர்கள் எங்களை போல் சொப்பு சாமான் விளையாட்டிலோ.. தெருவில் ஓடி ஆடும் விளையாட்டிலோ ஆர்வம் காட்டுவதில்லையோ.. அவர்களுக்கும் இப்பொழுது அலைபேசியும் இணையமும் போதும். அப்படியென்றால் நாம் இருபது வருடத்திற்குள் வாழ்க்கை முறையை எப்படியெல்லாம் மாற்றிவிட்டோம். அடுத்த தலைமுறைக்கு என்ன கொடுத்திருக்கிறோம்.

ஒரு நாள் காது வலி தாங்காமல் மருத்துவமனை சென்ற பொழுது மருத்துவர் கூறினார் அலுவலகத்தில் உள்ள ஏசியின் குளிர் தாங்காமல் காதுக்குள் வலி ஏற்படுகின்றன என்று...

என் தங்கைக்கு சரும அலர்ஜி மாத்திரையாலும் கிரீம்களாலும் குணமாகமல் வீட்டிற்குள் சூரிய ஒளி படாமல் இருப்பதால் தான் என்பதை அரிந்து தினமும் ஒரு மணி நேரம் சூரிய ஒளியில் நின்று குணப்படுத்தினாள். எங்கம்மாவிற்கு சமைத்து ஒரு நாள் ஆன உணவை பிரிட்ஜ்ஜில் வைத்த சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படும்.

இதெல்லாம் அடிப்படையாய் அவ்வப்போது தோன்றும் தொந்தரவுகள். இன்னும் எவ்வளவோ சுற்றியும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

அப்படியென்றால் நாம் உடல் நலத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

Representational Image
Representational Image

தங்கள் உடல் நிலைக்கு ஏற்ப ஏசி தேவைப்படுவோர் இருக்கலாம். ஆனால் ஏசியை பெருமைக்காக பலர் வாங்கிக் கொண்டிருக்கின்றனரே..

இது பற்றியெல்லாம் ஆராய எனக்கு தேவையான முதிர்ச்சி இருக்கின்றதா தெரியவில்லை.. ஆனால் மனதிற்குள் ஒரு ஆதங்கம் மட்டும் வலுவாக...

ஜெயகாந்தன் அவர்களின் படைப்பான 1973ல் வெளிவந்த ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் புத்தகத்தில் 30 வருடங்களுக்குப் பின் தந்தை வாழ்ந்த வீட்டை கதையின் நாயகன் ஹென்றி மறுசீரமைப்பார். அந்த வீட்டிற்கு மின்சார இணைப்பு போட்டுக் கொள்ளும்படி ஹென்றியின் நண்பரான தேவராஜன் அறிவுறுத்துவார்.

அப்பொழுது ஹென்றி கூறும் பதில் என்னை பெரிதும் பாதித்தது.

"நம்ப மணியக்காரர் வீட்டுக்குக்கூட எலக்டிரிசிடஸிடி இல்லல்ல.. அகல் விளக்கு ரொம்ப அழகா இருக்குது" என்று கூறிய ஹென்றி மீண்டும் சிரித்தவாறே கூறுவார்.. "உங்களுக்கு நான் ஏதோ பழமைவாதம் பேசுவது போல் தோன்றும்.. நீங்கள் சொல்லுங்கள் அதோ அந்த விளக்கு அழகாயில்லை? வெளிச்சத்துக்கு அது போதாது? சரி, உங்களுக்கு ஒருவேளை அது அழகாக இல்லாமலும் இருக்கலாம். நீங்கள் செய்கிற வேலைக்கு அந்த வெளிச்சம் போதாமலும் இருக்கலாம். ஆனால் எனக்கு அது போதும் அதுதான் வேண்டும். இந்த உலகம் பூராவும் யந்திரங்களும், மின்சார வெளிச்சமுமாய் கோலாகலப் படட்டும். என் வீட்டில் எனக்கு இந்த வெளிச்சமும் இந்த அமைதியும் நிலவட்டும். உதாரணத்திற்குச் சொல்கிறேன்" என்பார்.

ஊர் எப்படி இருந்தாலும் தனக்கு பிடித்ததில்.. தேவையானதில்.. தெளிவாக இருக்கும் ஹென்றி எனக்கு தனித்துவமாக தெரிகிறார்.

இது மேலே சொன்ன என் ஏக்கங்களுக்கான பதிலோ முடிவோ கிடையாது.. யாவும் ஒரு புரிதல் அது விதைக்கும் சிந்தனை!

-ரேவதி பாலாஜி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.